You are here
Uncategorized 

நிராகரிக்கப்பட்டவர்களின் நிழல் வரலாறு – அறிவியலைப் புரட்டிய புத்தகங்கள் – 14

ஆயிஷா இரா. நடராசன்

ட்விடர், முகநூல், வாட்ஸ் அப் இன்ன பிற நவீன, தூதுப் புறாக்கள் பற்றிய சமீபத்திய அதிர்வு ஜேனட் பாஷன் என்பவரை பற்றியது. 1980-களின் இறுதியில் லிஸ்க் லைன் எனும் அசாத்திய பிற்கால இணையம் குறித்த முதல் அடியை எடுத்து வைத்தவர் ஜேனட். எந்த அங்கீகாரமும் இல்லை. இதற்காக அவர் வாங்கி வைத்திருந்த உரிமம் அவரிடமிருந்து திருடப்படுகிறது. ஜேனட் பாஷன் ஒரு பெண் என்பதாலா? இல்லை, கருப்பினப் பெண் என்பதால், கருப்பினத்தவர்க்கு சராசரி மனிதர்போல அறிவு வேலை செய்வது கிடையாது என்கிற இனவாதம் எத்தனையோ அறிவியல் பங்களிப்புகளை புறந்தள்ளி மனித இனத்திற்கு அவர்களது அற்புத அர்ப்பணிப்பைத் தூக்கி எறிந்திருக்கிறது. முதல் சுவர்க்டிகாரத்தை வடிவமைத்த பெனக்கர் பெஞ்சமின் முதல், உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை 1899-லேயே செய்து அசத்திய டாக்டர் டேனியல் வில்லியம்ஸ் வரை கருப்பின விஞ்ஞானிகளின் அறிவியல் பங்களிப்பு என்பது எத்தனையோ இருட்டடிப்புகளையும் மீறி வரலாற்றில் மிளிர்கிறது. அவர்களுள் பெரும்பாலானவர்கள் அமெரிக்க வெள்ளையர்களால் காலம் காலமாக அடிமையாய் மாடுகளைப் போல கல்வி அறிவே தரப்படாமல் சந்தைகளில் வாங்கி விற்கப்பட்டவர்கள் அல்லது அந்த சந்ததியில் வந்தவர்கள். விவசாயத்தை ஒரு அறிவியலாக்கியவர் என்ற வரலாற்றுச் சிறப்புக்குரிய ஜார்ஜ்வாஷிங்டன் கார்வர் 1897-இல் சொன்னார்:‘கருப்பினத்து அறிவியலை குடல் நடுக்கும் குளிர் காலத்தின் இரவில் மலைமீது எரியும் தீயாய் குளிர்காயப் பயன்படுத்திவிட்டு… தான் உயிர்த்திருக்க தீ பொறுப்பல்ல என்பதுபோல அவர்கள் (வெள்ளைக்காரர்கள்) பகட்டாக வெட்கமின்றி நாடகமாடுவார்கள்’ நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிராஃபிக் சிக்னலை 1907-ல் வடிவமைத்த கருப்பின அறிவியல் அறிஞர் காரட் மார்கன் பிறகு அறிவித்தார். ‘’மலைத்தீயின் கனல் பரவட்டும்.’ டெர்ரி பைசன் 1988-ல் கனல் அனைத்தையும் பதித்து மலைத்தீயை (Fire on the Mount aim) எழுதுகிறார். கருப்பின அறிவியல் புனைவு. வரலாற்றைப் புரட்டிப் போட்ட பெருஞ்சூறாவளி.

