You are here

காலமெல்லாம் புலவோரின் வாயில் துதியறிவாய்…

ச.சுப்பாராவ்

‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது வாட்ஸ்அப் காலத்திற்கு முன்னாலேயே சொல்லப்பட்ட மூதுரை. எனவே அவரது நண்பர்களைப் பற்றி முதலில். டி.கே.சிதம்பரநாத முதலியார் அவரது நண்பர். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தனது மனோன்மணியத்தில் திருத்தங்கள் செய்து தரும்படி கேட்ட நண்பர். அவர் வீட்டிற்கு வந்து அவரது பணிகளைப் பற்றி விசாரித்துவிட்டு அவர் மீது வங்கமொழியில் ஒரு பாடலைப் பாடிச் சென்றார் தாகூர். நீர் இளைஞர்… நானோ முதியவன்.. உங்களைப் போல் என்னால் செயல்பட முடியவில்லையே.. என்றும், பாரி, அவனது மகளிற், (ஆம், எழுதியவர் இந்தற் தான் போட்டுள்ளார்) கபிலர்; பிசிராந்தையார் பற்றி கட்டுரை ஒன்று எழுதுகிறேன்; அவர்கள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் வேண்டும் என்றும் ஆக்ஸ்போர்டிலிருந்து இவருக்குக் கடிதம் எழுதுகிறார் ஜி.யு.போப். கடிதத்திற்கு நடுவில் ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல என்று திருக்குறள் வேறு. திரிகூட ராசப்பக் கவிராயரும் இவரது நண்பர். இவரது பாராட்டுவிழா ஒன்றிற்கு வந்த பாரதியார் பாடிய வாழ்த்துக் கவிதையின் ஒரு வரிதான் இந்தக் கட்டுரையின் தலைப்பு. இத்தனை வி.ஐ.பி நண்பர்களைக் கொண்ட அந்த வி.ஐ.பி தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர்.
அவரது சுயசரிதையான என் சரித்திரம் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஓர் அற்புதமான ஆவணம். காலப் பெட்டகம். முடிந்தால் அதற்குத் துணையாக கி.வா.ஜ எழுதிய என் ஆசிரியப்பிரானையும் சேர்த்து வாசிக்க வேண்டும். ஏடுகள் தேடி உ.வே.சா அலைந்தது நாடறிந்த கதை என்பதால் அதை விடுத்து
உ.வே.சா என்ற படைப்பாளி, பண்பாளரைப் பற்றி இங்கு கூறிச் செல்கிறேன்.

சிப்பாய்க்கலகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் அவர். அந்தக் காலத்தைப் பற்றி இத்தனை விரிவாக, சுவையாக வேறு யாரேனும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆரம்பத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய அவரது வர்ணனை ஒன்றே போதும். அந்த வர்ணனை ஏதோ சுஜாதா எழுதியது போலிருக்கிறது. காலை 5 மணிக்கு பள்ளி ஆரம்பித்துவிடுமாம். 9 மணிக்கு காலைச் சாப்பாட்டிற்கு பிரேக். சாப்பாட்டுச் சுவையில் பள்ளியை மறந்துவிடக்கூடாது என்று எல்லாருக்கும் கையில் பிரம்பால் ஓர் அடி கொடுத்து அனுப்புவாராம் ஆசிரியர். நாங்கள் சாப்பிடப் போவது பழைய சாதம் என்கிறார். அமாவாசை, பௌர்ணமி, பிரதமை, அஷ்டமி ஆகிய திதிகளில் பள்ளிக்கு விடுமுறை! 13 வயதில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள். தலை நெறைய குடுமி, நன்றாகப் பாடுகிறான் என்பதுதான் அனைவரும் பார்த்த தகுதி.

