You are here

கிளிப் பேச்சு

தொகுப்பு: ஜார்ஜ் அலெக்ஸ்

அதிசயப் பாட்டு
‘கிளப் விங்டு மானக்கின்’ (Club Winged Manakin) எனும் பறவையின் பாட்டு மிகவும் அபூர்வமானதாகும். வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத ஒரு சிறப்புத் தன்மை இந்தப் பறவையின் பாட்டுக்கு உண்டு. அது என்னவென்றால், இந்தப் பறவை தன் வாயால் பாடுவதில்லை. தன் இறக்கைகளால் ஒலி எழுப்புகிறது. இந்த ஒலி உரத்த ஓசையுடன் ஒரே விதமாக இருக்கும்.

தன் தோழியைப் பார்த்த உடனே மானக்கின் ஆண் பறவை, தன் இரண்டு இறக்கைகளையும் பட்டென்று மேல் நோக்கி விரிக்கும். அப்போது இறக்கைகளில் ஏற்படும் அதிர்வு, பாட்டாக வெளிவரும். இந்தப் பறவை இறக்கை உயர்த்துவதும் பாடுவதும் சில நொடிகளுக்குள் முடிந்துவிடும். இது இப்படியே விட்டு விட்டுப் பாடிக்கொண்டேயிருக்கும்.

இந்தப் பறவைகள் கொளம்பியா மற்றும் ஈக்வடார் வனங்களில் வசிக்கின்றன.
மனிதனுக்கு வால் இருக்கிறதா?
நான்கு வாரம் வயதான மனிதக் கருவின் படங்களைப் பார்த்தால் வால் இருப்பது தெளிவாகத் தெரியும். ஏறத்தாழ ஆறு வாரம் ஆகும்போது இந்த வால், உடலோடு சேர்ந்து மறைந்துவிடும். இப்படி மறையாதபோதுதான் அபூர்வமாக எப்போதாவது, வாலுடன் சில மனிதக் குழந்தைகள் பிறக்கின்றன.

ஆனால், நமக்கு வெளியே வால் இல்லை என்றாலும் இதன் அடையாளமாக ஒரு எலும்பு, முதுகெலும்பின் முடிவுப் பகுதியில் மிச்சமிருக்கிறது. நம் முதுகெலும்பின் முனையிலுள்ள ‘கோக்ஸிக்ஸ்’ (Coccyx) எனும் வால் எலும்பு, மனிதர்களின் மூதாதைகளுக்கு வால் இருந்தது என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.
மரக் கிளைகளில் விழாமல் பற்றிக்கொண்டிருப்பதற்கும் உடலின் சமச்சீர் தன்மையை (Balance) முறைப்படுத்தவும்தான் நம் மூதாதைகள் வாலைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இரண்டு கால்களால் நிமிர்ந்து நிற்பதற்கு ஆரம்பித்தபோது மனிதர்களுக்கு வால் தேவையற்றதாகிவிட்டது. அவ்வாறு காலப்போக்கில் சிறுகச்சிறுக வால் இல்லாதுபோய்விட்டது.

தீயில் சாகாத செடி
எதையும் கருக்கி சாம்பலாக்கும் தீயில் வளரும் செடி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இது உண்மைதான். ஆஸ்திரேலியாவிலும் நியூகினியாவிலும் உள்ள புற்பரப்புகளில் வளரும் ‘பாங்க்சியா’ (Banksia) எனும் செடி, தீயின் வெப்பத்தில் முளைத்து வளரும். இந்த செடிக்கு கனத்த மேல் ஓடு கொண்ட விதைகள் உண்டு. கோடையில் புற்களுக்குத் தீப்பிடித்து காய் சூடாகும்போது மேல் ஓடு உடைந்து விதை மண்ணில் விழும். மழை பெய்யும்போது அது அந்த இடத்தில் முளைக்கும்.

சிரிப்பு
சிரிப்பு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிரிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சிரிக்கும்போது வயிறு, சுவாசப்பை, முகம், முதுகு ஆகிய இடங்களில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அப்போது சுவாசம் விரைவாக நடக்கும், அதிகமான ஆக்ஸிஜன் உள்ளே செல்லும்.
சிரிப்பு, மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சிரிக்கும்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பொருளின் (Antibody) உற்பத்தியும் விரைவுபடுத்தப்படுகிறது.

இப்படி சிரிப்பு உடலின் இயக்கத்துக்கு பல விதங்களில் உதவுவதால்தான், சிரித்தால் ஆயுள் அதிகரிக்கும் என்றும் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றும் சொல்கிறார்கள்.
நீலநிறத் தங்கம் (Blue gold)
நீலநிறத்தில் தங்கம் இருக்கிறது. ஆனால் அதை முற்றிலும் தங்கம் என்று சொல்ல முடியாது. இரிடியத்தையும் (Iridium) தங்கத்தையும் ஒரு பிரத்தியேக விகிதத்தில் கலந்துதான் நீலநிறத் தங்கம் உருவாக்குகிறார்கள். இப்படி நீலநிறத் தங்கம் உருவாக்கும் தொழில்நுட்பத்தை ‘பிளாஸ்மா வாக்வம் பிரஷர் காஸ்டிங்’ (Plasma vacuum pressure casting) என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வகையான தங்கத்துக்கு சந்தையில் மிகவும் தேவை இருக்கிறது.

