You are here
மற்றவை 

குட்டி அலை

மலையாள நெடுங்கதை

டாக்டர் கே. ஸ்ரீகுமார்
தமிழில்: யூமா வாசுகி

“செல்ல மகனே, கொஞ்சம் சீக்கிரம் வாடா.
ஒன்னப் பாக்காம இந்த அம்மா நெஞ்சு வலிக்குதுடா…”

1
“மகனே, கொஞ்சம் பாத்து மெதுவாப் போ… நானும் ஒன்னோட வர்றேன்…”
“ரொம்ப தூரத்துக்குப் போகாதடான்னு சொன்னா கேக்குறானா இவன்? சொல்லிச் சொல்லி என் தொண்டத்தண்ணியே வத்திப்போச்சி. செல்லங்குடுத்து செல்லங்குடுத்து குறும்புத்தனம் ரொம்ப அதிகமாப்போச்சி இவனுக்கு. ஒத்தப் புள்ளயா இருந்தாலும் கண்டிச்சி வளக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க. இங்கே வாடான்னு சொன்னா, இவன் நேரா அங்கே போவான். சொல்பேச்சே கேக்கறதில்ல…”
அம்மா அலைக்கு ஒரே சலிப்பு.

குட்டி அலை எதையும் பொருட்படுத்தாமல் குட்டிக்கரணம் போட்டு ஆடிப் பாடிப் போய்க்கொண்டிருந்தது.
“இப்ப ரொம்ப தூரத்துல ஒரு மின்னல் பொட்டுபோலத் தெரியிறான் அவன். என்னதான் சொன்னாலும் கொஞ்சங்கூட காது குடுத்துக் கேக்கமாட்டான். பக்கத்துல எங்கயாச்சும் அம்மாக்காரி இருக்காளான்னு திரும்பிக்கூடப் பாக்கமாட்டான். என்ன நெனச்சிக்கிட்டு அவன் இப்டியெல்லாம் செய்றான்னு தெரீல! பெரியவங்க சொல்றத மதிக்கிறதே இல்ல. ஏன் இவன் இப்டி இருக்கான். புள்ளயாப் பொறந்ததுக, யாருக்காச்சும் கொஞ்சமாவது பயப்படவேண்டாமா? இவனோட அப்பா என்னடான்னா, ராப்பகலா அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சிக்கிட்டிருக்காரு. என்னமோ இந்த ஒலகத்தையே தான்தான் சுமக்குறதுபோல நெனப்பு அவருக்கு. அவருக்குப் பிடிக்காததுபோல ஏதாவது சொல்லிட்டோம்னா ஒடனே அவருக்கு மூக்குமேல கோவம் வந்துடும்!”

தன் கால்கள் மிகவும் சோர்ந்து போனதால் ஓட்டத்தை நிறுத்தியது அம்மா அலை. ஓரமாகச் சற்று நேரம் உட்கார விரும்பியது. “அந்தக் குறும்புக்கார குட்டி அலை இப்ப கண்ணுக்கே தெரீலயே!”

“ஆமா, அவனோட வால் மாதிரி எப்பவும் அவங்கூடவே இருக்கணும்கிற அவசியமில்ல. நாளுக்குநாள் அவனும் வளந்துக்கிட்டிருக்கான் இல்லையா? அவனோட கை வளருதா, கால் வளருதான்னு எப்பவும் உத்து உத்துப் பாத்துக்கிட்டிருப்பேன். புள்ளைங்க வளந்து வர்றத பக்கத்துல இருந்து பாக்கறது எந்த அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கும். அவ்ளோ சந்தோஷப்படுறதுக்கு அதுல என்ன இருக்குன்னு கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியாது. அம்மாக்களுக்கெல்லாம் இதெல்லாம் சொல்லாமலேயே தெரியும். அம்மாவா ஆகாதவங்களுக்கு எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் புரியாது. எப்டியோ இருக்கட்டும். அம்மா ஆவது ரொம்பப் பெரிய விஷயம்தான்!”
அம்மா அலை கால்களை நீட்டி அமர்ந்தது. அதன் கண்கள் மெல்ல மூடத் தொடங்கின. ஏராளமான குட்டி அலைகள் சிரித்துக் கும்மாளம்போட்டபடி அம்மா அலையைச் சுற்றிலும் வந்து கூடின.

