You are here
Uncategorized 

வட்டக்குழியில் சதுரச் சட்டம் கவிஞர் புவியரசு

போப் ஆண்டவர் செத்துப் போனார்!
ஊகூம்! அப்படிச் சொல்லப்படாது. கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்றோ, மறைந்தருளினார் என்றோ, இறைவன் திருவடி நிழலை அடைந்தார் என்றோ, பரலோகப் பிராப்தி அடைந்தார் என்றோதான் சொல்ல வேண்டும்.

அது தான் மரபு
ஆனால், இந்த நாவலாசிரியர், மோரிஸ் வெஸ்ட், கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல், The Pope was Dead! என்று தமது நாவலைப் பளிச்சென்று ஆரம்பிக்கிறார். (ஆண்டவரே, அவரை மன்னிப்பீராக! ஆனால், எவர் மன்னிப்பைப் பற்றியும் கவலைப்படாமல் மோரிஸ் 1999ல் போய்ச் சேர்ந்து விட்டார். ஆண்டவரிடமோ, சாத்தானிடமோ அல்லது அலங்கார சவப்பெட்டிக்குள்ளோ! (நியாயத்தீர்ப்பு நாள் வரும் வரைக்கும்!)
என்னத்துக்கு ஒரு பெரிய மனுஷன் சாவைப் பற்றி இப்படி விரிவுரை, விளக்கவுரை எல்லாம் எழுத வேண்டும்?
அதுவும் போப்பாண்டவர் சாவு, சாதாரணமானதா என்ன?
அவரது ஆட்சியின் கீழ் எத்தனை கோடி ஆடுகள், போப்பாண்டவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லிட்டுத்தான் அவரது ‘சவ’ அடக்கம் பற்றிப் பேச முடியும்.

போப்பு_ சொந்தக்காலில் நிற்க முடியாதவர்! அவரது கால்கள் திடமாக இருந்தாலும் கூட!
அப்படியானால் அவர் யார் காலில் நிற்பார்?
‘காலில்’ அல்ல, காலணியில்!
புனித பீட்டரின் காலணியில்!
பீட்டரை _’பேதுரு’ _ என்றே தமிழனாக்கிவிட்டார்கள். தமிழ் விவிலியத்தின் மூலவர்கள்!
வாழ்க தமிழ்!
சரி அப்படியென்றால், அந்த சீடன் பீட்டர் யார்?
அதுதான் நமக்கு அதிர்ச்சி தருவது. ‘ஆனந்தமும் தருவது’
பீட்டர், இயேசு பெருமானின் சீடர்களில் ஒருவர், இயேசுவை விட மரியாதைக்குரிய இந்தப் பீட்டர் ‘அப்பர்கிளாஸ்’ ஆசாமியோ?
இல்லை, ஏமாந்துபோவீர்கள்.

பீட்டர் ஒரு மீனவர்!
‘அய்யயோ’ என்பீர்களோ, ‘அடடா’ என்பீர்களோ, அது உங்கள் புத்தியைப் பொறுத்தது.
உலகையே கட்டியாளும், போப்பரசர் நிற்பது ஓர் மீனவனின் காலில்!
வத்திக்கானில் உள்ள பிரதான தேவாலயமும் ‘செய்ன்ட் பீட்டர்ஸ் கதீட்ரல்’ தான்!
அது இயேசு தேவனின் ஆலயமல்ல! பீட்டரின் தேவாலயம்!
அவ்வளவு புனிதமான மனுஷ்யன் பீட்டர், இதைவிட மகாபுரட்சி என்ன இருக்க முடியும்?
அந்தப் பீட்டரின் காலின் காலணியில்தான் மகா போப்பாண்டவர்கள் எல்லாரும் நின்று ஆட்சி புரிந்தார்கள். இப்போதும் ஆட்சி புரிந்து வருகிறார்கள் _ கிறித்தவ உலகம் முழுவதையும், இந்த நாவலின் பெயரே, அது தான்; ‘த ஸுஸ் ஆஃப் த ஃபிஷர்மேன்’
போப்பாண்டவரின் மரணச் சேதிகேட்டு அப்படியா’ என்றதைத் தவிர உலகம் கண்ணீர்விட்டு அழவில்லை. காரணம் அவர் மக்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல், மத பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தவர். ஆனால் சர்வ வல்லமை பெற்றவர். உலக வல்லரசுகளும் (கிறித்தவர்) அவரது ஆணையை மீறிவிட முடியாது.

