You are here

வண்ண நதி

தொகுப்பு: ஜார்ஜ் அலெக்ஸ்

வண்ண நதி
கொலம்பியாவில், மேடா (Meta) மாகாணத்தில் ‘கானோ கிரிஸ்டல்ஸ்’ (Cano cristales river) எனும் நதி இருக்கிறது. இந்த நதியின் சிறப்புத் தன்மை என்ன தெரியுமா? செப்டம்பர் நவம்பர் மாதங்களில் இந்த நதி பல நிறங்களில் ஓடும். இந்த நதியை, ‘திரவ வானவில்’ (Liquid Rainbow) என்றும் ‘வண்ணங்களின் நதி’ (River of colors) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் இந்த நதியைப் பார்க்க முடியும். மழைக்காலத்துக்குப் பிறகு ஏற்படும் இந்த நிறங்கள் நதியை மிகவும் அழகாக்குகின்றன. மழைக்குப் பிறகு ‘மக்கரீனியா க்லாவிகெரா’ (Macarena Clavigera) எனும் சிவப்பு நீர்த் தாவரம் நதியில் நிறைய உண்டாகிறது. இந்த தாவரம்தான் நதியில் நிற வித்தியாசம் ஏற்படுத்துகிறது.

மூங்கில் பாலம்
நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையான விஷயங்களில் பாலங்களும் ஒன்று. இது நமக்குத் தெரியும். ஆனால், பாலங்கள் கட்டுவது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். முடிந்த இடங்களில் காங்கிரீட் மற்றும் இரும்புப் பாலங்களைத் தவிர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அவற்றுக்குப் பதிலாக மூங்கிலைக் கொண்டு சிறப்பான பாலங்கள் கட்டலாமாம்! சீனா, மியான்மர், இந்தோனேஷியா முதலிய நாடுகளில் மூங்கில் பாலங்களில் பெரிய டிரக்குகள் செல்வதுண்டு.

சாக்கலேட் ரயில்
இது ஒரு அதிசயமான ரயில். முதல் தர சாக்கலேட்டால் தயாரிக்கப்பட்டது!
சாக்கலேட் கொண்டு சிலைகள் செய்து உலகப் புகழ் பெற்ற ஆன்ட்ரு பரூக்கிதான் இந்த மிகப் பெரிய சாக்கலேட் ரயிலை உருவாக்கியிருக்கிறார். 1285 கிலோ பெல்ஜியன் சாக்கலேட்டைப் பயன்படுத்தி மூன்று மாதத்தில் இந்த ரயிலை உருவாக்கியிருக்கிறார்.

இந்த இனிப்பு ரயிலின் நீளம் 34 மீட்டர். அதாவது, பத்து கார்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் எவ்வளவு நீளம் இருக்குமோ, அவ்வளவு நீளம்!
பாட்டில் மீன் (Plastic Bottle Fish)
ரியோ டி ஜெனீரோவில் போட்டாஃபோகோ கடற்கரையில் இந்த மீன்கள் உள்ளன. பிரேசிலின் புகழ் பெற்ற இந்தக் கடற்கரைக்கு வரும் இந்த மீன்களை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்.

இரவு நேரத்தில் மீன்களுக்கு உள்ளே இருக்கும் விளக்குகள் ஒளிர்ந்து கடற்கரை முழுதையும் பிரகாசமாக்கும்.
இந்த மீன்களை எப்படி உருவாக்கினார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? ஆட்கள் தூக்கி வீசும் ‘மினரல் வாட்டர் பாட்டில்’ களைக் கொண்டு!
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து ஒரு லட்சம் பாட்டில்களை சேகரித்து இந்த சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எதற்கு? பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கி எறியாதீர்கள் என்று மக்களுக்கு நினைவுபடுத்தத்தான்!
சிறிதும் பெரிதும்
உலகத்திலேயே மிகப் பெரிய நாயும் மிகச் சிறிய நாயும் சந்தித்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்! கின்னஸ் புத்தகத்துக்காக இந்த இரண்டு நாய்களையும் சந்திக்க வைத்தார்கள்.

