You are here
Uncategorized 

அந்தக் கடைசி நாள்கள்…

கவிஞர் புவியரசு

‘‘உலகம் எப்போது அழியப் போகிறது?’’
இது ஒரு மகத்தான கேள்வி. யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். உடனே எதிர்க்கேள்விதான் எழும்.
‘‘யார் சொன்னது?’’ “எதுக்கு அழியணும்?’,’ ஏன் அழியணும்?’’ என்பதுபோல….
கொஞ்சம் விவரமான ஆளிடம் கேட்டால்… சற்று யோசித்து நிதானமாகப் பதில் சொல்லக்கூடும்.
‘‘இப்படியே போய்ட்டிருந்தா ஒரு அஞ்சு வருஷத்துக்குள்ளே அழிஞ்சு போயிறலாம். அதுக்கான வாய்ப்பு நெறயவே இருக்கு…
கொஞ்சம் சுருக்கமா, விளக்கமா சொல்ல முடியுமா?’’ என்று பவ்வியமாகக் கேட்டால், அவர் இப்படிச் சொல்வார்.
‘‘அழிவுக்கு ரெண்டு மூணு காரணங்கள் இருக்கு. எது முந்திக்கிதோ, தெரியலெ. ஒண்ணு.

பூமி சூடாயிட்டே போறதாலெ பனிமலைகள், துருவப்பகுதிகளோட பனியுருகி, ஆறுகள் வெள்ளம் பெருகி, நதிக்கரை நகரங்கள் எல்லாம் அழியும். பெருகின தண்ணியெல்லாம் கடல்ல சேந்து, கடல் மட்டம் ஒசந்து சென்னை மாதிரி நகரங்களெல்லாம் அழியும். தப்பினவங்க உள்நாநட்டைப் பாத்து ஓடுவாங்க. அங்க இருக்கறவங்க தடுப்பாங்க. அதனால, உலகம் பூராவும் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்கும். இப்பிடி சாகலாம். ரெண்டாவது உலகப் போர் மூண்டு குண்டு மழையால சாகலாம் மூணாவது கிருமி யுத்தம்.
இப்படி அவர் சொல்லக்கூடும்.

மேலே கேட்ட கேள்வியை நேரிடையாகப் போட்டுப் பாருங்கள் இப்படி: ‘‘நாமெல்லாம் ஒட்டுமொத்தமா எப்ப சாவோம்?’’
எதிரில் உள்ளவர்கள் சீறி எழுவார்கள். நேரடியாக உயிரைத் தைக்கிறதே!
இப்படி ஒரு கேள்விக்குப் பதில் சொல்கிறது ஒரு நாவல். கடற்கரையில் என்ற நாவல். (ஆன் த பீச்) எழுதியவர் பிரிட்டீஸ் எழுத்தாளர் நெவில் ஷுட்.
வாசகனின் உறக்கத்தைக் கெடுக்கும் நாவல் இது.
மனித குலத்தின் ஒட்டு மொத்தச் சாவு, மனிதனாலேயே நிகழும் என்றாலும், அது சாதாரண மக்களால் நிகழ்வது அன்று.
யுத்த வெறி பிடித்த வல்லரசுகளின் வல்லாண்மையால் இந்த மாபெரும் விபத்து நேர்கையில், அதற்கு மூலகாரணமானவனும் அதற்குப் பலியாகியே தீர வேண்டும். அதை விதைத்தவனுக்கு அறுவடையில் முக்கியப் பங்கு உண்டு.
சரி. இனி நாவலுக்குள் பிரவேசிப்போம். ஓர் அமரிக்க நீர் மூழ்கிக் கப்பல் ஆஸ்திரேலியக் கடற்கரையில் ஒதுங்குகிறது. அணு ஆயுதப் போர் தொடங்கி முடிந்து விட்டது. உலகம் முழுவதும் சர்வநாசம். மிச்ச மிருக்கும் நிலப்பகுதி ஆஸ்திரேலியா. நீர் மூழ்கிக் கப்பல் அங்கே ஒதுங்க அதுதான் காரணம். அணுக் கதிர் வீச்சு துரத்திக் கொண்டே வருகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் வடக்கிலிருந்து வீசும் காற்றில் அணுக் கதிர்கள் தெற்கு நோக்கி நகரும்.
அப்போது ஆஸ்திரேலிய மக்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் சாவார்கள். எப்படிச் சாவார்கள்?