இப்போது வத்திக்கானில் (வாட்டிகன்) தலைக்கு மேல் உள்ள பிரச்சனை ஒரு புதிய ஆளைத் தேர்ந்தெடுப்பதுதான். எல்லா நாடுகளிலிருந்தும் கிறித்தவ மதத்தலைவர்கள் ரோமாபுரியை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். பெரும்பாலும் அவர் ஓர் இத்தாலியராகவே இருப்பதும் வழக்கம். நிர்வாக சவுகரியத்திற்காக! வத்திக்கான் நிர்வாக அமைப்பு, மூத்த பாதிரியார்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

உலகம் நாளுக்கு நாள் படுமோசமாகிக் கொண்டு வருகிறது. இளைஞர்கள் மதத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பலர் ஹிப்பிகளாக மாறிக் கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவும், ரஷ்யாவும் எப்போதும் மோதிக் கொண்டே இருக்கின்றன. சீனாவின் அச்சுறுத்தல் இன்னொரு பக்கம். பல நாடுகள் சுதந்திரம் பெற்று, சொந்த உற்பத்தியில் இறங்கிவிட்டன. வல்லரசுகளின் சந்தை சரிவதால், பல சதிகளில் அகப்பட்டு திணறுகின்றன. அணிகள் பிரிகின்றன. தென்னமரிக்கக் கண்டம் சிவப்பாகி வருகிறது. ஐரோப்பாவில் பல நாடுகள் ஏற்கெனவே சிவப்பாகிவிட்டன.
தேவாலயங்கள், சமய அமைப்புகள் வெறிச்சோட ஆரம்பித்துவிட்டன.

எனவே, உடனடியாக ரோமாபுரியின் மத பீடம் வலுவாக்கப்பட வேண்டும். வத்திக்கானின் நாற்காலி ஆட்டம் கொடுக்கக்கூடாது. எனவே ஆட்சிக்குழு புதிய சிந்தனையில் பரபரப்பாக ஆலோசித்தது.

இனி இத்தாலியப் போப்பு வேண்டாம். பெரும்பாலும் விவசாயக் குடும்பத்திலிருந்து வரும் அவர்களுக்கு உலக நிலை சரியாகப் புரிவதில்லை.
புதிய விவகாரங்களுக்கு, புதிய வழிகள் காண, வெளியில் தேடுவோம் என்ற எண்ணம் பரவலாக எழுந்து கொண்டிருந்தது.
அவர்களில் ஓர் ஆள் மட்டும் வித்தியாசமாகக் காணப்பட்டார். அவர் ஒரு பிஷப் போலவே தோன்றவில்லை. கரடு முரடான உடல், முரட்டுத்தனமான முகம், முகத்தில் காயங்களின் வடுக்கள்!
உண்மையில் அவர் பாதிரியார் தானா?
இந்தச் சந்தேகங்களுக்குக் காரணம், அவர் வந்தது சோவியத் ரஷ்யாவிலிருந்து. அடிதடிகளுக்குத் தயங்காத ஓர் அடியாளின் முரட்டு உருவம்! நிர்வாகத்தினர் அவரை ‘சிஸ்டைன்’ சேப்பலுக்கு அழைத்துப் பேசச் சொன்னார்கள். மற்ற பிஷப்புகளுக்கு முன்னால் அவர் பேசினார். கரகரத்த முரட்டுக்குரலில்.

