You are here
நூல் அறிமுகம் 

பொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து….

உம்பர்டோ இகோ
தமிழாக்கம்: க. பஞ்சாங்கம்

 

ஆழமாகவும் நயமாகவும் எழுதப்பட்ட ஒரு சில பக்கங்கள், இந்த உலகத்தையே மாற்றின என்று எண்ணிப்பார்ப்பது கடினமான ஒன்றுதான். தாந்தேவினுடைய ஒட்டுமொத்த எழுத்துகள் எல்லாம் சேர்ந்தும் கூட, இத்தாலியின் ரோமப் பேராட்சியைப் புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் 1848_இல் எழுதப்பட்ட ‘பொதுவுடைமை அறிக்கை,’ ஒரு பிரதி என்கிற முறையில், இருநூற்றாண்டு மனித வரலாற்றின் மேல் மிகப் பெரிய செல்வாக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பது நிச்சயம். எனவேதான் இலக்கிய நோக்கில் இதன் நடை அழகைக் கட்டாயம் மறுபடியும் அணுக்கமாக நாம் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இதன் மூலத்தை வாசிக்க வாய்ப்பு அமையாத நிலையிலும் கூட! ஒருவர் அசாதாரண முறையில் இப்பிரதியில் வெளிப்படும் விவாதங்களின் அமைப்பையும், அழகியல் திறத்தையும் புலப்படுத்தும் பாங்கில் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

1971ல் வெனிசுலேன் எழுத்தாளர் ஒருவர், லுடோவிக்கோ சில்வாவின் ‘‘மார்க்ஸின் இலக்கிய நடை’’ என்ற ஒரு சிறுநூலை வெளியிட்டார். (1973இல் இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது) இந்த நூல் இப்பொழுது எங்கும் வாசிப்பதற்குக் கிடைக்காது என்று நினைக்கிறேன். உண்மையில் மறுபதிப்பு செய்வதற்குத் தகுதியான ஒரு நூல். இந்த நூலில் சில்வா, மிகச் சிறப்பாகப் பின்னோக்கித் துலக்கிச் சென்று, காரல் மார்க்ஸின் இலக்கியக் கல்வி வளர்ச்சி அடைந்த வரலாற்றை விளக்கியுள்ளார். (மார்க்ஸ் கவிதைகளும் எழுதியுள்ளார் என்பதைச் சிலர் அறிந்திருக்கலாம். அவற்றை வாசித்தவர்களின் கருத்துப்படி, அந்தக் கவிதைகள் அவர்மேல் பெரிதும் மரியாதை உணர்ச்சியை உருவாக்கும் கவிதைகள்) சில்வா, மார்க்ஸின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் எடுத்துவைத்துக் கொண்டு மிக விரிவான தளத்தில் பகுத்தாராய்ந்து உள்ளார் என்பதால் இந்தப் ‘‘பொதுவுடைமை அறிக்கையில்’’ இருந்து ஆவல் மீதூர சில வரிகளையே எடுத்தாண்டுள்ளார். ஒரு வேளை கறாராகச் சொல்வதென்றால், இப்பிரதி முழுக்க முழுக்க மார்க்ஸினுடைய தனிப்பட்ட பிரதி அல்ல என்பதனால் கூட அவர் அப்படிச் செய்திருக்கலாம். ஆனாலும் இது திகைப்பை உண்டாக்கும் அதிசயிக்கத்தக்க ஒரு பிரதி. மிகத் திறமையாக ஒரு மாற்றுப் பார்வையை முன் வைக்கும் பிரதி. தீர்க்க தரிசனத்தோடும், வஞ்சப் புகழ்ச்சியோடும், தெளிவான விளக்கங்களோடும், சக்தி நிரப்பப்பட்ட முழக்கங்களோடும் எழுதப்பட்ட பிரதி (முதலாளித்துவ சமூகம் கிளம்பி எழும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத் திரண்டு வழி தேடுவதற்கு இந்தச் சில பக்கங்களே காரணமாயின. இன்றைக்கும் கூட, உலக முக்கியத்துவம் பெற்றுள்ள விளம்பர நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்கள், இந்த அறிக்கையைத் தங்களுக்கான புனிதநூல் போல் வாசிக்கின்றனர்.

