வாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை

வாசிப்போடு வரவேற்போம்
ஆசிரியர் தினத்தை

இதோ இன்னோர் ஆசிரியர் தினம் வந்துவிட்டது. கல்வியில் அனைத்து சமூக ஆர்வலர்களும் முன்மொழியும் ஒரு பிரதான மாற்றம் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை அறிமுகம் செய்வது பற்றியது ஆகும். பாடப்புத்தகச் சுமையின் இரக்கமற்ற திணிப்பால் புத்தகம் என்றாலே ஒரு வகை அச்சமும் தயக்கமும் அவர்களிடம் குடிகொண்டு விட்டது. வாசிப்பு உலகமே தனது சாகசங்களும் அறிவுப் புதையலுமாய் அவர்களுக்காகவே காத்திருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் ஒரு செலவில்லாத, ஆனால் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு அவர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே வீடியோ விளையாட்டுகளும் உடலைக் கொல்லும் கார்ப்பரேட் ரக தின்பண்டங்களும் அறிமுகமாகி விடும் அவலத்தை நாம் நமது கல்வி மாற்றங்கள் வழியே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். புளூவேல் வீடியோ விளையாட்டின் மூலம் குழந்தைகளை தற்கொலை செய்து கொள்ள நஞ்சை கொடுத்திருக்கிறார்கள். இன்று நகர்ப்புற பள்ளிகளில் பல குழந்தைகள் ‘வீடியோ கேம்ஸ்’ எனும் மூடத்தனமான மாயவலைக்குள் போதை அடிமையாகி தன் சுகாதாரத்தையே இழந்து இரவும் பகலும் அமிழ்ந்து காணாமல் போகும் அவலம் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பயங்கர பின் விளைவாக தொடர்கிறது. கட்டுப்பாடற்ற வன்கொடுமையையும், வன்முறையையும் தன் அங்கமாகக் கொண்டிருந்த வீடியோ கேம்ஸ் எனும் புதை குழியில் தான் சுயநலவெறியும் பல்வகை குற்றங்களின் ஊற்றுக்கண்ணும் இருக்கிறது என்பதை அறியாமலேயே ஆயிரக்கணக்கில் செலவு செய்து மத்தியதர வர்க்கம் தன் குழந்தைகளுக்கு அவற்றைத்தாரை வார்க்கிறது. தனது அன்றாட வாழ்வில் வேலை எனும் பெரும் சடங்கில் சிக்கி பணம் ஈட்டுவதையே குறியாக கணவரும் மனைவியுமாய் காலந்தாழ்த்தி பணி இடமிருந்து திரும்பும் சூழலில் தனித்து விடப்பட்ட குழந்தைகளை பிள்ளை பிடிப்பவனைப்போல பற்றிக் கொள்ளும் இந்த வீடியோ கேம்ஸ் அபாயம் இன்று அவர்களது இரவுகளைக்கூட களவாடும் போதையை ஏற்றி பின் ஆட்கொல்லி ஆவதே யதார்த்தம். இந்த பயங்கரப் படுகுழியின் மாற்று புத்தக வாசிப்பே ஆகும். நாம் குழந்தைகளுக்கான வாசிப்பு எனும் புதிய வகுப்பறை செயல்பாடு குறித்து சிந்திக்கும் காலம் வந்துவிட்டது. சிறுவர் இதழ்கள் வரிசையில் வண்ணநதியையும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் எனும் ஒப்பற்ற செயல் திட்டத்தையும் பாரதி புத்தகாலயம் அறிமுகம் செய்திருப்பது அந்த நோக்கில்தான். ஆசிரியர்கள் மனது வைக்காமல் குழந்தைகளுக்கான எந்த முயற்சிக்கும் வெற்றி கிட்டாது. வாசிக்கும் வகுப்பறைகளை ஊக்குவிக்க வகுப்பிற்கு ஒரு நூலகம் என எங்களது குழந்தை நூலகத்திட்டத்தைப் பயன்படுத்த ஆசிரியர் தினத்தில் தமிழகத்தின் வருங்காலத்தைச் செதுக்கும் அன்பு ஆசிரியர்களை அழைக்கிறோம். வாசிக்கும் சந்ததியே வளமான சந்ததி. அனைவருக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
– ஆசிரியர்குழு