You are here

பேச மறுக்கும் சமூகத்தின் அசிங்கம்

– பழனி ஷஹான்

நமக்குள் நிகழ்ந்திடாத அனுபவத்தின், நாம் அறியாத மனித வாழ்க்கையின் பக்கங்களைத் தூக்கிச் சுமப்பதே புத்தகங்களின் தார்மீகக் கடமையாக இருக்கின்றது. வ.கீரா-வின் எழுத்தில் யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “மோகினி” எனும் சிறுகதைத் தொகுப்பு அப்படியான வலிகள் நிரம்பிய வாழ்க்கையின் கதைகளையே நமக்குச் சொல்கிறது. கதைகளின் பெரும்பான்மையானவை, பாரதிராஜாவின் படங்களைப் போல கிராமத்தின் வாசனையால் நிரம்பியிருக்கின்றன. நம் ஆழ் மனதில் படிந்திருக்கும் கிராமத்தின் தோரணைகள் ‘மோகினியில்’ அப்படியே வெளிப்பட்டிருந்தாலும், அது சொல்லும் கதைகளில் சில கிராமத்தின் தனியுடைமையிலிருந்து சற்று விலகி நின்று காட்சியளிக்கின்றன.

ஒரு சொல் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது. அலிகள், அரவானிகள் என்கிற சொல்லுக்கு மாற்றாய் ‘திருநங்கைகள்’ எனும் சொல்லாடல் பிறந்தது. அதுவெறும் சொல் மாற்றமல்ல. ஓர் இனத்தின் அல்லது சமூகத்தின் மீதான கறையைத் துடைக்கும் புரட்சியாகும். ஆனால் திருநங்கை என்கிற சொற்பிரயோகம் அவர்களின் சமூக இருப்பை உறுதி செய்ததே தவிர, அவர்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றத்தையுமே நிகழ்த்தவில்லை. ‘திருநங்கைகள்’ மூன்றாம் பாலினமாய் அடையாளம் பெற்றிருந்தாலும் அவர்களை ‘அவை’ என்று அழைக்கும் குரல்களும், சொந்தக் குடும்பமே துரத்தியடிக்கும் துயரமும், எழுதப்படாத பாலியல் தொழிலாளர்களாக மட்டுமே இருக்க அவர்களை நிர்ப்பந்திக்கும் சமூக அமைப்பும்தான் இங்கு நிலவி வருகின்றன.

உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால், இந்த உலகத்தின் புனிதத்திற்கு தீட்டாய் மாறிவிடும் திருநங்கையின் குருதியொன்று கீரா.வின் எழுத்தில் வடிகிறது. அதுவும் திருநங்கைகளென்றாலே நகரவாசிகள்தான் என்கிற உருவாக்கத்திலிருந்து, கிராமத்தின் திருநங்கையை மிக இயல்பாகச் சொல்கிறார் கீரா.
கார்த்தி என்கிற கார்த்திகாவின் மரணம் துயரமானது. ‘நிறமற்றவளின் கண்கள்’ எனும் கதையில் கார்த்திகாதான் மையம். கார்த்திகா ‘கார்த்தியாக’ இருக்கவே விரும்புகிறாள். அவளின் உணர்வுகள் ஆண் பாலினத்தைப் பிரதிபலிக்கின்றன. கார்த்திகா பூப்பெய்தாமல் போவதற்கான காரணத்தை அறிந்த தந்தையும், மாமாவும் ஒரு காட்டிற்குள் வைத்து கார்த்திகாவை கோடரிக்கு இரையாக்குகிறார்கள்.

கரங்களில் திருநங்கைகளாக உருவம்பெறுபவர்கள், கிராமங்களில் முதிர்கன்னிகளாக கருணைக் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள். கார்த்திகாவின் ஆன்மா அழும் ஓசையை, அடுத்த தாளைத் திருப்ப முடியாமல் மனம் ஒடிகின்ற தருணத்தில் நம்மால் ஆழமாக கேட்க முடிகிறது.
சாதத் ஹசன் மண்ட்டோ ‘அவமானம்’ எனும் கதையில் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை ஆழமாகச் சித்தரித்திருப்பார். கீரா ‘தமிழு’ என்கிற கதையில் வேறொரு கோணத்தில் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சொல்லியுள்ளார். மண்ட்டோ நகரப் பெண்ணைச் சொன்னார். கீரா கிராமத்து ‘வைப்பாட்டி’யின் அவலத்தைக் கூறுகிறார்.

