You are here
கட்டுரை 

ராக்கெட்டின் தந்தை – செல்வி

ஒரு பனிக்கால இரவு. மிகவும் குளிராக இருந்தது. அந்தக் குளிரிலும் ஒருவன் மாஸ்கோ நகரத் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது பதினாறு. அவனது காதுகள் கேட்கும் திறனை இழந்தவை. அடிக்கடி அவன் ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கம்பளி ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. எனவே, அவன் உடல் குளிரால் நடுங்கியது. பசியாகவும் இருந்தது. ஆனால், அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. அவன் எதைப் பற்றியோ தீவரமாக சிந்தித்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் மனதில் ஒரு கருத்து உதித்தது. கயிற்றில் கட்டி சுழற்றி எறியப்பட்ட கல், கயிற்றிலிருந்து விடுபட்டு தூரத்தில் சென்று விழுவதை அவன் பல முறை பார்த்திருக்கிறான். ‘அப்படியென்றால், பூமியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் என்னை, விண்வெளியில் எறிய பூமியால் முடியுமா? அப்படியென்றால் மனிதன் நட்சத்திரங்களை அடைந்துவிடலாமே!’ இந்த சிந்தனையால் அவன் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டான்.

அந்தச் சிறுவனின் பெயர், கான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky). பிற்காலத்தில் இவன்தான், மனிதர்களால் பூமியை விட்டுப் பறந்து போக முடியும் என்று நம்பி, அதைச் சாத்தியமாக்க முயன்ற விஞ்ஞானியாக மாறினான்.

ரஷ்யாவில் உள்ள ‘இஷஸ்க்’ எனும் சிறு நகரத்தில் 1857, செப்டம்பர் 5ல் சையோல்கோவ்ஸ்கி பிறந்தார். அவரது குடும்பம் மிகவும் வறுமைப்பட்ட குடும்பம். பத்தாம் வயதில் அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்தக் காய்ச்சலின் காரணமாக அவர் காதுகள் கேட்கும் திறனை இழந்தன. அதன் பிறகு அவர் வாழ்க்கையே சிதைந்துபோயிருக்கவேண்டும். ஆனால், சவால்களை எதிர்கொள்வதற்கான மன வலிமையை அவரது தாய் தந்தை அவருக்கு ஏற்படுத்தினார்கள். சிறு வயதிலிருந்தே அவர் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

சையோல்கோவ்ஸ்கியின் அறிவியல் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட தந்தை, படிப்பதற்காக அவரை மாஸ்கோவுக்கு அனுப்பினார்.

சையோல்கோவ்ஸ்கி, இயற்பியலிலும் கணிதத்திலும் நிறைந்த அறிவு பெற மாஸ்கோ நூலகம் உதவியது.

‘மனிதனை விண்வெளியை அடையச் செய்வது’ எனும் கனவை அந்த இளைஞன் கைவிடவில்லை. நியூட்டனின் மூன்றாவது அசைவு விதியைப் பயன்படுத்தினால் விண்வெளியில் ராக்கெட்டைச் செலுத்தலாம் என்று நினைத்தார் சையோல்கோவ்ஸ்கி. அந்தக் கருத்தை முன்வைத்து ஆய்வு நடத்த முயற்சி செய்தார்.

சையோல்கோவ்ஸ்கி, 1879ல் பள்ளிக்கூட ஆசிரியரானார். குழந்தைகளின் அன்பிற்குரிய ஆசிரியராக இருந்தார் அவர். விண்வெளிப் பயணம் தொடர்பான வாசிப்பும் சிந்தனையும் அப்போதும் தொடர்ந்தது. 1880ல் மூன்று கட்டுரைகள் எழுதி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ‘இயற்பியல் மற்றும் வேதியியல் சங்கம்’ (Society of physics and chemistry) எனும் நிறுவனத்துக்கு அனுப்பினார்.

கட்டுரைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட சங்கம் அவருக்கு உறுப்பினர் பதவி அளித்தது. அவர், விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.

1903ல், ‘சயின்டிஃபிக் ரிவ்யு’ எனும் புகழ் பெற்ற பத்திரிகையில் அவரது ஒரு கட்டுரை பிரசுரமானது. அது, ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் நடத்தக்கூடிய ஆராய்ச்சிகளைப் பற்றிய கட்டுரை. அதில், நவீன ராக்கெட்டைப் பற்றிய அற்புதமான விவரங்கள் இருந்தன. ராக்கெட்டின் முன்மாதிரி, பயன்படுத்தவேண்டிய பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அதில் எழுதியிருந்தார். விண்வெளி என்றால் என்ன என்றும் விளக்க முயற்சி செய்திருந்தார். விண்வெளியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும், பிறகு திரும்பி பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும்போது ஏற்படக்கூடிய கஷ்டங்களைப் பற்றியுமெல்லாம் அதில் விரிவாக விவாதித்திருந்தார். பிற்காலத்தில் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் உண்மையான ராக்கெட் தயாரிப்பது, ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு சுலபமாக இருந்தது.

ஆனால், அன்றைக்கு அந்தக் கட்டுரை வெளிவந்த காலத்தில் அதைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. அது மட்டுமல்ல, அந்தக் கட்டுரை வெளிவந்த பத்திரிகையும் விரைவிலேயே நின்றுவிட்டது. 1918ல், பதினைந்து வருடத்துக்குப் பிறகு ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி வந்த பிறகுதான், அவரது கட்டுரைக்கு அங்கீகாரம் கிடைத்தது. தொடக்கத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து தன் ஆய்வில் ஈடுபட்டிருந்ததும், பத்திரிகைகளில் தனது ஆய்வுகளைப் பற்றி எழுதிவந்ததும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்.

Related posts

Leave a Comment