You are here

ஆபே

ஹசன் மாலுமியார்

ஒரு தச்சரின் மகன்தான் ஆபே. இவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக ஆனான். இது உங்களுக்கு வியப்பளிக்கிறதா? ஆயினும் இது உண்மைதான்! சிறு வயதில் ஆபே என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையில் இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு.

ஆபிரகாம் லிங்கனின் தந்தையின் பெயர் தாமஸ் லிங்கன். தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. அதைத் தவிர, அவரது வேலையும் அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் புதிய இடங்களுக்குக் குடிபெயரவேண்டியிருக்கும். தந்தையால் எந்த இடத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை. இந்தக் காரணங்களால் ஆபேவுக்கு இளம் பருவத்தில் கல்வி கிடைக்கவில்லை. அவன் மிகவும் கஷ்டப்பட்டு தானே படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டான்.

படிக்கத் தெரிந்தவுடன் ஆபே, புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டான். ஆனால் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, கிடைத்த புத்தகங்களையே பலமுறை வாசித்தான்.

வளர்ந்த பிறகு ஆபே செய்யாத வேலைகள் இல்லை. விறகு வெட்டினார். படகு ஓட்டும் தொழில் செய்தார். பிறகு ஒரு கடையில் வேலைக்காரராக பணிபுரிந்தார். அப்போதுதான் அவருக்கு வாசிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் கிடைத்தன. அந்த சமயத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக்கொண்டிருந்தார். பிறகு கொஞ்சம் காலம் அஞ்சல்காரராக (Post’ man) வேலை செய்தார். அப்போது அஞ்சலில் வரும் பத்திரிகைகளைப் படித்த பிறகே உரிய முகவரியில் சேர்ப்பார்.

ஆபே நிறைய சட்ட நூல்களைப் படித்து வழக்குரைஞர் (Advocate) தேர்வு எழுதினார். ஏழைகளுக்காகவும் அடிமை முறையை ஒழிப்பதற்காகவும் பாடுபட்டார்.

ஆபே எனும் ஆபிரகாம் லிங்கன், 1860ல் அமெரிக்காவின் அதிபரானார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் உயரமான அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். கதைகள் சொல்வதிலும் நகைச்சுவையாகப் பேசுவதிலும் திறமை பெற்று விளங்கினார். அவரது சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றன.

இந்தக் காலத்தில் அமெரிக்கா, வடக்கு மாநிலங்களாகவும் தெற்கு மாநிலங்களாகவும் பிரிந்தது. அக்காலத்தில் கருப்பின மக்களை அடிமைகளாக விற்கும் கொடுமை அமெரிக்காவில் நடைமுறையில் இருந்தது. தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடிமை வியாபாரத்தை ஆதரிப்பவர்களாக இருந்தனர். ஆபிரகாம் லிங்கன் 1863ல் அடிமை வியாபாரத்தை தடைசெய்தார். வடக்குப் பகுதிக்கும் தெற்குப் பகுதிக்கும் இடையிலான உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு தலைமை தாங்கினார். தன் முயற்சியில் வென்று சமாதானத்தை நிலைநிறுத்தினார். ஆனால், அந்த சமாதானத்தை விரும்பாதவர்களும் இருந்தனர். அப்படிப்பட்டவர்களின் ஒருவன்தான் ஆபிரகாம் லிங்கனைச் சுட்டுக் கொன்றான்.
சமாதானம் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் ஆபிரகாம் லிங்கன் போர்ட்ஸ் அரங்கில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தெற்குப் பகுதியைச் சேர்ந்த ‘ஜான்பூத்’ என்பவனால் சுடப்பட்டு மரணமடைந்தார். ஆயினும் உலக வரலாற்றில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கிறது.

Related posts

Leave a Comment