தன்னிறைவான கிராமத்தில் வளர்ந்த நான், எங்களூரில் பாலியல் தொழில் செய்யும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களைச் சகட்டு மேனிக்குத் திட்டும் ஆண்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் ஒருபோதும் பாலியலில் ஈடுபடும் பெண்ணின் முன்னால் கோப வசனம் பேசியது கிடையாது. ஆண்கள் உறவுக்குச் செல்லாமல், ஒரு பெண் தனித்து ‘விபச்சாரி’ ஆகிவிட முடியாது. அப்படியிருக்க பெண்ணை நோக்கி மட்டுமே ஏன் வசவுகள் செல்கின்றன? அவளிடம் செல்லும் ஆண்களை ஏன் சமூகம் கண்டுகொள்வதே இல்லை? என்கிற சீற்றமான கேள்வி என்னிடம் எப்போதும் உண்டு.

‘மோகினி’யில் வரும் ‘தமிழு’ ஊருக்கு முந்தானை விரிப்பவளின் மகள். ஆனால் ‘கற்பை’ வணங்குபவள். காதலால் ஒருவனிடம் ஏமாந்தவள், அவனைத் தவிர வேறு யாரிடமும் உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என சபதமாய் வாழ்கிறாள். அதேசமயம் தமிழுவை அடைந்தே தீரவேண்டும் என்கிற காமத்தின் போதையில், வம்படியாக அவளைப் படுக்கைக்கு அழைத்துப் பலர் தோற்றுப்போகிறார்கள். இவர்களுடன் தமிழுவின் முன்னாள் காதலனும், தமிழுவை மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறான். ஆனால் தமிழு மசியவில்லை. அவளின் கற்பை எந்த விலைகொண்டும் வாங்க முடியாதவர்கள், அவளைப் பிணமாக்கியேனும் தீண்டத் துடிக்கிறார்கள். வீட்டுக்குள் வைத்துக் கொளுத்தப்பட்ட தமிழுவின் கண்ணீர், தீயெனப் பொழிந்து அடங்கிவிடுகிறது. ஆணாதிக்கத் திமிரின் உச்சத்தைப் பேசிய இந்தக் கதைக்கு நேரெதிரான கதையை கீரா இன்னொரு இடத்தில் எழுதியுள்ளார்.

“ஏய் அறைஞ்சன்னா… வாடி.. நான் யார் தெரியுமில்ல? தஞ்சாவூர் கள்ளன்டி… கொன்னுடுவேன்… வந்து படுடி..” என்று சொல்லிய ராஜாக்கண்ணுவின் இடுப்பு விலாவில் எட்டி உதைக்கிறாள் இராப்பெண்ணின் அம்மா. “எச்சப் பொறுக்கிக்கு சாதி ஒரு கேடு” எனச் சொல்லி சென்றுவிடுகின்றனர் இராப்பெண்ணும் அவளது அம்மாவும். ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ என்கிற கதையில் வரும் காட்சிகள்தாம் இவை.
‘மோகினியின் உருவங்கள்’ என்கிற கதையில் லாரி டிரைவரான ராமசாமியை, பெங்களூர் நகரத்தில் வலம் வரும் பெண்ணொருத்தி கேவலமாகப் பார்த்துக் கடக்கிறாள். லாரி டிரைவரின் பணி என்பதால் அழுக்கேறிய சட்டை, கரி படிந்த முகம் எனக் காட்சியளித்திருக்கிறான் ராமசாமி. இந்தத் தோற்றத்தை வைத்துத் தன்னை ஒரு பெண் அருவருப்பாகப் பார்த்துச் சென்றதை ராமசாமியால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நிம்மதியிழந்த அவன், தனது தாழ்வுமனப்பான்மையைப் போக்கிக்கொள்ள விலைமாதர் ஒருத்தியிடம் தன் வலிகளை இச்சைகளின் வழியாக வன்மமாகத் தீர்த்துக்கொள்கிறான்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “பிசகு, லெச்சுமி” என்கிற கதைகளும் வாழ்வின் கொடும் பக்கங்களைப் பேசுபவைகளாகவே இருக்கின்றன. இருள், துயரம், ஆற்றாமை எனச் செல்லும் இத்தொகுப்பில் ஒரு நகைச்சுவையான கதையும் உண்டு. ‘பெரிய கவுண்டன் வில்லேஜ்’ என்கிற ஊர் நாளடைவில் ‘குறத்திக் கவுண்டனூர்’ ஆன கதைதான் அது. கொஞ்சம் வித்தியாசமான இக்கதையில் நுட்பமான அரசியலும் அடங்கியிருப்பதை வாசிப்பில் உணரலாம். இந்த எல்லாக் கதைகளையும் தாண்டி ‘காற்றைக் கிழித்த பாட்டு’ என எழுதப்பட்டுள்ள கதை சொல்லும் சமூகங்களின் வாழ்வு, ஆண்டாண்டு காலமான விடுதலை முழக்கத்தின் நியாயத்தை தகுந்த கதாபாத்திரங்களைக் கொண்டு வரைந்துள்ளது.

