You are here
Uncategorized 

பாட்டுப் பாடிய ஓநாய்

பரீஸ் ஸகொதேர்
ஓவியர்: விக்தர் சீழிக்கவ்
தமிழில்: வ.ச.சுந்தரம்

ஒரு காட்டில் சாம்பல் நிற ஓநாய் ஒன்று வசித்துவந்தது. மிகவும் போக்கிரி ஓநாய் அது.
அந்தக் காட்டில் மற்ற சிறு பிராணிகள் வசிப்பது கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், வெறிபிடித்த அந்த ஓநாய் அந்தப் பிராணிகளை விட்டுவைப்பதில்லை. கண்ணில் பட்ட பிராணிகளைக் கொன்று தன் குகைக்கு இழுத்து வரும். இது மட்டுமல்ல, கடூரமாக ஊளையிட்டு மற்ற எல்லா விலங்குகளுக்கும் மிகவும் எரிச்சலை உண்டாக்கியது. மற்ற ஓநாய்கள் பசி தாங்காமல் ஊளையிடும். இந்தச் சாம்பல் நிற ஓநாயோ, ஒரு மானை, அல்லது ஒரு முயலைக் கொன்று தின்றுவிட்டு உடனே மகிழ்ச்சியாகப் பாட்டுப் பாடத் தொடங்கிவிடும்.

பாட்டுப் பாடத் தெரிந்ததால் அந்த ஓநாய் நிறையப் பாடல்கள் தெரிந்துவைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. அந்த ஓநாய்க்கு ஒரே ஒரு பாட்டுத்தான் தெரியும். அது என்ன பாட்டு? ஆமாம், ஆமாம்! மிகவும் சிறப்பான பாட்டுத்தான் போங்கள்!
“ஊ… ஊ…ஊ…! கொள்ளையடிப்பேன்! கொல்லுவேன்! ஆனந்தக் கூத்தாடுவேன்!…”

ஓநாயின் இந்த ஊளை மிகவும் பயங்கரமானது. யாராலும் சகித்துக்கொள்ள முடியாதது. ஆந்தையையும் வௌவாலையும் தவிர மற்ற பிராணிகள் எல்லாம், “அட ஆண்டவனே, இது என்னடா சோதனை!” என்று காதைப் பொத்திக்கொள்ளும். ஆனால் ஓநாய்க்கோ, தன் பாட்டு மிகவும் பிடித்திருந்தது. வாய்ப்புக் கிடைத்தால் அது தானே தாளம்போட்டுக்கொண்டு பாட்டுக் கச்சேரி செய்யவும் தயாராக இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஒரு முறை பாடி முடித்த பிறகு ஓநாய் சில நிமிடங்கள் அமைதியாக இருக்கும். பிறகு மீண்டும் லேசாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, தன் பாட்டை மீண்டும் பாடத் தொடங்கும்:
“ஊ… ஊ… ஊ… கழுத்தை நெரிப்பேன்…”
ஒரு நாள் இதேபோல ஊளையிட்டு, ஊளையிட்டு விடியற் காலையில்தான் ஓய்ந்துபோய் கண்ணயர்ந்தது. பகல் முழுதும் தூங்கியது. சூரியன் சாயும்போது அதன் சிவப்புக் கதிர்கள் ஓநாயைத் தட்டி எழுப்பின.

இன்னும் தூக்கம் கலையாத ஓநாய் கண்களை மூடியபடியே படுத்திருந்தது. தன் மீது ஈ ஒன்று அமர்ந்திருப்பதாக நினைத்து கோபம் கொண்டது. இந்த ஈயைப் பல்லால் கடித்து நசுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு, பற்களை நரநரவென்று கடித்தது. அப்படியும் ஒன்றும் அகப்படவில்லை. மூன்றாம் முறையும் கடிக்க முயன்று, தன் நாக்கையே கடித்துக்கொண்டது.

மிகவும் சிரமப்பட்டுக் கண்விழித்துப் பார்த்தது ஓநாய். அருகில் நரி ஒன்று, ஒரு கோழியை இழுத்துக்கொண்டு ஓடியது.
“ஓநாயே, நீ தூங்காதே! அதோ, ஓடைக்குப் பக்கத்தில் புல்வெளியில் ஆட்டு மந்தை மேய்கிறது. அங்கே ஆடு மேய்ப்பவனும் இல்லை, காவல் நாய்களும் இல்லை. ஓடு… உடனே அங்கே ஓடு!” என்று கத்தியது நரி.

நரி, வாலை ஆட்டித் திசையையும் காட்டியது.
ஓநாய் துள்ளி எழுந்தது.

“பொய்யா சொல்கிறாய், வாலுப் பையா?” என்று உறுமியது.
ஆனால், நரி ஒன்றும் பொய் சொல்லவில்லை. அது சொன்னது உண்மையாகத்தான் இருந்தது.
நரி காட்டிய திசையில் ஓநாய் பாய்ந்தோடியது. ஆமாம். உண்மையிலேயே அங்கே ஆடுகள் மந்தையாக மேய்ந்துகொண்டிருந்தன. காவலுக்கு யாருமில்லை. நூறு, நூற்றைம்பது ஆடுகள் மட்டும் இருந்தன.

