You are here
கட்டுரை 

நான் யார்? பழைய கேள்வி புதிய விடை….

கவிஞர் புவியரசு

மாணிக்கவாசகர்தான் முதலில் கேட்டவர், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவருக்கு எளிதான விடை கிடைத்துவிட்டது. அதை அருளியவர், திருப்பெருந்துறையில், கல்லால மரத்தின்கீழ் எழுந்தருளியிருந்த குருவடிவான தட்சணா மூர்த்தி; வானோர் பிரான்.

ஆனால், ரீச்சர் டாக்கின்ஸ்_க்குக் கிடைத்த விடை முற்றிலும் வேறானது. முரணானது. டாக்கின்சுக்கும் ஒரு குரு உண்டு. அவர் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின். டாக்கின்ஸ் என்ன சொல்கிறார்?

‘‘நீ அற்பம்; புழு!’’ என்கிறார். இதை அவர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கவும் செய்கிறார் நம்மால் மறுக்க முடியாதபடி. இதுவரை இவரது கண்டுபிடிப்புக்கு எவராலும் மறுப்புச் சொல்ல முடியவில்லை!
ரிச்சர்ட் டாக்கின்சும் ஓர் அற்பப் புழுதான். ஆனால் அற்பத்திலிருந்து தோன்றிய அற்புதம். நாமெல்லாம் கூட அற்புதங்கள்தான். அற்பப் புழுவிலிருந்து தோன்றிய மாபெரும் அற்புதங்கள்.

‘‘மனிதன் – ஆ! என்ன அற்புதமான சொல்!’’ என்று சேக்ஸ்பியரும் சொன்னார்; மாக்சிம் கார்க்கியும் சொன்னார். ஆனாலும், மூலப் பரம்பொருள் என்னவோ அற்பம்தான். இதை நினைவில் கொண்டால், ஒப்புக்கொண்டால், மண்டை கனக்காது.

‘இந்தப் பூமி நம்முடையது. ஆனால், நமக்கு முன்னே, கோடானுகோடி புழுப் பூச்சிகள் இந்தப் பூமியில் பிறந்து சொந்தம் கொண்டாடின.

கடைசியாக வந்தவன்தான் மனிதன். இவனுக்கு இந்த மண்ணின் மீது, கடைசி உரிமை மட்டுமே; மூலவர்கள், முதல்வர்கள் அனுபவித்து மிச்சம் வைத்த எச்சில் மட்டுமே! அதனால் சும்மா அலட்டிக் கொள்ள வேண்டாம்,’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவந்தார் டாக்கின்ஸ்.

டாக்கின்சின் சிந்தனை உலகைப் புரட்டிப்போட்ட அந்தப் புத்தகம் ‘த செல்பிஷ் ஜீன்’ அதாவது சுயநல ஜீன். மிக விரிவான ஆராய்ச்சி. சுவையான சான்றுகள். என்றாலும் நாவல் படிப்பதுபோல் படித்துவிட முடியாது. கொஞ்சம் நிறுத்தி நிதானித்துப் படிக்க வேண்டும். கற்க வேண்டும்.
நமக்கு அதற்கெல்லாம் ஏது நேரம்? எடப்பாடியில் இடறி விழுந்து பிக் பாஸில் எழுவதற்கே நேரம் போதவில்லை. என்றாலும், கொஞ்சம் சுயபுராணம் படிக்கலாமே! சுய புராணம்தான் நமக்குப் பிடித்த விஷயமாயிற்றே!
ஆனால், இந்தச் சுயம், ரொம்பப் பழைய சுயம். 40 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம். சரியாகச் சொன்னால், அதற்கும் ரொம்ப முன்னால் கால எல்லை கடந்ததொரு காலத்திலிருந்து தொடங்க வேண்டி இருக்கிறது. மிக நீண்ட பயணம்! பின்னுக்குப் போக வேண்டிய பயணம்.

பாருங்கள், இவ்வளவு பீடிகை தேவைப்படுகிறது. அதனால், பேராசிரியர் மணி அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள். அனைவரும் தமது ஆதி மூலத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே!’ என்றேன்.

மணி அவர்கள், எந்தக் கடினமான அறிவியல் நுட்பத்தையும், மிக எளிமையாக நகைச்சுவையாகச் சொல்ல வல்லவர். பெரிய அறிவியல் கோட்பாடுகளை இப்படிக் கீழ் இறங்கி வந்து கொச்சைப்படுத்தலாமா. என்றெல்லாம் கவலைப்படமாட்டார். கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளை வைத்தே விளக்கி விடுவார். அவரது கைவண்ணத்தில் சிறிதாக மலர்ந்துள்ள இந்தப் பூ தான், ‘நான் யார்? ஜீனா, உடலா?’ என்ற அருமையான அறிவியல் விளக்கப் புத்தகம்.

