You are here
கட்டுரை 

வெளிச்சத்துக்கு வாங்க!

ரமணன் தினகரன்

மிகப் பழைய காலத்தில் ஆதிவாசிக் குழு ஒன்று இருந்தது. அவர்கள் இமயமலைக் காடுகளில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் சூரியன் மறையும் முன்பே தூங்கிவிடுவார்கள். சூரியன் உதித்து நன்றாக மேலே வந்த பிறகுதான் கண் விழிப்பார்கள். அதனால் அவர்கள் இருட்டைப் பார்த்ததே இல்லை.
ஒரு முறை உணவு தேடிச் செல்லும்போது ஒரு குகையின் வாயிலை அடைந்தார்கள். ஒருவன், இருட்டாக இருந்த குகைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே சென்ற சில நொடிகளில் பயங்கரமான அலறல் கேட்டது. உள்ளே சென்றவன் உடனே திரும்பி ஓடி வந்தான். உள்ளே இருட்டில் கண்மண் தெரியாமல் அவன் பாறைகளில் மோதிக்கொண்டதால் அவன் தலை உடைந்து ரத்தம் பெருகிக்கொண்டிருந்தது. அவன் மயங்கி வீழ்ந்தான். உடனே சிலர், அவனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக தூக்கிச் சென்றார்கள்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்த மக்கள், குகைக்குள் இருக்கும் இருட்டைக் கண்டு பயந்தார்கள். குகைக்குள் இருக்கும் இருட்டு என்பது ஒரு பயங்கரமான பேய்தான் என்று முடிவு செய்தார்கள். அடுத்து வந்த தலைமுறைகளெல்லாம் இதை நம்பின. வெகு காலமாக அவர்கள் குகை இருட்டு எனும் பெரிய பேய்க்குப் பயந்து கொண்டிருந்தார்கள்.

அப்படி இருக்கும்போது ஒரு இளைஞன் இது குறித்து சிந்தித்தான். குகைக்குள் இருட்டாக இருப்பது பேய்தான் எனும் விஷயத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை ஆராய்ந்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான். அவன் ஒரு நாள் தீப்பந்தத்துடன் குகைக்குள் செல்ல முற்பட்டான். “போகாதே, போகாதே! இருட்டுப் பேய் உன்னைக் கொன்றுவிடும்!” என்று எல்லோரும் அவனைத் தடுத்தார்கள். ஆனால், அந்த இளைஞன் துணிச்சலுடன் உள்ளே சென்றான். “இருட்டுப் பேயே, தைரியமிருந்தால் நீ என்னுடன் சண்டைக்கு வா!” என்று சவால்விட்டான்.
ஆனால், வெளிச்சம் வரவர இருட்டு விலகிச் சென்றது. இளைஞன், குகைக்கு வெளியே பயத்துடன் காத்திருக்கும் மக்களிடம் வந்து சொன்னான்:
“இந்த இருட்டுப் பேய் இருக்கிறதே, இது வெளிச்சத்தைப் பார்த்தால் பயந்து ஒளிந்துகொள்ளும். வெளிச்சத்தின் முன்னால் வருவதற்கு இருட்டுக்குத் தைரியமில்லை!”

அன்று முதல் மக்கள், குகைக்குள் உள்ள இருட்டுக்குப் பயப்படவில்லை. அவர்கள் தீப்பந்தங்கள் கொளுத்தி வைத்து குகைகளிலேயே பாதுகாப்பாக வசிக்கத் தொடங்கினார்கள்.

வெளிச்சத்தால்தான் இருட்டை அகற்ற முடியும். அறிவால்தான் பயத்தை வெல்ல முடியும். அறிவுதான் நம் சொத்து! அறிவுதான் நமக்கும் இந்த உலகத்துக்கும் வெளிச்சம்! கல்வியின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் அறிஞர்களின் வழிகாட்டுதல் மூலமாகவும் நல்ல நூல்கள் மூலமாகவும் நம் சிந்தனையை பிரகாசிக்கச்செய்ய முடியும். அந்தப் பிரகாசம் பலருக்குப் பயனளிக்கும்.

Related posts

Leave a Comment