ஆடுகள் ஓநாயைப் பார்த்தன. பயந்து நடுங்கிக் கலங்கிப்போய் ஒண்டிக்கொண்டு நின்றன. பாவம் ஆடுகள்! இந்த ஓநாய் நம்மைக் கொன்றுவிடுமோ என்று அஞ்சின.
ஓநாய்க்கு நாக்கில் எச்சில் ஊறியது.
“இதோ, நான் உங்களைக் கொன்று, கறுமுறுவென்று தின்னப்போகிறேன்!” என்று உறுமியது ஓநாய்.
ஓநாய், ஆடுகளின் மீது பாயப்போகும் நேரத்தில், ஒரு ஆடு முன்னே வந்து மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டது:
“பெருமதிப்புக்குரிய ஐயா, நீங்கள் எங்களையெல்லாம் எப்போது வேண்டுமென்றாலும் உங்கள் விருப்பப்படி சுவைத்து மகிழலாமே! ஆனால், அதற்கு முன்பு ஐயா அவர்கள் எங்கள் மீது சற்றுக் கருணை காட்டவேண்டும்…”

“கருணையா? ஓநாயாகிய நான், ஆடுகளான உங்கள்மீது கருணை காட்டவேண்டும் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்டது ஓநாய்.
“ஐயா, தயவுசெய்து கோபப்படாதீர்கள். நாங்கள் பாட்டுப் பாட விரும்புகிறோம். ஆனால் எங்கள் பாட்டுக் குழுவுக்குத் தலைவர் யாருமில்லை. முன்பு ஒரு செம்மறி ஆடு தலைவராக இருந்தது. அதுவும் உங்களைப்போலக் கட்டைக் குரல் கொண்டதுதான். அதை எங்கோ துரத்திவிட்டார்கள். எனவே, இப்போது நீங்கள்தான் எங்கள் பாட்டுக் குழுவுக்குத் தலைவராக இருந்து உதவி செய்யவேண்டும். நாங்கள் பாட்டுப் பாடி முடித்த பிறகு நீங்கள் எங்களைத் தாராளமாக கொன்று தின்னலாம். எங்களுக்குச் சம்மதம்தான். பாடுவது என்பது உங்களுக்குக் கஷ்டமான காரியம் ஒன்றும் இல்லையே. புகழ்பெற்ற பாடகர் நீங்கள். ஒவ்வொரு இரவும் நாங்கள், நீங்கள் பாடும் பல வகையான பாடல்களைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்குத் தூக்கம்கூட வருவதில்லை.”
ஓநாய் மகிழ்ச்சியடைந்தது. அதற்கு இரக்கம் ஏற்பட்டது.

“நீங்கள் சொல்வது உண்மையா? இரவெல்லாம் தூங்காமல் கண்விழித்து என் பாட்டைக் கேட்டு இன்புறுகிறீர்களா? வெரிகுட், வெரிகுட்! உங்கள் பாராட்டைக் கேட்கும்போது என் உற்சாகம் அதிகரிக்கிறது. ஆஹா… இரவெல்லாம் தூங்காமல் என் பாட்டைக் கேட்கிறீர்கள்! அப்படித்தானே, தம்பிகளே!”
“தூங்குவது எங்கே, கண்களைக்கூட மூடுவது இல்லையே!” என்றது ஓர் ஆடு.

“சரி, சரி. நான் இப்போது பாடுகிறேன். நீங்களெல்லோரும் நான் பாடுவதுபோலவே பாடுங்கள்! கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் நான் உங்களை…”
ஓநாய் ஒரு பாறையின் மீது ஏறி நின்றுகொண்டு பாடத் தொடங்கியது:
“ஊ… ஊ… ஊ… கடிப்பேன், கடிப்பேன்! கழுத்தை நெரிப்பேன்!”
ஆடுகள் எல்லாம் சேர்ந்து, “அம்மா… நாங்கள் ஏழைகள், ஐயா… நாங்கள் கதியற்றவர்கள்!” என்று ராகம் பாடின.
ஓநாய், “அப்படியில்லை! கட்டைக் குரல்காரர்கள் மெதுவாகப் பாடுங்கள். மெல்லிய குரல் உள்ளவர்கள் சத்தமாகப் பாடுங்கள்!” என்று கூச்சலிட்டு, தானே தொடங்கியது:

“ஊ… ஊ…ஊ… கறுமுறுவென்று தின்பேன்!”
ஆடுகள் கத்தின: “மே… மே… மே… ஐயா, நாங்கள் ஏழைகள்…”
ஆடுகள் போட்ட பெருங்கூச்சலைக் கேட்டு காவல் நாய்கள் ஓடி வந்துவிட்டன. இடையர்களும் ஓடி வந்துவிட்டார்கள்.
ஓநாயின் பாட்டு அத்துடன் முடிவடைந்தது.

Related posts

Leave a Comment