You are here
நூல் அறிமுகம் 

குழந்தைகளின் நூறு மொழிகள்

மொழி, பண்பாடு, கல்வி குறித்த கட்டுரைகள்

ச. மாடசாமி

வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன.
கல்வியிலும் கலாச்சாரத்திலும் பேச்சிலும் மொழியிலும் தட்டுப்பட்ட மேடுபள்ளங்களை அறிந்தது இந்த வெளிச்சத்தின் வழிதான்.
நான் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இந்த வெளிச்சத்தில் கிடைத்ததுதான்.
இது சன்னமான வெளிச்சம். இருந்தபோதும், இதன்மீது இருட்டு வந்து அடைந்தது இல்லை.
பேச்சிலும், தோற்றத்திலும், அறிவாளித் தனத்திலும் மிகச் சாதாரணமாய்த் தெரிவோர் இடையறாமல் இந்த வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருக்கையில் இருட்டு எப்படி வரும்?…
எளிய மக்களோடு கலக்கையில்தான் என் இறுக்கம் நெகிழ்கிறது. மெல்லக் கற்ற மாணவர்கள்தான் ஆத்மார்த்தமாய் என்னோடு நெருங்கி இருந்திருக்கிறார்கள்.
என்றென்றைக்கும்நம்பிக்கைக்குரிய அவர்களுக்காகவே நான் தொடர்ந்து பேசுகிறேன். எழுதுகிறேன்.

ச. மாடசாமி

கல்வி,கலாச்சாரம்,மொழி,பேச்சு உட்பட சமூகத்தின் நிலப்பரப்பில் எத்தனையோ மேடு பள்ளங்கள். அவற்றை இனங்கண்டு பாதுகாப்பாய் சமூகத்தைச் சமன் செய்ய ஒரு வெளிச்சம் தேவையாயிருக்கிறது. பேரா.மாடசாமி அவர்களுக்கு வகுப்பறையும்,அறிவொளியும் அந்த வெளிச்சத்தை வழங்கியிருக்கின்றன. மிகச்சன்னமானதுதான் எனினும் அதில் இருட்டு அடையவில்லை. அவர் தான் பெற்ற வெளிச்சத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென விரும்புகிறவர். சமீப காலமாக அவர் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பு “ குழந்தைகளின் நூறு மொழிகள் “. புத்தகம் பேசுது,புதுவிசை,செம்மலர் உள்ளிட்ட பல இதழ்களில் அவர் எழுதி வெளிவந்தவை இவை.

கற்றுக்கொள்வதற்கும்,புரிந்து கொள்வதற்கும் இடையே உள்ள தூரம் ஓர் இடைவெளி எனில்,புரிந்து கொள்வதற்கும்,செயல்படுத்துவதற்குமான
இடைவெளி மற்றோர் இடைவெளி. இதில் தொடங்கும் கட்டுரை இத்தாலியில் உள்ள ரெக்கியோ எமிலியா என்ற சிறு கிராமத்துப் பள்ளியை நமக்கு அறிமுகம் செய்கிறது., அதன் முதல் ஆசிரியர் லோரிஸ் மாலகுஸ்ஸி. குழந்தைகள் பேசுவதற்கு நூறு மொழிகள்,அவர்கள் கண்டுபிடிக்க நூறு உலகங்கள் இருக்கின்றன என்று சொன்னவர் அவர்.

ஐரோப்பிய வகுப்பறைகள் வற்புறுத்திய சுதந்திரம், சோஷலிச நாட்டு வகுப்பறைகள் முன்னுரிமை தந்த சமூகச்சிந்தனை—இரண்டின் இணைப்பு என ரெக்கியோ எமிலியாவைச் சொல்லலாம் என்பது மாடசாமியின் பதிவு. ஐந்து வயதேயான சிறுமி ஒருத்திக்கு ஒரு சந்தேகம்: “ டீச்சர், பூ எப்படிப் பூக்கிறது?”
டீச்சரின் பதில்:” நீயே கண்டுபிடிக்கலாம் பெண்ணே, சுலபம் “ இதில் ஆர்வமுள்ள, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குழு ஒன்று தயாராகிறது. பள்ளியின் ஓர் ஓரத்தில் சிறு பூந்தோட்டம் போடுகிறார்கள் அந்தக் குழுவினர். பெற்றோரும்,ஆசிரியர்களும் பக்கபலமாக நிற்கிறார்கள். அந்த மாதம் முழுக்க பூந்தோட்டம்தான் பாடப் பொருள். அதை மையமாகக் கொண்ட நடனங்கள்,பாடல், என பல்வேறு வடிவங்களில் குழந்தைகளே பூக்களின் உலகை அறிந்து கொள்கிறார்கள்.

வகுப்பறைச்சுவர்கள் குழந்தைகளின் கைகளுக்குப் போவதன் மூலம் ஜனநாயக வகுப்பறையின் முதலடியை எடுத்து வைத்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டுகிறார் மாடசாமி.லோரிசின் கவிதையின் சில வரிகள்:
குழந்தைகளிடம் நூறு மொழிகள் ! நூறு சிந்தனைகள் !.
குழந்தைகள் விளையாடுவதும் கற்றுக்கொள்வதும் நூறு வழிகளில்..!
அவர்களின் ஆச்சரியம் நூறு விதம்..! மகிழ்ச்சி நூறு விதம்!
புரிந்து கொள்ள கண்டுபிடிக்க கனவு காண அவர்களுக்கு
நூறு உலகங்கள்..!

இவ்வகையான வெவ்வேறு கற்றல்,கற்பித்தல் அனுபவங்களின் சாறாய்ப் பெருகும் கட்டுரைகள். சிறு சிறு வாக்கியங்கள். இதயத்துடன் உரையாடும்
மொழிநடை.நாம் தவற விடும் பல பொக்கிஷங்கள் மாடசாமியின் கூரிய பார்வைக்குள் அகப்பட்டு விடுகின்றன. தான் தேடிக்கண்ட அவற்றை அவர் நம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார். இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு பயன்பெறுவது நம் கடமை..

Related posts

Leave a Comment