You are here
Uncategorized 

விசித்திரச் சிலைகள்

பறவைக் கூடு
இந்தக் கட்டடத்தில் ஒரு மிகப் பெரிய கிளிக்கூட்டைப் பார்த்தீர்களா? பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் வெர்டோன்க் (Benjamin Verdonck) எனும் சிற்பக் கலைஞர் உருவாக்கிய சிற்பம் இது. டச்சு நகரான ரோட்டர்டாமில் (Rotterdam) ‘வீணா டவர்’ (Veena Tower) எனும் கட்டடத்தில் இந்த கிளிக்கூட்டை உருவாக்கியிருக்கிறார்.
வீட்டின் மேல் சுறா
வீட்டின் மேற்கூரையில் மிகப் பெரிய சுறா விழுந்து கிடப்பதைப் பார்த்தீர்களா? இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு சிற்பம் இது. ஜோன் பக்லே (John Buckley) எனும் சிற்பி 1986 இல் இதை உருவாக்கினார். 25 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்டது இது.
மிக நுட்பமான சிற்பங்கள்
மெல்லிய நூல் மட்டுமே நுழையக்கூடிய ஊசித் துளைக்குள் அழகான சிற்பங்கள் செய்திருப்பதைப் பாருங்கள். பிரிட்டிஷ் சிற்பக் கலைஞர் விலார்டு விகான் (Willard Wigan) செய்தவை இவை.
முட்டை ஓட்டுக் கோழி
சிற்பி ‘கெயில் பீன்’ (Kyle Bean) லண்டனில் வசிக்கிறார். பயனற்ற பொருட்களைக் கொண்டு அழகான சிற்பங்கள் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். நூறு முட்டை ஓடுகள் கொண்டு இவர் உருவாக்கிய கோழிச் சிற்பத்தைப் பாருங்கள். இந்தக் கோழியின் கால்முதல் அலகுவரை எல்லாம் முட்டை ஓடுகள்தான்! இவ்வளவு முட்டை ஓடுகளைக் கவனமாக ஒட்டிச் சேர்த்து மூன்று நாட்களில் கெயில் இதை உருவாக்கியிருக்கிறார். நல்ல விலை கொடுத்து வாங்குவதற்கு பலர் தயாராக இருந்தாலும் கெயில் இதை விற்கவில்லை.
உலோக மரத்தின் இசை
தூரத்திலிருந்து பார்த்தால் இது ஒரு மரத்தைப்போன்றிருக்கும். அருகே சென்று பார்த்தால்தான் அது ஒரு சிற்பம் என்று நமக்குப் புரியும்! நிறைய குழல்களை இணைத்து இந்த சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு காற்று வீசினால், இது வெறும் சிற்பம் மட்டுமல்லவென்று நமக்குத் தெரியும். காற்று வீசும்போது இந்த சிற்பம் பாட்டுப் பாடத் தொடங்கும். இதன் குழல்கள் வழியே காற்று கடந்து செல்லும்போது பல விதமான ஓசைகள் எழும். இங்கிலாந்தில் லங்காஷயரில் (Lancashire) இந்த இசைச் சிற்பம் இருக்கிறது. இதன் பெயர் ‘சிங்கிங் ரிங்கிங் ட்ரீ’ (Singing, Ringing Tree). ‘மிக் டோன்கின்’ (Mike Tonkin), ‘அன்னா லியு’ (Anna Liu) எனும் இரண்டு கலைஞர்கள் சேர்ந்து இதை வடிமைத்திருக்கிறார்கள்.
ஆயுதங்களிலிருந்து எழும் இசை
‘பெட்ரோ ரேயஸ்’ (Pedro Reyes) மெக்ஸிகோவைச் சேர்ந்த கலைஞர். இவர் பயன்பாடு முடிந்து கைவிடப்பட்ட ஆயுதங்களைச் சேகரித்து, அவற்றைக் கொண்டு இசைக் கருவிகள் செய்கிறார். இப்படி ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை அவர் உருவாக்கியிருக்கிறார்.
சின்னச் சிலைகளும் பெரிய பொருட்களும்
‘தட்சுயா தனாகா’ (Tatsuya Tanaka) ஜப்பானியக் கலைஞர். சின்னச் சின்ன சிற்பங்கள் செய்து, அவற்றைவிடப் பெரிய பொருட்களான கேரட், ஆரஞ்சு, பாலாடைக்கட்டி (Cheese) போன்றவற்றின் அருகே வைத்து ஒளிப்படம் (Photograph) எடுப்பதில் நிபுணர்.
சாக்கர மூடி சிற்பங்கள்
பிரிட்டிஷ் கலைஞர் ‘டோலமி ஏர்லிங்டன்’ (Tolami Arlington) பல வகை வாகனங்கச் சக்கரங்களின் குடமூடிகளைப் (Hubcap) பயன்படுத்தி உருவாக்கிய சிற்பங்கள் இவை.
தோட்டாச் சிற்பங்கள்
இந்தச் சிற்பங்கள் எவற்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றன, தெரிகிறதா? தோட்டாக்களால் செய்யப்பட்டிருக்கின்றன. கொலம்பியாவைச் சேர்ந்த கலைஞர் ‘ஃபிடெரிக்கோ யுரிபே’ (Federico Uribe) செய்த சிற்பங்கள் இவை.
விதையில் சிற்பம்
ஐரிஷ் பெண் ‘ஜான் காம்ப்பெல்’ (Jan campbell), ‘அவோக்காடோ’ (Avocado) பழம் தின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று ஒரு சிந்தனை ஏற்பட்டது. இந்தப் பழத்தின் கொட்டையில் சிற்பம் செய்தால் என்ன! பிறகு அவர் அவோக்காடோ கொட்டைகளைச் சேகரித்து அவற்றில் அழகான சிற்பங்கள் செய்தார். விரைவிலே இந்தச் சிற்பங்கள் உலகெங்கும் புகழ் பெற்றுவிட்டன.

Related posts

Leave a Comment