ஹிரோசிமா, நாகசாகிபோல் அல்ல. அந்த ஜப்பானிய மக்கள் கண்மூடத் திறக்கும் கணத்தில், ‘ஸ்கி’ என்று எரிந்து கரிந்து சாம்பலாகிச் சுவடற்றுப் போனார்கள். அது நல்ல சாவு! வேதனைகள் அல்ல சாவு. ஆனால், இந்தச் சாவு கொடூரமானது. எத்தனை விதமான வலிகள் உண்டோ. அத்தனையையும் தாங்கி அலறிச் சாக வேண்டிவரும்
தோல் உரிந்து வரும். தாங்க முடியாத எரிச்சல், வலி, வாந்தி பேதி… இப்படி அது வினையாகும்.
ஒரு பத்து நாள்களுக்குக் குறையாமல் நரகத்தைத் தரிசிக்காமல் முக்தி கிடையாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது என்பதுதான். இரண்டு மாத காலத்தில், அந்த மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அந்த அமெரிக்க சப்மரீனின் ஆட்கள் அலுவலர் பலர் ஆஸ்திரேலியர் பார்வையில் கதை நகர்கிறது. அதன் பெயர் ‘ஸ்கார்ப்பியன்’ (தேள்).
அந்த நீர்மூழ்கிக் கப்பலின் பிரதான பாத்திரம் பீட்டர். இவன் அந்தக் கப்பலின் தொடர்பு அதிகாரி. அவன் ஆஸ்திரேலியக்காரன். இவன் குடும்பம் அங்கே இருக்கிறது. மனைவி கைக்குழந்தை, நீர் மூழ்கி இனி திரும்பிச் செல்ல வழியில்லை.

அவர்கள் அனைவரும் அங்கேயே சமாதியாகப் போகிறார்கள். அந்தக் கடற்கரை நகரின் கதி என்ன? அதே தான். காலம் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும். தெரிந்து என்ன செய்கிறார்கள்? தங்கள் நிறைவேறாத ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்களா?
தங்கள் பழைய பகைகளை ஆவேசத்துடன் நிறைவு செய்து கொள்ள ஆரம்பித்து விடுகிறார்களா? அல்லது எல்லாம் முடிந்தது இனி என்ன என்று தற்கொலைக்கு முயல்கிறார்களா? இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு என்ன செய்கிறது? கடைவீதி எப்படி இருக்கிறது? கல்வி நிலையங்கள் எப்படிச் செயல்படுகின்றன? ஆலயங்களில், ‘ஆண்டவரே, எம்மைக் காத்தருளும் என்று பிரார்த்தனைகள் நடக்கின்றனவா? நகரப் போக்குவரத்து என்ன ஆகின்றது.?
உணவு விடுதிகள், சுற்றுலாத் தலங்கள், கேளிக்கை மையங்கள், விளையாட்டு அரங்கங்கள், திரைப்பட அரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றனவா? இப்படியே கற்பனை செய்து கேள்விகள் கேட்டுப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் எவ்வாறான பதில்கள் கிடைக்கும்? நம்மால் எளிதில் யூகிக்க முடியாது. நமது மனம் தடுமாறுகிறது. குழப்பமடைகிறது. கொஞ்சம் யோசிக்கலாம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நான் கற்பனை செய்கிறேன். தமிழ் சினிமா பாணியில்…
‘‘டேய். மச்சான், வாடா அந்த நாயைக் கண்ட துண்டமா வெட்டிப் போட்டுட்டு வரலாம்‘‘
யாரெ?
அதாண்டா, நம்ம சாதிப் பொண்ணெ இழுத்துகிட்டு ஓடிப் போனானே, அந்தக் கீழ் சாதிப் பயலெ.

‘‘விடு மச்சான். அவனுக்கும் நமக்கும் ஒரு முடிவுதாம்பா. கொஞ்ச நாள்.
முடியாது மச்சான் கோர்ட்ல, ஜெயிச்சிட்டு நம்மப் பாத்து நக்கலா சிரிச்சிட்டுப் போனானே அந்த சின்ன ஜாதிப் பய. அப்பவே அந்தக் கோர்ட் வாசல்ல வெச்சு நான் சொன்னனே, உன் சாவு எங்கையில தாண்டா, ண்ணு நெனவிருக்கா? வா போட்டுத் தள்ளலாம். எந்தப் போலீஸ் நம்மள எப்படிப் புடிக்கும் பாத்திரலாம்.
இப்படி ஓடுகிறது என் தமிழ் சினிமா புத்தி. என்ன செய்ய, நான் வளர்ந்த விதம் இப்படி. ஆனால் நெவில் ஷுட் …. கடற்கரை நாவலில் காட்டும் காட்சிகள் நமக்கு அதிர்ச்சி தருகின்றது.

