You are here
Uncategorized 

பொறுப்புமிக்க மனிதர்கள்

பி.சி. செந்தில் குமார்

பொதுவாக நாம் அனைவரும் சிறுவயதுக் குழந்தைகளாக இருக்கும்போது நம் பெற்றோரிடம் சில பொருட்களை விரும்பிக் கேட்டிருப்போம். அவற்றை வாங்கித்தர அவர் மறுத்தபோது நாம் பெருத்த ஏமாற்றமடைவதுண்டு. பின்னாளில் வளர்ந்து நாமும் ஒரு பெற்றோராக ஆனபின்பு நாம் நினைப்பது என்ன? தனக்கு மறுக்கப்பட்ட அனைத்தும் தன் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம் குழந்தை வளர்ப்பின் தாரக மந்திரமாக இருக்கும். அதற்காக தாமாகவே சில சிரமங்களை ஏற்றுக்கொண்டு தம் குழந்தைகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எப்போதும் பெற்றோர்கள் திருப்தி அடைவார்கள் அல்லது தான் பெரிய தியாகம் செய்த உணர்வைப் பெறுகிறார்கள். தான் அரசுப்பள்ளியில் படித்திருந்தால் தன் பிள்ளையை எப்பாடுபட்டாவது ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்துவிடத் துடிக்கும் எண்ணத்திற்குப் பின்னால் நிற்பதும் இதுவே. பெற்றோர்களுக்கே உள்ள ஒரு பொதுவான பண்பு இது. ஆயினும் தனக்கு குடும்பத்தில் மறுக்கப்படும் வாய்ப்பை, வசதிக் குறைவைப் பற்றி இவ்வளவு கவலைப்படும் ஒரு பெற்றோர் இதே போல் தனக்கு சமுதாயத்தில் மறுக்கப்பட்டவற்றைத் தன் குழந்தைக்குப் பெற்றுத் தரவேண்டும் என்று விழைகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றேதான் சொல்லவேண்டும். இன, மொழி மற்றும் சாதி அடிப்படையில் சமூகத்தின் பல்வேறு வாய்ப்புகள் தனக்கு மறுக்கப்படும் பொழுது, இதே பெற்றோர் இவற்றைத் தன் மகளுக்கு மகனுக்குப் பெற்றுத் தரவேண்டும் என்று எண்ணம் உடையவர்களாக இருப்பதில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை தனிமனிதன் தன் உடல் உழைப்பால் தன் சக்திக்கு உட்பட்டு மாற்றிவிட முடியும். ஆனால் சமுதாயத்தை மாற்ற தனி ஒருவனாக தான் என்ன செய்யமுடியும்? அது தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்று கருதி அதை முற்றிலும் தவிர்த்துவிடுவது அல்லது அது அப்படித்தான் இருக்கும் என்று ஏற்றுக் கொண்டு அதையே தன் அடுத்த தலைமுறைக்கும் கடத்திவிடுவதும்தான் பொதுவாக நிகழ்கிறது. அதை எதிர்க்க நினைப்பவர்களும், ஓர் அமைப்பு ரீதியிலேயே அதை அணுக முயல்கிறார்கள். ஆனால் மனு ஜோசஃப் குறிப்பிடும் அய்யன் மணி அப்படிக் கருதக்கூடிய ஒரு பாத்திரம் அல்ல. கோட்பாடு மற்றும் ஆய்வுகள் நிறுவனத்தில் இயக்குநர் அரவிந்த் ஆசார்யாவின் தனி அலுவலராகப் பணியாற்றும் தகுதி படைத்த, அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநரான ஜனா நம்பூதிரியைவிட அதிக நுண்ணறிவு ஈவு படைத்தவராயிருந்தும், சாதியின் பெயரால் தனக்குக் கிடைக்காத சமூக அங்கீகாரத்தை எப்படியாவது தன் மகன் ஆதிக்குப் பெற்றுத்தர வேண்டும் என்ற தீராத ஆவலினால் அவன் தனக்கு அமைந்த சூழ்நிலைகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதே இந்நாவலின் சாரம். அய்யன் மணியின் மகன் ஆதிக்கு பிறவியிலேயே இடதுபுறக் காது கேட்கும் திறனற்று இருப்பதால் காது கேட்கும் கருவியின் துணையுடனேயே வலம் வரும் ஒரு மாற்றுத் திறனாளியான அவனை ஏற்கனவே சாதியின் பெயரால் தனிமைப்படுத்தும் சமூகம், தன் உடல் ஊனத்தினைக் குறித்தும் இன்னும் அதிகமாக ஒதுக்கிவைப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். ஆகவே தன் மகனை இச்சமூகம் எப்பொழுதும் மிக்க மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்திட அவன் ஆற்றும் எதிர்வினையின் வகையும் மிகவும் வித்தியாசமானது.

