You are here

வௌவால் தீவு – கிரிஸ்டோபர்

ஒரு சிறிய தீவு. அந்தி நேரம். எங்கும் இருட்டு பரவத் தொடங்குகிறது. திடீரென்று அந்தத் தீவில் எங்கும் சிறகடிக்கும் ஓசை கேட்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான வௌவால்கள் சிறகடித்துப் பறக்கின்றன. விரைவிலேயே அந்தத் தீவு முழுதும் வௌவால்கள்… வௌவால்கள்…

இவ்வளவு வௌவால்கள் எங்கே இருக்கின்றன? மத்திய அமெரிக்காவின் பனாமாவில் உள்ள ‘பாரோ கொலராடோ’ (Barro Colorado Island) தீவில். ஒரு சிறிய தீவான இது, முற்காலத்தில் ஒரு பெரிய மலையாக இருந்தது.

பனாமா கால்வாய் உருவாக்குவதற்காக, மலையின் அடிவாரத்தில் ‘காட்டன்’ (Gatun Lake) எனும் செயற்கை ஏரியை உருவாக்கினார்கள். ஏரியில் நீர் நிறைந்தவுடன் மலையைச் சுற்றிலும் தண்ணீர் உயர்ந்துவிட்டது. இப்படி, பாரோ மலை ஒரு தீவாக மாறியது. இந்தத் தீவில்தான் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வசிக்கின்றன.

ஏறத்தாழ 74 வகையான வௌவால்கள் இங்கே உள்ளன. அதாவது, அமெரிக்காவில் உள்ள மொத்த வௌவால் இனங்களைவிட இரண்டு மடங்கு அதிகமான வௌவால் இனங்கள் இங்கே உள்ளன.

இந்தச் சிறிய தீவில் இவ்வளவு அதிகமான வௌவால்கள் எப்படி வசிக்கின்றன என்று உங்களுக்கு வியப்பாக இருக்கிறது, அல்லவா? இங்குள்ள வௌவால்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அதாவது, ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த வௌவாலுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் உண்டு. அவை அங்கே வசிப்பதுகுறித்த விஷயத்திலும் அவற்றின் உணவுகுறித்த விஷயத்திலும் இந்த தனிப்பட்ட குணம்தான் செயல்படுகிறது.

இவற்றின் உணவுகுறித்த விஷயத்தையே எடுத்துக்கொள்வோமே. சில வௌவால்களுக்கு தேன்தான் பிடிக்கும் என்றால், மற்ற சிலவற்றுக்கு பழங்கள்தான் உணவு. வேறு சிலவற்றுக்கு, பிராணிகளைப் பிடித்துத் தின்பதுதான் பிடிக்கும். இன்னும் சில வௌவால்கள் தவளைகளையும் மீன்களையும் தின்னும். அதனால் இந்த சிறிய தீவில் உள்ள வௌவால்கள் உணவுக்காகச் சண்டை போட்டுக்கொள்வதில்லை.

இரவில் உணவைக் கண்டுபிடிப்பதில் இந்த வௌவால்கள் மிகவும் திறமை பெற்றவை. ஒரு வித ‘கேளா ஒலி’ யை (Ultrasonic sound) ஒலித்தபடிதான் இவை பறக்கின்றன. இந்த ஓசையை நம்மால் கேட்க முடியாது. இந்த ஓசை, முன்னால் உள்ள பொருட்களில் மோதித் திரும்பி இவற்றின் செவிகளை அடையும். இப்படித் திரும்பி வரும் ஓசையின் தன்மையை வைத்து, எதிரில் பழங்கள் இருக்கின்றனவா – அல்லது வேறு ஏதும் இரை இருக்கிறதா என்று வௌவால்கள் புரிந்துகொள்ளும். பறக்கும்போது வெளியிடும் ஓசை பட்டென்று திரும்பி வந்தால், காற்று வெளியில் ஒரு பிராணி பறக்கிறது என்று வௌவால்கள் அறிந்துகொள்ளும். உடனே அதைப் பிடித்துவிடும். வௌவால்களுக்கு இருக்கும் இந்தத் திறமைக்கு ‘எதிரொலி இடமாக்கம்’ (Echolocation) என்று பெயர்.

இரவில் இரை பிடிப்பதில் இந்த வௌவால்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. இரவில்தானே பெரும்பாலான பிராணிகள் ஓய்வெடுக்கும்; பெரும்பாலான பிராணிகள் இலைகளின் அடியில் தங்கியிருக்கும். அப்போது வௌவால்கள் சுலபமாக அவற்றைப் பிடித்து உண்ணும்.
தீவைச் சுற்றி ஏரி இருக்கிறது. ஏரியில் நிறைய மீன்கள் இருக்கின்றன. சில வௌவால்கள் இரவில் மீன்களைப் பிடித்து உண்ணும். தண்ணீரின் மேல் தளத்தை ஒட்டி மெதுவாகப் பறக்கின்ற இவை, மோதித் திரும்பி வரும் தங்கள் ஓசையை வைத்து மீன்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளும். பிறகு அவற்றைக் கடித்து எடுத்துச் சென்றுவிடும்.

மற்றொரு வகை வௌவால்கள், இரவில் கத்திக்கொண்டிருக்கும் தவளைகளைப் பிடித்து உண்ணும். வேறு சில வௌவால்கள் காட்டில் உள்ள விலங்குகளின் ரத்தத்தைக் குடிக்கும்.

ஒரே வகையான பழங்களை உண்ணும் வௌவால்களுக்கிடையில், அந்தப் பழங்களுக்காகப் போட்டி வருமே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அப்படிப் போட்டிகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. பழங்களில் ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கும். ஒருவித சுவையுடைய பழங்களை விரும்பும் வௌவால்கள் அந்தச் சுவையுடைய பழங்களைத்தான் தின்னும். எனவே இந்த வௌவால்களுக்கிடையே உணவுக்காகப் போட்டி ஏற்படுவதில்லை.

இந்த வௌவால்கள் பொழுது விடியும்போது இரை தேடுவதை முடித்துக்கொண்டு, தூங்குவதற்காக தங்கள் வசிப்பிடத்துக்குச் செல்லும். சிறிய குகைகளிலும் மரக்கிளைகளிலும் மரப் பொந்துகளிலும் இவை வசிக்கும். சில இனத்தைச் சேர்ந்த வௌவால்கள் பெரிய இலைகளைப் பறித்து கூடு கட்டி அதில் வசிக்கும்.

Related posts

Leave a Comment