மரணம் சர்வ நிச்சயம். இதோ கைக் கெட்டும் தூரத்தில் என்னும்போது, மனித குலம் தனது ஆதி நிலைக்குத் திரும்பிவிடாது. ஒரு பக்குவ நிலையை அடைந்துவிடும் என்று, காட்சிகளைக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
‘‘மனிதன் ஆ, என்ன அழகான சொல், என்று மகாகவி சேக்ஸ்பியரும், மாக்சிம் கோர்க்கியும் செதுக்கிய வாக்கியம் பெருமிதத்தோடு உயிர் பெறுகிறது இங்கே.
கடற்கரை நகரத்தின் மேல் எந்தச் சோக மேகமும் சுவிழ்வதில்லை. யாரும் ஒப்பாரி வைத்து ஓலமிடுவதில்லை. எவரும் கொலை வெறிகொண்டு பழைய பழி தீர்க்கப் பாய்வதில்லை. யாரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை.
யாரும் வரப்போகும் ‘ஒட்டுமொத்தச் சாவு பற்றிப் பேசுவதும் இல்லை.
கடை கண்ணிகள் திறந்திருக்கின்றன. வியாபாரம் நடக்கிறது. அங்கே பேரம் பேசவும் செய்கிறார்கள். ‘என்னப்பா, இந்த விலை சொன்னா, எப்படி?’
‘கட்டுபடி ஆகாதுங்க. வேண்ணா எடுங்க, இல்லேண்ணா விட்டிருங்க.
அலுவலகங்கள் இயங்குகின்றன. போக்குவரத்து சீராக நடக்கிறது. திரையரங்குகளில் நல்ல கூட்டம். கால் பந்தாட்டம் உற்சாகமாக நடக்கிறது. ‘கார்ரேஸ்’ முன்னைவிட உக்கிரமாக நடக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்குப் போய் வருகிறார்கள். என்ன பெட்ரோல் குறைந்து கொண்டே வருகிறது. சைக்கிள்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

என்ன, எல்லாரும் நடிக்கிறார்களா, கடவுளின் முகத்தில் கரிபூச?
இல்லை! இது ஒரு பரிபக்குவம், மகாஞானம்! எந்த யோகிக்கும், ஞானிக்கும், மகானுக்கும் எளிதில் கிட்டாத, எட்டாத உச்சநிலையை மரணத்தின் சர்வ நிச்சயத் தன்மை வழங்கிவிடுகிறது. மனித குலத்திற்கு மரணம் வழங்கும் மகாஞானம்.
இந்த மகா பயங்கரத்தின் பின்னணி பற்றி மூல காரணம் பற்றி, மூலகாரணவர் பற்றி ஆசிரியர் இறுதிப் பேசுவதே இல்லையா? பேசுகிறார். நாவலில் இறுதிப்பக்கங்களில், பீட்டரின் மனைவி கேட்கிறாள்.

‘பீட்டர், ஏன் நமக்கு இப்படியெல்லாம் நடக்குது? நாம என்ன தப்பு செஞ்சோம்? இந்த ரஷ்யா, சீனா சண்டப்போட்டுகிட்டு இப்படி சர்வநாசம் பண்றாங்களா?’’
பீட்டர் சொல்கிறான். ‘‘அதில் அமெரிக்கா, பிரிட்டனையும் சேத்துக்க. அங்க செய்யற அற்பத்தனங்கதான் இதுக்கெல்லாம் காரணம்‘‘
‘‘நம்மால ஒண்ணும் செய்ய முடியாதா?’’
‘‘முடியாது! இதெல்லாம் மேல் மட்டத்து ஆள்களோட அற்பத்தனம்தான் காரணம்னு சொல்லிகிட்டே சாகலாம். அவ்வளவுதான்’’
அவர்களுக்கு எல்லாம் தெரிந்துதானிருக்கிறது. செயலற்ற நிலை, மனித குலம் மந்தையாக்கப்பட்ட நிலை. ஒரு புதிய சிக்கலும், ஒரு புதிய வழியும் எதிர்ப்படுகின்றது. பெரியவர்கள் வேதனைகளை அனுபவித்து சாவார்கள். வயதானவர்கள் எல்லாரும் சுத்தமாகச் செத்த பிறகும் குழந்தைகள் கொஞ்ச காலம் உயிர் பிடித்திருக்கும். அப்புறம் பசித்த நாய்கள். நினைத்தாலே பகீர் என்கிறது.