“இந்தப் புள்ளைங்கள இப்டி பாத்துக்கிட்டிருக்கிறது மனசுக்கு எவ்ளோ நிறைவா இருக்கு! மனசுல எவ்ளோதான் கவலைக இருக்கட்டுமே, குட்டி அலைகளப் பாக்குறபோது எல்லாக் கவலைகளும் ஒடனே மறைஞ்சுடும். கிக்கி பிக்கின்னு இதுக சிரிக்கிற சிரிப்பும் வெளயாட்டும் சின்னச் சின்ன வாலுத்தனமும் இதுக சண்டை போட்டுக்கிறதும்…”

“இந்தக் குட்டி அலை இருக்கானே, அவன் சில சமயம் எந்த வேலையும் செய்யவிடமாட்டான். ரொம்பப் புடிவாதம் புடிச்சிக்கிட்டு ரகள பண்ணிடுவான். இவன் பண்ணுற கலாட்டாவுல எனக்குத் தலைவலியே வந்துடும். அந்த நேரத்துக் கோவத்துல வாயில வந்ததைச் சொல்லி திட்டிருக்கேன். ராத்திரில என் நெஞ்சோட சேர்ந்து இவன் களைப்பா தூங்குறதைப் பாக்கும்போது… அவனக் கட்டிப்புடிச்சி அழுத்தமா ஒரு முத்தங் குடுக்கும்போது… எங் கண்ணுல தண்ணி வந்துடும்…”

கண்ணீர் வழியும் தன் முகத்தை உப்புத் தண்ணீரால் கழுவிக்கொண்டது அம்மா அலை. அதற்கு மிகவும் களைப்பாக இருந்தது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தது. குட்டி அலை இருக்கும் இடமே தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை அதைக் காணவில்லை.
“எங்க போனாலும் அவனையும் அழைச்சிக்கிட்டுப் போகமுடியுமா? இந்த ஒலகத்தைப் பத்தி அவனாவே தெரிஞ்சிக்கவேண்டாமா? அம்மாவோட முந்தானயப் பிடிச்சிக்கிட்டே திரிஞ்சா எல்லாரும் கேலி பேசமாட்டாங்க? அதெல்லாம் வேணாம். நாளைக்கி அவன் ஒரு பெரிய அலையா வளந்துடுவான். கடலோட மார்பு மேல நெஞ்ச விரிச்சிக்கிட்டு கம்பீரமா உருண்டு போற ஒரு ஆண் அலையா வளந்துடுவான். அப்ப இந்த ஓரத்துல ஒக்காந்து, அதோ என் மகன் போறான்னு பாத்து நான் சந்தோஷப்படணும். இப்ப என்னன்னா, அடிக்கடி எனக்கு ஒடம்புக்கு முடியாமப்போயிடுது. இன்னைக்கோ நாளைக்கோன்னு கொஞ்சம் பயமாக்கூட இருக்கு. இனிமே எல்லாத்தையும் பாக்கவேண்டியது அவன்தான்.”
அம்மா அலை, ஒவ்வொன்றையும் நினைத்துப்பார்த்து பெருமூச்சுவிட்டது. அப்போது குளிர் காற்று அதன் இமைகளை மெல்லத் தடவியது. அம்மா அலை அப்படியே தூங்கிவிட்டது.
2
“அய்யய்யோ! எவ்ளோ நேரம் தூங்கிட்டேன், பாருங்க! அம்மா தூங்கிட்டாங்கன்னா அவங்களுக்கு இடி இடிச்சாலும் கேக்காது, மின்னலடிச்சாலும் தெரியாதுன்னு என் மகன் சொல்லுவான். அவன் சொல்றது சரிதான். அதுக்காக வேற யாரும் இப்டி என்னைக் கேலிபண்ண வேணாம். ஒடம்புல தெம்பு இருந்தப்ப எப்பவும் விடியறதுக்கு முன்னாலேயே எழுந்துடுவேன். எந்தக் காலத்துலயும் ஒரு நாள்கூட தவறுனதில்ல. இப்ப வயசாயிடுச்சில்ல?”

“மனசால நெனக்கிற அளவுக்கு ஒடம்பால வேல செய்ய முடியல. இப்பயாவது எனக்கு முழிப்பு வந்தது நல்லதுதான்.”
அம்மா அலை, கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டது. அதன் கண்களில் இப்போதும் தூக்கக் கலக்கம் இருந்தது. கண்களைத் திறந்து வைத்தபடியே நிறையத் தடவை கழுவிக்கொண்டது.

