You are here

இந்த ஆண்டவரின் மன்றாட்டை கேட்டருளும் மானிடரே

ஆயிஷா இரா. நடராசன்

கனடாவிலிருந்து நாம் துவங்கலாம். எதற்கும் ஓர் ஆரம்பம் வேண்டுமே. அங்கே தாமஸ் ஃபிஷர் நூலகம் உள்ளது. உலகின் அற்புதங்களில் அது ஒன்று. நியூட்டனின் பிரின்ஸிபியா புத்தகத்தின் பிரதான கையெழுத்து பிரதி அங்கேதான் வைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இன்னொரு கையெழுத்து மூலப்பிரதி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. சமீபத்தில் அந்த நூலகத்திற்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் வருகை புரிந்தார். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரைச் சொல்லி மூல கையெழுத்து பிரதி பற்றி விசாரிக்கிறார். ஏற்கெனவே இந்த புத்தகத்தின் மூலப் பிரதியைத் தேடி அவர் டென்மார்க் கோபன்ஹேகன் நகரின் டானிஷ் ராயல் நூலகத்திற்கும் நேரில் விஜயம் செய்திருக்கிறார். அங்கே அது இல்லை. ஆனால் அவர் தேடிய மூலக் கையெழுத்துப் பிரதி கனடா, தாமஸ் ஃபிஷர் நூலகத்தில் கிடைத்தது. நூலின் தலைப்பு ‘தி மாஸ்டர் அண்ட் மர்காரிட்டா. உண்மையில்’ ரஷ்ய மொழியில் மிக்கையில் பல்காகோவ் எழுதியது. ‘என்னை நாத்திகனாக்கிய புத்தகங்களில் ஒன்று’ என்று கூறி மூலப்பிரதியை வாஞ்சையோடு அவர் தடவும் காட்சியை சமீரபத்தில் நண்பர்கள் சிலர் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து இருந்தனர், சரி.

உங்களுடைய இதயம் வாழ்நாள் முழுதும் சேர்த்து 1,500,000 முறை சராசரியாக அடித்துக் கொள்ளும். ஆனால் எலி அப்படி அல்ல. ஒரு சுண்டெலிக்கு இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 500. இதே நீங்கள் யானையாக பிறந்திருந்தால் ஒரு நிமிடத்திற்கு 28 முறை மட்டுமே இதயம் துடிக்கும். ஈக்களுக்கு இதயம் கிடையாது. ஆனால் ஒரு ஈ 500 முட்டை இடுகிறது. அந்த 500ல் 250 பெண் ஈ பிறந்தால் அது ஒவ்வொன்றும் (காப்பி டீயில் விழுந்து சாகாமல்) முட்டையிட்டால் மூன்று வாரத்தில் அந்த இடத்தில் 12,5,000,000 ஈக்கள் மொய்க்கும். நமது ஆளுங்கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ யார் யாருக்கு ஆதரவு என்கிற கணக்கை விட இது ஈஸி. ஆனால் ஏதோ நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்போல விழிபிதுங்கியபடி வாசித்தீர்கள் இல்லையா. மிக்கையில் பல்காகோல் ஒரு மருத்துவர். மேற்கண்ட தகவல்கள் சும்மா தும்மாத்துண்டு சாம்பிள்தான். தி மாஸ்டர் அண்ட் மர்காரிட்டா நாவல் முழுதும் மொய்த்துள்ள துல்லிய தகவல்களை வழங்குபவர் யார் தெரியுமா, சாத்தான்.

