You are here
மற்றவை 

…என்றால் என்ன? -ரஃபீக் அகமது

குதிரைச் சக்தி என்றால் என்ன?
மோட்டார்கள் மற்றும் எஞ்சின்களின் சக்தியை குதிரைச் சக்தி (hp) எனும் அலகால் (unit) குறிப்பிடுகிறோம். இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட் (James watt) எனும் விஞ்ஞானிதான் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். ஒரு குதிரைச் சக்தி என்பது, 746 வாட்டுக்குச் சமம். (Watt என்பது மின் சக்தி அல்லது திறனை அளக்கும் ஓர் அளவையாகும்).

ஜேம்ஸ் வாட், ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் குதிரைகள் செய்யும் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு குதிரையின் செயல் திறன் எந்தளவு இருக்கும் என்று தெரிந்துகொள்ள அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இப்படி உற்றுக் கவனித்ததுதான், ‘குதிரைச் சக்தி’ எனும் கருத்துக்கு அவரை இட்டுச் சென்றது.

33,000 பவுண்டு (14,968.5 கிலோ கிராம்) எடையை ஒரு நிமிடத்தில் தூக்குவதற்குத் தேவையான சக்திதான் ஒரு குதிரைச் சக்தி.
ஆகாயக் குழிகள் என்றால் என்ன?

விமானங்கள் பறக்கும்போது ஆகாயக் குழிகளில் விழுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விமானப் பயணிகளுக்கு சில நேரங்களில் விமானம் சட்டென்று கீழே தாழ்வதுபோலத் தோன்றும். முதல்முறையாக விமானப் பயணம் செய்பவர்கள் இந்த நேரத்தில் பயந்துவிடுவார்கள். முக்கியமான ஆபத்து எதுவும் ஏற்படுத்தாத சிறிய ‘ஆகாயக் குழிகள்’ தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

சாலைப் பள்ளங்களில் விழும்போது வாகனங்கள் தடுமாறும்தானே? அதுபோலத்தான் ஆகாயத்திலும் சில ‘குழிகள்’ இருக்கின்றன! இவற்றை ‘காற்று இடைவெளி’ (Air pocket) அல்லது ‘காற்றுக் கொந்தளிப்பு’ (Air Turbulence) என்று குறிப்பிடுகிறார்கள்.

காற்று, இரண்டு திசையிலிருந்து வேறுபட்ட வேகத்தில் வந்து மோதும்போதுதான் கொந்தளிப்பு ஏற்படுகிறது. பருவநிலை மோசமாக இருக்கும்போது காற்றுக் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்.

காற்றுக் கொந்தளிப்பின் ஊடே பறக்கும்போதுதான் விமானம் திடீரென்று சற்றுத் தாழும். வலுவான கொந்தளிப்பாக இருந்தால் விமானம் மிகவும் தடுமாறும். சில சமயங்களில் இதன் காரணமாக பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்படவும்கூடும்.

ஆனால், இப்போது காற்றுக் கொந்தளிப்பை முன்னமே அறிந்துகொள்ள விமானியால் முடியும். காற்றுக் கொந்தளிப்புக்கு ஆட்பட்டாலும் விமானம் உடையாது, தரையில் விழாது.

Related posts

Leave a Comment