You are here

தந்திரக்காரப் பூனை

ஆப்பிரிக்க நாடோக் கதைகள்

ஓர் ஊரில் ஒரு பூனை இருந்தது. இள வயது என்பதால் அது சக்தியுடனும் சுறுசுறுப்புடனும் இருந்தது. நிறைய எலிகளைப் பிடித்துத் தின்றது. அந்தப் பூனையைக் கண்ட எலிகள் எல்லாம் பயந்து நடுங்கின. காலம் செல்லச் செல்ல, பூனைக்கு வயதாகிவிட்டது. அதற்கு இப்போது ஒரு எலியைக்கூடப் பிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் பூனை, ஏதாவது தந்திரம் செய்து எலிகளை ஏமாற்றிப் பிடிக்கவேண்டும் என்று முடிவு செய்தது. மல்லாந்து படுத்து அசையாமல் கிடந்தது. அதைப் பார்த்த ஒரு எலி, பூனை இறந்துவிட்டதாக நினைத்தது. அது உடனே தன் நண்பர்களிடம் ஓடிச் சென்று சொன்னது: “அந்த பயங்கரப் பூனை செத்துவிட்டது! வாருங்கள், எலி நண்பர்களே, இதை நாம் நடனமாடிக் கொண்டாடுவோம்!”
எலிகளுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி! அவை பூனையைச் சுற்றிச் சுற்றி வந்து நடனமாடின. பூனை அசையாமல் கிடந்தது. அப்போது ஒரு எலி, பூனையின் தலையில் ஏறிக் குதித்தது. தாங்க முடியாத சந்தோஷத்துடன் அது இப்படிக் கத்தியது: “இந்தப் பூனை உயிருடன் இருக்கும்போது நம் உற்றார் உறவினர்களையெல்லாம் கொன்று தின்றது. இப்போது இறந்துவிட்டது! வாருங்கள், நாம் இதன் தலையில் ஏறி குதித்துக் குதித்து விளையாடுவோம்!”

ஆனால், அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அப்படி நடக்கும் என்று எந்த எலியும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இறந்ததுபோலக் கிடந்த அந்தப் பூனை திடீரென்று துள்ளி எழுந்து, அந்தப் பரிதாபத்திற்குரிய எலியைப் பிடித்துக்கொண்டது. இதைப் பார்த்த உடனே மற்ற எலிகளெல்லாம், “ஐயோ! ஓடுங்கள், ஓடுங்கள்! இந்தப் பூனை சாகவில்லை!” என்று கத்திக்கொண்டே மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தன.
ஓடி வந்து பொந்துக்குள் நுழைந்துகொண்ட ஒரு எலி, திணறியபடியே சொன்னது: “எலிகள் ஒருபோதும் பூனைகளை நம்பக் கூடாது என்று தெரியும்தான். ஆனால், சில நேரங்களில் அது மறந்துபோகிறது.”

Related posts

Leave a Comment