மேல்சாதி வீட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. இறந்த சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். பிணத்தை எரியூட்டுகிறார்கள். இதற்கு மத்தியில் நடைபெறும் சமூக ஏற்றத்தாழ்வுகளைத்தான் கீரா அக்கதையில் துல்லியமாகப் படம்பிடித்துள்ளார்.
இரங்கல் பாடலைப் பாடும் கலியன் என்கிற கதாபாத்திரத்தையும், அவன் வழியே வெளிப்படும் கலையையும் கதை கச்சிதமாகச் செதுக்கியுள்ளது. உழைத்து முடித்தவர்கள் தங்களுக்கான கூலியைப் பெறுவதற்காக அடையும் அவமானங்களை விவரிக்கும் இடம் மனதில் கீறலை உண்டாக்கிச் செல்கிறது. வண்ணாத்தியம்மா, கலியன் போன்றோர் மேல்சாதியினர் வீசியெறியும் காசுகளைப் பொறுக்கும் அவலத்தையும், தங்களுக்கான கூலியாக கீழே வீசப்படும் காசுகளைக்கூட குனிந்து எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டு, அதனை எடுத்துத் தரும் உரிமை இன்னொரு சாதிக்குத்தான் உண்டு என்கிற குடிசக்கிலியர்களின் நிலையைப் பேசும் துயரத்தையும் வாசிப்பதற்கே மனம் கனக்கிறது. ஆனால் இதுதான் சமூகத்தின் நடைமுறை என்கிற உண்மையை கீரா நுட்பமாகச் சென்று எழுத்தாக்கியிருக்கிறார்.
“கிழட்டு மூதேவி… நீ வாழும் போதும் என்ன மனுசனா பார்க்கல… செத்தப்புறமும் திமிரா கிடப்பியா… எனக்கூறி அம்பேத்கரும் அவனுடனிருந்த முனியனும் எரியும் சிதையில் பிணத்தை மூட்டுக்குச்சியால் தூக்கி நிறுத்தி அடிக்கத் துவங்குகிறார்கள்” என்பதாகக் கதையின் இறுதியில் ஒரு சம்பவம் வருகிறது. அதில் ஒடுக்கப்படுபவர்கள் தங்களின் வலியைப் போக்கிக்கொள்ளத் துடிக்கும் இடத்தை கீரா அவ்வளவு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அதேபோல ‘அம்பேத்கர்’ என்கிற கதாபாத்திரத்தை, அருமையான குறியீடாக கீரா கையாண்டிருக்கிறார்.

கீரா பேசும் கதைகள் அனைத்தின் வடிவமும் ஏதோ ஒரு புள்ளியில் நீதியைக் கேட்பவையாகவே உள்ளன. “மோகினி” என்பது லாரி ஓட்டுநர்களின், லாரி கிளீனர்களின் வாழ்க்கைச் சித்திரத்தையே மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. அதன் உள்ளீடாகவே பாலியல் தொழிலாளியின் வலியையும், சாதிய ஒடுக்குமுறையையும், திருநங்கையின் துயரக் கதையையும் பேசிச் செல்கிறது இத்தொகுப்பு.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செட்டிக்குளத்தின் வாசனையை எல்லோராலும் நுகர இயலும் வகையில், வட்டார மொழியைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கீரா. குறிப்பாக படைப்பிலக்கியங்களில் சிறு அளவுகூட பேசப்படாத பெரம்பலூர் வட்டார வழக்கை கீரா முத்தாய்ப்பாகச் சொல்லியுள்ளார். மேலும் லாரிப் பணியாளர்களின் வாழ்க்கையையும், வலியையும் கீரா தனது கதைக் களமாக்கியிருப்பது கவனிக்க வேண்டியதாகும்.

பாலகுமாரன் எழுதி பரவலாக அறியப்பட்ட ‘இரும்புக் குதிரைகள்’ என்கிற நாவலும் லாரித் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசும் முக்கியமான ஒரு படைப்பு என்றாலும், கீரா அளவிற்கு பாலகுமாரன் நிஜத்தை நெருங்கிவிடவில்லை. பாலகுமாரன் புறஅனுபவங்களின் வழியாகச் சொன்ன வாழ்க்கையை, கீரா அகஅனுபவங்களின் மூலம் எழுதியிருக்கிறார். ஒரு லாரி ஓட்டுநராக, க்ளீனராக தான் அனுபவித்ததை “மோகினியாக” வெளிப்படுத்தியுள்ளார்.

“சிறுகதை என்பது வாழ்க்கையின் சிறிய சாளரம்” எனக் குறிப்பிட்டுள்ளார் புதுமைப்பித்தன். தனது அண்ணன் தனக்குப் புதுமைப்பித்தனைத் தெளித்தார் என தனது உரையில் சொல்லும் கீரா, புதுமைப்பித்தனின் கூற்றில் நின்றே அவருடைய கதைகளை விரித்திருக்கிறார். கீரா தனது படைப்புகளின் வழியே ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கிறார். பேச மறுக்கும் நிதர்சனங்களை, “மோகினி” உடைத்திருக்கிறது.

Related posts

Leave a Comment