You are here

முதலை ஏன் கோழிகளைத் தின்பதில்லை?

ஒரு கோழி தினமும் ஆற்றங்கரைக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்லும். ஒரு நாள் அது வழக்கம்போல ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு முதலை வந்து அதைத் தின்னப்பார்த்தது. கோழி பயந்து கத்தியது:
“ஐயோ, என்னைத் தின்றுவிடாதே, அண்ணே!”

உடனே முதலை சொன்னது: “கோழியே, நீ என்னை அண்ணன் என்று அழைத்த காரணத்தால் என் தங்கையாகிவிட்டாய்! தங்கையாகிவிட்ட கோழியைத் தின்பது எங்கள் முதலை இனத்துக்கே இழிவாகும். எனவே நீ போய்விடு!”
“மிகவும் நன்றி, அண்ணே!” என்று சொல்லி அந்தக் கோழியும் சென்றது.

அடுத்த நாளும் அந்தக் கோழி தண்ணீர் குடிக்க வந்தது. முதலைக்கோ, தாங்க முடியாத பசி. அது கோழியின் மீது பாய்ந்து கொல்ல முற்பட்டது. உடனே கோழி அலறியது:
“என்ன காரியம் செய்கிறாய், அண்ணே! நீ என் அன்பிற்குரிய மூத்த சகோதரன் அல்லவா! இந்த உலகில் எங்காவது அண்ணன் தன் தங்கையைத் தின்பதுண்டா?”

கோழி சொன்னது மிகவும் நியாயமாகப் பட்டது முதலைக்கு. அது சொன்னது: “ஆமாம். நீ சொன்னது உண்மைதான். ஓர் அண்ணன், தன் தங்கையைத் தின்பதைப் பற்றி என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. எவ்வளவு மோசமான காரியம் அது! சரி, நீ போ!”
“இந்த ஏழைத் தங்கையிடம் காட்டும் கருணைக்கு நன்றி, அண்ணே!” என்று சொல்லி கோழி சென்றது.

ஆனால் முதலைக்கு ஆழ்மனதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்து. ‘அது ஒரு கோழி, நான் ஒரு முதலை. நான் நீரில் வாழ்கிறேன், அது நிலத்தில் வாழ்கிறது. அது வேறு இனம் – நான் வேறு இனம். நான் எப்படி அந்தக் கோழிக்கு அண்ணனாக முடியும்?’
முதலைக்கு ஒரு பல்லி நண்பன் உண்டு. இந்தக் கேள்விக்கு விடைகாண, அந்தப் பல்லியிடம் சென்று சொன்னது முதலை:
“அன்பிற்குரிய நண்பனே, அருமைப் பல்லியே, நீதான் என் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கவேண்டும். ஒரு பெரிய கோழி தினமும் ஆற்றங்கரைக்கு வந்து தண்ணீர் குடிக்கிறது. நான் அதைப் பிடித்துத் தின்னப்பார்க்கும்போதெல்லாம் அது, என்னை ‘அண்ணே’ என்று அழைக்கிறது. நானும் இரக்கப்பட்டு அதை விட்டுவிடுகிறேன். நான் எப்படி அதற்கு அண்ணனாவேன்?”

“என் மூத்த நண்பனே, அழகிய முதலையே, அந்தக் கோழி சொல்வது சரிதான். அது படித்த கோழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் உன்னை அண்ணன் என்று அழைத்திருக்கிறது. கோழி, ஆமை, என்னைப்போன்ற பல்லிகள், உன்னைப்போன்ற முதலைகள் எல்லாம் முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பவை என்று உனக்குத் தெரியாதா? அந்த வகையில் நாமெல்லாம் சகோதரர்கள், சகோதரிகள்தான். புரிந்ததா?”

“ஓ, அடடா! அப்படியா விஷயம். இது தெரியாமல் நான் இவ்வளவு நாள் இருந்துவிட்டேனே. நல்லவேளை, இப்போதாவது நீ சொன்னாயே. உனக்கு மிகவும் நன்றி.”

Related posts

Leave a Comment