‘சாத்தான்களின் சொர்க்கபுரி’ என்று போப் பெனடிக்ட் வர்ணித்தது சோவியத் யூனியனைத்தான். உலகம் அதுவரை கண்டிராத அந்த சமத்துவ சகோதரத்துவ சோசலிச சமூகத்தின் பல்வேறு புரட்சிகர அம்சங்கள் மதவாத உலகை குலை நடுங்க வைத்தன. அதெப்படி! என மனதளவில் அவர்கள் வெறுப்பு கொண்டதற்கான காரணம் உழைப்பைச் சுரண்டும் அமைப்பில் நீங்கள் யார்… அல்லது யார் பக்கம் என்பதைப் பொறுத்தது. உழைக்கும் மக்களிடமிருந்து உபரியை பிடுங்கிக் கொள்வதே முதலாளித்துவத்தின், தொழிற்துறையின் நோக்கம் என்பதை நாம் அறிவோம். எனவே மனிதர்கள் தங்களது தேவைக்காகவே உழைக்கிறார்கள். அதற்கான ஊதியம் பெறுகிறார்கள். என்றாலும் மூலதனத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாதவர்கள் உழைப்பாளர்களாக கருதப்படமாட்டார்கள். இன்றைய ஐ.டி. துறை எப்படி ஆட்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை உற்று நோக்கினால்… லாபம் அல்லது உபரி குறித்த மார்க்ஸின் முதல் விதி விளங்கும். உழைக்கும் மக்களை சுரண்டும் அதாவது உபரியை பெறுகிற வடிவங்கள் பல… அதில் மதம் முக்கிய பங்காற்றுகிறது. இன்று ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி தனிநபர் வருமானம் அது இது என்று நவீன பொருளாதாரம் எனும் பெயரில் மார்க்ஸ் வைத்த உழைப்பு, உபரி போன்ற சொற் பிரயோகங்கள் மாற்றப்பட்டுள்ளன. தொழில் மயம் என்பதும் இயந்திரமயம் தயாரிப்பு..) அறிவியலை யார் பயன்படுத்துவது என்பதே நவீன பொருளாதாரத்தின் இரக்கமற்ற வெளியே தெரியாத வகை போராட்டமாக உள்ளது. இதை கடந்த சமூக அமைப்பை சிந்திப்பது கடினம். நீங்கள், பணமே செல்லாது என்கிற பிரச்சனையில் மூழ்கி இது அநியாயம் என ஆர்ப்பரித்து எழும் முன்பே… மாட்டிறைச்சி எனும் உணவுப் போர் ஒன்றை மத பயங்கரவாதம் உங்கள் மூளைக்குள் திணித்து விடுகிறது.

ஆனால் சோவியத் சமூகம் இதையெல்லாம் கடந்துவிட்டிருந்தது. உழைப்பாளர்களே உபரி எனும் லாபத்தின் பலனை ஒட்டுமொத்த சமூகத்திற்கே வழங்கினர். நிலம், தொழிற்துறை, மருத்துவம் என்று யாவுமே பொது உடைமை. அது வரை மனித நாகரீகம் முன்பின் அறிந்திராத, மதத்திற்கும் ஏனைய பிரிவினைக்கும் அப்பாற்பட்ட ஒரு சமூக அமைப்பு அது. ஒவ்வொரு தேவாலயமும் நம் பாரதி சொன்னதுபோல பள்ளித்தலமாக்கப்பட்டபோதுதான் போப் அறிவிக்கிறார். ‘சோவியத் சாத்தான்களின் சொர்க்கம்‘ என்று. இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற அறிவியல் சித்தாந்தங்கள் (மரபணு மாற்று மருத்துவ சிகிச்சை முதல் இயற்பியலின் ஸ்டிரிங் தியரி வரை) பிரமாண்ட கண்டுபிடிப்புகள் (தொலைக்காட்சி பெட்டி முதல் நமது சாட்டிலைட் கைபேசி வரை) எல்லாவற்றின் ஊற்றுக்கண்ணும் அந்த விநோத தேசத்திலிருந்து முளைத்ததுதான். மின்சார உற்பத்தி, பால், கோதுமை, பார்லி முதல் பதினேழு அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியில் உலகில் அப்போது சோவியத் ரஷ்யா முதலிடம். 100 சதவிகித எழுத்தறிவு, பெண் உரிமை, முதியோர் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான கல்வி, அறிவு நிலை, சுகாதாரம் இவற்றில் இன்றும் எந்த நாடுமே எட்டிப் பிடிக்க முடியாத தரத்தை அது அடைந்திருந்தது. அதை விட போப்பாண்டவருக்கு கிருஸ்துமஸ் கொண்டாட்டமே முக்கியம். ஆனால் உலகிலேயே கிருஸ்துமஸ் மட்டுமல்ல எந்த மதநிகழ்வையும் அனுசரிக்காத ஒரு சமூகம் சோவியத் நாடாக இருந்தது.