“என் மகன் இன்னும் வரலியே! அலைகள்லாம் உருண்டு புரண்டு இந்தப் பக்கமா வந்துக்கிட்டிருக்காங்க. அந்த அலைக் கூட்டத்துல அவனும் இருப்பானோ? அவன் இன்னும் சின்னப் பையன்தான. சத்தம் போட்டுக்கிட்டு ஆர்ப்பாட்டமா வர்ற அளவுக்கு அவனுக்கு வயசு வரலியே. அவனுக்குப் பிஞ்சு ஒடம்பு… கொஞ்சம் அழுத்தமாப் பிடிச்சாலே வலியால அழுதுடுவான்… அந்தளவுக்கு கைகாலெல்லாம் பலவீனமா இருக்கும் அவனுக்கு… நீந்தி நீந்தி களைச்சிப்போயிருப்பான் என் மகன். செல்ல மகனே, கொஞ்சம் சீக்கிரமா வாடா. ஒன்னப் பாக்காம இந்த அம்மாவோட நெஞ்சு வலிக்குதுடா…”

அம்மா அலை தன் மனதில் நினைத்ததை கொஞ்சம் உரக்க வாய்விட்டே சொல்லிவிட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற, பழக்கப்பட்ட ஓர் அலைக்கு அது கேட்டுவிட்டது. அது, அம்மா அலையைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தது. அம்மா அலைக்குக் கோபம் வந்துவிட்டது.
“அந்த அலை ஏன் என்னைப் பாத்து அப்டிச் சிரிச்சான். ஏன் அவன் சிரிக்கக் கூடாதா? அவன் சிரிச்சா ஒனக்கு என்னான்னு கேப்பீங்கதான? சிரிக்கட்டும், சிரிக்கட்டும். சிரிக்கவேண்டாம்னு இப்ப யாரு சொன்னாங்க? ஆனா, இந்தச் சிரிப்பு அப்டியொன்னும் சாதாரணச் சிரிப்பு இல்ல. அதெல்லாம் எனக்கும் தெரியும். நானும் இந்த ஒலகத்துல எவ்வளவோ பாத்துருக்கேன்! அந்த சிரிப்போட அர்த்தம் என்னா தெரியுமா? ‘ரொம்பத்தான் ஒம் மகன இந்தக் கொஞ்சு கொஞ்சுறியே’ அப்டீங்கறதுதான். நான் அவன ஆச ஆசயாக் கொஞ்சுவேன். முத்தங் குடுப்பேன். இதனால யாருக்கு என்னா நஷ்டம் வரப்போவுது? என் மகன், தங்கமான மகன், செல்லமான மகன், சக்கரக் குட்டி…!”

இப்போது குட்டி அலை பக்கத்தில் இருந்திருந்தால் அம்மா அலை முத்தம் கொடுத்தே அதைத் திணறச்செய்திருக்கும். அதை அப்படியே சாக்கலேட்போல கடித்துத் தின்னவேண்டும் எனும் அளவுக்கு அதன் மேல் அம்மா அலைக்கு பாசம் பெருகுகிறது. அதன் கண்கள் மீண்டும் கண்ணீரால் நனைந்தன.

“அந்த அலை என்னப் பாத்து சிரிச்சிட்டுப் போறானே, அந்த சிரிப்புக்குப் பின்னால ஒரு கத இருக்கு. குட்டி அலையோட அப்பாவுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச கத அது. குட்டி அலைக்குத் தெரியாது. அவனுக்குச் சொல்லல. எப்பவுமே அதச் சொல்லவும் மாட்டோம். அதத் தெரிஞ்சிக்கிட்டா அவன் மனசு ரொம்ப வேதனப்படும். அவன் வருத்தப்படுறதப் பாத்தா எங்க நெஞ்சே வெடிச்சிடும். என் மகன் கிட்ட, நிலா உதிக்கிறதப்போல ஒரு சிரிப்பு இருக்கு. அந்த மொகம் எப்பவும் நிலாப்போல பிரகாசமா குளிர்ச்சியா இருக்கணும். துயரத்தோட நெழல் அந்த மொகத்துல எப்பவுமே பட வேணாம். அவன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்கிறதுக்குத்தான நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்.”

அம்மா அலை பெருமூச்சுவிட்டது. அது, குட்டி அலையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் பிறகு அதற்கு எப்படித் தூக்கம் வரும்? சற்று நேரத்துக்குப் பிறகு அம்மா அலை மறுபடியும் சொல்ல ஆரம்பித்தது.

