You are here

ஆழ்கடல் புதையல்கள்

பெர்னத் பிரான்சிஸ்

அலைகடலைப் பார்ப்பதற்கு நமக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் கடலின் அடியில் என்னவெல்லாம் ஒளிந்திருக்கின்றன தெரியுமா? எத்தனை எத்தனை கப்பல்கள் பயணத்தின்போது கடலில் உடைந்து மூழ்கியிருக்கின்றன! அவற்றில் விலை உயர்ந்த பொருட்கள், செல்வங்கள் நிறைய இருக்கின்றன.

“இந்தக் கப்பலைக் கடவுளால்கூட உடைக்க முடியாது!” என்று ‘டைட்டானிக்’ கப்பலை தயாரித்தவர்கள் சொன்னார்கள். மிதக்கும் அரண்மனைபோன்ற டைட்டானிக், 1912 ஏப்ரல் 14 ல் அட்லாண்டிக் கடலில் ஒரு பனிமலையில் மோதி உடைந்துபோனது. அன்றுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களிலேயே மிகவும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்டது இந்த ஆர்.எம்.எஸ். டைட்டானிக்.

அன்று முதல், கடலிலிருந்து டைட்டானிக்கை மீட்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. ‘ஜார்ஜ் டள்ளக்’ எனும் புதையல் வேட்டைக்காரர், டைட்டானிக் மூழ்கிய இடத்தில் 44 முறை மூழ்கித் தேடி ஏறத்தாழ 4000 த்துக்கும் அதிகமான பொருட்களை கண்டுபிடித்தார். ஆனால், அவர் டைட்டானிக்கை நேரடியாகப் பார்க்கவில்லை.

ஆனால்,1985 – ல் அமெரிக்க – பிரெஞ்சு ஆய்வுக் குழு டைட்டானிக்கைக் கண்டுபிடித்தது. அமெரிக்காவில் இருக்கும் ‘வுட்ஸ்ஹோல் ஓஷ்யானோகிராபிக் இன்ஸ்டிட்யூட்’டைச் சேர்ந்த ‘ராபர்ட் டி பல்லார்டு’ம் பிரெஞ்சு கடல் விஞ்ஞானி ‘ழாங் மிஷே’லும்தான் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தார்கள். அவர்கள் அந்தக் கப்பலை ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களும் வீடியோ படங்களும் எடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் சுரங்கங்களில்தான் புதையல் வேட்டை நடத்திவந்தார்கள். ஆனால் இப்போது பல நிறுவனங்கள் கடலில் புதையல் தேடுகின்றன.

வாஸ்கோடகாமாவும் கொலம்பஸும் புதிய பிரதேசங்கள் தேடி கப்பலில் உலகம் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் (அதாவது ஏறத்தாழ 500 – 600 வருடங்களுக்கு முன்பு), மூழ்கிய ஒரு கப்பல் 2008 -ல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ‘ஸீ பிர்ஸ்’ எனும் நிறுவனம் நபீயா கடற்கரை அருகே இந்தக் கப்பலைக் கண்டுபிடித்தது.

அந்தக் கப்பலிலிருந்து, ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களும் வெள்ளி நாணயங்களும் ஆறு வெண்கல பீரங்கிகளும் 50 க்கும் அதிகமான யானைத் தந்தங்களும் கிடைத்தன. கிடைத்த தங்க நாணயங்களில் 70 சதவிகிதம் போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிய நாணயங்கள். சில, 1525 அக்டோபரில் வெளியிடப்பட்ட நாணயங்களாம்! தவிர, 13 டன் செம்பும் எட்டு டன் தகரமும் கிடைத்தன. இந்தக் கப்பல் போர்ச்சுகீஸ் ஆராய்ச்சியாளரான பார்த்தலோமியா டயஸினுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேசிய கடல் ஆராய்ச்சி சட்டத்தின்படி இந்தப் புதையல் இப்போது நபீயா அரசின் சொத்தாக இருக்கிறது.

அமெரிக்க கடல் ஆய்வுக் குழு 2009-ல் கானா கடற்கரையிலிருந்து 40 மைல் தூரத்தில், 800 அடி ஆழத்தில் ‘ப்ளூ பரோன்’ எனும் கப்பலைக் கண்டுபிடித்தது. ப்ளூ பரோன், பிரிட்டனின் சரக்குக் கப்பலாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் இது ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் உடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது. மூழ்கிய இந்தக் கப்பலில் என்னென்ன பொருட்கள் இருந்தன தெரியுமா] 70 டன் பிளாட்டினம், ஒன்றரைக் கிலோ வைரம், 16 மில்லியன் விலை கொண்ட ரத்தினக் கற்கள், 10 டன் தங்கக் கட்டிகள். இவை தவிர, ஆயிரக்கணக்கான டன் தகரமும் செம்புக் கட்டிகளும் இருந்தன.

3000 வருடம் பழமையான ஒரு கப்பல் 2010 – இல் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டனின் டவன் கடற்கரைக்குப் பக்கத்தில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கப்பலிலிருந்து நூற்றுக்கணக்கான தகரக் கட்டிகளும் செம்புக் கட்டிகளும் கிடைத்தன. இந்தக் கப்பல் கி.மு. 900 – இல் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று பழம்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதில் கிடைத்த பொருட்கள், ஜெர்மனியிலிருந்து பிரிட்டனில் இறக்குமதி செய்யக் கொண்டு சென்ற பொருட்களாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பொருட்களுடன் ஒரு வெண்கல வாளும் மூன்று தங்க மாலைகளும் இருந்தன.

2011 செப்டம்பர் 26 – இல் ‘எஸ். எஸ். கயர்ஸோப்பா’ (s.s. Gairsoppa) எனும் பிரிட்டிஷ் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒடிசி எனும் அமெரிக்க ஆய்வுக் குழு கண்டுபிடித்தது. இந்தக் கப்பல்1941 – பிப்ரவரியில் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் செல்லும்போது ஜெர்மன் தாக்குதலில் மூழ்கிப்போனது. அட்லாண்டிக் கடலில் ஏறத்தாழ 5 கிலோமீட்டர் ஆழத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கப்பலிலிருந்து 210 மில்லியன் டாலர் விலையுள்ள 200 டன் வெள்ளி கிடைத்தது.

கடலின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ கப்பல்களை இன்னும் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. அவற்றில் எவ்வளவோ தங்கங்களும் வைரங்களும் ரத்தினங்களும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment