You are here
Uncategorized 

கறைபடிந்த காலம்: கைவிடலின் கதறல்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

எத்தனை எத்தனை வாழ்க்கை தோறும்
வாசலில் நான் காத்துக் கிடக்கிறேன்;
ஆனால் அவை திறக்கவில்லை;
இடைவிடாத ப்ரார்த்தனைகள் செய்துசெய்து என் நாக்கு வறண்டு விட்டது;
ஒளிக்கிரணம் ஒன்றைத் தேடி
இருளின் ஊடே பார்த்துப்பார்த்து
என் கண்கள் சோர்ந்து விட்டன;
இதயம் இருளில் பயந்து தடுமாறுகிறது;
நம்பிக்கை எல்லாம் பறந்து விட்டது.
வாழ்க்கையின் கூரான உச்சிமுனையில்
நின்றுகொண்டு பள்ளத்தை நான் பார்க்கிறேன்;
அங்கே-
வாழ்க்கை, மரணம் இவற்றின்
துன்பமும், துயரமும்,
பைத்திய வெறியும், வீண் போராட்டங்களும்,
முட்டாள் தனங்களும் எல்லாம்
கட்டற்று உலவுகின்றன.
காண நான் நடுங்குகின்ற இந்தக் காட்சி
இருட்பள்ளத்தின் ஒருபுறம் தெரிகிறது;
சுவரின் மறுபுறமோ………..
இது சுவாமி விவேகானந்தரின் முடிவுறா கவிதை. பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் கறைபடிந்த காலம் புத்தகத்தைப் படித்ததும் இந்த கவிதை என் நினைவுக்கு வர தஞ்சை சுந்தர்ஜி பிரகாஷ் வலைப்பூவிலிருந்து இதை தேடி எடுத்தேன். அவர் சிகாகோவில் சமய மாநாட்டில் பேசுவதற்கு முந்தைய கட்டத்தில் அமெரிக்காவில் யார் உதவியுமற்றுத் தெருக்களில் திரிந்தபோதோ அல்லது அவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயண நிதி போதாமையால் கைவிடப்பட்ட போதோ எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கத் தோன்றுகிறது என அவர் குறிப்பிடுகிறார்.
கைவிடலின் கதறல் இது. கறைபடிந்த காலம் நூல் முழுக்க முழுக்க இதன் சாயலே. ஒரு சமூகமே குறிவைத்து தாக்கப்படும் போது அந்த வலியை எழுத்தாக்கும் இலக்கியவாதி அதன் உள் இயங்குதளத்திலிருந்து வார்த்தைகளை தூக்கி எறியும்போது அது எத்துணை வலியோடு வரும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சாட்சி.

1992 பாபரி மஸ்ஜித் இடிப்பின் பின் அல்லது அதன் நீட்சியாக உருவாக்கப்பட்ட மதக்கலவரங்களால் தொடர்ந்து இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் சீண்டப்பட்டனர். எங்கெல்லாம் இந்து அடிப்படைவாத அமைப்புகள் கலவரங்களைத் தூண்டும் சக்தி படைத்திருந்தார்களோ, அங்கெல்லாம் அவர்கள் அரசு இயந்திரங்களையும் காவிமயப்படுத்தினர். அதன் ஒரு தமிழக உதாரணம் கோவை. அங்கு போக்குவரத்துக் காவலராக பணியாற்றிய அந்தோணி செல்வராஜ் கொலைசெய்யப்பட்ட போது அவரை ஓர் இந்து செல்வராஜாக எளிதாக மாற்ற முடிந்தது. காவல்துறை காவி வண்ணம் பூசி கோரத்தாண்டவம் ஆடியது. அதை தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் கோவையில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டனர். அந்த சம்பவங்களுடாக பயணிக்கும் நெடுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல்.
மதத்தின் பெயரால் அப்பாவிகள் தாக்கப்படுவதைப் பார்த்து தடுக்கவியலா அல்லது பிரக்ஞை பூர்வமாய் தடுக்க வக்கற்ற ஆனால் மனிதர்களை நேசிக்கும் நேர்மையான மனிதர்களின் இதயங்களை வெட்கப்பட வைக்கும் ஒரு நெடிய முன்னுரையை ஆதவன் தீட்சண்யா இந்நூலுக்கு எழுதியுள்ளார். “எல்லாக் கலவரமும் திடுமென ஒருநாளில் வெடித்து விடுவதில்லை, அது வெடிப்பதற்குத் தேவையான கருமருந்து நீண்டகாலமாக மக்களின் மனதில் கொட்டிவைக்கப்படுகிறது. திரிமூட்டும் தேதிதான் முன்பின்னாகிறது.” என எழுதியுள்ளது எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