சமூகத்தில் இன்று நிலவும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் ஒரு காலத்தில் வலிந்து போலியாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களால் உருவாக்கப்பட்டது. இந்தப் போலிக் கட்டமைப்புகளுக்கு பொதுவான எதிர்வினை என்பது உண்மையை உரக்க உரைப்பதாகத்தான் இருக்கிறது. ஒரு பொய்யைப் பத்துமுறை சொன்னாலே அது உண்மை போல ஆகிவிடும் இக்காலகட்டத்தில், போலியின் வேகத்தோடு எப்பொழுதும் உண்மை போட்டியிட்டு வெல்வது என்பது மிகவும் கடினம். ஆனால் முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும், தந்திரத்தைத் தந்திரத்தால்தான் ஒடுக்க முடியும் என்ற மற்றொரு வழியும் நம் முன்னே இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே இருக்கும் போலிக் கட்டமைப்புகளை நேரடியாக உடைப்பதன் சாத்தியம் குறைவாக இருக்கும் போது, அதாவது ஒரு நேர்கோட்டை அழித்துச் சிறிதாக்குவது என்பது சாத்தியமற்றதாக இருக்கும் போது, அதை சிறிதாக்க நமக்கெல்லாம் முன்பே பழக்கப்பட்ட மற்றொரு வழி அதைவிடப் பெரிய கோட்டை அதன் அருகில் போடுவது போல, இந்தக் கட்டமைப்புகளைவிடப் போலியான ஒன்றைக் கட்டமைப்பது என்பதும் மற்றொரு வகையிலான எதிர்வினை என்றே நான் கருதுகிறேன். இந்த மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கும் ஒரு பாத்திரம்தான் இந்நாவலின் முக்கிய பாத்திரமான அய்யன் மணி.
தன் மகனிடம் கூர்மதியுள்ள வினாக்களைக் கொடுத்து அதை அவன் ஆசிரியர்களிடம் கேட்கச் சொல்வதன் மூலமும், அவனைப்பற்றிய போலியான செய்திகளை பத்திரிக்கைகளில் வெளிவரச் செய்வதன் மூலமும், அவனை பள்ளிகளுக்கிடை யேயான வினாடிவினாப் போட்டியில் குறுக்கே பதில் சொல்ல வைத்து அனைவரையும் வியக்க வைப்பதன் மூலமும் அவனை ஓர் அசாதாரண மாணவனாக இச்சமுதாயத்தின் முன்னிலையில் நிறுத்துவதற்கு அய்யன் மணி எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் வழிகளும் இந்நாவலை மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக மாற்றுகின்றன.