வாயிலும் வயிற்றிலும் போக சொல்ல முடியாத வேதனைகளாலும் பசியாலும், திக்கற்று அநாதைகளாய்க் குழந்தைகள் மட்டும். அதே பசி வெறி கொண்ட நாய்க் கூட்டம். இதைப் பீட்டர் பக்குவமாகச் சொல்ல ஆரம்பிக்கவும் ‘அய்யோ’ என்று அலறுகிறாள் மேரி. அப்புறம் தாய்மையின் ஆவேசம், எரிமலையாய் வெடிக்கிறது. ‘‘பாவி, சண்டாளா, நீ ஒரு மனுசனா? கொலைகாரன், ஈவிரக்கமில்லாத ராட்சசன். இந்தச் சின்னக் கொழந்தையை கையால கொல்லச் சொல்றயா? நீ இப்படிப் பட்ட மனுசன்ணு தெரிஞ்சிருந்தா உன்னக் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன். அய்யோ, படுபாவி, பச்சக் கொழந்தயெ….. என்று ஆவேசம் கொண்டு குமுறுகிறாள். பீட்டரால் அவளை அப்போது சமாதானம் செய்ய முடியவில்லை.
விஷயம் என்னவென்றால், இம்மாதிரியான ‘அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக அரசு தற்கொலை மாத்திரைகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. அவசர அவசரமாக! எல்லா மருந்துக் கடைகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் அவை கிடைக்கும். இலவசமாக! இதுவும் எல்லாருக்கும் தெரியும். மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்களோ?

அப்புறம் எவ்வளவோ சம்பவங்கள் நிகழ்கின்றன. மனிதரின் விசித்திரமான ஆழ்ந்த பண்புகள் நம்மை வியக்க வைக்கின்றன. இறுதி முடிவு உறுதியாகிவிடும்போது மனித மனம் எப்படி எல்லாம் செயல்படும் என்பது நம்மால் ஊகிக்க முடியாத ஒன்று. நேரம் நெருங்க நெருங்க மேரி பக்குவம் அடைகிறாள்.
‘‘சரிங்க. உங்க யோசனைப்படியே செய்வோம்,’’ என்று குழந்தையை எடுத்துக் கொண்டு போகிறாள். பின் சற்று நேரத்தில் திரும்பி வந்து தொட்டிலில் கிடத்துகிறாள். ‘‘இந்தாங்க!’’ என்று ஒரு சிவப்பு மாத்திரையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு படுக்கையில் சாய்கிறாள், கணவனை அணைத்தபடி…
சாவு அவர்களை வென்றதா, அல்லது
அவர்கள் சாவை வென்று விட்டார்களா?
இன்னொரு அந்திமக் காட்சியைப் பார்ப்போமா? அதே நீர் மூழ்கியில் பணியாற்றும் ஜான்ஆஸ்போர்ன் தன் தாயைப் பார்க்கப் போகிறார். அம்மா படுத்திருக்கிறாள். தளர்ந்து போய்.

‘‘அம்மா, எப்படி இருக்கீங்க?’’
‘‘இருக்கம்பா, ரொம்பத் தளர்ச்சியா இருக்கு. டாக்டர் சொன்னப்படிதான் நடக்குமா?’’
‘‘ஆமாம் மா!’’
‘‘ஏம்ப்பா, சாகறது ரொம்பக் கஷ்டமா?’’
‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் சிரமம் இருக்காதம்மா. பில்ஸ் இருக்கில்ல?’’
‘‘ஆமாமா. ஏம்பா, பிரிட்ஜில பால் ஏதாச்சும் மிச்சமிருக்கா?’’
‘‘ஜான் போய் எடுத்து வந்து, தாயின் படுக்கை அருகில் வைத்துவிட்டு, கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்’’ என்று சொல்லிக் கதவைச் சாத்திவிட்டு வெளியே போகிறார். சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்க்கிறார். அம்மா அப்படியே படுத்திருக்கிறாள்.
பால் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