பல நாட்டு மதத்தலைவர்களும் அதிர்ந்து போனார்கள். எண்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் தொண்ணூறு வயதைக் கடந்தவர்கள்கூட இருந்தார்கள். ரஷ்யக்காரர் மட்டுமே மிக இளையவர். அதாவது அய்ம்பது வயதுக்காரர்!
அவர் தம் அகத்தை விரித்து அப்படியே அந்தக் கூட்டத்தின் முன் வைத்தார்.

‘‘சகோதரர்களே, என் பெயர் கிரில் லக்கோட்டா. இந்தப் புனித சபையில் நான் கடைசியாக வந்து கலந்து கொண்டவன். நிர்வாகத் தலைவர் அழைப்பின் மீது வந்தவன். நான் உங்களுக்கும் புதியவன். என் மக்கள் எம் சிதறடிக்கப்பட்டபின் நான் தனித்து நின்று, பதினேழு ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்திருக்கிறேன்.

உங்களோடு இருக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. மரணத்தின் பள்ளத்தாக்கில் வாழ்பவருக்காகவும், இருளில் கரைந்து காணாமல் போனவர்களுக்காகவும், நான் பேச வேண்டும் நாம் கூடியிருப்பது அவர்களுக்காகவே; நமக்காக அல்ல….
‘‘இந்த அமைப்பைத் தலைமை தாங்கி நடத்திய முதல் மாமனிதர், இயேசு பெருமானோடு இணைந்து நடந்த முதல் சீடர். தம் குருவைப் போலவே சிலுவையில் அறையப்பட்டவர். இயேசுவையே போன்றவர். நம்மிடம் மாபெரும் அதிகாரம் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கப்போகும் தலைவருக்கு மேலும் அதிகப்படியான அதிகாரங்களை நாம் வழங்க முடியும். ஆனால் அவர் மக்களின் வேலைக்காரனாக மட்டுமே செயல்பட வேண்டும். எஜமானராக அல்ல.

‘‘அருட்சகோதர, சகோதரிகள், பாதிரியார்கள், பிஷப்புகள் _ என யாராயினும் சரி, முழு அர்ப்பணிப்புக் கொண்டவர்கள். நமது விசுவாசமும், அர்ப்பணிப்பும் மக்களிடமாகவே இருக்க வேண்டும்; மக்களுக்காகவே இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த மக்களே இயேசுவின் அன்பான ஆட்டுக்குட்டிகள்.

‘‘நோய் நொடிகளாலும், துன்பதுயரங்களாலும், வாட்டும் வறுமையாலும் இரவு பகலாக மனிதன் அழுது கொண்டிருக்கிறான். பெண்மக்களும், குழந்தைகளும் வேதனைப்பட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேய்ப்பரை இழந்துவிட்டவர்கள்.
‘‘நாம் கூட அப்படித்தான், மக்களை இழந்துவிட்டவர்கள்; நல்ல மேய்ப்பவர்களாக இல்லாமற் போனவர்கள்.
‘‘நாம் உடுத்தியுள்ள சிறந்த ஆடைகளும் அணிகலன்களும் அவர்களின் வியர்வையால் உருவானவை. நமக்குக் கல்வி கற்பித்து உயர்த்தியவர்களும் அவர்களே…. நாம் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டாமா? அது நமது கடமையல்லவா? அவர்கள் தம் உழைப்பிற்கு ஊதியமாக எதையும் உரிமையுடன் கேட்கவில்லை.

அவர்கள் நலம் நமது கடமை…. அதுதான் இறை விசுவாசம்….’’
என்று உடைந்த குரலில் உள்ளம் உருக வேண்டினார். அப்போதே அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவர்தான் தலைமைக்கு ஏற்றவர் என்று!
கடைசியில் வாக்கெடுப்பு மூலம் கிரில் லக்கோட்டா புதிய போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மரபுகளுக்கு மாறாக, புதிய கொந்தளிப்பான உலகை இவரால்தான் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில்.
கிரில் அதிர்ந்துதான் போனார்.