அய்யன் மணியின் தந்தை ஒரு நகராட்சித் துப்புரவுப் பணியாளர். அய்யன் மணியின் தாத்தா அவர் காலத்தில் கிராமப் பள்ளிக்கூடத்தில் நுழையக் கூட அனுமதிக்கப்படவில்லை. ஒருமுறை அவர் நுழைந்தபோது அடித்துத் துரத்திவிட்டார்கள். அய்யன் மணியின் தந்தைக்கும் படிப்பதற்கு மிகப் பெரிய வாய்ப்போ சூழ்நிலையோ அமையவில்லை. ஆனால் அய்யன் மணிதான் அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி. அவனுடைய உடன்பிறந்த சகோதர்கள் அனைவரும் இவனுக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பே குடிப்பழக்கத்தால் ஈரலில் இரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்துபோனவர்கள். தாயும் தந்தையையும் இழந்து தனித்து விடப்பட்டதற்குப் பிறகே திருமணம் புரிந்துகொள்கிறான். படிப்பு முடிந்தபின் சில நாட்கள் யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்திருக்கிறான். அப்போதுதான் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக உள்வாங்கிக் கொண்டான். தன்னுடைய குடும்பம் மும்பையில் பிடிடி சாள் என்று அழைக்கப்படும் ஒரே கூரைக்கீழ் வரிசையாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒட்டிய வீடுகளின் தொகுப்பில் ஓர் ஓரறை வீட்டில் வாழ்ந்து வரும்போது இதே சமூகத்தில் வாழ்ந்து வரும் சில குடும்பப்பின்னணிகள் அவனை வியப்பில் ஆழ்த்தின.

பிடிடி (பிரிட்டிஷ் டெவலப்மெண்ட் டிபார்ட்மெண்ட்-பிரிட்டிஷ் வளர்ச்சித்துறை) சாள் என்பது பத்தாயிரத்து ஒரு ஓரறை வீடுகளைக் கொண்டது. ஒரே மாதிரியான 120 மூன்றுமாடிக் கட்டிடங்கள். திடீரென “வீடற்றவர்களுக்கு வீடு தரவேண்டும்” என்று ஆங்கிலேயர்களின் மனசாட்சி உறுத்தியதால் இந்தச் சாள்கள் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர்களால் கட்டப்பட்டன. ஆனால் அந்த வாழிடங்கள் மிக மோசமாகக் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிந்ததால், நடைபாதையில், சாலைகளில் வசித்தவர்கள்கூட அவற்றிற்குப் போக மறுத்துவிட்டார்கள். எனவே அந்தக் கட்டிடங்கள் சுதந்திரப் போராட்டக்காரர்களைப் பிடித்து உள்ளே தள்ளும் ஜெயில்களாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன. எவரும் வசிக்க விரும்பாத ஓரறை வீடுகள், தப்பிக்க முடியாத சிறையறைகள் ஆயின என்று மனு ஜோசஃப் குறிப்பிடுகிறார். ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வீடற்றவர்கள் கூட வெறுத்து ஒதுக்கிய, சிறைப்பகுதியாக இருந்த இந்த இடத்தில், இப்போது எண்பதாயிரம் பேருக்குமேல் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பல ஆயிரம் குடும்பங்களில் ஒன்று அய்யன் மணியின் குடும்பமும்.

அய்யன் மணி தான் கடந்துவந்த பாதையை நினைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக உணர்ந்தான். தான் பிறந்தபோது தனக்குத் தெரியாமலேயே தனக்கிடப்பட்ட அடையாளமான ஒரு மதத்தைத் துறந்து புத்தமதத்தைத் தழுவினான். வீட்டில் ஒரே ஒரு சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க மட்டுமே அனுமதித்தான். தான் வளர்ந்த உலகத்தையே அவன் அழிக்க விரும்பினான். அதிலிருந்து தப்பிக்க எப்போதும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க முனைந்து கொண்டே இருந்தான்.