கருப்பின விடுதலைப் போராளி பெடரிக் டக்ளஸ் (சுயசரிதை) நூலை நான் இரண்டு முறை மொழியாக்கம் செய்ய நேர்ந்தது. கருப்பு அமெரிக்க அடிமையின் சுயசரிதை, அவரே எழுதியது எனும் அடைமொழியோடு வெளிவந்த நூல் அது. கருப்பின இலக்கியத் தொகுப்பு ஒன்றை நிறப்பிரிகை இதழ் கொண்டு வந்தபோது அதன் சில அத்தியாயங்களை மொழி பெயர்த்து வெளியிட்டோம். விரைவில் முழு நூலையுமே நான் மொ.பெ.செய்து விட்டேன். கைப்பிரதியாக அதை தோழர்களிடையே வாசிப்புச் சுற்றுக்கு விட அது எங்கோ அபேஸ் ஆகிவிட்டது. அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட டக்ளஸ் எனும் சூறாவளியின் சொற் புயலில் சிக்கிய என் மனம் பேய்களின் கையில் அகப்பட்டுப் பந்தாடப்படும் நம் தமிழ் சீரியல் குடும்பங்களைப் போல அலறியபடியே மறுபடியும் அந்த எழுத்துகளை மறு ஆக்கம் செய்திருந்தது. ஆனால் அந்த இடைப்பட்ட நாட்களின் பரிதவிப்பில் கருப்பு அடிமைகளின் அடிமையாகி அவர்களது வெற்றிக் கதைகள் குறித்த பெருந்தேடலில்… மலைத் தீயிடம் மனதைத் தொலைத்தேன். டெர்ரி பைசன் அமெரிக்க ஐக்கியநாடுகளின் வரலாற்றை மாற்றி எழுதிய பக்கங்களிடமிருந்து மீள்வது எளிதல்ல. அமெரிக்க ஐக்கியநாடுகள் (USA), நாவலில் அமெரிக்க சோஷலிச ஐக்கிய நாடுகள் (USA) ஆகிவிடும் அந்த சம்பவ அடுக்குகள் அறிவியல் புனைவுலகையே நீக்ரோ மாணவர்களின் போராட்டக்களமாக்கியது என்பதை காலந்தாழ்த்தியே நான் புரிந்து கொண்டேன். நாவல் வெளிவந்த சில மாதங்களில் வடக்கு கரோலினாவின் கிரீன்ஸ்பரோவில் தொடங்கி 89 நகரங்களில் கருப்பின மாணவர் போராட்டங்கள் நடந்தன. 1950-களின் ‘மீண்டெழுந்த அமெரிக்க இனவெறி, யாரும் பயன்படுத்தாமல் துருவேறிப் போன போராட்டம் எனும் ஆயுதம் அதை பயன்படுத்தும் துணிவுள்ளவர் கைகளுக்கு மீண்டும் கிடைப்பதை உணர்ந்து பதறியது, மலைமேல் தீ (Fire on the Mountain) நாவலின் பின் விளைவுகளைக் கண்டுதான்.

அமெரிக்க, கருப்பின அடிமைப் போராட்ட வரலாறு மிகவும் சிக்கலானது. மலைமேல் தீ நாவலில் நிகழ்வது என்ன? தெற்கே கருப்பினப் போராளிகள் ஆயுதங்களைக் கைப்பற்றி ஜான் பிரெளனின் தலைமையில் ஆயுத எழுச்சி விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் ஹார்ப்பர் பெர்ரி (Harpers Ferry) எனும் இடத்தில் பாலத்தைக் கடக்க முயலும்போது அதை உடைப்பதன் மூலம் 1859-ன் கருப்பினப் புரட்சி தோற்றது. பின் அமெரிக்க உள்நாட்டு யுத்தமாய் அது உருவெடுத்து ஆபிரஹாம் லிங்கனின் அடிமைமுறை ஒழிப்பு சட்டமாகிறது. ஆனால் இந்த இடத்தில் டெர்ரி பைசன் தனது ‘வேலையை’ காட்டுகிறார். ஜான்பிரெளனின் படை இந்த நாவலில் ஹார்ப்பர் பெர்ரியை வெற்றிகரமாகக் கடந்து ஹாரியட் டப்மன் முதல் கரிபால்டி வரையிலான பல புரட்சிவாதிகள் இணைய சில வெள்ளைக்கார மார்க்ஸியர்களின் கூட்டு முயற்சியோடு அடிமை அமெரிக்காவைத் தகர்த்தெறிகிறது. பிரடெரிக் டக்ளசும், ஹாரியட் டப்மனும் தலைமை ஏற்கும் சோஷலிச அமெரிக்கக் குடியரசை தெற்கே நிறுவுகிறார்கள்.