ஒரு சக்திவாய்ந்த பேரிகை முழக்கம் போல இந்த அறிக்கை தொடங்குகிறது. பீத்தோவென்ஸ்னுடைய ஐந்தாவதைப் போல இருக்கிறது. ‘‘ஐரோப்பா முழுவதையும் ஒரு பேய் பிடித்தாட்டுகிறது. (நாம் இன்னும் கற்பனை வாத காலத்திற்கு முந்திய காலகட்டத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது; அந்தக் காலகட்டத்தில் இவ்வாறு முன் அறிகுறி காட்டும் தீமையைக் குறித்த அச்சம் உச்சத்தில் இருந்தது) இவ்வாறு தொடங்கும் பிரதி, உடனே பழமையான ரோம் நாகரீகத்திலிருந்து இன்று வரையிலான வர்க்கப் போராட்டம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும் ஒரு பறவைப் பார்வையில் விளக்கி விடுகிறது. கூடவே இந்த முதலாளித்துவம் எவ்வாறு புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் என்றதொரு புதிய வர்க்கம் தோன்றுவதற்கான ஆதாரமாகவும் விளங்கியது எந்பதையும் கூர்மையாக எடுத்துரைக்கிறது. இத்தகைய புதிய விளக்கங்கள் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்களுக்கு இன்றும் கூடப் பெரிதும் மதிப்பு மிக்கவையாக விளங்குகின்றன. வரலாற்றில் தவிர்க்க முடியாத முதலாளித்துவத்தால் உருவான மிதமிஞ்சிய பண்ட உற்பத்திக்கான சந்தையைத் தேடும் தேவையானது, நிலம் கடலென ஒட்டுமொத்த உலகத்தையும் ஊடுருவி விட்டது. (என்னைப் பொறுத்தவரை இந்த இடத்தில், தீர்க்கதரிசனம் மிக்க யூதரான மார்க்ஸ் உலகமயமாதல் என்ற சிந்தனைக்கான மூலக்காரணங்களைத் தொடங்கி வைத்துவிட்டார்) இத்தகைய முதலாளித்துவத்தின் பண்ட உற்பத்தி, தொலைதூர நாடுகளின் பொருளாதார உறவுகளைக் கூடத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. முதலாளித்துவம் தன்னுடைய பண்ட உற்பத்தி, மலிவான விலை எனும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு சீன மதிலையொத்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டது. அந்நியத்தனத்தின் மேல் ஏற்படும் முரட்டுத்தனமான வெறுப்பைக் கூடக் கைவிட்டுப் புதிய முதலாளித்துவத்தின் முன்னால் அனைவரையும் பணிந்து போகும்படிக் கட்டாயப் படுத்திவிட்டது. முதலாளித்துவம் தன்னுடைய அதிகாரத்தின் அடையாளமாக தனது அதிகாரத்தின் விளைநிலமாக பெரும் பெரும் நகரங்களை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து பன்னாட்டுக் குழுமமாகவும், உலகமயமாகவும் தன்னை வலுவாக விரித்துக் கொண்டது. இலக்கியத்தில் கூடத் தேசிய இலக்கியம் என்பதை அழித்து உலக இலக்கியமென ஒன்றைக் கண்டுபிடித்துக் கொண்டது. (உண்மையிலேயே நான் இந்தக் கட்டுரையை எழுதும் போது (1998) ஏற்கெனவே’உலகமயமாதல்’ என்பது நடைமுறைக்கு வந்து விட்டது.)

