You are here

காடு

உவமைக் கவிஞர் சுரதா

கார்த்திகைத் தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடி – கிளியே
பார்வை குளிருமடி!

காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்!

குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனி பறிக்கும்
மரங்கள் வெயில் மறைக்கும் – கிளியே
வழியில் தடையிருக்கும்!

மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மது சுரக்கும் – கிளியே
போவார் அடி வழுக்கும்!

பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சரவங்* கலங்கும் – கிளியே
நரியெல்லாம் ஊளையிடும்.

கல்லுரல் போன்ற முகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான் தடுக்கும் – கிளியே
வேங்கைகள் வால் நிமிர்க்கும்!

சிங்கம் புலி கரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி – கிளியே
இயற்கை விடுதியிலே!

Related posts

Leave a Comment