உலகில் மனிதர்களை அவர்கள் சார்ந்த சாதி, இன, மத மற்றும் மொழி அடிப்படையில் பொதுமைப்படுத்தும் பண்பு அதிகமாக சமூகத்தில் நிலவுவதைப் பார்க்கலாம். இந்த வகையான பொதுமைப்படுத்தும் பண்புகளே மனிதர்களிடம் பிரிவினையைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. ஒரே குடையின்கீழ் ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தை மதிப்பிடுவது என்பது எத்தனை தவறானது என்பதை நாம் அனுபவப் பூர்வமாக அறிந்திருந்தாலும் அதை இந்நாவலின் வழியே நாம் பயணப்படும் பொழுது நம்மால் உணர முடியும். மேலும் சில மதவாத சக்திகள் இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை எப்படித் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றங்களை நிகழ்த்துகின்றனர் என்பதையும் இந்நாவலில் விளக்குகிறார் மனு ஜோசஃப்.

இந்த கோட்பாடு மற்றும் ஆய்வுகள் நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஒரு கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் தற்போதைய அறிவியல் குறித்த பல்வேறு கருத்துப் பரிமாற்றத்திற்குப்பின் இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவர்களின் சேர்க்கை குறித்த விவாதம் நடத்தப்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவனாகச் சேருவதற்கு இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதே இதுவரை உள்ள நடைமுறை. இந்த நடைமுறையில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொரு மாதமும் பரிசீலிக்கப்படும். ஆயினும் இறுதியில் அனைவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பர். இதற்குக் காரணங்களாக முன்மொழியப்படுபவை இரண்டு: ஒன்று இந்நிறுவனத்தில் அறிவிற்கு மட்டுமே முதலிடம் அளிப்பது. இரண்டாவது காரணம் பொதுவாக இட ஒதுக்கீட்டு முறையைப் பற்றிய நம்முடைய புரிதல் அல்லது நம்முடைய தனிப்பட்ட நபர் சார்ந்த சொந்த வாழ்க்கை அனுபவத்தை வைத்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால் ஏற்படுவது. அதாவது ஏற்கனவே சமூகத்தின் ஆட்சி மற்றும் அதிகாரம் மிக்க உயர் பதவிகள் வகிக்கும் ஒவ்வொருவரும் ஒரு முன்னுரிமை பெற்ற பின்னணியிலிருந்து வருவது என்ற எண்ணம் தவறானது. இவர்கள் அனைவரும் எளிய குடும்பத்தில் வறுமையிலேயே பிறந்தவர்கள். நடந்தே பள்ளிக்குச் சென்றவர்கள். பள்ளிக் கட்டணம் கூட கட்டும் அளவிற்கு வசதியில்லாதவர்கள். இந்தக் கடின சூழ்நிலைகளைக் கடந்தே ஒவ்வொருவரும் மேல்நிலையை அடைந்தார்கள் என்று ஒவ்வொருவரும் நம்புவது. சமூகத்தின் மிகப் பெரிய நிலைகளை ஒருவர் தன் தனிப்பட்ட திறன்களை வைத்துக் கொண்டே அடைந்ததாகவும் இதற்கு அவர்தம் கடின உழைப்பே காரணம் என்றும் இத்தகைய கடின உழைப்பைக் கொடுக்கக் கூடிய எவரும் இந்நிலையை அடையமுடியும் என்றும், இங்கு வர இயலாதவர்கள் அத்தகைய கடின உழைப்பைக் கொடுக்க முன்வராதவர்கள் என்று அவர்களை குற்றம் சாட்டுவதன் மூலமாகவும் இதற்கு எதிர் நிலையை எளிதாக ஒருவர் எடுக்க முடியும். மேலும் தன்னுடன் படித்த சில பண வசதி படைத்த; ஆனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சான்றுகளாகப் பகர்வதன் மூலமும் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. அதாவது ஒட்டு மொத்தப் பிரச்சனையை அதன் முழு வீச்சில் புரிந்து கொள்ளாமல் சில விதிவிலக்குகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவது என்பது சமூக நீதிக்கே எதிரானது.