1959 மற்றும் 1859 ஆகிய இரண்டு வருடங்கள் நாவலின் களம். பிரதான பாத்திரம் யாஸ்மின், 1959-இல் ஜான் பிரௌனின் எழுச்சிப் போராட்ட நூற்றாண்டை வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள். செவ்வாய் கிரஹத்தில் மனிதனின் காலடித் தடத்தைப் பதிக்க கருப்பின விண்வெளி வீரர்கள் பிரமாண்டத் திட்டத்தை முன்மொழிகிறார்கள். ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு முன் செவ்வாய் பயணத்தில் உயிரிழந்த மாமனிதர் யாஷ்தான் யாஸ்மினின் துணைவன். அடிமைச் சிறுவனாக வளர்ந்து புரட்சியின் தளபதியான அவரது துயர முடிவுக்காக இன்றுவரை கேவி அழும் யாஸ்மின் தற்போதைய விண் பயணிகளைச் சந்திக்கப் பயணிக்கிறார். அவரது இரண்டாவது கடமை தனது பாட்டனாரின் 1859 புரட்சி குறித்த டைரிக் குறிப்புகளை ஹார்ப்பர் பெர்ரியின் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தல். அவரது பாட்டனாருக்கும் வெள்ளை மருத்துவனான புரட்சியின் ஆதரவாளனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனைகளையும் வீட்டுப் புதையலில் கிடைக்கப் பெற்ற யாஸ்மின் அவைகளை தனது அன்பு மகளுக்கு வாசித்தபடியே பயணித்து அமெரிக்க மாற்று வரலாற்றை நகர்த்தி நம்மை பிரமிப்பின் தரைதட்டாத புதை குழியில் விழி பிதுங்க வீழ்த்துகிறாள்.

காரல் மார்க்ஸ் ஜெர்மனியிலிருந்தபடியே கருப்பின எழுச்சியை ஆதரிக்கிறார். எழுச்சியின் நீண்ட தோழமைக் கரம்… கனடா, ஹைட்டி, மெக்ஸிகோ, பிரான்சு, (அங்கே கொம்யூன் 1860-ல் மறுமலர்ச்சி அடைகிறது.) இங்கிலாந்து, அயர்லாந்து என எங்கும் சோஷலிஸ நேச அரசுகளை ஸ்தாபிக்கிறது. யாஷ் எனும் மாவீரனின் முக ஓவியம் தாங்கிய தங்கப் பதாகையை செவ்வாயில் புதைக்கப் புறப்படுகிறது அமெரிக்க சோஷலிஸம்.

டெர்ரி பைசன் கருப்பின அறிவியல் புனை கதை எழுத்தாளர். 1942-இல் கென்டகி மாகாணத்தில் அமெரிக்காவின் தெற்கே பிறந்தார். தந்தை கருப்பின அடிமையாக இருந்து மீண்டு மின் ஊழியரானவர். தாய் வீடுகளில் எடுப்புவேலைகள் செய்பவர். கிரினல் கல்லூரியில் 1961-ல் படித்தபோது கியூப ஆதரவுக் கட்டுரைக்காக கைதாகி பிறகு அதிபர் கென்னடியின் நேரடித் தலையீட்டால் விடுதலையானார் பைசன். வெள்ளை மாளிகையில் அவர் உட்பட போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய கென்னடியிடம் கியூபாவை நேச நாடாக அறிவிக்குமாறு நேரடியாக துணிச்சலுடன் கோரிக்கை வைத்து அப்போதைய பத்திரிகைகளை அலறவைத்தார் அவர். ஜூடி ஜென்சனுடன் சேர்ந்து புதிய இடது (New left) எனும் புரட்சிகர வெளியீட்டகத்தை 1980-களில் நடத்தியவர். 1970-களில் வந்த பில்லி (காமிக்) தொடர்கள் தொடங்கி அறிவியல் உலகை ஆட்டிப் படைத்த 117 படைப்புகளின் நாயகர் பைசன். ஸ்டார் வார்ஸ், ஜோனி குவெஸ்ட், காலக்ஸி குவெஸ்ட், தி சிக்ஸ்த்டே என அவரது எழுத்துகளை இணையத்தில் வாசிப்பது எளிது. ‘கரடிகள்தான் தீயைக் கண்டுபிடித்தன’ எனும் குறுநாவல் மிக பிரபலம். அது ஹூகோ விஞ்ஞான படைப்பாக்க விருது பெற்றது.