ரயில் புதிதாய் வந்த காலத்தில் அதில் ஏறவே மக்களுக்கு பயம். ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொருவர் என்று உ.வே.சாவும் அவரது நண்பர்களும் ஜாலியாகப் பயணிக்கிறார்கள். உண்ணலாம், தூசும் உடுக்கலாம், நித்திரையும் பண்ணலாம். நூல்கள் படிக்கலாம் என்றொரு வெண்பாவும் எழுதுகிறார். ஜமீன்தாரின் மாளிகைகளில் நேரம் காட்ட மணல் கடிகாரங்கள். வடவெள்ளாற்றுக் கரையில் உள்ள களத்தூரில் வெற்றிலைக் கொடிக்கால் போட்டிருக்கும் முஸ்லீம் சாயபுகள் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், பிரபுலிங்கலீலை என்று புகுந்து விளையாடுகிறார்கள். சைவப் பிள்ளைகளோடு சவரிநாத பிள்ளை என்ற ஆர்.சி. கிறிஸ்துவர் நெற்றி நிறைய பட்டை போட்டுக் கொண்டு தமிழ் படிக்கிறார். மாயவரத்தின் காவிரிக் கரையில் மாலையில் சிறுவன் சாமா சந்தியாவந்தனம் செய்யும் போது, கரையை ஒட்டிய நீதிமன்றத்தில் வேதநாயம் பிள்ளை நீதிபரிபாலனம் செய்வதைப் பார்க்கிறார். இந்த சீர்காழி வட்டத்தில் நாம் நீதிபரிபாலனத்திற்கு அதிபதி என்பதை அறிவீர். நமக்கு முன் சத்தியமாகச் சொல்லும் என்று சீர்காழியில் எழுந்தருளியுள்ள ஈசரை நோக்கி, விதியெதிரி லசிமுதலோர் புகல்புகலி யீசரே என்று செய்யுள் எழுதிய தமிழ் கிருஸ்துவர் அவர். எல்லாருமே கடிதங்களை செய்யுள் வடிவத்தில் எழுதுகிறார்கள். யாரேனும் வசன நடையில் எழுதினால் உமக்கு தமிழ் மறந்து போய்விடப் போகிறது என்று கடிந்து கொள்கிறார்கள்.

உ.வே.சா. ஒரு பிறவிப் புத்தகக் காதலர். அவர் பார்த்த முதல் அச்சுப் புத்தகம் ஒரு தனிப்பாடல் திரட்டு. புத்தகங்களுக்கு என்றுமே விலை அதிகம்தான் போலும்! 1862ல் அதன் விலை ரூ5. பின்னர் ஒரு நாள் மாயவரத்தில் கம்பராமாயணத்தின் ஏழு காண்டங்களும் ஏழு புத்தகமாக விற்கப்படுவதைப் பார்க்கிறார். விலை ரூ7. உடனே திருவாவடுதுறையில் உள்ள தன் சித்தப்பாவிடம் போய் 7ரூ கேட்கிறார். சித்தப்பா தனது அந்த மாதச் சம்பளமான 7ரூபாயை முகம் சுழிக்காமல் எடுத்துத்தர உடனே மாயவரம் போய் புத்தகங்களை வாங்குகிறார். மாயவரத்திலிருந்து திருவாவடுதுறை சுமார் 18 கிமி தூரம். புத்தகம் வாங்க அன்று அவர் 36 கிமி நடந்திருக்கிறார். அந்த புத்தகக் காதல் கடைசி வரை இருந்தது. மரணப்படுக்கையில் இருக்கும்போது, உலகப் போரில் சென்னையில் குண்டு வீசும் அபாயம் தந்த பயத்தில் குடும்பம் திருக்கழுக்குன்றத்திற்குச் செல்கிறது. படுத்த படுக்கையிலும் கிழவர் எனது புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் என்று தொணதொணக்க அனைத்தையும் கட்டி எடுத்து வந்து அவரைச்சுற்றி வைத்த பிறகுதான் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது.

