You are here
நூல் அறிமுகம் 

பயணங்கள் முடிவதில்லை

முனைவர் அ. வள்ளிநாயகம்

பயணங்கள் முடிவதில்லை என்ற
சோ. சுத்தானந்தம் அவர்களின் வாழ்க்கைப்பயணக் கட்டுரைகள் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற முகவுரையுடன் 21 பயணங்களின் அனுபவமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நடைப்பயணத்தில் ஆரம்பிக்கும் கட்டுரைத் தொகுதிகள் 7ம் வயதில் தொடங்கி அவரது 70 வயதுவரை தொடர்வதாகக் கருதலாம். அவர் இக்கட்டுரைகளில் ஓரிடத்தில் கூட அவரது வயது பற்றிக் குறிப்பிடவில்லை.
இந்த நூல் பயணங்களின் தொகுப்பாக இருந்தாலும், இந்நூலின் மூலம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாம் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது. ஆண்டு முழுவதும் லாபம், நட்டம் என்றே புலம்பவைக்கும் இந்த மூலதனத்தின் மனிதநேயமற்ற பலநிகழ்ச்சிகளை அனுபவரீதியாக உணர ஒருவாய்ப்புக் கிடைத்தது என்ற வார்த்தைகள் இவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன.

காலமெல்லாம் இடதுசாரியாக வாழ்ந்த இவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். இவரது வாழ்க்கை ஒரு கதைபோல் அமைந்தாலும் அதைக்கூறுவது மிகச்சிரமம். இவர் அதைக் கூறியுள்ள முறை மிகவும் பாராட்டத்தக்கது. எளிமையாகக் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் பாராட்டத்தக்கவை, பயன் உள்ளவை. இவரது வாழ்க்கை முழுவதையும் அறியக்கூடிய வகையில் செய்திகள் தரப்பட்டுள்ளன.

கடைசியில் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ள இவரது மகள்களின் செய்தி இவர் குழந்தைகளை எப்படி வளர்த்துள்ளார் என்பதைக்காட்டுகிறது. இவரது குழந்தைகள் சமூகப் பொறுப்புடன் மிக நல்ல நிலையில் தற்போது உள்ளனர். இவர் தந்த அறிவுரையான திருமணவாழ்க்கை சரியாக இல்லையென்றால் சகித்துக்கொண்டு வாழவேண்டிய அவசியமில்லை என்ற அறிவுரை மிகப்பொருத்தமானது. பெண்விடுதலைக்கான ஆக்கப்பூர்வ முடிவாகும்.

இவரது கட்டுரைகள் முழுவதும் எளிய சொற்களால், இனிமையாகக் கூறப்பட்டுள்ளதால் எடுத்தது முதல் தொடர்ந்து வாசிக்கும் வகையில் உள்ளது. தொடர்ந்து உழைத்துவரும் இவர் தற்போது லிகாய் எல்.ஐ.சி முகவர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

அவரது மனைவிக்குப் பொருளாதார சுதந்திரம் அளிக்கவில்லை என்ற வருத்தமும் அவர் தனக்குத் தெரிந்த சமையற்கலை மூலம் சம்பாதித்து வருவதும் அவரது வாழ்க்கை வரலாற்றோடு வெளிப்படுகிறது. அவர் குடும்பத்தோடு செலவிட்ட நேரம் குறைவு என்பதை அவர் தனது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒதுக்கியுள்ள பக்கங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இவரோடு அறிவியல் இயக்கப்பயணத்தில் பயணித்த அனுபவமும் இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது. இவரது நூல் இன்னும் பல வாழ்க்கைவரலாற்று நூல்கள் வெளிவர முன்மாதிரியாய் அமையும்.

Related posts

Leave a Comment