அதிர்ச்சிக் குறிப்புடன்தான் ஆரம்பமாகிறது.
‘‘நாமெல்லாம்
குருட்டுத்தனமாகப் புரோக்கிராம்
செய்யப்பட்ட அணு மூலக்கூறான
சுயநல ஜீன் இயந்திரங்களே!”
(ரோபோக்களே!)
இந்த உண்மையைத்தான் ரிச்சர்ட் டாக்கின்சின் ‘த செல்பிஷ் ஜீன்!’ என்ற மகத்தான புத்தகம் நிறுவுகிறது. பரிணாமத்தின் ஆரம்ப கட்டம் அது. உயிர் தோன்றாத காலம் அது. உயிரே இப்பூமி மீது இல்லாத காலம் ஒன்று இருந்தது. அப்புறம்தான் உயிர் தோன்றியது.
எதிலிருந்து உயிர் தோன்றியது? புரதங்களிலிருந்து அமிலங்களிலிருந்து எப்படித் தோன்றியது?
விடையில்லா வினா இது.

இரசாயனக் கலவையும், அதன் விளைவும், புதிய தோற்றமும், ‘சொல்லுக்கடங்காவே அதன் சூரத்தனங்களெல்லாம்!’ அந்த இரசாயனப் பொருள்களின் தோற்றம்கூட பூமித்தாயின் பிள்ளைகளே! அவள் தோற்றுப் பெறவில்லை. பிரக்ஞையில்லாமல் பெற்றவை அவை.
எதற்கும் தாயின் கதையையும், ஒரு பாராவில் சொல்வதுதான் நியாயம்.

‘‘நான் பிறந்த கதை சொல்லவா? வளர்ந்த கதை சொல்லவா?’’ என்று பூமித்தாய் கேட்டால், அவளது பிறந்த கதையும், வளர்ந்த கதையும் மட்டுமல்லாமல், அவள் பெற்ற கதையும் நம்மால் சொல்லிவிட முடியும். அப்பேற்பட்ட அதிசய அற்புத அதிமானுடப் பிள்ளைகள் நாம்!
அவள் சூரியனின் புதல்வி.

அந்தத் தாயுமான தந்தையை விட்டுப் பிரிந்து வெகு தொலைவு போய், சுற்றித் திரிந்து சூடாறி, புகை கவிந்து அது குளிர்ந்து பல லட்சம் ஆண்டுகள் விடாது மழை பொழிய மேனி குளிர்ந்து, உட்சூடு பொங்கி எழுந்து, எரிமலைகளாய்ப் பூமிமேனி பிளந்து மேலே எரிகுழம்பாய்ப் பெருகி அது சூடாறிச் சகதியாகி, அந்தச் சகதிச் சேற்றில் உதித்த, இரசாயனக் கலவைகளின் தாறுமாறான சேர்க்கையில் உதித்தது ஆதி.
அந்த ஆதிக்கு உயிர் இல்லை! அப்புறம் தான் மெல்ல உயிர்ப்புத் தோன்றியது. இயக்கக் கலவையில் தோன்றிய உயிர்ப்பில் உயிர் என்னும் துடிப்புத் தோன்றியது. அந்த ஆதி உயிர்ப்பிற்குள் இருந்த அதே உயிர்தான் இன்று நமக்குள்ளும், சகல ஜீவராசிகளுக்குள்ளும், செடிகொடி முதலான தாவரங்களுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது. உடல்களின் ஒவ்வொரு அணுவிலும். சினிமாவில் காட்டப்படும் வெள்ளை ஆவிபோல அல்ல!
நாம் அப்புறம் பரிணமித்தோம் கடைசியாக
கொஞ்சம் கொஞ்சமாக.
அமீபா முதல் டைனோசர் வரை
அந்தக் காலத்தில் பூமி மீது மனிதனே இல்லை.

