You are here
கட்டுரை 

அபூர்வ கடற்பயணம்

மாலினி

கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ரோய் (Robert FitzRoy) சற்றுப் பரபரப்பாக இருந்தார். அவர், நீண்டதொரு கடல் பயணத்துக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போதுதான், அவர் மிகவும் மதிக்கும் பேராசிரியர் ஹென்ஸ்லோ (Frofessor John Stevens Henslow) கொடுத்த சிபாரிசுக் கடிதத்துடன் ஓர் இளைஞர் வந்தார். சார்லஸ் எனும் பெயருடைய அந்த இளைஞருக்கும் கப்பலில் இடம் கொடுக்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்தான அந்தப் பயணத்தில் இன்னொருவரை அழைத்துச் செல்ல கேப்டனுக்கு விருப்பமில்லை.

கேப்டன், சார்லஸிடம் சொன்னார்: “பாருங்கள், மிஸ்டர், நீங்கள் கப்பலில் ஒரு மிகச் சிறிய அறையில் இருக்கவேண்டியிருக்கும். இது மூன்று வருடம் நீடிக்கும் பயணம். உணவுக்கும் மற்ற செலவுகளுக்குமான பணத்தை நீங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். அது மட்டுமல்ல, உங்களுக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் உங்களை அருகே இருக்கும் ஏதாவது தீவு ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டுப் போய்விடுவோம்.”

அந்த இளைஞருக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் கேப்டன் அப்படிச் சொன்னார். ஆனால், அவரது அச்சுறுத்தல் எதுவும் அந்த இளைஞரைப் பாதிக்கவில்லை. அவர் கேப்டனுக்கு நன்றி சொல்லிப் போனார். அவர் சென்ற பிறகு கேப்டன் தன் உதவியாளரிடம் சொன்னார்: “இந்தப் பையன் விஞ்ஞானியாக விரும்புகிறான். ஆனால், அவன் மூக்கைப் பார்த்தாலே தெரிகிறது, அது நடக்காது என்று.”

பல நாட்களுக்குப் பிறகு பிரிட்டனிலிருந்து புறப்பட்ட ‘பீகில்’ எனும் கப்பலில் (Beagle) கேப்டனுடன் சார்லஸும் இருந்தார். மூன்று வருடப் பயணமாகப் புறப்பட்ட அந்தக் கப்பல் பல நாடுகளுக்குச் சென்று ஐந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தது. அதில் வந்த சார்லஸ் அந்த ஐந்து வருட காலத்தில், உயிரினங்கள் உருவானதைப் பற்றி பல விஷயங்கள் கண்டுபிடித்திருந்தார். பிறகு அவர் அறிவியல் உலகத்தில் மாபெரும் அறிஞராக மதிக்கப்பட்டார்.

பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின்தான் (Charles Darwin) அந்த இளைஞர். அப்படி இவர் எழுதிய ‘பீகில் கடற்பயணம்’ (The Voyage of the Beagle) உலகப் புகழ் பெற்ற நூலாக விளங்குகிறது.

Related posts

Leave a Comment