You are here
நூல் அறிமுகம் 

குழந்தைகளுக்கான 50 நூல்கள் வெளியீடு;

வெயில் சுட்டெரித்த மதுரையை மழை குளிர்வித்த அந்திப்பொழுது. காந்தி அருங்காட்சியகத்தில் சிறார்களின் கொண்டாட்டமாக அமைந்தது. செப்டம்பர், 1-இல் கலகலவகுப்பறை, மதுரை ஷீட், அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா. மேடையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் சிறுவர், சிறுமியர் கைகளில் புத்தகங்களோடு அமர்ந்தும் படுத்தும் ஒய்யாரமாக சாய்ந்தும் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கும் காட்சியுடன் விழா தொடங்கியது. செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்கா எப்படிக் களவாடப்பட்டது என்கிற உலக வரலாற்றைக் கதையாகக் கூறி அந்த நூலை ஒரு சிறுமி அறிமுகம் செய்து தனது தோழிக்கு வழங்குகிறார். இப்படி ஒவ்வொரு நூலாக அறிமுகம் செய்யப்படுகிறது.

ஒன்றிரண்டல்ல; 50 நூல்கள். அனைத்தும் சிறார்களுக்கானவை. வெளியிட்டவர்களும் சிறார்களே. அவர்கள் ஒவ்வொரு நூலையும் அறிமுகம் செய்து அதன் உள்ளடக்கத்தைச் சுருக்கமாக கூறி வெளியிட்டார்கள். லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘ராஜா வளர்த்த ராஜாளி’, ஆயிஷா நடராசன் எழுதிய ‘எப்படி வந்தேன் தெரியுமா’, ஸ்ரீரசாவின் ‘கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா’, பையானா சொலாஸ்கோவின் படைப்பான ‘தங்கமீன்’,

ஆர்.பத்மகுமாரி எழுதிய ‘டோபோ நாய்க்குட்டி’, த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய ‘சாகனின் டிராகனும், வாட்ஸ்அப் புரளிகளும்’ உள்ளிட்ட அனைத்து நூல்களையும் சுமார் ஒரு மணி நேரத்தில் அறிமுகம் செய்தது இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்தது. குழந்தைகளுக்கான எழுத்தை அவர்களுக்கான மொழிநடையில் வழங்கினால் எளிதில் வாசிக்கும் பழக்கத்திற்குக் கொண்டுவந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை விதைத்தது இந்த நூல் வெளியீட்டு விழா.

இத்தனை நூல்களையும் ஒரே நேரத்தில் பதிப்பித்து சாதனை படைத்திருப்பது பாரதி புத்தகாலயம். உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சிறார்களுக்கான நூல்களில் சிலவற்றை எளிய தமிழில் மொழியாக்கம் செய்து சிறார்களின் மூலமாகவே வெளியிடச்செய்த இந்த முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு, நூல்களை எழுதியவர்கள் தங்களது படைப்புகளை சிறுவர்கள் எவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்களாக இருந்து ரசித்தது.நூலாசிரியர்கள் சார்பில் மேடையில் அறிமுகம் செய்யப்பட்ட நூல் ‘இது என் வகுப்பறை’. சசிகலா உதயகுமார் எழுதிய இந்த நூலை அறிமுகம்செய்தவர் அபராதிகா பவுண்டேசனைச் சேர்ந்த அரிஹரதேவன். ஆசிரியர்களுக்கான இந்த நூலைப்பற்றி அவர் கூறுகையில்,‘‘குழந்தைகளுக்கு இயல்பாகபிடித்த ஒன்று விளையாட்டு.

அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுத்தரும் ஆசிரியர் அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வது போல் தான் வகுப்பறையும். என் வகுப்பறை என்று துவங்கி எவ்வாறு எங்கள் வகுப்பறையாக மாறுகிறது என்கிற அனுபவப் பகிர்வாக- ஆசிரியர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், எதிர்காலத்தில் ஆசிரியர்களாக மலர இருப்பவர்களுக்கு ஒரு பாடநூலாகவும் உள்ளது’’ என்றார். அந்த நூலை மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பிரபாகரன் பெற்றுக் கொண்டார். நூல் ஆசிரியர்கள், பள்ளிமாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆசிரியர் சிவா நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் சிறார்களின் ஆர்வம் குறையவில்லை. நூலாசிரியர் சரவணன் இருந்த இடத்துக்கு வந்த சிறுமி அவரிடம் கைகுலுக்கி “நிறைய எழுதுங்க சார், நல்லாருக்கு” என்றார். ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்?
-சி.முருகேசன்

Related posts

Leave a Comment