அவரை விடுதலை செய்த காமனேவ் சொன்ன சொற்கள் அவர் நினைவிற்கு வந்தன. ‘‘உங்களை நான் விடுதலை செய்கிறேன். நீங்கள் சுதந்திரமாகப் போகலாம். ஆனால் உமக்காக, உமக்கொருபோலிப் பெயர் கொடுப்பதற்காக நான் ஒரு கொலை செய்ய நேர்ந்தது!
நீங்கள் அதற்கான பிரதி உபகாரம் செய்யத்தான் வேண்டும். எப்போது, என்னவென்று தெரியாது. கேட்பேன் ஒரு நாள், அது எதுவாயினும் நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். உமது விடுதலைக்காக நான் மகிழ்கிறேன்,’’ என்றார்.

தலைவர் காமனேவ், மார்க்சிய அரசில் படிப்படியாக மேலுயர்ந்து வரும் ஒரு தலைவர்.
பழைய போப்பு, அலங்கார ஆடைகளுடன், உயர்தரமான சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டார்.
புதிய போப்பு, பதவி ஏற்பதற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்தன…. அப்போதுதான் அந்த விவகாரமான செய்யக்கூடாத காரியத்தை அவர் செய்ய முற்பட்டார்.

போப்கிரில் உறக்கம் பிடிக்காமல் தம் அறையில் தவித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு அது பெருஞ்சுமையாகவே இருந்தது. புனித பீட்டரின் அருளாட்சி பீடம் அமர முடியாத அளவிற்கு சூடாக இருந்தது…. உலகத் தலைமை என்ற கிரீடமோ கனத்தது…
இரவு நேரம். வெண்ணிலா வானத்தின் உச்சியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது…
அவர் படுக்கையைவிட்டு எழுந்தார். ஓசைப் படாமல் கதவைத் திறந்து கொண்டு வராந்தாவுக்கு வந்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஏதோ ஒரு திக்கில் விரைந்தார்.

ஏராளமான அறைகள்… வரிசை வரிசையாக…. ஒன்றின் கதவில் மெல்லக் கை வைத்தார். அது திறந்து கொண்டது. உள்ளே பாதிரிமார்கள் அணியும் ஆடைகளும் தொப்பிகளும். தமது ஆடைகளைக் களைந்துவிட்டு ஒரு கறுப்பு அங்கியை எடுத்து அணிந்து கொண்டார். இத்தாலிய பாதிரிமார்கள் அணியும் வட்டமான தொப்பியும், இடையில் ஒரு பாவாடையும்!
இப்போது அவர் ஒரு சாதாரணப் பாதிரியார். மாடித்தாழ்வாரத்திலிருந்து கீழே இறங்கி கால்போன போக்கில் நடந்தபோது – வெளிவாயில் கேட் தெரிந்தது.

அதுதான் வத்திக்கான் மாளிகையின் பிரதான வாயில். அதன் வழியாக, பல அலுவல்கள் பார்க்கும் பாதிரியார்கள் வந்து போய்க் கொண்டிருப்பதால் காவலர் அவரைக் கவணிக்கவில்லை. வெளியே வந்ததும் அவர் குதூகலமடைந்தார். விடுமுறை பெற்ற பள்ளிப்பிள்ளைபோல் ஒரு பரவசம். அவர் முகத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு புன்முறுவல் பூத்தது.
நிலா ஒளியில் காலார நடந்து ‘சாந்த் ஏஞ்சலிக்கோ’ கோட்டையை அடைந்தபோது சாலையின் மறுபக்கத்தில் டைபர் நதி கொந்தளித்தபடி ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

