You are here

கண்ணுக்குத் தெரியாத எல்லைகள்

டி. ஆர். ரமணன்

பறவைகளுக்கு இறக்கைகள் உள்ளன. அவற்றால் பறக்க முடியும். ஆனால், எல்லாப் பறவைகளும் எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லையே, ஏன்?
ஒவ்வொரு பறவைக்கும் (ஒவ்வோர் உயிரினத்துக்கும்) இந்த உலகத்தில் அதற்கான குறிப்பிட்ட இடம் உண்டு. சில உயிரினங்கள் காட்டில் இருக்கும். சில வயல்களில் இருக்கும். சில சமவெளிகளில் இருக்கும். சில கடற்கரையில் இருக்கும். இவற்றுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஓர் எல்லை உண்டு.

ஏறத்தாழ 8600 – க்கும் அதிகமான இனங்களைச் (Species) சேர்ந்த பறவைகள் உள்ளன. ஐந்து சென்டிமீட்டர் மட்டும் நீளமுள்ள ஹம்மிங் பறவை முதல், இரண்டு மீட்டருக்கும் அதிக உயரமுள்ள நெருப்புக் கோழிவரை இதில் உட்பட்டவை. வட துருவத்திலிருந்து வெப்பமண்டலப் பிரதேசம்வரை உலகத்தின் எல்லா இடங்களிலும் பறவைகளைக் காணலாம்.

பெரும்பாலான பறவைகள் ஓர் இடத்தில் நிலையாக வாழ்கின்றன. பறவைகளில், தனியாக வாழ்பவை – கூட்டமாக வாழ்பவை எனும் பிரிவுகள் உண்டு. வலசை போகும் பறவைகள், குளிர்காலத்தில் வெப்பப் பகுதிகளை நோக்கிக் கூட்டமாகப் பறந்து வருகின்றன. வெப்பப் பகுதிகளில் முட்டையிட்டு, குஞ்சுகளை வளர்த்த பிறகு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்கின்றன.

ஒரு மரம்கொத்திப் பறவையைப் பாருங்கள். மரத்திலிருந்து புழு பூச்சிகளையும் எறும்புகளையும் தன் பலம் வாய்ந்த அலகால் கொத்தி எடுத்துத் தன் உடலில் உரசிய பிறகே அவற்றைத் தின்னும். தான் பிடித்த எறும்புகளை உடனே விழுங்காமல் ஏன் தன் உடலில் உரசுகிறது? எறும்புகளில் உள்ள அமிலத்தைப் பயன்படுத்தித் தன் இறகுகளுக்கு இடையிலிருக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதற்குத்தான் அது இவ்வாறு செய்கிறது.
நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மரங்களில்தான் மீன்கொத்திப் பறவைகள் வாழும். அவை எப்படி இரை தேடுகின்றன, எப்படிக் கூடமைக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள புதர்க்காடுகளிலும் சிறு மரங்கள் உள்ள காடுகளிலும்தான் இவற்றைப் பார்க்க முடியும்.

கழுகுகள் உயரத்தில் கூடமைக்க வேண்டியிருப்பதால், உயரமான மரங்கள் உள்ள காடுகளில்தான் வாழும். ஒரு வகைப்பட்ட பறவை வாழும் சுற்றுச்சூழலில், இன்னொரு வகைப்பட்ட பறவை வாழ முடியாது.

அணிலின் நகங்கள், மரக்கிளைகளைப் பற்றிப் பிடிப்பதற்கு ஏற்ற வகையிலும் மாங்காய், மற்ற விதைகள்போன்றவற்றைப் பிடித்துத் தின்பதற்கு ஏற்ற வகையிலும் அமைந்தி ருக்கின்றன. அணில் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்போது, அதன் வால்தான் அதைக் காற்றில் தாங்கிக்கொள்ளும். அதன் கூர்மையான முகமும் சிறிய கால்களும், தாவுவதற்கும் மரம் ஏறுவதற்கும் உதவுகின்றன.
கீரி ஒரு சிறிய பாலூட்டி. இது எலி, பச்சோந்தி, பல்லி ஆகியவற்றை உண்ணும். காட்டுப் பகுதிகளிலும் விளைநிலங்களிலும் இதைப் பார்க்கலாம். இது நீண்ட உடல், ரோமம் நிறைந்த வால், கூர்மையான முகம், சிறிய கால்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மனிதர்களின் பார்வை படாத இடத்தில், அப்படி யாரும் பார்த்துவிட்டால் உடனே ஓடித் தப்புவதற்கு ஏற்ற இடத்தில்தான் கீரி வசிக்கும். அணிலும் கீரியும் தங்கள் வசிப்பிடங்களை மாற்றிக்கொள்ள முடியுமா? முடியாது. வசிக்கும் இடங்கள் மாறவேண்டும் என்றால், உணவுப் பழக்கமும் உடல் அமைப்பும் மாறவேண்டும்.

மனிதர்கள் உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். மனிதர்கள் சந்திரனுக்குச் செல்கிறார்கள். அண்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கிராமத்தில் வசிக்கும் ஒருவர் நகரத்திலோ, கடற்கரையிலோ, வெப்பமண்டலக் காடுகளிலோ வாழலாம். ஆனால் ஒரு யானையால் சைபீரியாவிலோ, அண்டார்டிகாவிலோ வாழ முடியாது. பனிக்கரடி வெப்பமண்டலத்துக்கு வந்தால், அதன் அடர்ந்த ரோமம் நிறைந்த தோல், வெப்பமண்டலத்தில் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது அல்லவா? அதேபோல வெப்பமண்டல விலங்கான யானை குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கு அதன் தோல் ஏற்றதாக இருக்காது.

ஆனால், பலவகை விலங்குகள் அருகருகே வசிக்கும் ஓர் இடம் உண்டு. அதுதான் விலங்குக்காட்சிசாலை. ஒவ்வொரு விலங்கும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அங்கே உருவாக்குகிறார்கள்.

பறவைகளும் விலங்குகளும் மிகவும் சுந்திரமானவைதான். ஆனால் அவற்றுக்கும் எல்லைகள் உண்டு. பார்வைக்குத் தெரியாத எல்லைகள் இவை.

Related posts

Leave a Comment