You are here
கட்டுரை 

அறிவியல் அறிஞர் எட்வர்ட் ஜென்னர்

(Edward Jennar)

இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இங்கிலாந்தில் பெர்க்லி (Berkeley) என்று ஒரு நகரம் இருக்கிறது. அங்கு ஒரு பள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. இந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக விடுதிப் பாதுகாவலர் (Warden) தன் உதவியாளர்களுடன் சென்று ஒவ்வோர் அறையாகப் பரிசோதனை நடத்தினார்.

பல அறைகளை நன்றாகச் சோதனையிட்ட பின்பும் அவரால் நாற்றத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அவர்கள் எட்வர்ட் எனும் மாணவனின் அறைக்குச் சென்றனர்.

“ஓ! இந்த அறையிலிருந்துதான் கெட்ட நாற்றம் வீசுகிறது!” என்று சொல்லிக்கொண்டே பாதுகாவலர், அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை விலக்கினார். அப்போது அவர் அந்த படுக்கைக்குக் கீழே கண்டது என்ன?
பலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளை, எலும்புத் துண்டுகள்… இப்படிப் பல பொருட்கள் அங்கே இருந்தன. அவற்றில் பல பொருட்கள் அழுகி நாறின.

பாதுகாவலர் மிகவும் கோபம் கொண்டார். அந்த அறையில் தங்கியிருந்த மாணவன் எட்வர்ட் பயந்து நடுங்கி நின்றான்.
“என்னடா இதெல்லாம்?” பாதுகாவலர் அதட்டினார்.

தயங்கித் தயங்கி எட்வர்ட் சொன்னான்: “இயற்கைக் கண்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கான பொருட்கள், சார்…”
பாதுகாவலர் தன் பணியாளரிடம், “இதையெல்லாம் அள்ளி வெளியே போடு!” என்று உத்தரவிட்டார்.

அப்போது அங்கே வந்த தலைமை ஆசிரியர், என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டார். அவர் எட்வர்டின் அருகே சென்று அன்புடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு பாதுகாவலரிடம் சொன்னார்:
“இந்தப் பொருட்களையெல்லாம் வெளியே போட்டுவிடாதீர்கள். இதுபோன்று இன்னும் பல பொருட்களை எட்வர்ட் சேகரிக்கட்டும். அதையெல்லாம் வைத்து நாம் பள்ளியில் இயற்கை அறிவியல் தொடர்பான கண்காட்சி நடத்தலாம்.”

தலைமை ஆசிரியரின் வார்த்தைகளைக் கேட்டு எட்வர்ட் மகிழ்ச்சியடைந்தான். சில தினங்களுக்குள் அவன் இன்னும் நிறையப் பொருட்களைச் சேகரித்து, பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி நடத்தினான்.

குழந்தைப் பருவத்தில் இயற்கையை ஆராய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டிய அந்த மாணவன், பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக மாறினான். அவன் யார் தெரியுமா? எட்வர்ட் ஜென்னர்!

எட்வர்ட் ஜென்னர் 1749 மே மாதம் 17ல், இங்கிலாந்திலுள்ள பெர்க்லியில் பிறந்தார். கல்வி கற்று மருத்துவரானார். பெரியம்மை நோய்க்கு மருந்து (Smallpox vaccine) கண்டுபிடித்து புகழ் பெற்றார். 1823 ஜனவரி 26ல் மறைந்தார்.

Related posts

Leave a Comment