You are here
கட்டுரை 

நவீன யோகா- அறிவியல் சார்ந்ததா? – சஹஸ்

தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் யோகா நடைமுறைப்படுத்தப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது. யோகா செய்வது உடலுக்கும் மனதுக்கும் நலம் பயக்கக் கூடியது என்ற பொதுக்கருத்தும் வலுப்பெற்றுள்ளது.யோகாவை ஒரு மதம் சார்ந்த நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியதில்லை. அது இந்தியத் துணைக் கண்டத்தின் பாரம்பரியம் எனவும், சிந்து சமவெளியில் கிடைத்த ஓர் உ ருவம் இதை உறுதி செய்வதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சுற்றிலும் விலங்குகளால் சூழப்பட்டு கிட்டத்தட்ட கால்கள் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அந்த மனித உருவத்தை ஒரு யோகி, சிவன், பாசுபதி அதாவது விலங்குகளால் சூழப்பட்ட கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் போதுமானதாக பின்னால் தோன்றிய இந்து மதச் சடங்குகள் அல்லது வேதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

உண்மையில் யோகா என்ற சொல் குதிரையில் பூட்டப்படுவதைக் குறிக்கும் வடமொழிச் சொல். குதிரை சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிந்தைய ஒரு விலங்காகவே இந்தியத் துணைக் கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று என்பது வரலாற்று, அகழ்வாராய்ச்சி அறிஞர்களின் முடிவு (படம் 1 சிந்து சமவெளி சுடுமண் முத்திரை) ரிக் வேதத்தில் யோகா என்ற சொல் குறிக்கப்பட்டாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலியின் யோக ஆத்ரா தான் யோகத்தைக் குறித்து எழுதப்பட்ட முதல் நூல். அதில் தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் யோக முறைகளைப் பற்றி எவ்விதக் குறிப்புகளும் இல்லை.

ஹத யோகப் ப்ரதிபிகா எனும் நூல் 500 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட யோக சாஸ்திர நூல். இதில் உடலைப் பயன்படுத்தி செய்யப்படும் ஆசன முறைகளைப் பற்றியும், உடலின் பல பகுதிகளில் இருக்கும் சக்கரங்கள் எவை எங்குள்ளன என்பதைப் பற்றியும், உடற்கூறு பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆர்ய சமாஜ் எனும் அமைப்பை நிறுவிய இந்து மத சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதி இந்த நூலைப் படித்து விட்டு அதில் மனித உடலைப் பற்றிக் கூறியிருக்கும் தகவல்கள் சரிதானா என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். காசியில் அவர் ஒரு பிணத்தை அறுத்துப் பார்த்தபோது சக்கரங்களும் இல்லை, நூலில் குறிப்பிட்டவாறு உடற்கூறின் உள்ளமைப்பும் இல்லை என்பதைக் கண்டு திகைப்படைகிறார். ஹத யோகப் ப்ரதிபிகா எனும் நூலைக் கிழித்து கங்கையில் விட்டெறிகிறார். ஆர்ய சமாஜ் அமைப்பை நிறுவிய தயானந்தர் வேதங்களை முன்னிறுத்தி சடங்குகளை மறுத்தவர். சுவாமி விவேகானந்தரும் உடல் சார்ந்த ஹத யோகத்தை ஏற்கவில்லை. உடலை வலுவாக்க கால்பந்து விளையாட்டு போதும் என்கிறார். யோகா எல்லாம் அன்றாட நடை முறைக்கு ஒத்து வராது என்கிறார். அவர் பரிந்துரைத்தது ராஜயோகம் எனும் தியான முறை மட்டுமே. ஆதிசங்கரரும் உடல் சார்ந்த யோகப் பயிற்சியை ஏற்கவில்லை. இப்படி இந்து மதத்தின் முக்கியமான ஆன்மிக குருக்கள் நிராகரித்த யோகாவைத்தான் ராம்தேவும், ரவிஷங்கரும், ஜக்கியும் விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் வியாபாரம் செய்கிறார்கள். மேலும் ஹத யோகப் ப்ரதாபிகா யோகாசனத்தைச் செய்யும் முறை பற்றிக் குறிப்பிடும்போது சாணம் பூசி மெழுகப்பட்ட ஒரு மிகச் சிறிய அறையில் எவ்வித வெளி உலகப் பாதிப்பும் இன்றி ஆசனங்கள் செய்ய வேண்டும் என்கிறது. ஆனால் உலக யோகா தினம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களை ஒரே நாளில் இதைக் கூட்டாகச் செய்ய வைத்து தனது அடிப்படைவாத அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது சங்பரிவார அமைப்பு .இதை ஒரு நாட்டின் பிரதமரே செய்யும்போது அதன் அடிப்படையை ஆராய வேண்டியதாகிறது. விவேகானந்தர் ராஜயோகம் தியான முறையை முன்நிறுத்தினார். பக்தி யோகம், ராஜயோகத்திலிருந்து வேறுபட்டது ஹத யோகம். இது முற்றிலும் உடல்சார்ந்த ஆசனங்களைக் குறித்தது. பிரதமர் செய்துகாட்டும் யோகாசனங்கள் ஹடயோகத்தில் குறிப்பிடப்பட்ட சிலவும் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட பலவும் ஆகும்.