“அது ஒரு காலம்! நாங்க இளமையா இருந்தோம். சக்தியோடவும் சுறுசுறுப்போடவும் இருந்தோம். விடியறதுக்கு முன்னாலயே எழுந்துடுவோம். எந்த இடத்துக்குப் போறோம் எந்த இடத்துக்கு வர்றோம்னு தெரியாம, ஒரு நோக்கமும் இல்லாம அப்டியே அலைஞ்சிக்கிட்டிருப்போம். என் கணவர் கையைப் புடிச்சிக்கிட்டு, அவரோட நிழல்போலவே அவர்கூட போய்க்கிட்டிருப்பேன்… அதயெல்லாம் நெனச்சிப்பாக்கும்போது இப்பவும் கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு. அலைக் கூட்டங்களுக்கு நடுவுல திமிறிக்கிட்டு நாங்க ஓடுற ஓட்டத்தப் பாக்கணுமே! அவ்ளோ அருமையா இருக்கும். அவ்ளோ கொண்டாட்டமா நாங்க ஓடிச்சாடிப் போவோம். எவ்ளோ தூரம் போனாலும் என் கணவர் இன்னும் போவோம், இன்னும் போவோம்னு கூப்புடுவாரு. ஓடி ஓடி கால் வலியெடுத்தாலும் ஓட்டத்த நிறுத்தமாட்டாரு.”

அம்மா அலையின் முகம் வெட்கத்தால் சிவந்தது. அதன் களைப்பெல்லாம் விரைவிலேயே எங்கோ ஓடி மறைந்தது. தான் மீண்டும் இளமையாகிவிட்டதைப்போல அதற்குத் தோன்றியது.
3
“அந்த நேரத்துல… நான் என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? மறந்துபோச்சி. ஓ, ஆமா, நாடோடிக மாதிரி நாங்க அப்டி சுத்தி அலைந்த காலம். குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சிக்கிட்டு குட்டி அலைக எங்கள வந்து சூழ்ந்துக்குவாங்க. அவங்களப் பாத்தா எனக்கு என்னமோ ரொம்ப சோகமா இருக்கும். கொழந்தைங்களப் பாத்தா ஏன் சோகப்படணும்னு நீங்க கேக்கலாம். எனக்கு சோகமாத்தான் இருக்கும். அதுக்குக் காரணம் இருக்கு. மடியில வச்சிக் கொஞ்சறதுக்கு எனக்கு அவளங்களப்போல ஒரு கொழந்த இல்லயே. இத நெனச்சி நெனச்சி அழுவேன். அழுது அழுது கண்ணீரே வத்திப்போகும். ஏன் எனக்கு ஒரு கொழந்தயக் கொடுக்கலேன்னு நான் கடலம்மா கிட்ட சண்டைபோடுவேன்.”
அம்மா அலையின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அதன் முகம் சூடான கண்ணீரால் நனைந்தது. தொலைவே பார்த்துக்கொண்டே அம்மா அலை தொடர்ந்து சொன்னது:

“கடலம்மா அவ்ளோ கருணையில்லாதவ ஒன்னுங் கிடையாது. நான் அழுதுகிட்டும் புலம்பிக்கிட்டுமே இருந்தேன். இப்டி கொஞ்சம் நாள் போனவுடனே எனக்கும் கிடைச்சிது ஒரு அற்புதமான கொழந்த! கர்ப்பிணியாகி, வயிறு பெருத்து, பத்து மாதம் சொமந்து நான் அவனப் பெத்தெடுக்கல.”

“ஆனாலும் என் உசுரோட உசுரு அவன். இல்ல, அதவிட மேலானவன். அவன விட்டுப் பிரிஞ்சி ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாமப்போயிடுச்சி. அவனும் எப்பவுமே என்னோடவே ஒட்டிக்கிட்டிருப்பான். நகமும் சதையும்போலன்னு சொல்லுவாங்கல்ல, அது மாதிரித்தான்…”
அம்மா அலையின் தாய் மனதில் கனிவு சுரந்தது. கண்களை மூடினாலும் திறந்தாலும் முன்னால் குட்டி அலைதான் தெரிந்தது. பால்போலச் சிரிக்கும் அந்தக் குருத்து முகம்தான் தெரிந்தது.

