You are here
Uncategorized 

ஜார்ஜ் அலெக்ஸ்

வட்டப் பாலம் (laguna garzon bridge)
தெற்கு அமெரிக்க நாடான உருகுவே (Uruguay) யில், கார்ஸான் (Garzon) எனும் கடலோர கிராமம் இருக்கிறது. இங்குள்ள காயலின் (Back water) மேலேதான் இந்த வட்ட வடிவப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அரை வட்டமாக இருக்கும் இரண்டு பாதைகளும் ஒருவழிச் சாலைகள்தான். உருகுவேயைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ரஃபேல் வினோளி (Rafael Vinoly) இதை வடிவமைத்திருக்கிறார். இந்தப் பாலம் ரோச்சா (Rocha), மால்டோனடோ (Maldonado) ஆகிய நகரங்களை இணைக்கிறது. உருளை வடிவமுள்ள தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகக் கடந்து செல்கின்றன. நடந்து செல்வதற்கும் பாலத்தில் தனி வழி இருக்கிறது. இந்தப் பாலத்தைப் பற்றி ரஃபேல் வினோளி இப்படிச் சொல்கிறார்:
“வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்காகத்தான், பாலங்களின் வழக்கமான வடிவத்தை மாற்றி இப்படிக் கட்டினோம். இயற்கை அழகை நன்றாகப் பார்த்து ரசிப்பதற்கும் இது வாய்ப்பளிக்கிறது.”
இந்தப் பாலம் கட்டுவதற்கு 450 டன் உருக்கு (Steel), 40,000 மீட்டர் வடங்கள் (Cables), 3500 கன மீட்டர் (Cubic metre) சிமிட்டிக் கலவை (Concrete) ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 12 மாதங்களில் இது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இது 2015 டிசம்பரில் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. கட்டுமானச் செலவு ஒரு கோடியே பத்து லட்சம் டாலர் (11 Millon Dollar). இந்தப் பாலம் கட்டுவதற்கு முன்பு மக்கள் படகுகளில்தான் அக்கரைக்குச் சென்று வந்தார்கள்.
ஐன்ஸ்டைன் (Albert Einstein)
உலக வரலாற்றில் மிகப் பெரிய மேதையாக அறியப்படுபவர் ஐன்ஸ்டைன். ஆனால், தான் கண்டுபிடித்த முக்கியமான பல விஷயங்களை மற்றவர்கள் முன்னால் நன்றாக விளக்கிச் சொல்வதற்கு அவரால் முடியாது. உலகப் புகழ் பெற்ற சார்புக் கொள்கை (Theory of Relativity) உட்பட பலவற்றை விஞ்ஞானிகள் முன்னால் விவரிப்பதற்கு, அவர் நண்பர்கள்தான் அவருக்கு உதவினார்கள். அவருக்கு அறிவியலின் மீதான ஈடுபாட்டைப்போல இசையிலும் ஆர்வம் இருந்தது. வயலின் வாசிப்பதில் திறமையுடையவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வயலின் வாசிப்பார். தன் அன்புக்குரிய வயலினுக்கு ‘லினா’ என்று பெயரும் வைத்திருந்தார். அவர் வயலின் வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் அபூர்வமான பல கருத்துகள் அவருக்கு உதித்தன.
ஒருமுறை அவர் தன் நண்பர்களுக்கிடையில் வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து, நகைச்சுவை நடிகர் மோல்நார் (Levente Molnar, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்) சிரித்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஐன்ஸ்டைன் சாந்தமாகக் கேட்டார்: “நான் வயலின் வாசிக்கும்போது நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும்போது நான் அதைப் பார்த்து என்றைக்காவது சிரித்திருக்கிறேனா?”