“ஒருமுறை நாகபுரியில் பிராமணரல்லாதோர் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகின்ற சிலருடைய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கிருஸ்துவ, முஸ்லிம் பேச்சாளர்களும் கலந்து கொண்டு பேசியதை அறிந்த நான் வியப்படைந்தேன். மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவரைக் கேட்டபோது ஏன்! அவர்களும் பிராமணரல்லாதார்தானே என பதிலளித்தார். என்ன விந்தை! எந்த சாதி, வகுப்பை சார்ந்தவர்களாக இருப்பினும் ஹிந்துக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாக இருக்கிறார்கள் ஆனால், முஸ்லிம்களும், கிருத்துவர்களும் முற்றிலும் அன்னியமான அதிலும் பெரும்பாலும் ஹிந்துக்களுக்கு எதிரிகளாக செயல்படும் முகாமைச் சேர்ந்தவர்கள் என்ற இந்த எளிய உண்மையைக்கூட உணர்ந்து கொள்ள முடியவில்லையே!” என கோல்வால்கர் தனது ஞானகங்கை (பக்:21) புத்தகத்தில் எழுதியிருப்பது அத்தகைய கருமருந்தல்லவா?
முஸ்லீம் மக்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாக விடுதலைப் போராட்டகாலம் முதற்கொண்டு அவர்கள் விதைத்ததன் விளைவுதானே கலவரங்கள். கலவரங்களுடாக பாதிக்கப்படும் அப்பாவிகளின் வாழ்நிலையின் தாங்கவொண்ணா துயரங்களை நெடுங்கதைகளாக மாற்றியதன் மூலம் மிக முக்கியமான செயல்பாட்டை துவக்குகிறார் எழுத்தாளர். “குற்றமும் தண்டனையும்” கதையில் குற்றவாளிகளை தேடிப்பிடிப்பதைவிட கிடைக்கும் முஸ்லீம்கள் எல்லாம் குற்றவாளிகள் என முடிவுக்கு வரும்”நேர்மையான” காவல்துறை அதிகாரியை சந்திக்க நேர்கிறது. சாதாரணமாக சாலையோரங்களில் கடை வைத்து பிழைக்கும் சிறுவர்கள் கூட அன்றைய கோவை கலவரத்தையொட்டி எப்படி வேட்டையாடப்படுகின்றனர் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார். கலவர காலங்களில் எல்லா அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை இஸ்லாமிய பெண்கள் கழிவறைகளுக்கு செல்லுவதை எட்டிப்பார்க்கும் அதிகாரங்களையும் எப்படி எடுத்துக்கொள்கின்றனர் என்பதை ஓங்கி அடித்து பதிவு செய்கிறார்.