தி மாஸ்டர் அண்ட் மர்காரிட்டா நாவலில் கிருஸ்துமஸ் கொண்டாடாத அந்த நாத்திக தேசத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் ஒரு தத்துவ பேராசிரியராக (பேராசிரியர் வோலாந்தும்) சாத்தான் வந்து குரல் படைத்த கறுப்பு பூனையும் சூனியகாரி ஹெல்லாவுமாக மாஜிக் ஷோ நடத்துபவர்களாக நாடு முழுதும் பயணித்து அனைத்தையும் குறித்து அறிந்து கொள்ள திட்டமிடுகிறார்கள். சோவியத் இலக்கிய அமைப்பின் தலைவர் பெர்லியாஸ், கவிஞர் இவான் போனிரோவ் என தொடங்கி ஒவ்வொரு சந்திப்பிலும் சாத்தானுக்கு கிடைக்கும் உரையாடல்கள் தொடர்புகள், அனுபவங்கள் வழியே சாத்தான்களின் சொர்க்கபுரியை மிக்கையில் பல்காகோவ் வாசகனுக்கு முன் வைக்கிறார். அறிவியல் வாதிகளின் உலகம் என்ற ஒன்றை புவியின் அடிப்படை மூலங்கள் மூக்கூறுகள் வழியே அணு மின்சாரம் என்பது உலகில் தோற்றம் பெற்ற அந்த ஆரம்ப ஆண்டுகளில் அறிவியல் புனைவாக ஒரு பிரமாண்டத்தை நம்முன் விரிவுபடுத்தும் எழுத்து உத்திகளின் குவியும் சாத்தானின் எத்தகைய தத்துவார்த்த சவாலையும் முந்திக் கொண்டு மனிதநேயத்தை மதவாத நேயத்திற்கு மாற்றாக விதைத்து தனது இருப்பிற்காக கடவுளை மன்றாட வைக்கிறது.

பைபிளை ஏதோ வகையில் மனித சாரத்தின் ஒரு பகுதியாக மாற்றிட பேராசிரியர் வோலாந்து முயலும்போது அதை ஏற்கெனவே தான் எழுதி முடித்துவிட்டதாக மாஸ்டர் பாத்திரம் அறிவிக்கிறது. சோவியத் மீது படை எடுக்கும் ஐரோப்பிய கருத்துலகால் கைதாகி சிறையில் பிணயக்கைதியாக இருக்கும் மாஸ்டரின் அபிமான பெண்தோழி மர்காரிட்டாவை சந்திக்கும் பேரா.வோலாந்து (சாத்தான்) மர்காரிட்டாவிடம் எல்லாமாய மந்திரசக்தியும் கொண்ட சூனியக்காரியாக மாறிடதன்னிடம் இணையுமாறு ஆசை சொற்களை புனைவார்… ‘நாசெரெத்தின் இயேசு’ என்ற தலைப்பில் பைபிளை ஏற்கெனவே நாவலாக எழுதி உள்ள மாஸ்டர் எனும் தனது தோழமையுடன் வானலைகள் வழியே உரையாடுவதும், நினைத்த இடத்தில் தொடுதிரையை ஏற்படுத்தி சோஷலிஸ சித்தாந்தத்தை விவரிப்பதும், எங்கோ பல ஊர்கள் கடந்து ஒரு நாடக அரங்கில் நடக்கும் பிரபல டேனிரோவிச் மெகாவ் நாடகங்களை விழித்திரையில் கண்டு ரசித்தும்… பலவகை அறிவியல் வழிமாயங்களை நடத்தி சாத்தானுக்கே சவால் விடுகிறார் மர்காரிட்டா. அடுத்தடுத்து நடக்கும் மருத்துவ, அன்றாட கருவியியல், மற்றும் ஏனைய அறிவியல் அற்புதங்களால் சோவியத் நாவல் முழுதும் மிளிர்கிறது. எங்களுக்கு அறிவியலே போதும்… சோஷலிஸமே இறுதியானது. என கடவுளையும் சாத்தானையும் ஒருங்கே மறுத்து தூக்கி எறிகிறது அங்கே நிலவும் கூட்டு சமூக வாழ்க்கை.

1939ல் தனது இல்லத்தில் இந்த முழு நாவலையும் தன் தோழர்களிடம் வாசித்துக் காட்டிய மிக்கையில் பல்காகோவ் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளானார். அடிமைச் சமூக கற்பனைவாதத்தை (சாத்தான் போன்றவை) சோசலிஷ யதார்த்தவாதம் அறிவியல் புனைகதையாடல் என பயன்படுத்துவதை அவரது சக எழுத்தாளர்கள் கடுமையாக சாடினர்.

தன் சமகால நாடக ஆசிரியர்களில் பிரபலமானவராக விளங்கிய மிகையில் பல்காகோவ் இயக்கிய பல நாடகங்கள் போலவே மர்காரிட்டாவும் அன்று பெரும் வரவேற்பை பெற்றது. புரட்சிக்கே எதிரான கருத்துகள் என பலவாறு தவறாக பொருளுணரப்பட்ட அந்த நாவலின் நாடக வடிவத்தை ஜோசப் ஸ்டாலின் அதன் 15 முறை நேரில் பார்த்து ரசித்தார் என்கிறது வரலாறு. எது வலது எது இடது என்பதை நேரடியாக பேசாமலே நம் அரசியலை அறிவியலாக்கும் பிரமாண்ட சமூக கடமையை அந்த உட்கரு ஆற்றிவிடுவதாக அவர் வர்ணித்தார். இந்த படைப்புதான் என்றில்லை. பல்காகோவின் ஏனைய படைப்புகளான பாட்டம் ஒரு நாயின் இதயம் (Hear of a dog) மரண முட்டைகள் (Fatel Eggs) என யாவுமே மிகை யதார்த்தவாத அறிவியல் புனைவுகளே.

