You are here
நூல் அறிமுகம் 

ஸ்தாபனம்… மக்களிடமிருந்து மக்களுக்கு…

“பியானோவை வாசிக்க பத்து விரல்களையும் இயக்க வேண்டும்.சில விரல்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைத் தவிர்த்தால் அதை இயக்க முடியாது.பத்து விரல்களையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் இன்னிசை பிறப்பதில்லை.ஒரு நல்ல இசையை உருவாக்குவதற்கு பத்து விரல்கள் நயமாகவும் ஒன்றிணைந்தும் இயங்க வேண்டும்….” இசைக்கலைஞர் ஒருவரின் கருத்து இது என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால்,கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் தொடர்பாக செஞ்சீனப்புரட்சி நாயகர் மாவோ சொன்ன மேற்கோள் இது.இதை எதற்கு உவமையாக மாவோ சொன்னார்?

“கட்சிக்கமிட்டி தனது மையமான கடமையினை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில் மையமான கடமைகளுக்கு மத்தியில் மற்ற தளங்களில் வேலைகள் திறந்து விடப்பட வேண்டும்.தற்சமயத்தில் நாம் பல தளங்களில் இந்த கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.சில பிரச்சனைகளில் மட்டும் நமது மொத்தக் கவனத்தையும் செலுத்துதல் கூடாது.” என்று சொல்லுகிற மாவோ மீண்டும் பியானோவைக் கையில் எடுக்கிறார்—” எங்கெங்கே பிரச்சனைகள் உருவாகின்றனவோ அங்கெல்லாம் அவற்றின் மீது நமது கவனம் இருக்க வேண்டும்.இந்த முனையில்தான் நாம் ஆசிரியர்களாக முடியும். பியானோவை சிலர் நன்றாக வாசிப்பார்கள்.சிலர் மோசமாக வாசிப்பார்கள்.இதிலிருந்துதான் அவர்கள் உருவாக்கிய மெல்லிசையின் இசை மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். கட்சிக்கமிட்டியின் உறுப்பினர்கள் பியானோவை நன்றாக வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார் மாவோ.

“கட்சி அமைப்புகளின் தலைமை” என்ற கட்டுரையில் வருகிற உவமையின் அழகையும் அர்த்தத்தையும் அசை போட்டுப் பாருங்கள்.கட்சி ஸ்தாபனம், அதன் வழிகாட்டுதலில் இயங்கி வரும் பல்வேறு வெகுஜன அமைப்புகள், அவை முன்வைக்கும் கோரிக்கைகள்,அவற்றை வென்றெடுக்க அவை நடத்தும் போராட்டங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து போக வேண்டும்.இல்லாவிட்டால் இறுதி லட்சியமான புரட்சி என்பது நீள்கனவாகவே இருக்கும்.இந்த ஒத்திசைவின் அவசியத்தை,கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளில் இருக்க வேண்டிய ஒத்திசைவை பியானோவை இசைக்க வேண்டிய பத்து விரல்களின் உவமையில் சுட்டிக்காட்டுகிறார் மாவோ.
இந்தக்கட்டுரையுடன்,பின்வரும் நான்கு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.தலைப்பு மேலே தரப்பட்டுள்ளது.
ஜனநாயக மத்தியத்துவம் பற்றி… – பிரகாஷ் காரத்
மக்களிடமிருந்து மக்களுக்கு… – உ.வாசுகி
அகநிலைவாதத்தை எதிர்த்த போராட்டம் …
– சீத்தாரம் எச்சூரி
கட்சிக்கிளையும்,ஐக்கிய முன்னணி கலையும்—என்.குணசேகரன்
இன்றைய சூழலில் இடதுசாரிக்கட்சிகளின் நிலை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது.கம்யூனிஸ்ட் இயக்கங்களை நோக்கி ஏராளமான,கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் காலம் இது.விமர்சனங்கள் என்ற பெயரில் பலர் அவதூறுகளையே அள்ளி வீசுகிறார்கள்.சிலர் மிகவும் அக்கறையோடு ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்கள்.இந்தச்சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு,அதன் விதிகள்,கோட்பாடுகள்,இயங்குநெறிகள் பற்றியே,மேற்கண்ட கட்டுரைகள் பேசுகின்றன.இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த இதழான” மார்க்ஸிஸ்ட்” ஏட்டில் வெளியான ஐந்து கட்டுரைகள் இவை.இவற்றில், பிரகாஷ் காரத்தின் கட்டுரை,சமகாலத்தில் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு ஒரு பொருத்தமில்லாத,சர்வாதிகாரத் தன்மை கொண்ட ஒன்று என்ற விமர்சனங்களுக்கு தொகுப்புரையாக ஒரு மறுப்புக் கட்டுரை.தமிழில் இதை மொழிபெயர்த்துள்ள தூத்துக்குடி ஜி.ஆனந்தன் பாராட்டுக்குரியவர்.சீத்தாராம் எச்சூரியின் கட்டுரை,கட்சி உறுப்பினர்களிடையேயும்,தலைவர்களிடையேயும் நிலவக்கூடிய அகநிலைவாதப் போக்கைப் பற்றியும் அலசுகிறது.
வாசுகி,என்.குணசேகரன் இருவரும் கட்சிக்கிளை அளவிலும்,வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகள் அளவிலும்,நிலவுகிற பலவீனங்கள் பற்றியும் அவற்றை எதிர்த்துப்போராட வேண்டியதன் அவசியத்தை பற்றியும், ஐக்கிய முன்னணி அமைத்து கிளை அளவில் இயங்க வேண்டிய விதம் பற்றியும் தமது கட்டுரைகளில் விவாதித்துள்ளனர்.எண்பது பக்கங்கள் கொண்ட இந்த நூல் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும்,தலைவர்களும்,இடதுசாரி ஆதரவாளர்கள் மட்டுமன்றி விமர்சகர்களும் கூட படிக்க வேண்டிய ஒன்று.

Related posts

Leave a Comment