You are here
Uncategorized 

ஆசிரிய முகமூடி அகற்றி

பா. ப்ரீத்தி

 

அமெரிக்கப் பள்ளி ஆசிரியர் பிராங்க் மக்கோர்ட் (Frank Mccourt) என்பவர், தனது கற்பித்தல் அனுபவங்களை Teacher man என்ற நூலாக எழுதியிருக்கிறார்.
ஆசிரியர் மக்கோர்ட்டின் அனுபவத்தையும் தனது வாசிப்பு அனுபவத்தையும் இணைத்து ‘ஆசிரிய முகமூடி அகற்றி’ என்ற தலைப்பில் பேராசிரியர் ச.மாடசாமி இந்நூலை எழுதியிருக்கிறார்.

1950களில் அமெரிக்கப் பள்ளிகளில் தனக்குக் கிடைத்த வகுப்பறை அனுபவங்களை உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறார் மக்கோர்ட். வகுப்பறையை ஆசிரியர்- மாணவர் மோதும் களமாகத்தான் பார்க்கிறார் மக்கோர்ட். கூச்சலிடும்-கட்டுப்பட மறுக்கும்-சண்டையிடும் விடலைகளின் வகுப்பில்தான் மக்கோர்ட் ஆசிரியராக முதன்முதலில் நுழைகிறார்.

மாணவர்களைப் பேசவைத்து எந்த விதத்திலும் அவர்களை வெல்ல முடியாமல் கடைசியில் கத்திக்குத்து பட்டு அவர்களை வெல்கிறார்.
மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே! A Teacher has nothing but monthing! என்கிறார் மக்கோர்ட்.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன? வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலிருக்கும் முகமூடிகள் எத்தனை எத்தனை? எண்ணிப் பார்த்தால் எண்ணிலடங்காமல் நீள்கிறது.

சாதி, நிறம், மொழி, இனம் இன்னும் இன்னும் எத்தனை முகமூடிகளை அணிந்து நாம் மாணவர்களைப் பார்க்கிறோம். அத்தனைக்கும் உச்சமாய் ஒரு முகமூடி இருக்கிறது.அதுதான் ‘ஆசிரியர்’ என்கிற அதிகார முகமூடி.
மாணவர் சொல்வது சரியாய் இருந்தாலும் சில நேரங்களில் “வாயை மூடு” எனச் சொல்கிற ஆசிரிய முகமூடி.
சுதந்திரமான வகுப்பறைக்கு ஆசையிருந்தாலும் ‘ஆசிரிய முகமூடி’ நம்மை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது எனக் குறிப்பேட்டில் எழுதி வைக்கிற அளவிற்கு ‘நம்’ தவறுகளை ‘தம்’ தவறுகளாகவே எழுதுகிறார் ஆசிரியர் மக்கோர்ட்.
தன்னைத் தானே சுயபரிசோதனை செய்திருப்பதே மக்கோர்ட்டின் ஆகப்பெரிய வெற்றி.
விவாதங்களே இல்லாத காலகட்டத்தில் விவாதமும் கலந்துரையாடலும் களைகட்டுகிறது மக்கோர்ட்டின் வகுப்பறையில்.
அன்றைய காலகட்டத்தில் இலக்கண வகுப்பை இசைக்கச்சேரி வகுப்பாக மாற்றி அமைப்பதென்பது அத்தனை சுலபமானதல்ல. ஆனால் அதையும் தனது வகுப்பறையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் மக்கோர்ட்.

தனது வகுப்பறையை தன்வசப்படுத்த, மாணவர்களை வளர்த்தெடுக்க ஓர் ஆசிரியராய் நாம் எப்படியெல்லாம் வளைந்துகொடுக்க வேண்டுமென்பதற்கு மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவம் ஒரு சிறந்த பாடம்.
இது ஒருபுறமிருக்க, ஆசிரியர்களை நோக்கிக் கூர்மையாய்ப் பாயும் மக்கோர்ட்டின் கேள்விகள் நம்மைக் குத்திக்கிழிக்கத் தவறுவதிவில்லை.
‘படிப்பது, பதவி உயர்வு பெறுவது எனத் தங்கள் வளர்ச்சி பற்றியே ஆசிரியர்கள் சிந்திப்பார்களானால், மாணவர்களுக்குக் கற்பிப்பது யார்?’ என்று கேள்வி கேட்கிறார் மக்கோர்ட்.
மக்கோர்ட்டின் கேள்வி நம் ஒவ்வொருவரையும் உலுக்கும் என்பதில் ஐயமில்லை.
Teacher Man புத்தகத்தை நேரடி மொழிபெயர்ப்பு செய்யாமல் தனது வாசிப்பு அனுபவமாக எழுதி இப்புத்தகத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார் இதன் ஆசிரியர் ச.மாடசாமி.
முகமூடியைக் கழற்றி எறிய ஒவ்வோர் ஆசிரியரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
வணக்கங்கள் ஆசிரியர் மக்கோர்ட் அவர்களுக்கும் பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுக்கும்.

Related posts

Leave a Comment