சாலையைக் கடந்து மறுபக்க நதிக்கரைக் கைபிடிச் சுவரைப் பற்றியபடி டைபரின் பாய்ச்சலைக் கண்டு அப்படியே நின்றார். எத்தனை வரலாறுகளைக் கண்டு கடந்துபோயிருக்கிறது அந்த நதி! எத்தனை ரத்த ஆறுகள் அதில் கலந்திருக்கின்றன! எத்தனை சடலங்கள்!
‘உலகத்தின் பாதைகள் எல்லாம், ரோமாபுரியை நோக்கியே செல்கின்றன’’ என்றொரு பழமொழி முன்பு அடிக்கடி பேசப்பட்டு வந்தது. உலக வரலாறும்கூட டைபர் நதி வழியாகவே பாய்ந்திருக்கிறது. நதிக்கரையோரத்திலிருந்து எதிர்த்திசைக்கு விரைந்தபோது ‘‘வெஸ்பாவில் தடதடத்துப்போன ஒரு பெண், கிரிலைத் திட்டிவிட்டுப்போனாள்!முதல் ஆசீர்வாதம்!
ஒரு வீட்டின் கதவில் சாய்ந்தபடி ஒரு கர்ப்பிணிப்பெண் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். மங்கலான தெருவிளக்கின் கீழ் ஒரு பெரிய மடோனா சிலையின் காலடியில் எதற்காகவோ காத்துக் கொண்டிருந்த பூனை ஒன்று கிரில் வருவதைப் பார்த்ததும் இருளில் பாய்ந்து சென்று மறைந்தது. முதல் வரவேற்பு போப்பாண்டவருக்கு!
பல சிறு சிறு தெருக்கள் உள்பகுதியை நோக்கி வளைந்து வளைந்து சென்றன.

தெருவோரத்தில் இரண்டு இளம் பெண்கள் ‘வாடிக்கையாளர்களை’ எதிர்பார்த்து, சத்தமாய்ச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்கள், ஒரு தெருவிளக்கின் கீழ்.
கிரில் அணிந்திருந்த உடை, தலையில் அகல விளிம்புகள் கொண்ட வட்டத் தொப்பி; தொளதொளத்த மேலாடை, இடப்பில் வட்டமான பாவாடை!
அவரைப் பார்த்து அவர் ஆண் பிள்ளையா, பெண் பிள்ளையா என்று கேலி செய்தபடி அவர்கள் பேசிச் சிரித்தனர்!
பாதிரியார்களைப் பார்த்தால், அவர்களுக்கு அப்படி யொரு இளக்காரம்! உலக மகா போப்பாண்டவருக்கு அன்று – முதல் நாள் கிடைத்த தரிசனங்கள்! அதுதான் யதார்த்த உலகம்! வத்திக்கான் மாளிகையின் வாசலில்! ஆனால், இவற்றையெல்லாம்விட அவர் தரிசிக்கப்போகிற நிகழ்ச்சி ஒன்று இனிதான் நடக்கப்போகிறது.

ரஷ்யாவின் உக்ரைன் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு ரோமானிய மண்ணில் ஆழமாக அவர் நடப்பட்டு விட்டார். மாய மதவிலங்குகள் அவரைப் பிணைத்துவிட்டன. இனிச் சாகும்வரை அவருக்கு விடுதலை இல்லை! ஆனால், உலகம் அவர் காலடியில்தான் கிடக்கிறது!
அவர் இனி சுத்தமான ரோமானியர். உலக கிறித்தவ அருளாட்சி பீடத்தில் அமர்ந்து ஆட்சிபுரியும் சகல வல்லமை கொண்ட அரசர்.

ஆனால், அவர் ரஷ்ய காமனேவின் ஆள்! என்ன அதிசய முரண் நிலை!
என்ன செய்வதெனத் தெரியாமல் ஆற்றங்கரைச் சாலையிலிருந்து பிரியும் ஒரு சந்தில் நுழைந்தார் அவர். வளைந்து சென்ற சந்தில் கொஞ்ச தூரம் சென்றதும் சந்து சற்று அகலமாயிற்று. ஓர் ஓரத்தில் சில மேசை நாற்காலிகள் போடப்பட்டு தெருவோர ‘பார்’ ஒன்று! போய் ஒரு நாற்காலியில் அமர்ந்தார் கிரில், ஒரு காப்பி வேண்டும் என்று சொல்ல கறுப்புக் காப்பி வந்தது.
இன்னொரு மேசையைச் சுற்றி ஒரு குடும்பம் அமர்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது.