“என் கணவரான ஆண் அலையுடன் வழக்கம்போல மெதந்து நடந்துக்கிட்டிருந்தேன். அப்பத்தான் சட்டுன்னு அதப் பாத்தேன். இல்ல, நான் பாக்கல, எனக்குக் கண்ணு அவ்வளவாத் தெரியாது. என் கணவர்தான் பாத்தாரு. கொந்தளிச்சி ஆர்ப்பரிக்கிற கடலுக்கு நடுவுல நிராதரவா நிக்கிறான், ஒரு குட்டி அலை! பெரிய பெரிய அலைகளுக்கு நடுவுல பயந்து நடுங்கிக்கிட்டு பாவமா நின்னுக்கிட்டிருந்தான். அந்தப் பிஞ்சு மொகத்துல வேதன தெரிஞ்சது. அவனோட சின்னக் கண்கள்ல கண்ணீர். அடடா, யாரு பெத்த புள்ளயோ தெரீலயே. எங்கள முழிச்சி முழிச்சிப் பாத்து துயரமா ஒதட்டப் பிதுக்குறான். தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டு ஆசையா ஒரு முத்தங் குடுக்கணும்னு தோனுச்சி எனக்கு. இவங்க நம்மளத் தொந்தரவு செய்யமாட்டாங்கன்னு அவனுக்குப் புரிஞ்சிருக்கும்போல. என்னைப் பாத்து நைசா சிரிச்சான். வச்ச கண்ணு வாங்காம நான் அந்த மொகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்.”

நிறைய அலைகள் கடந்து சென்ற பிறகும் அம்மா அலை எழுந்திருக்கவில்லை. அந்த மனதில் பழைய நினைவுகளெல்லாம் அலை அலையாக வந்து மோதின.

“அப்பா அலையோ, அம்மா அலையோ, சொந்தக்கார அலைகளோ யாருமே இல்லாத ஒரு குட்டி அலை அவன். அவன வாரியெடுத்து அவனோட கண்ணீரத் தொடச்சி, என் கையில கொடுத்தாரு என் கணவர்.”
“அதுக்கு அப்பறம் நான் அவனுக்காகத்தான் வாழ்ந்துகிட்டிருக்கேன். தரையில வச்சா எறும்பு கடிக்குமோ, தலையில சொமந்தா பேன் கடிக்குமோன்னு ஒரு பழமொழி இருக்கு. அது மாதிரித்தான் நான் அவன எப்பவும் என் கண்ணுக்குள்ள வச்சிப் பாதுகாத்தேன். எப்பவும் அவன் விஷயத்தைத்தான் கவனிச்சிப் பாத்துக்கிட்டேன். அவனப் பத்தியே நெனச்சிக்கிட்டிருந்தேன். அவனோட மழலைப் பேச்சையும் சிரிப்பையும் சிணுங்கலையும் விளயாட்டையும் பாத்துக்கிட்டிருக்கும்போது நாள் ஓடுறதே தெரியாது. இந்தப் பக்கம் நான், அந்தப் பக்கம் என் கணவர், நடுவுல குட்டி அலை. இப்டி நாங்க மூணுபேரும் மெதந்து போறப்ப, இந்த ஒலகத்துலேயே பெரிய அதிர்ஷ்டக்காரி நான்தான்னு தோனும்.”
கடலம்மாவுக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னது அம்மா அலை. குட்டி அலை பக்கத்தில் இருப்பதால்தானே வாழ்க்கை இவ்வளவு நன்றாக இருக்கிறது? ஆமாம், ஆமாம் என்று நூறு முறை சொல்லவேண்டும் என்று அம்மா அலைக்குத் தோன்றியது.
4
“என் மகனப் பத்திப் பேச ஆரம்பிச்சா போதும். நான் நாள்கணக்கா சொல்லிக்கிட்டிருப்பேன். எல்லா அம்மாவும் இப்டித்தான இருப்பாங்க. காக்காவுக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு பெரியவங்க சொல்வாங்க. இந்தக் கடல்லேயே ரொம்ப அழகானவன், ரொம்பக் கெட்டிக்காரன் யார் தெரியுமா? என் மகன்தான். ஒங்களுக்கு ஆச்சரியமா இருக்கா? இப்ப அவன், முன்ன இருந்த மாதிரி குட்டிப் பையன் இல்ல. நல்ல புத்திசாலிப் பையனா வளந்துட்டான். இந்த விஷயத்துல நான் என் கணவர்கிட்ட அடிக்கடி சண்டைபோடுவேன். அவனோட தெளிவான அழகு மொகத்தப் பாத்துக்கிட்டிருக்கும்போது அவர் சொல்வாரு, ‘பாத்தியா இவன. என்னப்போலவே இருக்கான் பாரு. இவன் என் அருமை மகன்தான்.’ நானா விட்டுக்கொடுப்பேன், நான் ஒடனே பதில் சொல்வேன், யாரும் எம்புள்ளய சொந்தங் கொண்டாட வேணாம்னு. அப்பறம் குட்டி அலை எதுக்காச்சும் அடம்புடிச்சி அழுகுறப்ப அவர் சொல்வாரு, ‘பாத்தியா இவன. ஒன்னோட குணம் அப்டியே இவங்கிட்ட இருக்கு!’ இது என்ன கூத்து! நல்லது எல்லாம் அவர் பக்கம், கெட்டது எல்லாம் என் பக்கமாம். எப்டியிருந்தாலும், என் மகன்கிட்ட இருக்கிற நல்லதையும் கெட்டதையும் சேத்துதான் அவன நான் விரும்பறேன்.”
குட்டி அலையைப் பார்க்கவேண்டும் என்று அம்மா அலைக்கு மிகவும் தவிப்பாக இருந்தது. மிதந்து வந்துகொண்டிருக்கும் அலைக் கூட்டங்கள் எவற்றிலும் குட்டி அலை இல்லை.
“எங்காவது போய் குட்டிக்கரணம்போட்டு விளயாடிக்கிட்டிருப்பான், வாலுப் பயல்! இப்ப அனுக்கு ஒரு புது கூட்டாளி கிடைச்சிருக்கா. ஒரு நாள் சோம்பலா கரைக்குப் பக்கத்துல சுருண்டு படுத்திருந்தப்பதான் அது நடந்துச்சி! ஒரு சின்னப் பொண்ணு, ஈர மணல்ல மண்ணுல விரலால ஏதோ எழுதிக்கிட்டிருந்தா. தலமுடிய ரெண்டா வகுந்து, ஆகாச நீல நிறத்துல ரிப்பன் கட்டுன சின்னப் பொண்ணு. நீல நிற பட்டுப் பாவாடை ஈர மணல்ல பட்டு நனஞ்சிருந்தது. முதல்முறை பாத்தபோதே அவனுக்கு அவள ரொம்பப் பிடிச்சிப்போச்சி. ஒடனே அவன் அந்த சின்னப் பொண்ணு பக்கத்துல ஓடிப் போனான். இது தெரியாம, எழுதறதிலேயே கவனமா இருந்தா அந்தப் பொண்ணு. அவளோட காலை மோதி ஒரசிக்கிட்டு நின்னு அவன் அதைப் படிச்சிப்பாத்தான். ‘கடலம்மா திருடி!’ – கடைசி எழுத்த எழுதிக்கிட்டிருந்தா அவ. குறும்புக்காரப் பையனுக்கு ரொம்பக் கோவம் வந்துடுச்சி!”