எனவே நானிங்கே இதைப் பயன்படுத்துவது தற்செயலான ஒன்று அல்ல. இன்றைககு நாம் எல்லாருமே இந்தச் சிக்கல் குறித்துப் பெரிதும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக ஆகியுள்ளோம். எனவே ‘‘பொதுவுடைமை அறிக்கையில்’’ இது குறித்துக் காணப்படும் பக்கங்களுக்குத் திரும்பிச் சென்று மறுபடியும் வாசித்தறிவது உண்மையிலேயே தகுதியான ஒரு வேலைப்பாடாகும். பொதுவுடைமை அறிக்கை ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த உலகமயமாதல் என்கிற ஒரு சகாப்தத்தையும் அது உருவாக்கிவரும் அதற்கே எதிரான மாற்றுச் சக்திகளின் தன்மையையும் எவ்வளவு அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது என்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது. அது உலகமயமாதல் என்பது ஒரு விபத்து அல்ல என்றும் கருதுகிறது. முதலாளித்துவத்தின் விரிவாக்கச் செயல்பாட்டில் வெளிப்பட்ட தீவிரம் காரணமாகத் தடைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. இணையதளம் வந்து சேர்ந்துவிட்டது என்பதனால் மட்டுமே உலகமயமாதல் ஏற்பட்டு விடவில்லை. மாறாக, தவிர்க்க முடியாது வந்து சேர்ந்த அந்த அமைப்பை, புதிதாக உருவான முதலாளித்துவம் ஒரு கணமும் பின் தங்கி விடாமல் சந்தையை விரிவுப்படுத்திக் கொண்டே போவதன் மூலமாகவும், தனக்கு வசதியான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் (அதிகமான இரத்தம் சிந்தும் முறைமையையும்) தொடர்ந்து சென்றதன் காரணமாக ‘‘காலனித்துவம்‘‘ என்ற நிலை உருவாகி உலகமயமாதல் நிலைநிறுத்தப்பட்டது. இப்படியான ஒரு வரலாற்றுக் கட்டத்தை மீண்டும் பேசுவது நல்லது (முதலாளிகளுக்காக மட்டுமல்ல எல்லா வர்க்கத்தினருக்காகவும்) தொடக்க காலத்தில் உலகமயமாதலை எதிர்த்த ஒவ்வோர் இயக்க சக்தியும் பிளவுண்டு கிடந்தன. குழம்பிக் கிடந்தன. வெறும் இயந்திரமயமாதலை எதிர்ப்பது என்பதை நோக்கியே இயங்கின. இதைத் தான் தங்கள் சொந்தப் போர்க்களத்தில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும்படியான ஒரு முறையில் தன் எதிரியை நிறுத்தி, முதலாளித்துவம் பயன் அடைந்து கொண்டது.

இவ்வாறு பெருவளர்ச்சி கண்ட முதலாளித்துவம் திடீரென நாடகப் பாங்கான ஒரு தலைகீழ்த் திருப்பத்தை எதிர் கொள்ள நேர்ந்துள்ளது. பிரமாண்டமான உற்பத்திக் கருவிகளையும் பரிவர்த்தனை முறைமைகளையும் மாயவித்தைக்காரன் போலத் தோற்றுவித்த முதலாளித்துவம், தனது மந்திர வித்தையால் பாதாள உலகத்திலிருந்து தட்டி எழுப்பிக் கொண்டுவந்த மாந்திரீக சக்திகளை எல்லாம் இனிமேலும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. தனது சொந்த மிதமிஞ்சிய பண்ட உற்பத்தி காரணமாக, மூச்சு முட்டித் திக்கு முக்காடிக் கிடக்கிறது. தனது இடுப்பிலிருந்தே கருவிகளை எடுத்துத் தனக்கான இடுகாட்டுக் குழியைத் தோண்டும் நிலைக்கு வந்துள்ளது. அந்தக் கருவிதான் தொழிலாளி வர்க்கம்.

தொழிலாளி வர்க்கமெனும் இந்தப் புதிய சக்தி இப்பொழுது வரலாற்றிற்குள் நுழைந்துள்ளது. முதலில் அது பிளவுண்டும் குழம்பியும் கிடந்தது. பிறகு நிதானமாக வளர்ந்து நிலையானது. முதலாளித்துவம், இந்தத் தொழிலாளி வர்க்கத்தையும் தனக்கான அதிர்ச்சி தரும் ஒரு போர்ப்படைபோல பயன்படுத்தியது தங்களது பகைவர்களை, அவர்களது பகைவர்களாக்கிச் சண்டையிட வைத்தது. (முழு அதிகாரம் கொண்ட அரசர்கள், நிலவுடைமையாளர்கள், குட்டி முதலாளிகள்) இது போலவே கலைஞர்கள், கடை வியாபாரிகள் உழும் விவசாயிகள் ஒரு காலத்தில் இவர்கள் எல்லாம் முதலாளித்துவத்திற்குப் போட்டியாளர்களாக இருந்தார்கள். இப்பொழுது அதே முதலாளித்துவத்தால் கூலித் தொழிலாளிகளாக மாறிப் போனார்கள்) முதலிய அனைவரையும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களாக உள்வாங்கிக் கொண்டது. அதே நேரத்தில் இப்படியான செயல்பாட்டின் மற்றொரு விளைவாக, முதலாளித்துவம் தனக்கு எதிரான தொழிலாளி வர்க்கம் வலுவான ஒரு சக்தியாகத் திரளுவதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் தொழிலாளி வர்க்கம் கூடுதலாக வலுப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக, அதே முதலாளித்துவம் தனது லாபவேட்டைக்காகக் கண்டுபிடித்த மக்கள் தொடர்புக் கருவிகளும் வந்து சேர்ந்தன. இந்த இடத்தில் பொதுவுடைமை அறிக்கை தொடர்வதைப் போக்குவரத்தின் வரவைச் சுட்டிக் காட்டுகிறது.