அதிகம் சாப்பிட்டு இறந்த அதிபர்
அமெரிக்காவின் பன்னிரண்டாவது அதிபர் ஸச்சாரி டைலர் (Zachary Taylor) 1850 இல் இறந்தார். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு பேராசையுடன் சாப்பிட ஆரம்பித்தார். செரி பழங்கள், குளிரவைத்த பால், ஐஸ்கிரீம் என்று பல உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டார். ஏற்கனவே மருத்துவர் அவருக்கு, உங்கள் உணவுப் பழக்கம் சரியில்லை என்று பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் அதிபர் அதில் கவனமாக இல்லை. அன்று இரவு கடும் வயிற்று வலியாலும் வாயுத் தொல்லையாலும் அவர் துன்புற்றார். ஐந்தாம் நாள் இறந்துபோனார்.
பனிக்குழைவு (Iscream) ரோஜாக்கள்
பனிக்குழைவு பல பருமனிலும் வடிவத்திலும் சுவையிலும் கிடைக்கும் என்று நமக்குத் தெரியும். கோப்பை, கூம்பு, குச்சி, பிரமிட் வடிவங்களில் எல்லாம் பனிக்குழைவு கிடைக்கிறது. சிட்னியில் பனிக்குழைவு தயாரிப்பவர்கள், மிகவும் அழகான பூக்களின் வடிவத்தில் உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள். இந்தப் பூக்கள் பணம் கொடுத்தால் உடனே கிடைத்துவிடாது. ஏனென்றால், பனிக்குழைவு பூக்கள் செய்வதற்கு நீண்ட நேரமாகும். இவை நன்றாக விற்கின்றனவாம்!
ஐந்து நோபல் பரிசு பெற்ற குடும்பம்
மேரி க்யூரி (Marie curie) எனும் மேடம் க்யூரி (Madame Curie நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) போலந்து விஞ்ஞானி. புற்றுநோய்போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்கு மிகவும் முக்கியமான கதிரியக்க (Radioactive) மூலகமான ரேடியம் கண்டுபிடித்தவர். நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவர்தான். இவரது குடும்பம்தான் மொத்தம் ஐந்து நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறது. மேரி க்யூரி இயற்பியலுக்கான நோபல் பரிசையும் (1903) வேதியலுக்கான நோபல் பரிசையும் (1911) பெற்றார். அதில் ஒரு பரிசு மேரி க்யூரிக்கும் அவர் கணவர் பியரி க்யூரிக்கும் (Pierre Curie) பகிர்ந்து வழங்கப்பட்டது.
மேரி க்யூரியின் மகள் ஐரின் ஜோலியட் க்யூரியும் (Irene Joliot – Curie) நோபல் பரிசு பெற்றவர் என்று பலருக்கும் தெரியாது. தன் அம்மாவைப்போல இவரும் அறிவியல் மேதையாக விளங்கினார். ரேடியோ கதிர்வீச்சைப் பற்றி ஆராய்ச்சி செய்த இவர் 1935 இல் நோபல் பரிசு பெற்றார். இந்தப் பரிசு, இவரது அம்மாவுக்கு வழங்கப்பட்டதைப்போலவே, ஐரினுக்கும் அவர் கணவர் ஃபிரடெரிக் ஜோலியட் க்யூரிக்கும் (Frederic Joliot – Curie) பகிர்ந்து வழங்கப்பட்டது. இப்படி மொத்தம் ஐந்து நோபல் பரிசுகள்!
தன் குட்டியைத் தின்னும் சிங்கம்
சில சிங்கங்கள் தங்கள் குட்டிகளைத் தின்பதுண்டு. தங்கள் இனத்துக்கு உதவி செய்வதற்காகத்தான் அவை இப்படிச் செய்கின்றன. சிங்கங்கள் குழுவாக இரை தேடி வாழ்பவை. பிறக்கும் குட்டிகள் அனைத்தும் வளர்ந்து பெரிதானால் அந்தக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அப்போது, கிடைக்கும் உணவு முழுதையும் நிறைய சிங்கங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். கொஞ்சம் சிங்கங்கள் மட்டும் இருந்தால் என்ன நடக்கும்? ஒவ்வொன்றுக்கும் அதிக உணவு கிடைக்கும். அவை நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்.