யாரோ ஒருவர் ஒரு நாளிதழைக் கொண்டுவந்து கிரிலிடம் நீட்டினார். கிரில் காசு கொடுக்கத் தன் சட்டைப் பையில் கைவிட்டபோது, பகீர் என்றது.
அது காலி! ஏதோ ஒரு தரித்திரப் பாதிரியாரின் உடை அது!
அய்யோ எப்படிக் காசு தருவது? வந்தே விட்டான் பரிசாரகன்!
காப்பிக் கோப்பையை எடுக்கும்போது, தமது காலிசட்டைப்பையை வெளியில் இழுத்துக் காட்டினார் கிரில்!
அவன் ஏதோ முணுமுணுத்துவிட்டு உள்ளே திரும்புகையில் அவனது சட்டையைப் பிடித்து இழுத்துவிட்டு, ‘‘பாருங்க, நான் எப்படியும் அப்பறமா காசு குடுத்திருவேன்’’ என்றார்.

அவன் ஏதோ சொல்ல ஓர் உரையாடல் தொடர, அந்தக் குடும்பத் தலைவர், அதைக் கவனிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், ‘‘இந்தாப்பா, அவருக்கான காசு’’ என்று தூக்கிப் போட்டார் அவர்.

‘‘நன்றி அய்யா! நான் என்னோட அட்ரசை எழுதிக்குடுக்கிறேன். நிச்சயம் பணம் கொடுத்தனுப்பறேன். இந்த ரோமாபுரியில் உள்ள அத்தனை பாதிரியார்களுக்கும் என்னால காப்பி வாங்கிக் குடுக்க முடியும். இப்ப முடியல….. இப்ப கொஞ்சம் பிரச்சனை…..’’
‘‘ஆமாமா! யாருக்குத்தான் பிரச்சனை இல்ல! போப்பாண்டவருக்கே பிரச்சனையாக இருக்கிறதா கேள்விப்பட்டேன்’’ என்று நக்கலடித்தான் பரிகாரகன். கடைசியில், ‘‘நான்தான் போப்’’ என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது!
ஆனால், அதை யாரும் நம்பவில்லை, ‘‘சும்மா ஜோக் அடிக்காதீங்க!’’ என்றான் அவன்.

வத்திக்கான் வட்டாரத்தில் சுற்றித்திரியும் பாதிரியார்கள் ‘‘காசு காசு’’ என்று ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்பது அங்கே நிலவிய பொதுக் கருத்து!
அவர் சட்டென எழுந்து நின்று கை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து, சிலுவைக் குறிபோட்டுவிட்டு, ‘‘இப்போது நீங்கள் போப்பாண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டீர்கள்!’’ என்றார் கிரில்!
அவர்கள் அதை ஒரு ஜோக்காகவே எடுத்துக் கொண்டு சிரித்தார்கள்!
அவர் அதைவிட்டு நகர்ந்து வேறு ஒரு தெருவை அடைந்தபோது ஒரு மனிதர், மூடிய கதவை சட்டெனத் திறந்து கொண்டு பாய்ந்து வெளியே வந்து, கிரில்லை இடித்துக் கொண்டு ஓட முயன்றார். பிறகு அவர் ஒரு பாதிரியார் என்பதை உணர்ந்து, திரும்பி அவரை நெருங்கி, ‘‘சுவாமி, ஒருவர் மரணத் தறுவாயில் கிடக்கிறார். உங்கள் உதவிதேவை’’ என்றார்.

‘‘நீங்கள் யார்?’’ என்றார் கிரில் ‘‘நான் ஒரு டாக்டர். இந்த பகுதி மக்களுக்கு மருத்துவர் மீது நம்பிக்கையே இல்லை.’’ என்று முன்னே விரைய, கிரில் பின்னால் விரைந்தார்.

ஒரு பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியை அடைந்தபோது, அட்டும் அழுக்கும், நாற்றமும் பிடித்த அறையில், எலும்புக்கூடுபோல ஒரு, மனிதன் கிடந்தான்.