The anatomy of a contortionist பத்தொன்பதாம் நுற்றாண்டில் வெளியிடப்பட்ட ஒரு நூல். இது சர்க்கஸ் கலைஞர்கள் செய்யும் பலவித உடற்பயிற்சி சாகசங்களை படங்களுடன் விளக்கும் நூல்.மேல்நாட்டிலிருந்து வாங்கினார்களோ அல்லது ஏதாவது பழைய புத்தகக்கடையில் பிடித்தார்களோ தெரியவில்லை. உடலை வளைத்தும் முறுக்கியும் செய்த பல சர்க்கஸ் சாகச வித்தைகளை் பலவிதமான யோகாசனங்கள் என்று பெயர் மாற்றிவிட்டார்கள்.கைகளைப் பின்னால் கட்டினால் மேல்நாட்டு சர்க்கஸ்.கும்பிட்டு நின்றால் துர்வாசனம். கால்களை முன்பின் மடக்காமல் நேராக எதிர் எதிர் திசையில் நீட்டி ,கைகளை கம்பீரமாக மடக்கினால் சர்க்கஸ்.(படங்கள்)அந்தக் கைகளையே பக்தி சிரத்தையோடு கும்பிட்டால் ஹனுமானாசனம். உலக யோகா தினத்தை ஒட்டி அதிக இடங்களில் செய்யப்படுவது சூர்யநமஸ்காரம்(சூரிய வணக்கம்). இது பல்லாயிரம் வருடங்களாக கடைப்பிடிக்கப்படும் ஒரு யோகாசனமாகக் கூறப்படுகிறது. இது நம்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு சுவையான கதை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இன்றைய மகாராஷ்டிரா மாநிலத்தில் அனுத் என்கிற குட்டி நாடு இருந்ததது. அதில் 1909-1947 வரை ராஜா அவன்ராவ் என்பவர் மன்னராக இருந்தார். அவருக்கு மேல்நாட்டு உடற்பயிற்சியில் அபார மோகம்.அன்றைய தினம் உடற்பயி்ற்சி செய்பவர்களுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர் என்ஜென் சாண்டோ(1867-1925). ஆஸ்திரிய நாட்டு உடற்கட்டு ஆணழகனாக விளங்கிய இவர் பெயரைத் தங்கள் பெயருக்கு முன்னால் பலர் சூட்டிக் கொண்டனர், நம் சாண்டோ சின்னப்பதேவர் போல. பிரஷ்ய நாட்டைச்சேர்ந்த சாண்டோவால் கவரப்பட்டு இவரிடம் உடற்பயிற்சி உபகரணங்களையும்,புத்தகங்களையும் வாங்கினார் ராஜா அவன்ராவ். அதனடிப்படையில் சுமார் பத்து வருடங்கள் இடைவிடால் உடற்பயிற்சி செய்தார்.. The ten point ways to health என்கிற நூலை எழுதினார். இந்த நூலில்தான் இவர் தான் கண்டுபிடித்த சூர்யநமஸ்காரம் எனும் உடற்பயிற்சி பற்றிக் குறிப்பிடுகிறார். பூனே நகரில் அந்நாட்களில் சுமார் 10000 குழந்தைகள் பள்ளிகளில் பயின்றனர். ஆனால் பள்ளிகளில் போதிய விளையாட்டு மைதானம் இல்லை. அதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகளுக்காக, எவ்வித உபகரணங்களையும் பயன்படுத்தாமல் அவர்கள் செய்வதற்காக இவர் உருவாக்கிய ஒருவகை உடற்பயிற்சிதான் சூரிய நமஸ்காரம். பின்னர் இதை இந்துமத யோக வழிபாட்டுப் பாரம்பரியத்துடன் சேர்த்துவிட்டார்கள். இன்று பிரதமர் மோடியும் இதை இந்தியாவின் பாரம்பரியக் கலை என்று கூறி பல்லாயிரம் பேர் முன்பு செய்து காட்டுகிறார்.பல்லாண்டு காலமாக முனிவர்களும், யோகிகளும் இதைச் செய்துவருவதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது. .