கல்லூரிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் அப்படி இட ஒதுக்கீட்டு முறையில் வரும் மாணவர்களை அவர்கள் ஏதோ உழைக்காமலேயே அரசு வழங்கும் சலுகையின்பால் வந்தவர்கள் என்று கீழாகக் கருதும் எண்ணம்தான் தற்போதைய உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் வன்முறைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் என்பதை இந்நாவல் சுட்டிக் காட்டுகிறது. இறுதியாக இட ஒதுக்கீட்டு முறையை இன்றுவரை நடைமுறைப்படுத்தாத நிலையிலேயே இந்நிறுவனம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நேரில் காணும் அய்யன் மணி, தன் மகன் ஆதி போன்றவர்கள் இந்நிறுவனங்களில் சேருவதற்கு எந்தளவுக்கு வாய்ப்பிருக்கிறது என்று எண்ணித் தன்னையே நொந்துகொள்பவனாகவும் இதற்கு எதிர்வினையாற்றுவதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருக்கிறான். மனிதர்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்றவாறு நடந்துகொள்பவர்கள்தாம். இங்கு தூயவர், புனிதர் என்றும் எவருமில்லை, கீழானவர், இழிந்தவர் என்றும் எவரும் இல்லை. ஒவ்வொருவரும் தாம் இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறே எதிர்வினையாற்றுகின்றனர் என்பதற்கு கோட்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்த் ஆசார்யா ஓர் எளிய உதாரணம். பெருவெடிப்புக் கொள்கைக்கு எதிரானவரும் நோபல் பரிசு பெறுவதற்குப் பரிந்துரை செய்வதற்கு தகுதி படைத்தவராயினும், அதே நிறுவனத்தில் வான்-உயிரியல் துறையில் பணியாற்றும் டாக்டர் அபர்ணா கெளஷ்மெளலிக்கின் காதலில் விழுந்து தன்னுடைய உயர்ந்த நிலையை இழக்கிறார். அய்யன் மணி எப்படி இந்த சந்தர்ப்பங்கள் எதையும் நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய மகனை மிகப் பெரிய அறிவாளியாக இச்சமூகத்தின் முன் நிறுத்துகிறார் என்பதுதான் இந்நாவலின் கரு. எது அறிவியல், எது அறிவியலற்றது என்பதைப் பிரித்தறிவது மிகக் கடினமாகவும், பல்வேறு போலியான செய்திகளை எளிதில் நம்பிவிடத் தக்க முறையில் அறிவியல் உண்மை போலவே சித்தரிக்கும் வகையில் உடனுக்குடன் வழங்கும் சமூக வலைத்தளங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட புதுயுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அறிவியலற்ற பலவற்றை அறிவியல் ஆகச் சித்திரிக்க முயலும் சிலரின் முயற்சிகளை நையாண்டி செய்வதாகவே இருக்கிறது இந்நாவலில் வரும் ஒய்வுபெற்ற விஞ்ஞானி ஒருவரின் கதாபாத்திரம். ஆக அடிப்படையில் சமூக அவலங்களை, ஏற்றத்தாழ்வுகளை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைகளை மட்டும் பேசுவதோடு நில்லாமல் இன்றைய சூழ்நிலையில் எவ்வாறு மக்கள் புத்தி சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்நாவல் அலசுகிறது. கேரளத்தின் கோட்டயத்தில் பிறந்து பின் சென்னையில் படித்து வளர்ந்து தற்போது டில்லியில் வசித்துவருபவரும் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவருமான மனு ஜோசஃப்பின் முதல் நூலான இந்நாவலின் எழுத்து நடை மிகவும் புதுமையானதாகவும் எளிதில் அனைவரையும் வசீகரிக்கத்தக்கதாகவும் அமைந்திருக்கிறது. “ஒரு யானையின் தும்பிக்கையில் நாலாயிரம் தசைகள் இருக்கின்றன” என்பது போன்ற ஏராளமான அறிவியல் செய்திகள் நாவலில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. அவர் இந்நூலில் கையாண்டிருக்கும் உவமைகள் தனித்தன்மை வாய்ந்ததாகவும் படிப்போரை மிகவும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் அமைகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உதாரணமாக வயது முதிர்ந்த அரவிந்த் ஆசார்யா முப்பதே வயது மதிக்கத்தக்க டாக்டர் அபர்ணா கெளஷ்மெளலிக்கிடம் காதல் வயப்படும்போது அவர் தன்னுடைய வயதிற்கு இது உகந்ததுதானா என்று தன்னையே கேள்வி எழுப்பும் இடத்தில் “700 நானோ மீட்டர் அலைநீளமுள்ள ஒவ்வோர் ஒளிக்கற்றையும் சிவப்புதான் என்பது போலக் காதலில் ஈடுபட்ட ஒவ்வொருவனும் இளைஞன்தான்” என்று தன்னைத்தானே அரவிந்த் ஆசார்யா சமாதானப் படுத்திக் கொள்ள மனு ஜோசஃப் கையாண்டிருக்கும் சொல்லாடல் மிகவும் கவனிக்கத்தக்கது.