“‘என்னா திமிர் இவளுக்கு! கடலம்மாவப்போய் திருடின்னு சொல்றாளே! இப்டிச் சொல்ல இவளுக்கு என்னா உரிமை இருக்கு?’ அவன் கோவத்தோட முனகிக்கிட்டு ரொண்டு வாட்டி அப்டியே சுழன்று வந்தான். அப்ப என்னா நடந்துச்சி தெரியுமா? மணல்ல ஒரு எழுத்துக்கூட இல்ல. கடலுமில்ல, திருடியுமில்ல! குட்டி அலை அந்த வார்த்தைகள அழிச்சிட்டான்.”

“தூரத்துலேர்ந்து நான் இதயெல்லாம் பாத்துக்கிட்டிருந்தேன். இந்தப் போக்கிரிப் பையன் ஏதோ குறும்புத்தனம் செய்யிறான்போலிருக்குன்னு நெனச்சேன். ஆனா, அந்த சிறுமி இருக்காளே, அவ விளயாட்ட வினையா எடுத்துக்கிட்டா. அவ ஏங்கி அழுதுகிட்டு, துள்ளி எழுந்திருச்சா. எழுத்துக்கள அழிச்ச குட்டி அலை மேல ரொம்பக் கோவம் அவளுக்கு. அந்த நேரத்துல அவ மொகத்தப் பாக்குறதுக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சி. அதப் பாத்தவுடனே அவனுக்கு வருத்தம். அடப் பாவமே, இவகிட்டபோயி நாம இப்டி நடந்துகிட்டமேன்னு கவலப்பட்டான். அழுது அழுது அவளோட சின்ன முகம் வாடிப்போச்சி. கண்ணு கலங்கி மூக்கும் மொகமும் நல்லா செவந்துபோச்சி. அவளோட அப்பாவும் அம்மாவும் பக்கத்துல வந்து, ‘பரவால்ல குட்டிப்பொண்ணு, நீ அழாத’ அப்டின்னு சமாதானப்படுத்துனாங்க.”

