You are here
கட்டுரை 

நினைவாற்றல்

விஜய்

“படித்தவற்றை என்னால் நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் தேவையான நேரத்தில் ஞாபகம் வருவதில்லை…” என்று வருத்தப்படுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், மனித மூளைக்கு மிகவும் அபாரமான நினைவாற்றல் உண்டு என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள், மனித மூளையில், இரண்டு குய்ண்டிலியன் (Quintillion: 1,000,000,000,000,000,000) அளவு சிறுசிறு செய்திகளைச் சேமித்து வைக்க முடியும் என்று சொல்கிறார்கள். மனித மூளை, 40 வகை மொழிகளை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவு சக்தியுடையது என்றும் கூறப்படுகிறது.
இந்தளவு கொள்ளளவு கொண்ட மனித மூளையில் நாம் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி சேமித்து, பாதுகாப்பாக முறைப்படி வைப்பதில்லை. நினைவாற்றல் குறைபாட்டுக்கு இதுதான் காரணம்.

நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, தொடர்பு ஏற்படுத்தும் முறை (Association). பொதுவாக நம் மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிய தகவல்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போதுதான் நாம் கற்ற பாடம் நினைவில் நிற்கிறது.

உதாரணமாக, சிறுவயதில் நமக்கு யாராவது சில தகவல்களைச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நாமறியாது நம் மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயினும், பிற்காலத்தில் அதனுடன் தொடர்புடைய ஏதேனும் சம்பவங்களின்போது, அந்த தகவல்கள் நாமறியாது ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும். அப்போது, சிறு வயதில் நாம் கேட்டறிந்த விஷயங்கள் நினைவுக்கு வரும்.

இவ்வாறு, கற்கும் விஷயங்களை ஏதாவது ஒரு தகவல் அல்லது சம்பவத்துடன் தொடர்புபடுத்திக்கொண்டால், தேவை ஏற்படும்போது எளிதில் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும்.

நினைவாற்றலை வளர்க்க உதவும் மற்றொரு முறை காட்சிப்படுத்துதல் (Visualisation). அதாவது, மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களின் வாயிலாக நாம் பெற்றுக்கொண்ட தகவல்களை காட்சியாக உருவாக்கி மனதில் நிலைநிறுத்திக்கொள்வது.

இந்த அடிப்படையில் ஒரு தகவலை நினைவில் வைத்துக்கொள்ளும்போது, கற்பனை செய்து, ஒரு காட்சியை உருவாக்கிக்கொள்வது அவசியமாகும். படைப்புத் திறன் (Creative power) மூலம் நினைவில் கொள்ளும் இந்த முறையையே, இன்று பலர் தங்கள் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக, வரலாற்றுப் பாடம் படிக்கும்போது அதனுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தொலைக்காட்சித் தொடர்போன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் தேவையான நேரத்தில் அது சுலபமாக நினைவுக்கு வரும்.

இவ்வாறு, கடுமையான நீண்ட சொற்கள், சூத்திரங்கள், வாய்ப்பாடுகள் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ள, உங்களுக்கு எளிதான வழிமுறையைக் கையாள வேண்டும்.

உதாரணமாக, கவிதைகள், சூத்திரங்கள், மூலகங்களின் பட்டியல் ஆகியவற்றை, நீங்கள் விரும்பும் பாடலொன்றின் மெட்டுக்கு ஏற்ப, அல்லது ஒரு கதையாக உருவாக்கி மனப்பாடம் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது அது என்றும் மறந்து போகாதிருக்கும்.

இவை தவிர, கற்கும் செயல்களின்போது நினைவாற்றலை வளர்த்துக்கொள்வதிலும் அதை தக்கவைத்துக்கொள்வதிலும் கற்கும் சூழல், மனநிலை, சுகாதாரம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

Related posts

Leave a Comment