இயற்கைத் தேர்வு மூலம், நாம் உருவானோம். நம் உடலின் பாகங்கள்கூட தேவைக்கேற்றபடி, தேர்வு செய்யப்பட்டு, உருவாயின. அதுவாகவே. எந்த ஆளின் துணையும் இல்லாமலேயே ஆண்டவ ஆண்டவிகளின் ஆசீர்வதிப்புகள் இல்லாமலேயே!
இயற்கைத் தேர்வு என்ற சொல்லே
உயிரியல் மந்திரம்!
நமது உடல்கள் ‘ஜீன்புரிகள்…’ வையாபுரி மாதிரி அல்ல ‘தர்மபுரி’ மாதிரி. நம் உடல் ஒரு நகரம்.
நாம் அனைவரும் ஜீவ இயந்திரங்கள்; பிழைப்புக் கருவிகள்.
ஜீன்கள் தன்னகலிகள்
எஜமானன் தன்னகலிகள். நம் உடம்பு சேவகன்.

தன்னகலியின் ஒரு சிறு பகுதி. பல்லாயிரம் ஜீன்களின் ஒரு தன்னகலி ஆகும்.
ஜீனின் இயல்பே தன்னை நகலெடுப்பதுதான். அது தானாக, இயல்பாக நிகழ்வது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்த சந்ததி மூலமாக அது தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது. தன் இயல்பாக நிகழ்வது. தன் இயல்பை அது அடுத்த சந்ததிக்குக் கைமாற்றிக் கொள்கிறது. இதைத்தான் சுயநலம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், இந்தச் சுயநலம் பிரக்ஞைபூர்வமாக நினைத்துச் செய்யப்படுவதல்ல. இயல்பாக நிகழ்வது. தேகம் என்னும் பெட்டியைச் செய்யும் விஷயத்தின் இன்னொரு பெயர் ‘ஜினோம்!’
ஜீனின் இயல்பு தன்னை நகலெடுத்தல் என்றால் அது முழுசாக நிகழ்வது. பிள்ளையார் சதுர்த்தியின்போது பிள்ளையார் உருவங்களை முழுசாக வார்த்தெடுத்தல்போல. ஆனால், பரிணாம வளர்ச்சியில் பிரதியெடுத்தல் புழுப்பூச்சி, தாவரம், விலங்கு, பறவை, மனிதன் என மெல்ல உருவாகும்போது உடலில் எல்லாம் மாறுகிறது. கடைசியாக கருப்பையில் வைத்துக் காப்பாற்றி நகலெடுக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது ஜீன்.

பெர்னார்ட் ஷா தமது ‘மெதுலாவுக்கு’ திரும்ப என்ற நாடகத்தில்,. ஒரு காட்சி.
ஒரு பெரிய மேடையில்_ஒரு பெரிய முட்டை. சரியான நேரத்தில், ஒரு சிறிய சுத்தியல் கொண்டு ஒரு தாதி உடைக்க, ஒரு பதினாறு வயதுப் பெண் பிறந்து பேசவும் செய்கிறாள். அப்படி ஒரு கற்பனை! ஆதி உண்மையின் அடிப்படையில்.
ஆதி உயிரினங்களிலிருந்து புதியதொரு வாழ்க்கை முறை கொண்ட உயிரொன்று தோன்றியது. அப்புதிய உயிரி தாவரங்கள்! இத்தாவரங்களிலிருந்து இதைத் தின்றே வளர்ந்த இன்னொரு உயிர். மிருகக் கூட்டம்.
ஜீன்கள் பிரதியெடுக்கும்போது, பிழைகள் தோன்றின. அச்சுப் பிழைபோல ஆயின. அவ்வகைப் பிழைகளே பல்வேறு வடிவங்கள். நூற்றுக் கணக்கான கால்கள் கொண்ட, மரவட்டை (உலக்கைப் புழு) முதல், கால்களே இல்லாத பாம்பு வரை.
எல்லாமே ஜீனின் திருவிளையாடல்கள். எல்லாமே மூளையில்லாமல், சிந்தனையில்லாமல், திட்டமில்லாமல் பரிமாணம் கொண்ட தன்னிச்சையான – இயல்பான_ மாற்றங்கள்.

மனிதனுக்குக்கூட மூளை, சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல், கோப தாபங்கள் எல்லாம் கொஞ்சம்
கொஞ்சமாகத் தோன்றியவை. மூளை நுட்பமாக வளர்ந்த பிறகுதான் நரம்புகளின் தொடர்பும், அதன் வழியாக மூளைக்குத் தகவல் செல்லும் நுட்பமும் பிறகு மூளை கட்டளை அனுப்பும் முறையும் படிப்படியாகத் தோன்றின.