‘யோகா உலகிற்கு இந்தியாவின் பாரம்பரியம் அளித்த கொடை’ என்ற பிரச்சாரம் கடந்த பல்லாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் நவீன யோகாசனங்களின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் துவங்குகிறது. இன்று அமெரிக்க நாட்டில் மிகப் பெரும் சந்தையைப் பிடித்திருக்கும் யோகாவிற்கு மிகப் பெரும் பங்களிப்பைச் செய் திருப்பது ஐரோப்பா என்பதுதான் வேடிக்கையான முரண். திருமலை கிருஷ்ணமாச்சார்யா (1888-1988) என்னும் பெரியவர்.(படம்) மைசூர் மகாராஜாவின் ஆதரவோடு 200 வகை யோகாசனப் பயிற்சிகளை செய்தவர். யோகாவின் பழமையான நூலாகக் குறிப்பிடப்படும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் யோகாசனங்கள் பற்றிக் குறிப்பு எதுவும் இல்லை. சிவசம்ஹிதா எனும் நூலில் 1.சித்தாசனா, 2 .பத்மாசனா, 3. உக்ராசனா 4. ஸ்வஸ்திகாசனா ஆகியவை பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. ஹத யோக ப்ரதிபா எனும் நூல் 500 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டுள்ளது. இதில் 15 ஆசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கெரண்ட் சம்ஹிதா எனும் நூல் 32 வகை ஆசனங்களைக் குறிப்பிடுகிறது.

திருமலை கிருஷ்ணமாச்சார்யா அவர்களின் உறவினரும், சீடருமான B. K.S அய்யங்கார், Light on yoga எனும் நூலில் தனது குருவின் 200 ஆசனங்களையும் படங்களுடன் விளக்கியுள்ளார். இவற்றில் 32 வகைகள் போக மற்றவை மேலை நாடுகளின் உபயத்தால் சர்க்கஸ் வித்தைக்காரர்களிடமிருந்தும், ஸ்வீடன் நாட்டு உடற்பயிற்சி ஜிம்களிடமிருந்தும் எடுக்கப்பட்டுப் பாரம்பரியப் பொலிவுடன் தெரிவதற்காக சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டவை..