கருப்பின அறிவியலின் இருதய ஓட்டத்தை ஏழாவது அத்தியாயம் யாஸ்மின் மகள் ஹரியட் வழியே நமக்கு மடை திறக்கிறது. உலக அளவில் மாபெரும் அறிஞர்களைக் கொண்டாடும் படைப்பு. கருப்பின அறிவியல் அறிஞர்களான, குஷ்டரோகத்திற்கு மருந்து தந்த ஆலிஸ் அகஸ்தா பால், மடக்குப் படுக்கை தந்த லியோனார்டு பெய்லி, ரயில் தண்டவாள வளைவு முனை தானியங்கியைக் கண்டுபிடித்த ஆர்ச்சி அலெக்சாந்தர், 1911-ல் மேன் ஹாட்டனில் வானூர்தியியலுக்கு உலக கண்காட்சி நடந்தபோது நீண்டதூரம் பறக்கும் விமானத்தை ஓட்டிட கடும்போராட்டங்களுக்குப் பிறகு அனுமதி பெற்ற சாப்பல்… சார்லஸ் என கருப்பின அறிவியலின் திருவிழாவே இந்த நாவல் முழுவதும் இடம் பெறுகிறது. ஒருபுறம் மிகத் துல்லியமான (நிஜ) செய்திக் குறிப்புகள். மறுபுறம் அடுத்தடுத்து அரங்கேறும் சோஷலிஸ அமெரிக்க வரலாற்று (கற்பனை) நிகழ்வுகள் நம்மை வேறு உலகுக்கு பயணிக்க வைக்கின்றன. சங்கிலிகளைப் பிணைத்து நிர்வாணமாக, சாட்டைகள் விளாச, ரத்தம் கொட்ட சந்தையில் விற்பனைக்காக நிற்பவரான யாஸ்மினின் பாட்டனார் ஒரே ஒரு குவளைத் தண்ணீருக்காக மண்டியிட்டுக் கெஞ்ச, அவரது நிர்வாணத்தைக் கேலி செய்து சிரிக்கும் வெள்ளைச் சீமான்கள் ஒரு கருப்பினப் பெண்ணின் முலைக்காம்புகளை அறுத்து எடைபோட முயலும்போது அவரால் நையப்புடைக்கப்பட்டு நாதழுதழுக்க உயிரைக் கையில் பிடித்தபடி சிறுநீர் கழித்து துப்பாக்கியை திருப்பிக் கேட்டுக் கெஞ்சுமிடத்தில் புரட்சி தொடங்குகிறது.

தெற்கத்திய அபாலிஷனிஸ்ட் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் தொடக்கம் இது தான் என்றால் இன்று அமெரிக்காவில் டிரம்பின் ஆசீர்வாதத்தோடு பள்ளிக் கூடங்களில் கூட நீக்ரோ மாணவர்களுக்கு தனிப் பேருந்து விடப்படுவது வரையிலான இனப்பாகுபாட்டுக் கீழ்மைகளின் சாவுமணி இப்படித்தான் ஒலிக்கப் போகிறது என்பது நமக்கு உறைக்கிறது. கருப்பின விடுதலையின் வரலாற்றாளர் ஆனி பிராடன் சொல்வார். ‘மலைத் தீ’ நாவலில் யாஸ்மின் கையில் எடுத்து வரும் அமெரிக்க மாற்று வரலாறான ‘ஜான்பிரௌன் பாடி’ ஒவ்வொரு கருப்புப் போராட்டவாதியின் மனதிலும் துளிர் விடும் விடுதலை வேட்கையின் வேர்களைக் கொண்டு எழுதப்பட்டது.’ மலைத் தீ நாவல் வழியே போராட்டக்களம் கண்டவர்கள் தென்பகுதி இயக்கத்தை நாடு தழுவிய நீக்ரோ போராட்டமாக மாற்றினர். பலருக்கும் தெரியாது… பேருந்தில் வெள்ளை இருக்கையில் பயணித்து சமத்துவத்திற்காக போராடியவர்களின் கைகளில் இருந்தது மலைத் தீ நாவல். பேருந்து என்பது வெறும் குறியீடுதான். ஆனால் அதைத் தாண்டிய எத்தனையோ உரிமைப் போராட்டங்களின் தொடக்கமாக அது இருந்தது. இந்த விஷயம் போராடும் நீக்ரோக்களைவிட வெள்ளை ஏகாதிபத்தியக் காவலர்களுக்கு அதிகம் புரிந்திருந்தது. அதனால்தான் மலைத் தீ நாவல் வைத்திருந்தாலே அவர்கள் பாயத்துவங்கினார்கள். மலை உச்சியில் பைசன் பற்றவைத்த நெருப்பு இனவாத அரசியலில் நீக்ரோக்களின் அயராத போராட்டக் கனலாக வெடித்து அந்த மக்களை மேலும் உத்வேகமடைய வைத்தது. மலைத் தீ சோஷலிஸத்தால் உலக சமாதானத்தை மார்க்ஸின் வழி நின்று சாதிக்கும் ஒரு கருப்பின அமெரிக்காவைப் பற்றி செவ்வாய்க் கிரகப் பயணங்களுக்கான ஆயத்தங்களின் ஊடாக பேசுகிறது. சாம்பலில் இருந்தும் உயிர்த்தெழும் அந்த நிராகரிக்கப்பட்டவர்களின் சிவப்பு வரலாறு.

Related posts

Leave a Comment