“அப்பத்தான் குட்டி அலைக்கு, அவ பேரு குட்டிப்பொண்ணுங்கிறது தெரிஞ்சது. ரெண்டு மூனு நாளா அதப் பத்தியே கவலப்பட்டான். என்னோட அவனப் படுக்க வச்சி கட்டிப்புடிச்சிக்கிட்டு, அன்னக்கி நான் சொன்னது நல்லா ஞாபகமிருக்கு.”

“‘நீ ஒன்னும் வருத்தப்படாதே மகனே. அவளோட கோவம் எல்லாம் சீக்கிரம் போயிடும்.’ அந்த நேரத்துல வாயில வந்த வார்த்தைகள நான் சொன்னேன், அவ்ளோதான். தற்செயலா அது அப்டியே பலிச்சிடுச்சி. குட்டி அலை மீண்டும் குட்டிப்பொண்ணைப் பாத்தான். அவங்க சீக்கிரமே கூட்டாளிகளாயிட்டாங்க. அவள் எப்பவும் மாலை நேரம் கடற்கரைக்கு வருவா. குட்டி அலை எப்பவும் அவளையே சுத்திக்கிட்டிருப்பான். ‘ஜாடிக்கேத்த மூடிதான்’ – அவங்க ரெண்டுபேரும் சேந்து விளயாடறதைப் பாக்கும்போது அப்டிதான் எனக்குத் தோணும். விளயாடட்டும். சந்தோஷமா சிரிச்சிக் கும்மாளம்போடட்டும். ரெண்டுபேர் மொகமும் எப்பவும் ரொம்ப மலர்ச்சியா இருக்கில்ல. இதுதான் எனக்கு வேணும்.”
ஒவ்வொரு விஷயங்களையும் நினைத்துப்பார்க்கும்போது அம்மா அலைக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சுவையான நினைவுகளுக்கு நடுவில் ஒரு கெட்ட நினைவும் வந்துவிட்டதோ? அம்மா அலையின் மனது துடித்தது.

5
“ஆகாயம் கருங்கும்முன்னு மூடிக்கிட்டிருந்த ஒரு நாள்லதான் அது நடந்தது. எனக்கு வயசாக ஆரம்பிச்சுடுச்சில்ல, அதனால ஒடம்புக்கு முடியாம இருந்தேன். பொழுது இருட்டிக்கிட்டு வருது. அப்பவும் என் மகனக் காணல. ஆகாசமும் ஒரே மேகமூட்டமாக் கெடக்கு, காத்தும் ரொம்பப் பலமா வீசுது. நான் ரொம்பப் பயந்துட்டேன். அவன் எங்கதான் போனாலும் வீடு திரும்பறதுக்கு இவ்ளோ நேரமாகாது. கடலம்மாவ நெனச்சி வேண்டிக்கிட்டே கொஞ்சம் நேரம் அப்டியே படுத்துக் கிடந்தேன். ஆனாலுமே என்னால நிம்மதியா இருக்க முடியல. அந்த நேரமே நான் என் மகனத் தேடிப் பொறப்பட்டேன். நேரம் போறது தெரியாம அந்தக் குட்டிப்பொண்ணோட விளயாடிக்கிட்டிருப்பான்னு நெனச்சேன். தாங்க முடியாத முதுகு வலி எனக்கு. சமாளிச்சிக்கிட்டு தட்டுத்தடுமாறி கரைக்கு வந்தேன். அங்க, ஒரு ஈ காக்காவக்கூட காணல.”
“என்னைக்கோ நடந்தத இப்ப நெனக்கிறபோதே எனக்கு நெஞ்சு ரொம்ப கனத்துப்போவுது. அப்டீன்னா, சம்பவம் நடக்கும்போது எனக்கு எப்டி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க. பயம் பதட்டத்தோட அன்னைக்கு எவ்ளோ நேரம் காத்துக்கிட்டிருந்தேன்! என்னத்தச் சொல்றது, நமக்கு வர்ற கஷ்ட நஷ்டங்கள நாமதான அனுபவிச்சித் தீக்கணும்.”