ஒரு பெட்டிக்கடையின் வருமானத்தில் தன் குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் ராவுத்தரின் கதை அடையாளமாய் உருகொண்டுள்ளது. கோயில் அருகில் உள்ள எல்லா இடங்களும் கோவிலுக்கு சொந்தம் என்ற மாயையில் அல்லது அப்படி சொல்லி வெறியேற்றப்பட்ட கூட்டம் எப்படி தன் வன்முறையை அரங்கேற்றும் என்பதற்கான சாட்சியம் இந்த கதை. கோயிலின் அருகில் ராவுத்தர் தண்ணீர் ஊற்றி வளர்த்த அரசமரமும், அவரின் ஒற்றை பெட்டிக் கடையும் தீயின் நாக்குகளில் கருகுவதை பார்த்து அவரின் குடும்பமே கதறுவதோடு கதை முடிகிறது.

சோதனை துவங்குவது தூங்கியெழும் பொழுதில் ஒரு பெண் காவலாளி தனது வீட்டில் புகுந்து பீரோ உட்பட சகல இடங்களிலும் ஆராயும் தருணத்தில்.. கோவை கலவர நாட்களிலும் அதற்கு பிறகான பொழுதுகளிலும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத சோதனைச்சாலைகளாக மாறின. அவர்கள் பகுதிகள் முற்றுகையிடப்பட்டன. எப்போது வேண்டுமானாலும் எந்த வீடுகளுக்குள்ளும் காவல் துறையினர் நுழைந்து சோதனையிடுவார்கள் என்ற சூழலில் யாரும் எதையும் எதற்காகவும் எதிர்த்து கேட்க முடியாத சூழலே நிலவியது. கேட்டால், அவர் உடனடியாக தீவிரவாதியாக்கப்படுவார். அவர் கைகளில் குண்டுகள் முளைக்கும், செய்தித்தாள்களில் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவராக அவரது புகைப்படம் வரும். அந்த நேரத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றிய இஸ்லாமியர்கள் நிலையை இக்பால் மூலம் அறியலாம். அந்த அலுவலகத்தின் சக ஊழியர்களின் விசாரணையால் அயற்சி அடைவதும் அந்த சோதனையை அவன் எதிர்கொண்டு உரையாடுவதும் மிக முக்கியமான கதையாக சோதனையை மாற்றுகிறது.

இந்துக்கள் கடைகளிலே பொருட்களை வாங்குங்கள் என்ற காவி போஸ்டரின் வழியே துவங்குகிறது உடைபடும் புனிதம் கதை. காலகாலமாக சமூகத்தில் ஒற்றுமையாக வாழும் மக்கள் திரளை எப்படி கலவரங்களினூடாக நிரந்தர எதிரியாக்கமுடியும், அதற்கும் மிகவும் உறவுகளாகப் பழகியவர்கள் என்ற பேதமெல்லாம் கிடையாது என்பதை முஸ்தபா ராவுத்தர் கோவிலின் அருகினில் நடத்தும் கடையை மூலமாக வைத்து இக்கதையை சொல்லிச்செல்கிறார்.