யோகா உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்குப் பலன் தருகிறதா என்பதை அறிய அமெரிக்காவில் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நிகழ்த்தினர். ஹத யோகம் கற்ற இருபது பேரை சுமார் முப்பது வயதில் தேர்வு செய்தார்கள். (படம்) படத்தில் காட்டப்பட்டுள்ள ஆய்வு அறைக்குள் அவர்கள் அனுப்பப்பட்டு கீழ்க்கண்டவாறு சில பயிற்சிகளை ஒவ்வொருவரும் முறையே செய்யும்படிப் பணிக்கப்பட்டார்கள். முதல் முப்பது நிமிடம் வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும்.அடுத்த ஐம்பததிரண்டு நிமிடங்கள் யோகப்பயிற்சி.அதில் இருபத்தாறு நிமிடங்கள் சூர்யநமஸ்காரம்.பத்துநிமிடங்கள் 4.8 கிமீ வேகத்தில் ட்ரெட் மில்லில் நடை. சற்று ஓய்வுக்குப்பின் மீண்டும் 3.2கிமீ வேகத்தில் ட்ரெட் மில்லில் பத்து நிமிட நடை. இருபது பேரையும் இதே போல் செய்ய வைத்து அவர்களின் செயல்பாட்டைக் கணக்கிட்டனர். அந்த அறை ஒருவர் எவ்வளவு ஆக்சிஜன் உள்ளிழுக்கிறார், எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார் என்பதை துல்லியமாக அளக்கும் தன்மை வாய்ந்தது. மணிக்கு 4.8 கிமீ வேகத்தில் செய்த நடைப்பயிற்சி மட்டுமே உடலுக்குத் தேவையான, இதயத்திற்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், ஆக்சிஜனையும் சிறந்த முறையில் வழங்குகிறது என்று அறியப்பட்டது.அடுத்த படியாக சூர்ய நமஸ்காரம் சிறிதளவு பலன் கொடுப்பதாக அறியப்பட்டது. மற்ற வகை ஹதயோகப்பயிற்சிகளால் எவ்விதப்பயனும் இல்லை என்று நிறுவப்பட்டது.

யோகாசனங்களைச் செய்வது அதிலும் கடுமையான சில பயிற்சிகள் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். உதாரணமாக சிரசாசனம் செய்தால் மூளைக்கு ரத்த ஓட்டம் கூடுதலாகக் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். இது உடலில் ரத்த ஓட்டம் நிகழ்வது குறித்த அறிவியல் பார்வைக்கு முற்றிலும் புறம்பானது. உடலின் தண்டுவடப் பகுதிக்கு பல நேரங்களில் ஆபத்தையும், விபத்தையும் உருவாக்கவல்லவை பல யோகாசனங்கள். கபால்பாதி பிராணாயாமம் சர்வ ரோக நிவாரணி என்கிறார் ராம்தேவ். இதை செய்தால், மஞ்சள் காமாலை, புற்றுநோய், கர்ப்பப்பைக் கட்டி,ரத்த அழுத்தம் இன்னும் பலப்பல நோய்கள் குணமாகும் என்கிறார் ராம்தேவ்.இது தொடர்ந்து பலமுறை மூச்சை வெளியேற்றி, பிறகு ஒருமுறை மூச்சை உள்ளிழுக்கும் பயிற்சி. வயிறு பல முறை சுருங்கி, பிறகு மூச்சிழுக்கும் போது விரியும். தொடர்ந்து செய்யும்போது ஒரு வித போதை தலைக்கேறும். சிலருக்கு மயக்கம் வரும்.மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனும், கார்பன் டை ஆக்சைடும் கட்டுப்படுத்தப்படுவதால் ரத்த ஓட்டம் பாதிக்கிறது. ஒருவித போதையும் கிடைக்கும்.இச்செயல்பாடு மூளையின் செல்களை பாதிக்கும் என்கிறார் Dr.C.விஸ்வநாதன். (கேரளத்தில் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் பேராசிரியர்).

யோகாவைப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதாக தமிழக அரசு கூறியிருப்பது எவ்வித அறிவியல் அடிப்படையும் அற்றது. மாணவர்களுக்குத் தேவை உள்ளத்திற்கும் உடலுக்கும் நன்மை தரும் விளையாட்டு மைதானங்கள். யோகா அல்ல.
மேலும் அறிய :https://uddari.wordpress.com/The real roots of yoga’ by Wendy Doniger
by Uddari, uddari.wordpress.com
March 15, 2017
Dr.C விஸ்வநாதன் காணொளி மலையாளத்தில்)https://youtu.be/FFfDX3m11ZU.

Related posts

Leave a Comment