You are here
கட்டுரை 

விந்தைத் திருட்டு

சார்லி சாப்ளினை உங்களுக்கு நன்றாகத் தெரியும். உலகத்தையே மனம்விட்டுச் சிரிக்கச் செய்த நகைச்சுவை மன்னன் அவர். 1977 கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் இறந்தார். ஆனால், மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றிய செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆமாம், சார்லி சாப்ளின் சவ உடலை சிலர் திருடிச் சென்றுவிட்டார்கள்! சுவிட்சர்லாந்தில் சாப்ளின் வீட்டருகிலுள்ள மயானத்தில்தான் அவரது உடலை அடக்கம் செய்திருந்தார்கள்.

அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலையில், சாப்ளின் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதனுடன் ஒரு ஒளிப்படமும் (Photograph) இருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்து சாப்ளின் குடும்பத்தினர் அதிர்ந்துபோனார்கள்! அந்தக் கடிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது: “சார்லி சாப்ளினுடைய சவ உடல் இப்போது எங்களிடம் இருக்கிறது. ஆறு லட்சம் டாலர் கொடுத்தால் அதை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.” சவப்பெட்டியின் ஒளிப்படம், அந்தக் கடிதத்துடன் இருந்தது.

சாப்ளினுடைய சவ உடல் திருட்டுப்போன செய்தி, காட்டுத்தீபோல எங்கும் பரவியது. திருடர்களைத் தேடி காவல்துறையினர் அங்கும் இங்கும் அலைந்தார்கள்.

அந்த உடலை யார் திருடியது?
கார் மெக்கானிக் இருவர்! சாப்ளினுடைய உடலுக்கு அவர்கள் வைத்த விலை, ஆறு லட்சம் டாலர்கள்! ஏறத்தாழ முப்பது கோடி ரூபாய்!
பணம் கொடுத்து உடலை வாங்கும்படி பலரும் சாப்ளின் குடும்பத்தினரிடம் அறிவுரை சொன்னார்கள். ஆனால், சாப்ளின் மனைவி அதற்குத் தயாராக இல்லை. “பணம் கொடுப்பது முட்டாள்தனம். அப்படிச் செய்தால், சாப்ளின் ஆன்மாகூட மன்னிக்காது!” என்று அவர் சொன்னார்.
கேட்ட பணம் கிடைக்காது என்று திருடர்கள் புரிந்துகொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் பேரம்பேசத் தொடங்கினார்கள். முதலில் கேட்ட முப்பது கோடி வேண்டாம். அதில் பாதி தந்தால் போதும் என்றார்கள். ஆனால், சாப்ளின் மனைவி அதற்கும் சம்மதிக்கவில்லை. திருடர்கள் மீண்டும் தொகையைக் குறைத்தார்கள். ஆனால், அவர்கள் கடிதங்களிலிருந்து கிடைத்த அடையாளங்களை வைத்து, காவலர்கள் திருடர்களைக் கைது செய்துவிட்டார்கள்.

“நாங்கள் பார்த்த ஓர் இத்தாலியப் படத்தில் வருவதுபோலத்தான், சவ உடலைத் திருடி விலைபேசினோம்” என்று திருடர்கள் சொன்னார்கள்.

Related posts

Leave a Comment