காலடியில் ஓர் அழகான இளம் பெண் ‘‘நீ சொந்தக்காரியா அம்மா?’’ என்று கேட்டார் கிரில்.
‘‘இல்லை, அவ்வப்போது வந்து உதவும் பெண். இவருக்கு யார் உதவியும் தேவையில்லை. முடிந்துவிட்டது’’ என்று எழுந்தாள்.
‘‘கடைசி நேரத்தில் ஒரு பாதிரியார் கூடவா தேவையில்லை’’
‘‘ஆம், இவர் கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்காரர்! இவர் மனைவி ஓர் யூதப் பெண்!’’
நாற்றம் வீசும் படுக்கை ஓரத்தில் அமர்ந்து அந்த மனிதனின் கழிவுகளை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்த அவளைக் கிரில் திகைப்போடு பார்த்தார்.

பிறகு அவர், அந்தப் படுக்கை முன் முழந்தாளிட்டு இருகரங்களையும் கோத்துக் கொண்டு, ‘‘தேவனின் அருளாலும், பரிசுத்த ஆவியின் கருணையாலும் உன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, நீ இரட்சிக்கப்படுவாயாக! ஆமென்!’’ என்று சொல்லி சிலுவைக் குறியிட்டு எழுந்தார். போப்பாண்டவரான கிரில்!
அந்த அதிசயப் போப்பாண்டவரின் முதல் பிரார்த்தனை நாத்திகனான ஒரு கம்யூனிஸ்டுக்கு ஆயிற்று என்ற முரண் அழகை உருவாக்கி வழங்குகிறார் மோரிஸ் வெஸ்ட்.

அவர்கள் வெளியே வந்து, சற்று தூரம் நடந்த பிறகு அந்த சின்னக்கார் அருகே வந்து சேர்ந்தார்கள். டாக்டர் போய்விட்ட பிறகு அவள் சொன்னாள், ‘‘சுவாமி நாம் எல்லாரும் ஏதோ ஒருவகையில் கைதிகள்தானே.’’
‘‘ஆமாம்! போப்பாண்டவரும் கூட!’’ என்றார் கிரில்.
பிறகு ‘‘பெண்ணே, நீ கத்தோலிக்கப் பிரிவா?’’ என்றார் கிரில்.

‘‘எனக்குத் தெரியவில்லை! என் அடையாளத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்றாள் அந்த இளம்பெண்.
“இந்த மக்களால் மரணத்தை எளிதாக எதிர் கொள்ள முடியும். வாழ்க்கையைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.” என்று சொல்லி அவள் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தாள்.
‘‘சுவாமி, நான் ஜெர்மனியில் பிறந்தவள். அமெரிக்கக் குடியுரிமை பெற்றேன். இப்போது ரோம் நகரில் வாழ்கிறேன். என பெயர் ரூத்,’’ என்றாள் அந்த யூதப் பெண்!
‘‘என் பெயர் கிரில் லகோட்டா. ரஷ்யாக்காரன்’’
‘‘ஓ! நினைத்தேன், புதிய போப்பா?” என்றாள் ரூத் சாதாரணமாக! “அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்’’ என்றார் கிரில்.
பிரம்மாண்டமான கோட்டை கொத்தளங்களும், மத ரீதியான மாமதில்களும், இரண்டாயிரம் ஆண்டுகளின் அழுத்தமான வரலாறும் அந்த இருவரின் காலடியில் விழுந்து நொறுங்கின. ‘‘அம்மா, என்னை உன் அறைக்கு இப்போது அழைத்துப் போகிறாயா? எனக்குக் கொஞ்சம் ‘தேநீர் வைத்துக்கொடு’ என்றார் கிரில் இது போப்பாண்டவரின் அடுத்த பிரார்த்தனை!
போப் கிரில் தமது பீடத்தில் அமர்ந்தார். அவர் முன் ஏராளமான விவகாரங்கள் வந்து குவிகின்றன தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகள். ஆனால், தீர்க்க முடியாதது மத மரபு.