முஸ்தபா கமால் பாட்ஷா என்ற இளம் எழுத்தாளனின் உரையாடல் மூலமாக நகர்ந்து செல்கிறது அடிபடுபவனின் குரல். வேலை நிமித்தமாக வெளியூர் சென்று அகாலத்தில் திரும்பமுடியாமல் லாட்ஜில் தங்கி இருக்கும் இவனுக்கு, ஓர் இஸ்லாமியன் என்ற காரணத்தாலே ஏற்பட்ட சோதனைகளை நீண்ட தர்க்கம் மிக்க உரையாடல்கள் மூலம் கதையாக்கி உள்ளார் பிர்தவ்ஸ் ராஜகுமாரன். காட்டில் வேட்டையாட வந்தவன், கடைசியில் ஒரு சிறு முயலைக்கூட வேட்டையாடாமல் வெறுங்கையுடன் திரும்பிச் செல்வானா? என கமால் பாட்சாவிடம் விசாரிக்கும் காவலர்கள் சொல்லி சிரிப்பது, அடுத்த நாள் செய்தித் தாளில் இப்படி செய்தியாக வருகிறது. தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி கைது! திடுக்கிடும் மர்மங்கள்இந்த புத்தகத்தின் கடைசி ,மற்றும் 6வது கதை நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல…. இந்த புத்தகத்தின் மொத்தத் கதைகளையும் படிக்க உங்களுக்கு நேரமில்லையேல் அவசியம் இந்த ஒருகதையையாவது படித்துவிடுங்கள். மீதமுள்ள ஐந்து கதைகளின் சாரம் இந்த கதைதான். கலவர காலங்களில் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் தினம் தினம் வயிற்றுப் பாட்டுக்கு அல்லாடும், ஏழை எளியவர்களின் சாலையோர கடைகளை சூறையாடும், பெட்டிக்கடைகளை எரியூட்டும், மளிகை கடையை திறக்கவிடாமல் அச்சுறுத்தும், கனவுகளுடன் திருமண பத்திரிக்கை வைக்கச் சென்றவனை கைது செய்யும், எப்போது கைது செய்யப்படுவோம் என அச்சத்திலேயே உழலச்செய்யும், பெண்களின் கழிவறைகளை எட்டிப்பார்க்கும், சாலையில் நடக்கும் பெண்களின் புர்காவை விலக்கச்சொல்லும், தாடி வைப்பதா இல்லையா என குழப்பமூட்டும். சமூக நிலை தனி மனிதனின் மனதை எப்படி சிதைக்கும் என்பதற்கு ஆகச்சிறந்த உதரணம் இந்த கதை.

இந்த கதைகளில் வாழ்ந்திருக்கும் பிர்தவ்ஸ் ராஜகுமாரன் இந்து அடிப்படைவாதம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது எப்படி இந்துக்களுக்கு எதிரானதோ அப்படியே இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்துகளுக்கு மட்டுமல்ல, அது இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்பதை மிக தேர்ந்த அரசியல் புரிதலோடு கதைகளில் சொல்லி இருக்கிறார். அவர் தன்னுடைய முன்னுரையில் சொல்லியிருப்பது போல ஆகப்பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் இத்தகைய கதைகளை ஏன் எழுதவில்லை என்று நினைக்கும் போது பகீரென இருக்கிறது. தவிர்க்க முடியாமல் இச்சமூகம் ஒற்றை சார்பெடுக்கிறதோ என? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தொழில் வணிக நடவடிகைகளிலும் இஸ்லாமியருக்குரிய பங்கை வழங்க மறுக்கிற அரசாங்கம் இந்தியாவின் சிறைகளை மட்டும் இஸ்லாமியர்களைக் கொண்டு நிரப்பிவருகிறது. திரும்ப வரவே வராத அவர்களது காலத்தை அது பறித்துக்கொள்கிறது. வாழ்வதற்கான அரிய தருணங்களை இளையபருவத்தை இஸ்லாமிய இளைஞர்கள் சிறைகளில் தொலைக்கிற அவலத்திற்கு யார் பொறுப்பேற்பது என ஆதவன் தனது மதிப்புரையில் கேட்பது ஓங்கி அறைகிறது.

எளிய எனது வாசிப்பு பரப்பின் மீது நின்று யோசித்துப் பார்த்தால், இன்றைய வணிக எழுத்தில் கோலோச்சுகிற ஆகச்சிறந்த எழுத்தாளர்கள் பத்து பேரின் ஆகச்சிறந்த பத்து கதைகளை தேர்ந்தெடுத்தால் அதில் மண்டைக்காடு துவங்கி கோவை வரை நடந்த கலவரங்களினால் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்து – இஸ்லாமியர்கள் குறித்த பதிவுகள் அக்கறையோடு பதியப்படவில்லை என்றே கருதுகிறேன். ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. அதையும் மறக்கமல் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பிர்தவஸ். நாம் பேச வேண்டிய தருணத்தில் பேசாமல் போனால் பின்பு பேச வாய்ப்பிருக்காது என்பதை இக்கதைகள் பேசுகின்றன. பேசுங்கள்!

Related posts

Leave a Comment