You are here

புதிய வரவுகள் – கமலாலயன்

பணம் வந்த கதை ஆத்மா கே.ரவி
பக்கம் – 32 | ரூ. 25
அறிவியல் எழுத்தாளராகவும் ஓவியராகவும் விளங்கும் ஆத்மா கே.ரவி, ‘பணம்’ என்ற காசு வந்த கதையை இந்தக் குறு நூலில் சுருங்கக் கூறி விளங்க வைக்கிறார்.பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருள் என்ற பண்டமாற்றின் அடிப்படையில் தொடங்கியதுதான் எல்லாம்! சந்தை உருவானது, பின் காசு உருவாகி பல்வேறு அவதாரங்கள் எடுத்தது. தோல், ஈயம், கற்கள், பித்தளை, இரும்பு, தங்கம் என பல்வேறு உலோகங்களால் காசுகள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. நவீன காலத்தில் ரூபாய் காகிதத்தில் அச்சிடப்படுகிறது.பணம் உருவான இந்த வரலாற்றில் பணம் படுத்தும் பாடுகளும் சுருங்கக் கூறப்படுகின்றன.

 

சிறு உயிரிகளின் கதை | ஆத்மா கே.ரவி
பக்கம் – 32 | ரூ. 25
இரத்தினக் கல்லின் நிறமொத்த மீன்கொத்தி, துப்பாக்கிக் குண்டின் வேகத்தில் மீனை வேட்டையாடுமாம்! இளவேனிற்காலத்திய நீரோடைகளில் பறவை நீர்மூழ்கி, புதர்மண்டிய குளம்,ஏரிப்பகுதிகளில் வாழும் ‘கானாங்கோழி’, காடைக்கோழி, வெள்ளைக்காக்கை, (அட, நிஜமாவே வெள்ளை தாங்க நிறம்!), மயில் உள்ளிட்ட பறவைகளின் வாழ்முறைகளில்தான் எத்தனை வினோதம்! எலி, தவளை, நத்தை, ஆமை, வண்ணத்துப்பூச்சிகள்-தெரிந்த பெயர்கள் இவை.புத்தகமோ தெரியாத தகவல்களின் களஞ்சியம்!

செவ்விந்தியக் கழுகு | மேபல் பவர்ஸ் | தமிழில்: சரவணன் பார்த்தசாரதி | பக் – 64 | ரூ. 40
சூரியனின் புத்திரர்களென தங்களை அழைத்துக்கொண்ட செவ்விந்தியர்களின் உலகிற்குள் வெள்ளையர்கள் கால் வைத்தார்கள். சொந்த மண்ணிலேயே கால் வைக்க இடமில்லாதவாறு விரட்டப்பட்ட அந்தப் பூர்வகுடிகளின் வரலாற்றுப் பின்னணியில் ஆறு நாட்டுப்புறக் கதைகள் சரவணன் பார்த்தசாரதியின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வந்துள்ளன.அழகிய கையடக்கப் பதிப்பு.

 

பேசும் யானையும், பாடும் பூனையும் க.விக்னேஷ் | பக்கம் – 64 | ரூ. 40
மக்கள் காடுகளைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால், விலங்குகள் நகரங்களைப் பற்றியோ மக்களைப் பற்றியோ படித்துத் தெரிந்துகொள்ள என்ன வழி? பேசத்தெரிந்த யானையும், பாடத்தெரிந்த பூனையும் பயணம் புறப்பட்டு புத்தகக் கண்காட்சிக்குப் போகின்றனர். இது ஒரு கதை.விமானப்பறவை, சிலேட்டுக் குச்சி, மூன்று தேவதைகள் உட்பட மொத்தம் பத்துக் கதைகள்… எங்கே, படிக்கத் தொடங்குவோமா? ஒன், டு, த்ரீ…கத்தரிக்கா…!

தங்கத்தில் ஒரு பொடி டப்பா |
எம்.மின்ட்ஸ் | தமிழில்: சரவணன் பார்த்தசாரதி |
பக்கம் – 24 | ரூ. 45
ரஷ்யா, சிறார்களுக்கான கதைகளின் சுரங்கம்.யாங்கா என்ற ஓர் அனாதையின் பெருமூச்சில் பிறந்து வளரும் கதை இது.வெண்தாடிப் பெரிய வரும்,சித்திரக்குள்ளனும், தங்க பொடிடப்பியும் விளைவிக்கும் அதிசயங்கள் ஏராளம்! பூனையையும் சுண்டெலியையும் நண்பர்களாகக் கொண்ட யாங்கா ஒரு சாதாரண மனிதர். சாதாரணமாக இருக்கும் அந்த மனிதனை மனைவியான இளவரசியே மதிக்கவில்லை. விளைவு? சரவணன் பார்த்தசாரதியின் மொழிபெயர்ப்பில் இந்த சுவையான ரஷிய நாடோடிக் கதையை வாசித்துப் பாருங்கள், பதில் கிடைக்கும்!

 

மாயமான் | பையானா சொலாஸ்கோ | தமிழில்:சரவணன் பார்த்தசாரதி | பக் – 24 | ரூ. 45
லாத்விய நாட்டுப்புறக் கதையிது. விடுகதை எளிதாயிருந்தாலும் அதற்கு விடை காண்பது அவ்வளவு எளிதாயில்லையே? இரண்டு சகோதரர்கள், ஒவ்வொருவரிடமும் தலா நான்கு விலங்குகள் –இருவரும் பயணம் போகையில் இருவேறு பாதைகளில் சென்று அடையும் துன்பங்கள்தாம் எத்தனை! கடைசியில் வென்றவன் தம்பி; தம்பியுடையான் படைக்கு அஞ்சான் அல்லவா? அண்ணனும் வெல்வதற்கு வழிவகுக்கிறான் தம்பி. சுவையான சாகசக் கதை.

நரியும் பூரிக்கட்டையும் |மிக்கேல் மேக்ராத் தமிழில்:சரவணன் பார்த்தசாரதி |பக் – 64 | ரூ. 40
நரியின் கையில் பூரிக்கட்டை ஒன்று கிடைக்கிறது.தந்திரமாக அதை எரித்துவிட்டு ஒரு கோழியையும் கோழியைக் கொன்று தின்று விட்டு வாத்தையும், அதைக் கொன்றுவிட்டு… இப்படியே போகிற கதையில் நாய் நுழைகிறது. பின் …? இது ரஷிய நாடோடிக் கதை. இரண்டாவதாக பல்கேரிய நாடோடிக்கதையும் இதில் உண்டு.ஓநாய்க்குப் பாடம் புகட்டிய பாட்டியின் கதை இது.

 

பேசும் எலியும் குழந்தைப் பேயும் வா.மு..கோமு | பக் – 48 | ரூ. 40
பாப்பம்பட்டி என்ற குறுநகரில் குடியேறுகிறது மாலாவின் குடும்பம். மாலா பேய்க்கதைகளின் தீவிர ரசிகை. எனவே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா என்று தேடுகிறாள். எலிகளின் அட்டகாசமிக்க அந்த வீட்டில் எலிப்பொறியில் மாட்டுகிறது ஒன்று.தப்பிவிடுகிற மற்றோர் எலி மாலாவுக்கு நண்பனாகிறது இரண்டுபேரும் அரட்டையடிக்கிற போது குழந்தைப்பேய் இவர்களின் உரையாடலில் பங்கேற்கிறது. பின்…?

Related posts

Leave a Comment