தங்கத்துடன், பல்லேடியம் (Palladium), மக்னீசியம் (Magnesium), நிக்கல் (Nickel) ஆகிய உலோகங்களைச் சேர்த்து உருவாக்குவது வெள்ளைத் தங்கமாகும் (White gold). தங்கத்துடன் ரோடியம் (Rhodium), ருதினீயம் (Ruthenium) முதலியவற்றைச் சேர்த்து உருவாக்குவது கருப்புத் தங்கம் (Black gold). தங்கமும் வெள்ளியும் சேர்த்து உருவாக்குவது பச்சைத் தங்கம் (Green gold). தங்கமும் செம்பும் சேர்த்து உருவாக்குவது சிவப்புத் தங்கம் (Red gold). இப்படிப்பட்ட தங்க வகைகளையெல்லாம் ஆபரணங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

பூனைத் தீவு
ஜப்பானில் ‘தஷிரோஜிமா’ (Tashirojima) எனும் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவில் ஏறத்தாழ நூறு மனிதர்கள்தான் வசிக்கிறார்கள். ஆனால், இங்கு ஏறத்தாழ மூவாயிரம் பூனைகள் இருக்கின்றன. இந்த இடம் பூனைகளின் தீவு என்றே அறியப்படுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த தீவில் தொடங்கப்பட்ட துணி மில்லின் தொழிலாளர்கள்தான் இங்கே பூனைகளைக் கொண்டு வந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு துணி மில் பூட்டப்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். ஆனால், அவர்கள் யாரும் பூனைகளைத் திரும்பக் கொண்டு செல்லவில்லை. அதனால் அங்கே பூனைகள் பெருகிவிட்டன.
அங்கே மீன் பிடித்து வாழும் தொழிலாளர்கள், பூனைகளைத் தங்கள் அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள். இன்று இந்தத் தீவு முக்கியமான சுற்றுலாத் தளமாக இருக்கிறது. ஆனால் இங்கே பயணிகளுடன் நாய்களை அனுமதிப்பதில்லை. இது நாய்கள் தடைசெய்யப்பட்ட இடம்.

மலரும் தெருவிளக்கு
கீழே ஆட்கள் வந்து நின்றால் பூபோல மலரும் தெருவிளக்குகள்! ஜெருசலேமில்தான் இந்த அதிசயக் காட்சி. பூ மலர்வதற்கு, பிரத்தியேக ‘உணரி’கள் (Sensor) உதவுகின்றன. இந்த விளக்குகள் வெளிச்சம் தருவதற்கு மட்டும் பயன்படவில்லை. வெயில் நேரத்தில் நிழலும் கொடுக்கின்றன.

தும்மும் குரங்கு (Rhinopithecus strykeri)
மழையில் நனைந்தால் இந்த வகைக் குரங்குகள் இடைவிடாமல் தும்மிக்கொண்டிருக்கும். ஏன் தெரியுமா? இவற்றுக்கு சப்பை மூக்காக இருப்பதால் மழை நீர் நேரடியாக மூக்கின் உள்ளே சென்றுவிடும். பிறகு இவை தொடர்ந்து தும்மிக்கொண்டிருக்கும். மழை பெய்யும்போது மூக்கில் தண்ணீர் சென்றுவிடாமல் இருப்பதற்காக இவை கால்களுக்கிடையில் முகத்தைக் குனிந்துகொள்ளும். இந்தக் குரங்குகள் வடக்கு மியான்மரில் இருக்கின்றன.

செடியிலிருந்து நெகிழி (Plastic)
சில வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தியோ சில தாவரங்களிலிருந்தோ உருவாக்கும் நெகிழிதான் உயிர்ம நெகிழி (Bio plastic). சாதாரண நெகிழிகள் எவ்வளவு காலம் ஆனாலும் மண்ணில் மக்கிக் கலக்காது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உயிர்ம நெகிழிகள் மண்ணில் மக்கிக் கலந்துவிடும். 1926 இல் உயிர்ம நெகிழியைக் கண்டுபிடித்தவர் பிரெஞ்சு ஆய்வாளர் மோரிஸ் லெமோய்க்னே (Maurice Lemoigne) ஆவார். ‘பாலி ஹைட்ராக்ஸி புட்டிரேட்’ (Poly hydroxy butyrate (PHB)), ‘பாலி ஹைட்ராக்ஸி ஆல்கனோட்’ (Poly hydroxy alkanote(PHA)) ஆகியவையே முக்கியமான உயிர்ம நெகிழிகளாகும். தாவர எண்ணெயும் சர்க்கரையும் சில வகை பாக்டீரியாக்களும் சேர்த்துதான் இப்படிப்பட்ட நெகிழிகளை உருவாக்குகிறார்கள். சோளத்திலிருந்து தயாரிக்கப்பட்டும் மற்றொரு வகை நெகிழிதான் ‘பாலி லாக்டிக் ஆசிட்’ (Poly lactic acid (PLA)).

வாழைப்பழம்
ஒரு ஆப்பிளைவிட அதிகமான ஊட்டச் சத்து ஒரு வாழைப்பழத்தில் இருக்கிறது. ஆப்பிளில் இருப்பதைவிடவும் இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட்டும் ஐந்து மடங்கு விட்டமின் ஏ – வும் இரும்பும் மூன்று மடங்கு பாஸ்பரஸும் வாழைப்பழத்தில் இருக்கின்றன. இவற்றைத் தவிர, பொட்டாசியமும் பைபரும் விட்டமின் சி – யும் இருக்கின்றன. அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் (American diabetes association)அறிக்கையின்படி, சர்க்கரை நோயாளிகளும் வாழைப்பழம் சாப்பிடலாம். சக்தியளிக்கும் பானங்களிலிருந்து கிடைப்பதைவிட அதிகமான சக்தி வாழைப்பழத்திலிருந்து கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்ற சிறந்த உணவு வாழைப்பழம்.

Related posts

Leave a Comment