சிவப்பு மாத்திரை இல்லாத கிழிந்த காகிதம் அதனருகே ஒரு கடிதம். அம்மா எழுதியது.
அன்பு மகனே,
உன் விடுமுறை நாளை நான் கெடுத்துவிட்டேன். கவலைப்படாதே!
என் அறையில், என் படுக்கையில் இப்படியே என்னைக் கிடக்க விட்டுவிட்டு, கதவைச் சாத்திவிட்டுப் போ! என் பொருள்கள் எல்லாம் இப்படியே சுற்றி இருக்கட்டும்.
சவ அடக்கம் தேவையில்லைதானே?
எனக்கு நாய்க்குட்டி ‘மிங்’ கை நெனச்சாத்தான் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. என்ன செய்ய? நீ கார் ரேஸ்ல ஜெயிச்சதற்கு எனக்கு ரொம்ப சந்தோசம்.
மிகுந்த பாசமுள்ள உன் அம்மா.
ஏராளமான சம்பவங்கள் இருந்தாலும், அவை பைத்தியக்காரத்தனமாய்த் தோன்றினாலும், நகைச் சுவையாய்த் தென்பட்டாலும் அவையெல்லாம் மனித மனதின் கோமாளித்தனமான, அர்த்தமுள்ள ஆட்டங்கள். இறுதிப் பக்கத்தை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். ட்வைட் டவர்ஸ் என்பவர்தான் அந்த நீர் மூழ்கியின் கமாண்டர். அவரும் ஆஸ்திரேலியாக்காரர்தான். அவர் கடைசியாக முடிவின் முடிவுக்கு வந்துவிட்டார். அவர் மைரா என்ற பெண்மணிக்குப் போன் செய்கிறார்.
‘‘எப்படி இருக்கே, மைரா? ’’
‘‘ஆ, நல்லா இருக்கேன். நீங்க?’’
‘‘சப் மரைனெ சமாதி ஆக்கணும். அதான் கடைசியா, சொல்ல நெனச்சேன்.’’
‘‘அது எப்படி?’’
‘‘எட்டு மணிக்கு, வெளிச்சமா இருக்கும்போதே முடிச்சிட்டா நல்லது.’’
‘‘நான் அங்க இருப்பேன்!’’
போனை வைத்துவிட்டு அவள் மேலே போனாள். படுக்கையில் அம்மாவும், அப்பாவும் நீட்டி படுத்திருந்தார்கள். அப்பா, கண் விழித்துப் பார்த்தார். அம்மா நினைவின்றிப் படுத்திருந்தாள்.

‘‘அந்த ஜன்னலெ நல்லாத் தொறந்து வச்சிட்டுப் போம்மா!’’ என்றார் அப்பா. மைரா, சாளரத்தை அகலத்திறந்தாள். பிறகு அறைக் கதவை மூடினாள். கீழே போய்க் காரை எடுத்தாள். சாலைக்கு வந்ததும் கண்மண் தெரியாமல் ஓட்டத் துவங்கினாள். எந்த ‘‘லிமிட்’’ டும் அவளைத் தடை செய்யவில்லை.
நகரைத் தாண்டி… விமான நிலையம் தாண்டி கலங்கரை விளக்கம் தாண்டி நெடுஞ்சாலையில் பறந்தது கார்.

வெறிச் சோடிக் கிடந்த, கடற்கரையை யொட்டிய நெடுஞ்சாலையில் கார் பறந்தது. அது அவள் ஆசைப் பட்டு வாங்கிய பந்தயக் கார். கடல் வெறிச் சோடிக் கிடந்தது. ஒரு கப்பல், ஒரு படகு கண்ணில் தென்படவில்லை. காரை சட்டென சாலையின் குறுக்கே நிறுத்தினாள். கீழே இறங்கிப் பார்க்கையில் வெகு தூரத்தில், மெல்லிய பனித்திரையின் ஊடே, அடிவானத்தில் ஒரு சின்னக் கருப்புத் துண்டுக் கோடு.
ஆம், அதுதான், ஸ்கார்ப்பியன். அதன் மேல ட்வைட் டவர்ஸ் நின்று கொண்டிருப்பார்.
மெல்ல அந்தச் சிறு கோடு மறைந்தது,
மைரா தன் காருக்குத் திரும்பினாள்.
உள்ளே ஏறி அமர்ந்தாள்.
சிவப்பு மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு, ஒரு வாய் பிராந்தி குடித்து விழுங்கினாள்…

இந்த நாவலின் சாரம், மகா கவி டி.எஸ். எலியட்டின் வரிகளில் புதைந்துள்ளது.
‘‘இந்த உலகம் முடியப் போகிறது. இப்படித்தான், இப்படித்தான், இப்படித்தான்.. ஒரு பெருவெடிப்பினால் அல்ல; ஒரு முக்கல் முனகல் கூட இல்லாமல்!’

Related posts

Leave a Comment