You are here
Uncategorized 

சிங்கத்தின் நேர்காணல்

லாத்விய நாடோடிக்கதை

ஓவியர்: இலோனா சிபி
தமிழில்: கயல்விழி

காட்டில் ஒரு சிங்கம் விலங்குகளின் ராஜாவாக வாழ்ந்துவந்தது. அதற்கு மிகவும் வயதாகிவிட்டது. முன்பைப்போல பாய்ந்து சென்று வேட்டையாட முடியவில்லை. இனி எப்படி உயிர்வாழ்வது என்று அது தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது. கடைசியில், விலங்குகள் அனைத்தையும் தன் குகைக்கு அழைத்துச் சொன்னது:
“அன்பான என் குடிமக்களே, என் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நான் சீக்கிரம் இறந்துவிடுவேன். அதற்கு முன்பு உங்களில் சிறந்த ஒருவரை என் வாரிசாகத் தேர்ந்தெடுத்து இந்தக் காட்டுக்கு ராஜாவாக நியமித்துவிட்டால் என் கடமை முடிந்துவிடும். அதன் பிறகு நான் நிம்மதியாக இறந்துபோவேன். அதனால் உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேர்காணல் செய்து உங்கள் திறமையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும்.”

காட்டுக்கு ராஜா ஆகிவிடவேண்டும் என்று எல்லா விலங்குகளும் ஆசைப்பட்டன. எனவே அவை போட்டிபோட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக நேர்காணலுக்கு வந்தன.
ஒருநாள் நரியும் நேர்காணலுக்காக சிங்கத்தின் குகைக்கு வந்தது. அறிவுள்ள அந்த நரி, உடனே சிங்கத்தின் குகைக்குள் நுழையாமல் வெளியே நின்று கவனித்தது. விலங்குகள் சிங்கத்தின் குகைக்குள் சென்ற காலடித் தடங்கள் இருந்தன. ஆனால் எந்த விலங்கும் வெளியே வந்த காலடித் தடம் இல்லை. என்ன நடந்திருக்கிறது என்று நரி புரிந்துகொண்டது.

அப்போது மிகவும் பசியுடன் இருந்த சிங்கம், குகைக்கு வெளியே எட்டிப்பார்த்து நரியை அழைத்தது: “அன்பிற்குரிய நரித் தம்பி, ஏன் அங்கேயே நின்றுவிட்டாய்? விரைந்து உள்ளே வா. நேர்காணலுக்கு நேரமாகிவிட்டது! பயப்படாதே. என் கேள்விகள் எல்லாம் மிகவும் எளிமையாகத்தான் இருக்கும்! காட்டின் ராஜாவாக ஆவதற்கு உனக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது!”

அப்போது நரி புன்னகையுடன் பதில் சொன்னது: “ராஜா அவர்களே, உங்கள் குகைக்கு நிறைய விலங்குகள் வந்த காலடித் தடங்கள் தெரிகின்றன. ஆனால் எந்த விலங்கும் வெளியே சென்ற தடம் தெரியவில்லை. எனவே அந்த விலங்குகளெல்லாம் உங்கள் குகைக்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவற்றில் ஒன்றையே உங்கள் வாரிசாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்!”
இப்படிச் சொல்லிவிட்டு அந்த நரி வாலை ஆட்டியவாறே அங்கிருந்து ஓடிச் சென்றது.

Related posts

Leave a Comment