இந்த இடத்தில்தான் பொதுவுடைமை வாதிகள் மேடையேறுகின்றனர். பொதுவுடைமைவாதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் என்ன விரும்புகிறார்கள்? என்பதையெல்லாம் எடுத்துரைப்பதற்கு முன்பே, பொதுவுடைமை அறிக்கை, மிக மேன்மையான கலைநயத்தோடான அணுகுமுறையோடு பயந்துபோன முதலாளிகளின் நிலையையும் அச்சமும் பீதியும் கொண்டு பொதுவுடைமைவாதிகளை நோக்கி முதலாளித்துவம் முன்வைக்கும் வினாக்களையும் சுட்டிக் காட்டுகிறது. நீங்கள் சொத்துடைமை என்பதையே அடியோடு அழித்தொழிக்க விரும்புகிறீர்களா? பெண்களை எல்லாருக்கும் பொதுமையானவர்களாக ஆக்குகிறீர்களா? சமயத்தை, தேசியத்தை, குடும்ப அமைப்பை எல்லாம் அழித்துவிட ஆசைப்படுகிறீர்களா?

இந்த இடத்தில் விஷயம் மிகவும் கூர்மையானதாக மாறுகிறது. முதலாளித்துவத்திற்கு விஷயம் மிகவும் கூர்மையானதாக மாறுகிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மிருதுவாக்கிக் கொள்ளாமல், பொதுவுடைமை அறிக்கை மேலே எழுப்பப்பட்ட எல்லா வினாக்களுக்கும் சாந்தப்படுத்துவது போல் பதில் சொல்லுகிறது. ஆனாலும் திடீரென ஓர் எடுப்பெடுத்துச் சூரியகிரணம் போல முதலாளித்துவத்தைத் தாக்குவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கு உற்சாகமூட்டுகிறது.

நாங்கள் சொத்துடைமையை அழிக்க விரும்புகிறோமா? இல்லைதான்; ஆனாலும் சொத்துடைமை உறவென்பது எப்பொழுதும் மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியது. பிரஞ்சுப் புரட்சி என்ன செய்தது? அது முதலாளித்துவத்தின் சொத்துடைமைக்கு ஆதரவாக நிலவுடைமையாளர்களின் சொத்தை எல்லாம் அழிக்கவில்லையா? நாங்கள் தனியார் சொத்தை ஒழித்துக் கட்ட விரும்புகிறோமா? அப்படியொரு தனியார் சொத்து என்பதற்கே இங்கே இடமில்லை; காரணம், தனியார் சொத்து என்பது பத்துப் பேரில் ஒருவருடைய சொத்து; இந்தச் சொத்தும் மீதி ஒன்பது பேருக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களைச் சுரண்டிப் பெற்றது. அப்படியென்றால், உங்களுக்கான சொத்தை நீங்களே அழிப்பதன் மூலம், எங்களை அவமானப்படுத்தி நிந்திக்க ஆசைப்படுகிறீர்களா? ஆமா! மிகச் சரியாகச் சொன்னீர்கள்; அதைத்தான் செய்ய விரும்புகிறோம்.
அவர்களை விடுவிக்க விரும்புகிறோம். பெண்களைப் பொதுமைப்படுத்தி உடைமை ஆக்கிக் கொள்வது என்பது உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. உங்களுடைய சொந்த மனைவிகளை உடைமைப் பொருள் போலப் பயன்படுத்திக் கொள்வதோடு நிற்காமல், தொழிலாளர்களின் மனைவிமார்களையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டீர்கள். இதனால் உங்கள் சீமாட்டிகளைத் தவறான பாலியல் நெறியில் செலுத்துவதையும் ஒரு கலைபோல நீங்கள் கடைப்பிடித்தீர்கள்.