ஆதி மனிதனுக்குக் காயம் பட்டால் அது காயம் மட்டுமே. வலி உணர மூளைக்குச் செல்லும் நரம்புத் தொடர்பு இல்லை.
கடல் சிப்பி, நத்தை போன்றவற்றிற்கு மூளை கிடையாது. தூண்டுதல் ஏற்பட்டால் உடனே அனிச்சச் செயலாக நேரடியாக அது செயல்படும்.
ஜீன்களின் செயல்கள் யாவும் கெமிக்கல் விளைவுகளே. அவை செல்களின் உயிர்க் கூழில் நடைபெறுகின்றன. பரிணாமத்திற்கு அவசரமே இல்லை. நிதானமாக மாற்றங்கொள்ள, பூமியில் நிறைய காலம் இருக்கிறது.

“நாற்பதாயிரம் லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தன்னகலிகள், தட்டுத்தடுமாறி தப்பிப் பிழைத்து, மாற்றங்கள் ஏற்றுக் கொண்டு இன்று மனிதனாகித் தன் சரித்திரத்தை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறது. இன்னொன்று இதைப் படித்துக் கொண்டிருக்கிறது.” என்று அழகாக எழுதுகிறார் பேராசிரியர் மணி.

ஒவ்வொரு உடம்புக்குள்ளும், குறிப்பாக நமது உடம்புக்குள்ளும் ‘பாதுகாப்பு பந்தோபஸ்துடன்’தங்கியிருக்கும் தன்னகலி, வெளியுலகை அறிவதற்கு ஐம்புலன்களையும், நடமாடுவதற்காக ஐந்து செயல் கருவிகளையும் இவற்றை இணைத்து இயங்குவதற்கு ‘உள்ளம்‘ என்னும் மனதையும் ஏற்படுத்திக் கொண்டது. எது? அது நீங்களும் நானும்தான் என்று தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர்.

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். பூமித்தாயின் புதல்வர்கள் என்பதை ஜீன் அறிவியல் மூலம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
‘‘நாம் அனைவரும் ஜீன் இயந்திரங்கள்;
பிழைப்புக் கருவிகள்!’’
என்பது அறிவியல் வாக்கு.
இந்த அடிப்படையில், ஆதி ஜீன்களான தன்னகலிகளின் தியாகம்கூட தன்னலமே. இந்தத் தன்னலம், நாம் சாதாரணப் பொருளில் அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது. இந்த அம்சம் மிக நுட்பமானது.
ஆக்ரமிப்பு, அதிகாரம் எல்லாமே இதன் விளைவுகள். முடிந்தால் தன் இனத்தையே பலியிடும்; அல்லது சாப்பிட்டுவிடும்.
கலைவாணர் பாடினாரே, ‘மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே!’ என்று!
அது வேறு வடிவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது…. தியாகம், சுரண்டல், ஒத்துழைப்பு… என்று பல்வேறு பெயர்களில்…
ஜீன் என்பது ஒரு தூண்டுதல் டி.என்.ஏ. மூலக்கூறு,
‘‘நீங்களும் நானும் பல்லாயிரம்
பல்லாயிரம் சுயநல ஜீன்களின்
தொகுப்புகள்தான். சுயநலமான
ஜீன்கள் கைப்பாவைகள்
நாம்!’’
அவ்வளவுதான் விஷயம்.
கடவுள் என்று ஒன்று இருந்தால் சாத்தான் என்று ஒன்று வேண்டாமா?
முரணின்றி வளர்ச்சி ஏது?
அந்த முரண்தான் ‘மீம்‘ என்பது! கம்பியூட்டரில் விளையாடும் வைரஸ் போன்றது இந்த ‘மீம்‘ இந்த ‘மீம்‘ மூளையைச் சாப்பிடும்.
மூளையில் பல உதவாக்கறை விஷயங்களை, இல்லாத கடவுள், புராண அதிசய அற்புதங்களை உருவாக்கி நம்மை முடக்குவது இந்த மீம்!
அடக்கடவுளே! ஆமாம், இதெல்லாம் மீம் கடவுளின் வேலை.
இன்னும் இருக்கின்றன, விஷயங்கள்! வேண்டாம் சாமி! எங்களை விட்டுவிடுங்கள். தாங்காது என்கிறீர்களா?
உண்மைதான்! இது மீமின் வேலை!
சும்மா, பரமண்டலங்களி்ல் இருக்கும் பிதாவிடம் பிரச்சனையை விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்.
இத்தனை ஆய்வுகள் வேண்டுமா?
ஒரே ஒரு ‘ஜீம் பூம்பா!’ போதும் அவருக்கு. ‘ஓர் ஆதாமும், ஓர் ஏவாளும்‘ உருவாக்கி விட்டு ஏதேன் தோட்டத்தில் விட்டுவிட்டால், அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா, எல்லாக் காரியங்களையும்?…

Related posts

Leave a Comment