இருமுனைப் போராட்டத்தில் அந்த ரஷ்யப் போப் திணறும் திண்டாடும், திகைக்கும், போராடும் கதைதான் பின் பகுதி.
மணமுறிவு, ஒரு பாலின உறவு, மதச்சீர்திருத்தம், சர்வதேச விவகாரங்கள், பாதிரிமார்களின் ஒழுக்கம், அரசியல் மோதல்கள், வன்முறை…. போன்ற பலப்பல விவகாரங்கள் வந்து அவர்மீது மோதுகின்றன…
அவற்றிற்கும், அடிப்படை மதச் சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான உரசல்கள், முரண்பாடுகள் என விரிகிறது மிச்சக்கதை.

முதல்நாள், சோதனைகள் நடுவே சந்திக்கிற யூதபெண், குருவைச் சந்திக்கும் சிஷ்யையாக அல்லாமல், ஒரு நண்பரைச் சந்திப்பது, அங்கே மத உரையாடல்கள் நிகழ்வதில்லை. நடைமுறைச் சிக்கல்களே பேசப்படுகின்றன…
ரஷ்ய அதிபர் கடிதம் எழுதுகிறார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கடிதம் எழுதுகிறார். சர்வதேசச் சிக்கலை அவரால் தடுக்க முடிகிறது.
ஆனால், அவரது ஆட்சி அமைப்புக்குள் அவர் ஒரு சிறைவாசிபோல வாழ நேர்கிறது. ஒரு பிரஞ்சுப் பாதிரியார், வத்திக்கானில் வாழும் மனித நேயர், ஓர் ஆராய்ச்சி நூலை எழுதுகிறார். மனிதகுல முன்னேற்றம் என்ற அந்த நூல் வத்திக்கான் நிர்வாகத்தால் பிரசுரிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இருபது ஆண்டுகள் கடின உழைப்பின் ஆவணம் அது. போப் அவருக்காகப் போராடியது விரயமாகிறது. அந்த நிராகரிப்பை அவரே பாதிரியாரிடமே சொல்லத் துணிகிறார்.

அந்த இறுதிச் சந்திப்பு நெகிழ்வானது. அழகானது. போப் பேசுகிறார்…
‘‘அய்யா, கொஞ்ச நேரம் என்னுடன் இருங்கள். இந்த இருளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; சகோதரரே, கசப்பை அருந்தும் நேரம். நாம் பகிர்ந்து குடிப்போம்.’’ என்கிறார் போப். முடிவு புரிந்துவிட்டது. பாதிரியார் முகம் சுருங்கியது. கைகள் நடுங்கின; உடல் நடுங்கியது. பெருமூச்சுவிட்டபடி அவர் செல்கிறார்…
‘‘சுவாமி! தங்கள் கருணைக்கு என் நன்றி. நஞ்சைப் பகிர்ந்து குடிக்க முடியாது! அவரவர் நஞ்சை அவரவரே குடிக்க வேண்டும். நான் புறப்படுகிறேன்’’
‘‘நான் உங்களை மறுபடியும் வந்து பார்க்கிறேன்’’
‘‘அதற்கு தேவையிருக்காது சுவாமி’’
இப்படி அவர்கள் பேசி விடைபெறும் காட்சி அழகான சோகம். அப்புறம் அவர் நெஞ்சுடைந்து இறந்துவிடுகிறார்!
ஆமென்!
நேர்முறையும், மனிதநேயமும், கருணையும், கொண்ட மாமனிதர்கள், ஒரு நிறுவன அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது.

ழே இருக்கும், மரபில் ஊறிய மந்தை அவர்களை செயல்படவிடாது. கொஞ்சநாள் உள்போராட்டத்தில் அகப்பட்டு, மனம் நொந்து, வெந்து, அவர்கள் மாய்ந்து போவார்கள் என்ற கசப்பை உணர்ந்து இந்த உரைநடைக் காவியம்

Related posts

Leave a Comment