நல்ல பக்திமான் என்றாலும் மூடநம்பிக்கை இல்லாதவர். ஒருமுறை வெளியே செல்லும் போது எதிரே ஒரு பிராமணர் வருகிறார். உடன் வந்த நண்பர் ஒற்றை பிராமணர் வருவது சகுனத் தடை என்று சங்கடப்படுகிறார். உ.வே.சா அவரை வற்புறுத்தி எல்லாம் நல்ல சகுனம்தான் என்று அழைத்துச் செல்ல போன வேலை நல்லபடியாக முடிகிறது. திரும்பி வரும்போது நல்ல சகுனம் என்று எப்படிச் சொன்னீர்கள் என்கிறார் நண்பர். கள்குடம் வந்தால் என்ன சகுனம்? என்கிறார் உ.வே.சா. அது நல்ல சகுனம்தான் என்கிறார் நண்பர். எதிரில் வந்த பிராமணனை எனக்கு நன்றாகத் தெரியும். எப்போதும் வயிறு முட்ட கள் குடிப்பவன். அதனால் அவன் எதிரில் வந்தால் கள் குடம் வந்தது மாதிரிதான் என்று சொல்லிச் சிரிக்கிறார்.
இந்த நகைச்சுவை எழுத்திலும் உண்டு. ஒரு வீட்டில் ஓலைச்சுவடி தேடிப் போகிறார்கள். மிகவும் கெஞ்சிக் கூத்தாடியபிறகு ஒரு சுவடிக்கட்டைத் தருகிறார் வீட்டுக்காரா். எனக்கு முன்னால் ஓர் எலி அந்த சுவடிகளை ஆராய்ச்சி செய்து விட்டதால் சுவடித் துண்டுகள்தான் அதில் இருந்தன என்கிறார் உ.வே.சா.

தன் ஆசிரியர் தனக்குச் சொன்னதாக அவர் பதிவுசெய்யும் விஷயங்கள் இன்றும் படைப்பாளிகள் மனதில் கொள்ள வேண்டியவைகளாக உள்ளன. ‘செய்யுள் செய்வதற்கு முன் எந்த விஷயத்தைப் பற்றி செய்யுள் இயற்ற வேண்டுமோ அதை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த மாதிரி ஆரம்பித்தால் கஷ்டமாக இராதோ அதை அறிந்து கொள்ள வேண்டும். மனம் போனபடி ஆரம்பித்து, அதற்கேற்றபடி அடிகளை சரிப்படுத்துவது கூடாது. முதல் அடியில் அமைக்க வேண்டிய பொருளை மாத்திரம் யோசித்துத் தொடங்கி விட்டு, நான்காவது அடிக்கு விஷயமோ, வார்த்தைகளோ அகப்படாமல் திண்டாடக் கூடாது. நான்கு அடிகளிலும் தொடர்ச்சியாக அமையும் அமைப்பை நிச்சயித்துக் கொள்ள வேண்டும்’ என்று மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சாமிநாதைய்யருக்கு மட்டுமின்றி சுப்பாராவிற்கும் சேர்த்தே சொல்லியிருப்பதை என்னவென்று சொல்வேன்!

மிகப் பெரிய சங்கீத ஞானஸ்தர் உ.வே.சா. நந்தன் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியின் சீடர். யார் செய்யுள் சொல்லச் சொன்னாலும் அதை கல்யாணி ராகத்தில் பாடினேன், சாவேரியில் பாடினேன் என்றுதான் குறிப்பிடுகிறார். கொழும்புவில் ஒரு முருகன் கோவில் கட்டியபோது, அந்த முருகன் மேல் சுருட்டி, சகானா, செஞ்சுருட்டி, துவிஜாவந்தி ஆகிய ராகங்களில் கீர்த்தனைகளும் இயற்றித் தந்தவர். தம் குருநாதருக்கு தாம் சங்கீதம் கற்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், ‘என் நேரம் முழுவதும் தமிழுக்கே’ என்று சங்கீதத்தை முட்டைகட்டி வைத்துவிட்டவர்.
இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ‘தமிழா படிக்கிறான்? இங்கிலீஷ் படித்தால் இகலோகத்துக்கு, சமஸ்கிருதம் படித்தால் பரலோகத்துக்கு, தமிழ் ரெண்டுக்கும் பிரயோஜனமில்லையே’ என்று எல்லோரும் ஏளனம் செய்த காலத்தில் தமிழை மட்டுமே படித்த மகாமஹோபாத்யாயர் அவர். அந்தப் பட்டம் அதுவரை சமஸ்கிருத பண்டிதர்களுக்கு மட்டுமே தரப்பட்டது என்பது கூடுதல் விசேஷம்!

Related posts

Leave a Comment