You are here
Uncategorized 

புதிய ஆராய்ச்சி

சிற்றிதழ் அறிமுகம்

ஆய்வாளர், ஆசிரியர், தோழர் நா.வானமாமலை ஒரு சகாப்தம்.தென் தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் ஓர் அங்கமாக ஓர் அறிவியக்கத்தை உருவாக்கிய முன்னோடி.எண்ணற்ற அறிவுஜீவிகளை மார்க்சியப் பாதையில் நடைபயின்று, மார்க்சியப் பார்வையில் தமிழக வரலாறு,சமூகம்,இலக்கியம்,அரசியல்,அழகியல் ஆகியவற்றை நுணுகி ஆய்வு செய்யப் பழக்கியவர். அவர்களது பணிக்கும் அர்ப்பணிப்பிற்கும் காரணமான ஓர் ஆதர்சமாக விளங்கியவர். அவர்களது ஆய்வும்,விவாதங்களும் அரங்கேற ஓர் ஊர்தியாக ‘ ஆராய்ச்சி ‘ என்ற தனித்துவம் கொண்ட இதழையும் நடத்தியவர். தமிழக மக்கள் தாங்கள் வாழும் மண்ணையும் அதன் பாரம்பரியத்தையும்,பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளுக்கு நடக்க வேண்டிய திசைவழியையும் சுட்டிக்காட்டி அரும்பணியாற்றியது ஆராய்ச்சி.
நா.வா.வின் பாரம்பரியத்தில் அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடரும் விதமாக அவரின் மாணவர்கள்,தோழர்களால் இப்போது நடத்தப்படும் இதழ் ‘ புதிய ஆராய்ச்சி. ‘ ஆண்டிற்கு இரு இதழ்களாக வெளிவரும் எனத் தெரிகின்றது. 2016, ஜூலை – டிசம்பர் இதழ் 6-ஆம் இதழாக வந்துள்ளது. இந்த இதழ் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் நொபொரு கராஷிமா(1933-2015 ) சிறப்பிதழாக வந்துள்ளது. நொபொரு கராஷிமா அவர்கள் எழுதிய இரு கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. கராஷிமா தான் எப்படி தமிழக வரலாற்று ஆய்விற்கு வந்து சேர்ந்தார் என்பதை சுவைபட விளக்கும் கட்டுரையும்,தமிழ்நாட்டில் தீண்டாதார் எனும் முக்கியமான கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. அத்தோடு கராஷிமா அவர்களுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியவரும் தன்னளவிலேயே தமிழக வரலாற்று ஆய்வுக்குப் பெரும் கொடை அளித்தவருமான அறிஞர் எ.சுப்பராயலு அவர்களின் ‘ சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள் ‘ எனும் மிக முக்கியமான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

அது தவிர, பக்தவத்சல பாரதி, அ.கா.பெருமாள், ந.முத்து மோகன் உள்ளிட்ட கவனங்கொள்ள வேண்டிய அறிஞர்களின் பங்களிப்போடு கனமான
இதழாக ‘ புதிய ஆராய்ச்சி ‘ இதழ் 6 வந்துள்ளது. இதழ் 7-ஐ எதிர்பார்க்க வைத்துள்ளது. வழக்கமான தமிழ் இலக்கியம், வரலாறு ஆகியவற்றைத் தாண்டி, தமிழகத்தின் பொருளாதாரம், விவசாயம்,தொழில் உற்பத்தி, வளர்ச்சி மேம்பாடு, சுற்றுச்சூழல் ஆகிய பரப்புகளையும் புதிய ஆராய்ச்சி தன் கவனப்பரப்புகளாய்க் கொள்ள வேண்டும் என்பது நமது விருப்பமும், வேண்டுகோளுமாய் அமைகிறது. ஆசிரியர் ந.முத்துமோகன். பொறுப்பாசிரியர் பேரா.நா.இராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவும் பேரா.ஆ.சிவசுப்ரமனியன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட ஒரு நெறியாளர்கள் குழுவும் உள்ளது. 168 பக்கங்கள் கொண்ட இதழ் 6 விலை ரூ.160. விற்பனை உரிமை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,சென்னை.
பொறுப்பாசிரியர்–+919487809805 மின்னஞ்சல் – newresearch.tamil@gmail.com

Related posts

Leave a Comment