தேசியத்தையும் அழிக்க விரும்புகிறீர்களா?
தொழிலாளர்கள் தங்களுடையது என்று ஒரு நாளும் உரிமை கொள்ளாத ஒன்றை, எப்படி நீங்கள் அவர்களுக்கானதாக எடுத்துக் கொள்ள முடியும்? இதற்கு மாறாக, நாங்களே ஒரு தேசமாக மாறுவதற்கும் வெற்றி பெற்று ஆர்ப்பரிக்கவும் விரும்புகிறோம். இப்படியானதொரு வேகத்தில் பாய்கிறது பொதுவுடைமை அறிக்கை. ஆனால் சமயம் குறித்த வினா வரும்போது இந்தக் கலகலப்பு இல்லை. சமயம் குறித்த வினாவிற்குப் பொதுவுடைமை அறிக்கை முன்வைக்கும் விடையாக நாம் இப்படி ஊகிக்கலாம். நாங்கள் சமயத்தை மாய்த்தொழிக்கத்தான் விரும்புகிறோம். ஆனால் பிரதி இவ்வாறு நேரடியாகச் சொல்லவில்லை. எல்லா மாற்றங்களும் அதற்கான விலையைக் கொடுத்த பிறகே வருகின்றன. உலக நன்மையின் பொருட்டு, உடனே நாம் இங்கே இத்தகைய நுட்பமான விஷயங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதுவதாகவே அனுமானிக்க முடிகிறது.

பிரதியில் தொடர்ந்து மிக முக்கியமான கோட்பாடு சார்ந்த பகுதி வருகிறது. இயக்கங்களின் திட்ட வரையறைகளும், பல்வேறு வகைப்பட்ட சோசலிசம் குறித்த விளக்கங்களும் விமர்சனங்களும் வருகின்றன. ஆனால் இந்தக் கடினமான பகுதி வரும்போது, வாசகர்கள் ஏற்கெனவே முன்னுள்ள பக்கங்களால் பிரதியின் நோக்கத்திற்கேற்பத் தகவமைக்கப்பட்டு மாறியிருப்பார். மேலும் கடினமான இந்தப் பகுதியின் இறுதியாக வாலில் உள்ள ஒரு விஷக் கொடுக்கை எதிர் கொள்ளுகிறோம். அதாவது மூச்சை நிறுத்தும் இரண்டு முழக்கங்கள்; எளிமையாக நினைவில் நின்று கொள்ளும் முழக்கங்கள;, விவரிக்க முடியாத எதிர்காலத்தையே உட்கொண்ட முழக்கம்:
‘‘தொழிலாளர் வர்க்கத்திடம் இழப்பதற்கு
ஒன்றுமில்லை; அவர்களைப் பிணித்திருக்கும்
சங்கிலிகளைத் தவிர, உலகத் தொழிலாளர்களே!
ஒன்று படுங்கள்’’
இவ்வாறு நினைவில் ஏற்றும் உருவகங்களை வடிவமைக்கும் அதன் அசலான கவித்துவ ஆற்றலுக்கும் மேலாக, இப்பொதுவுடைமை அறிக்கை, அரசியல் பிரசங்க வரலாற்றிலும் மிகப் பெரிய சாதனையாகும்.சேக்ஸ்பியர் நாடகத்தில் ஜுலியஸ் சீசரின் பிணத்தைக் காட்டி, மார்க் அந்தோணி பேசிய மேடைப் பிரசங்கத்தோடும், சிசரோவின் இன்வெக்டிவ்ஸ் ஏகெனஸ்டு கேட்டிலைன் என்ற எழுத்தோடும் சேர்த்து இந்தப் பொதுவுடைமை அறிக்கையும் கல்வி நிலையங்களில் பாடப்பகுதியாக வைத்துப் படிக்கப்பட வேண்டும். அவ்வாறு படிக்கப்படும்போது காரல் மார்க்ஸ் செவ்வியல் பண்பாட்டின் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த நுட்பமான ஆர்வமும் நெருக்கமும் சிறப்பாக வெளிப்படும். கூடவே பொதுவுடைமை அறிக்கை என்ற இந்தப் பிரதியை எழுதும்போது அவரது மனமெல்லாம் செவ்வியல் பண்பாட்டு நினைவுகளால் நிறைந்திருந்தது என்பதும் புலப்படும்.

Related posts

Leave a Comment