“அப்பறம், எங்கபோயி இவனத் தேடுறது, யார்கிட்ட விசாரிக்கிறதுன்னு தெரியாம கால்போன போக்குல அலைஞ்சேன். கடல்ல நின்னு கூவிப்பாத்தேன். கடலோரத்துலயும் நடுக் கடல்லயும்கூட அழுதுகிட்டே அவனத் தேடுனேன். பார்வையில் பட்ட இடத்துக்கெல்லாம் போய் தவிச்சித் தேடுனேன். என்ன பிரயோசனம்? ஒன்னுமில்ல. கண்ணு வலியெடுத்ததுதான் மிச்சம். முகுது வலியையும், முடியாத என் ஒடம்பு நெலமையையும் மறந்து, சின்ன வயசுக்காரியைப்போல ஓடி ஓடித் தேடுனேன். காலு ரெண்டும் இத்துப்போனாப்ல கடுகடுன்னு வலி.”
“அப்பத்தான், ஒன்னுந் தெரியாத அப்பாவியா என் கணவர் வர்றாரு. நான் விஷயத்தச் சொன்னதுமே அவருக்கும் ரொம்பப் பதற்றம். நாங்க ரெண்டு பேரும் சேந்துபோயி எங்க கொழந்தயத் தேடி அலைஞ்சோம். வேற வேற வழில பிரிஞ்சி போயும் தேடுனோம். நான் தாங்க முடியாத துக்கத்தோட அவனக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கதறுனேன்…”

அம்மா அலைக்குப் பேச்சு வரவில்லை. அதன் வார்த்தைகள் குழறின. அன்றைக்கு நடந்ததெல்லாம் அப்படியே கண் முன்னால் தெரிவதுபோன்றே தோன்றியது. கண்களைத் துடைத்துக்கொண்டு அம்மா அலை பேசியது.
“நான் கத்திக் கதறித் துவண்டுபோய் அப்டியே படுத்துக் கிடந்தப்பதான், என் கணவர் அந்தக் காட்சியப் பாத்தாரு. ஒடனே எங்கிட்டச் சொன்னாரு. நானும் பாத்தேன். அதோ, தூரத்துல, குட்டி அலையோட சின்ன முகம்! அவனப் பாத்த அந்த நொடியிலயே என் மனசுல சந்தோஷம் பொங்கிப் பொங்கிப் பெருகுது. என் மகன் மேல ஒக்காந்து கடல் காட்சியெல்லாம் பாத்து ரசிச்சிக்கிட்டு அந்தக் குட்டிப்பொண்ணும் வர்றா. ரெண்டு பேரும் கும்மாளம்போட்டுக்கிட்டு கிலுகிலுன்னு சிரிச்சிக்கிட்டு வர்றாங்க. அப்பதான் என்னால சரியா மூச்சுவிட முடிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் இவ்ளோ சந்தோஷமா விளயாடறாங்களே, எங்களப் பாத்தா தயக்கப்படுவாங்கன்னு நானும் என் கணவரும் கொஞ்சம் மறைவா நின்னுக்கிட்டோம்.”

“அவங்க ரெண்டு பேரும் ஒன்னாப் போறத, பின்னால நின்னு நாங்க மனங்குளிரப் பாத்தோம். சின்னப் பொண்ணைக் கரையில இறக்கிவிட்டுட்டு குட்டி அலை சீக்கிரம் திரும்பி வந்தான். நான் என்னா செஞ்சேன் தெரியுமா? அவனக் கட்டிப்பிடிச்சி ஒரு முத்தம்.”

“அடடா, ரொம்ப நேரம் ஆச்சே! என் மகன இன்னும் காணலியே. அந்தக் காலத்துல செய்ததுபோல இப்பவும் ஏதாச்சிம் வாலுத்தனம் காட்டிட்டானா? இந்த வயசான அம்மாவ இந்தப் பாடு படுத்திவைக்கிறானே இவன். அவன் கெட்டிக்காரன்தான், தன்னைத்தானே பாத்துக்குவான்னு எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த அம்மாவுக்கு நீ இப்பவும் சின்னக் கொழந்ததானடா, மகனே. ஒன்னப் பாக்கலேன்னா என் நெஞ்சுல நெருப்பு அள்ளி வச்சதுபோல இருக்குடா…”

அந்த நேரத்தில் தூரத்தில் ஒரு அலைக் கூட்டம் வருவதுபோலத் தெரிந்தது. அதிலிருந்து உரத்த சிரிப்புக் குரல் ஒன்று கேட்டது. அது, அந்தக் குட்டி அலையின் சிரிப்புதான். ஆயிரம் பூ மலர்வதுபோல அப்படியே மலர்ந்தது அம்மா அலையின் முகம். தோழமை அலைகளின் மீது ஏறிக்கொண்டு ஓர் இளவரசனைப்போல குட்டி அலை வந்துகொண்டிருந்தது! அதற்கு முத்தம் கொடுத்து கொஞ்சுவதற்காக அம்மா அலை காத்துக்கொண்டிருந்தது…
சித்திரங்கள்: vega features
நன்றி: டிசி புக்ஸ்

Related posts

Leave a Comment