சிங்கம் மட்டுமல்ல, பல உயிரினங்களும் இப்படிச் செய்வதுண்டு. பறவைகளிலும் மீன்களிலும் பூச்சிகளிலும் இப்படிப்பட்டவை இருக்கின்றன.
வெப்பமா குளிர்ச்சியா?
வெப்பத்தையும் குளிர்ச்சியையும் அளப்பதற்கு இன்று தெர்மாமீட்டர்போன்ற கருவிகள் இருக்கின்றன. ஆனால் நெடுங்காலத்துக்கு முன்னால், கையால் தொட்டுப்பார்த்துதான் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு வழி இல்லை.
ஆனால், பெரும்பாலும் கை நம்மை ஏமாற்றும் என்று ஒருவர் நிரூபித்தார். ஜோன் லோக் எனும் அறிஞர் இதற்காக ஒரு பரிசோதனை செய்தார். அவர் என்ன செய்தார் தெரியுமா? இடது கையை சூடான தண்ணீரிலும் வலது கையை குளிர்ச்சியான தண்ணீரிலும் ஒரு நிமிடம் அமிழ்த்தி வைத்தார். அதன் பிறகு மூன்றாவது பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் இரண்டு கைகளையும் அமிழ்த்தினார். அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீருக்கு அதிக வெப்பமோ அதிகக் குளிர்ச்சியோ இல்லை. ஆயினும் லோக், இடது கையில் குளிர்ச்சியையும் வலது கையில் வெப்பத்தையும் உணர்ந்தார்.
வெப்பத்தையும் குளிர்ச்சியையும் அறிவதற்கான நம் உடல் திறன், சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி மாறும்.
பேய்வாய் மீன் (Sarcastic fringehead fish)
இந்த மீன் அமைதிப் பெருங்கடலில் (Pacific ocean) காணப்படுகிறது. பெரும்பாலான நேரமும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் கோபக்கார மீன் இது. இவை ஒன்றுடன் ஒன்று வாயால்தான் சண்டைபோடுகின்றன. அப்படியொன்றும் இந்த மீன் பெரிதாக இருக்காது. முப்பது சென்டிமீட்டர்வரைதான் இதன் நீளம் இருக்கும்.
உலகின் மிகச் சிறிய நதி
அமெரிக்காவிலுள்ள ஒரிகோனில் (Oregon), உலகிலேயே மிகச் சிறிய நதி இருக்கிறது. இதன் நீளம் 130 மீட்டர்தான். டெவில்ஸ் ஏரியில் ஆரம்பித்து அமைதிப் பெருங்கடலில் கலக்கிறது. இதன் பெயரும் மிகச் சிறியதுதான். ‘டி’ (D).
காவலராக எந்திர மனிதன் (Robot)
உலகத்திலேயே முழுமையான போலீஸ் எந்திர மனிதனை துபாய் காவல்துறை தயாரித்திருக்கிறது. பெரியதொரு கூட்டத்துக்காக துபாய் உலக வர்த்தக மையத்துக்கு வந்த விருந்தினர்களை வரவேற்றுப் பாதுகாப்பது தொடர்பான வேலைதான் இந்த ரோபோ போலீஸ் செய்த முதல் வேலை. ஓர் ஆள் உயரமும் நூறு கிலோ எடையும் கொண்டது இது. மனிதர்களின் முகபாவங்களையும் சைகைகளையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்படும். சாலைகளில் தனியே சுற்றிவரவும், சந்தேகத்திற்குரிய விஷயங்களைப் பற்றி மேலதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பவும் இதற்குத் தெரியும். துபாயில் நிறைய ரோபோ போலீஸ்கள் வரவிருக்கின்றன.

Related posts

Leave a Comment