You are here
கட்டுரை 

ஹென்றி

ஹசன் மாலுமியார்

1859 – ஆம் ஆண்டு, ஜூன் 24 – ஆம் தேதி. இத்தாலியில் உள்ள ‘சோல்ஃபெரினோ’ (Solferino) எனும் இடத்துக்கு ஒருவர் வந்தார். அவர் பெயர் ‘ஹென்றி டுனான்ட்’ (Henry Dunant). முப்பது வயது. கோடீஸ்வரத் தொழிலதிபரான அவர் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் பிறந்தவர். அவரது பெரிய தொழில் நிறுவனம் வடக்கு ஆப்பிரிக்கா, சிசிலி, ஹாலந்து முதலியவற்றில் பரவியிருந்தது.
அன்று சோல்ஃபெரினோவில் கடும் போர் நடந்துகொண்டிருந்தது. பிரான்சின் சக்கரவர்த்தி மூன்றாம் நெப்போலியன் போருக்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்தார். சக்கரவர்த்தியைச் சந்தித்து தொழில் விஷயமாகச் சிலவற்றைப் பேசவேண்டும் என்றுதான் ஹென்றி அங்கே வந்திருந்தார்.

ஆனால் அங்கே வந்தபோது ஹென்றி, நெப்போலியனைப் பார்க்கவேண்டிய வேலையையே மறந்துவிட்டார். போரில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடக்கும் தெரு வழியே ஹென்றி துயரத்துடன் நடந்தார். காயமடைந்த வீரர்களின் அலறல் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. உணவுக்காகக் குழந்தைகள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள்.

ஹென்றியின் இதயம் துடித்தது. காயம்பட்டுத் தெருவில் கிடந்த ராணுவ வீரர்களுக்கு அவர் பணிவிடை செய்யத் தொடங்கினார். அங்குள்ள பெண்மணிகளையும் இளம் பெண்களையும் உதவிக்கு அழைத்தார். அவர்கள், அவர் பின்னால் திரண்டு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு மருந்துகளும் உணவும் வரவழைத்தார்கள்.

அதன்பிறகு ஹென்றி தன் தொழிலைக்கூட மறந்து, ஐரோப்பா முழுதும் சுற்றி போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு சேவை செய்வதற்காக ‘யங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷ’ னையும் (YMCA), செஞ்சிலுவைச் சங்கத்தையும் தோற்றுவித்தார்.

ஹென்றி முழு நேரமும் சமூக சேவையில் ஈடுபட்டிருந்ததால் அவரது தொழில் முற்றிலும் நசிந்துவிட்டது. அவர், ஒருவேளை உணவுக்குக்கூட வழியற்றவராகிவிட்டார். வறுமையையும் பட்டினியையும் தாங்கிக்கொள்ள முடியாமல் நாட்டைவிட்டே வெளியேறினார்.

அவர் உருவாக்கிய ஒய்.எம்.சி.ஏ. மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் அந்தச் சூழ்நிலையில் வளர்ச்சி பெற்றிருந்தன. ஆனால் அதில் செயல்பட்டுக்கொண்டிருந்தவர்கள்கூட ஹென்றி உயிருடன் இருக்கிறாரா என்று தேடவில்லை. எல்லோரும் அவரை மறந்துவிட்டார்கள். பட்டினியாலும் வறுமையாலும் மிகவும் துன்புற்ற ஹென்றி, சுவிட்சர்லாந்தில் உள்ள ஹெய்டனில் ஒரு யாசகனைப்போல அலைந்தார்.

1890 – ஆம் ஆண்டு வில்ஹைம் எனும் ஆசிரியர், ஹென்றியை அடையாளம் கண்டுகொண்டார். மக்களுக்கான சேவை அமைப்புகளைத் தோற்றுவித்து, நிறைய மக்களுக்கு சமாதானத்தையும் ஆறுதலையும் அளித்த ஹென்றி இன்னும் உயிருடன் இருக்கிறார் எனும் செய்தியை அவர் உலகத்துக்கு அறிவித்தார். அப்போதுகூட, ஹென்றி உருவாக்கிய ஒய்.எம்.சி.ஏ.வும் செஞ்சிலுவைச் சங்கமும் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.

ஆயினும் இறுதியில் அவர் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது. 1901 – ஆம் ஆண்டு அமைதிக்கான முதலாவது நோபல் பரிசு ஹென்றிக்கு வழங்கப்பட்டது! ஆனால் பரிசாகக் கிடைத்த பெருந்தொகையிலிருந்து ஹென்றி ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளவில்லை. அனைத்தையும் ஜீவகாருண்ய செயல்பாடுகளுக்காகக் கொடுத்துவிட்டார்.

சோல்ஃபெரினோ யுத்தத்தைத் தொடர்ந்து சமூகச் செயல்பாட்டாளராக அவர் ‘சோல்ஃபெரினோ நினைவுகள்’ (A memory of solferino) எனும் புத்தகம் எழுதினார். 1910, அக்டோபர் 30ல் மறைந்தார்.

Related posts

Leave a Comment