இது போலவே அறிவியல் சார்ந்த பல்வேறு உவமைகள் இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில் “இந்த நாட்டில் பூகம்பம் வந்து தப்பித்தவர்கள் ஒரு பிபிசி நிருபரை நோக்கி ஓடுவது போல மாலை நேரங்களில் அவர்கள் மகிழ்ச்சியோடு வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள்” என்று அவர் குறிப்பிடுவது இது வரை வழக்கமாகப் பயன்படுத்தப்படும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதை நாம் உணரலாம்.

சமூகப் பிரச்சனைகளை அலசும் மனு ஜோசஃப் எடுத்துக் கொண்ட கதைக் களம் மும்பையில் இருக்கும் கோட்பாடு மற்றும் ஆய்வுகள் நிறுவனம் ஆகும். பொதுவாக இன்றைய சூழலில் இளங்கலைப் படிப்பு வரை மட்டுமே ஒருவர் தமிழில் படிக்கமுடியும். முதுகலைப் பட்டம் பெற வேண்டுமெனில் ஒருவர் ஆங்கிலத்தில்தான் பெறமுடியும் என்ற நிலையே இன்று வரை நீடிக்கிறது. அதாவது முதுகலைப்படிப்பிற்கான நூல்கள் எதுவும் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்றாலும் இந்நூலின் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் அவர்களுக்குள்ளான பெரும்பாலான பேச்சுவார்த்தை அவர்களின் ஆராய்ச்சி பற்றியதாகவே இருக்கிறது. அந்த உயர் அறிவியல் கருத்துகளை எல்லாம் தமிழில் பிழையில்லாமல் கொண்டுவருவது என்பது மிகவும் சிக்கலானதும் சவாலானதாகவும் இருக்கிறது. இந்தச் சவாலை ஏற்று மிகத் திறம்பட இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் திரு. பூரணசந்திரன். அதனால்தான் இந்த வருடம் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருதினை இந்நாவலுக்காக திரு. பூரண சந்திரன் பெற்றிருக்கிறார். இந்நூல் வாசிப்பின் போது இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதைப் பலரும் மறந்து இது ஒரு தமிழ் நாவலேதான் என்று நம்பும் அளவிற்கு அவருடைய மொழிபெயர்ப்பு இந்நூலுக்கு மேலும் வலு சேர்க்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்புத்தகம் 2010ம் ஆண்டிற்கான இந்து நாளிதழ் வழங்கும் இலக்கியத்திற்கான பரிசையும், PEN/Open Book பரிசையும் பெற்றிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. சமூகப் பிரச்சனைகளை அலசும் அதே நேரத்தில் ஒரு ஜனரஞ்சக நாவலாகவும், மிகவும் விறுவிறுப்பாகவும் வாசிக்கத் தூண்டும் ஒரு நாவல். மனு ஜோசஃப்பின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒளி எப்படி ஒரே சமயத்தில் துகளாகவும் அலையாகவும் இருக்கிறதோ அதுபோல.

Related posts

Leave a Comment