ஆனால் மாஸ்டர் அண்ட் மர்காரிட்டாவை அச்சேற்றி நாவலாக வெளியிட இறுதிவரை பல்காகோவ் செய்த முயற்சிகள் தோற்றன. இரண்டாம் உலக யுத்தம் எனும் மாய பிசாசு இது போன்ற எத்தனையோ எழுத்துச் சிற்பிகளை நிழல் கூட தெரியாமல் அழித்தொழிக்க முயன்றாலும்… சோவியத் இலக்கிய மகா சமுத்திரம் எதையும் தொலைத்துவிடாது.. தனது தேசபக்தப் போரை கடந்தும். 1967ல் முயற்சியை கைவிடாமல் அவர் இறந்து 27 ஆண்டுகள் கழித்து சாத்தான்களின் கடவுள்களின் எல்லா முயற்சியும் தோற்றிட அந்த பிரமாண்ட அரசியல் அறிவியல் அங்கத நையாண்டியை ‘மாஸ்கோ மாகசின்’ எனும் இலக்கிய இதழ் தொடராக வெளியிட்டு அதை ரஷ்ய நாவல் உலகம் சுவீகரித்து பின் பாரீஸிலிருந்து 1969ல் பிரெஞ்சு மொழியிலும் அன்னா சாக்கியாவாவின் மொழி பெயர்ப்பில் மக்கள் பதிப்பகம் 1973ல் ஆங்கிலத்திலும் வெளியிட்டது.

பேராசிரியர் வோலாந்து (சாத்தான்) நடத்தும் இரவுநேர நடுநிசி விருந்திற்கு செல்லும் மர்காரிட்டா கையில் ஒரு புத்தகம். அது மாஸ்டர் எழுதிய நூலேதான். புனித பைபிளா என வோலாந்து கேட்கிறார். இது அதேதான். ஆனால் இதை படைத்தவர் ‘மாஸ்டர்’ இது எப்போதும் அச்சமேற்றி தன்னை விரட்டுவதாக இருக்கும் மாய செயல்பாட்டை ஏன் செய்யவில்லை என வோலாந்து (சாத்தான்) வினவுகிறார். அன்று புனிதவெள்ளி ஆனால் சாத்தானால் பறக்க முடியவில்லை இது வேறு நூற்றாண்டு மர்காரிட்டா சொல்வார் இங்கே பறக்க முடிந்தவர்கள் மனிதர்களே.. வானூர்த்தியில் சாத்தானுக்கு பறக்கும் ஆற்றலை பயிற்றுவிக்கும் மர்காரிட்டா… அவருக்கு பைலட் வேலை வாங்கித்தருகிறார். சோவியத்தின் அடர்ந்தகாடுகள் அற்புத சைபீரிய பனிபொழிவுகள்… எப்போதும் ஆர்ப்பரித்த அகண்ட கடல்கள் மற்றும் அந்த லெனின் சதுக்கம் என சுற்றி வரும் வோலாந்து தன் சொந்த அனுபவங்களை கடவுள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக எழுதுவார். தலைப்பு ஆண்டவரின் மன்றாட்டை கேட்டருளும் மானிடரே.. இந்த ஒரு வரியை எழுதுவதற்கு நீங்கள் அறிவியலின் அனுஉலைகள், அரசியலின் மரண முகாம்கள் என யாவற்றையும் உள்ளார்ந்து அக்னி பிரவேசம் செய்திருக்க வேண்டும். சோவியத் புரட்சியின் நூற்றாண்டில் அந்த சாத்தான்களின் சொர்க்கபுரி பற்றி வாசிக்கிறபோது ‘கற்பழிப்பு சாமியார்களை’ ஹெலிகாப்டரில் அனுப்பி நூறு மக்களின் சாவு ஓலத்திற்கு நடுவே சகல மரியாதைகளுடன் பாதுகாக்கும் காவிகளின் அரசாட்சி நமது மனசாட்சியை உலுக்குகிறது.

Related posts

Leave a Comment