107 சென்டிமீட்டர் உயரமுள்ள கிப்ஸன் எனும் கிரேட் டேன் (Great Dane) இனத்தைச் சேர்ந்த நாயுயைம் பத்து சென்டிமீட்டர் உயரமுள்ள பூ பூ எனும் சிவாவா (Chihuahua) இனத்தைச் சேர்ந்த நாயையும் அமெரிக்காவில் சந்திக்க வைத்தார்கள்.
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence)
மனிதர்களைப்போல ரோபோட்டுகள் (எந்திர மனிதர்கள்) வேலை செய்வதற்காக அவற்றுக்கு அறிவு கொடுக்கும் தொழில்நுட்பம்தான் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ். அதாவது, செயற்கை அறிவு. சதுரங்க விளையாட்டு விளையாடும் ரோபோட்டுகளெல்லாம் இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவைதான்.

சென்ஸர்களும் பல விதமான சிப்களும் சாஃப்ட்வேர்களும் பயன்படுத்திதான் ரோபோட்டுகளை இப்படி ‘அறிவாளி’களாக ஆக்குகிறார்கள்.
மூளையின் எலக்ட்ரானிக் வடிவத்தை ரோபோட்டுகளில் பொருத்துவார்கள். பலவித சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி முடிவெடுக்க இந்த ரோபோட்டுகளுக்கு முடியும். இதற்கான பரிசோதனைகள்தான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. மனிதனின் மொழியைப் புரிந்துகொள்ள முடிகிற புரோகிராம்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.

வேலமரங்களின் எச்சரிக்கை
எதிரிகள் வரும்போது பறவைகளும் விலங்குகளும் கத்திக் கூச்சலிட்டு தங்கள் கூட்டத்துக்கு எச்சரிக்கை செய்யும். மரங்களில் வேல மரமும் (Acacia) இப்படிச் செய்கிறது. மற்ற பிராணிகள் வந்து வேலமரத்தின் இலைகளையும் தண்டையும் தின்னத் தொடங்கும்போது, இந்த மரம் ஒரு ரசாயனப் பொருளை வெளியிடுகிறது. இந்த ரசாயனப் பொருள் காற்றில் பரவி மற்ற வேலமரங்களுக்குச் செல்கிறது. அப்போது இந்த மரங்களெல்லாம் இலைகளைக் கூம்பிக்கொள்ளும்.
பாலைவனத்து வெள்ளம்
சுட்டுக்கொதிக்கும் பாலைவனத்திலும் வெள்ளம் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த வெள்ளம் சில நிமிடங்கள் மட்டும்தான் இருக்கும்.
பாலைவனத்தில் எப்போதாவதுதான் மழை பொழியும். ஒரு மழைக்குப் பிறகு பல வருடங்களுக்குப் பிறகுதான் அடுத்த மழை பொழியும். சாதாரண இடங்களில் ஒரு வருடம் கிடைக்கும் மழை, பாலைவனத்தில் சில மணி நேரங்களில் பொழிந்து தீரும்! அப்போது, பாலைவனத்தின் வறண்ட நீர் வழிகளில் வெள்ளம் பெருகும். ஆனால், கொஞ்சம் நேரத்தில் வற்றிவிடும்.

சகாரா பாலைவனத்தில் வானத்தில் செல்லும்போது, வெள்ளத்தைக் குறித்தான எச்சரிக்கைப் பலகைகளை சில இடங்களில் பார்க்கலாம்.
ஏர் போன்ஸாய் (Air Bonsai)
பெரிய மரங்கள்போன்று மிகவும் சிறிய அளவில் வளர்க்கப்படும் போன்ஸாய் மரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்தரத்தில் மிதந்தவாறு காற்றில் ஆடும் போன்ஸாய் மரங்களும் இருக்கின்றன. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்தான் போன்ஸாய்களுக்கு காற்றில் நிற்பதற்கான சக்தி கொடுத்திருக்கிறார்கள். காந்த சக்தியின் காரணமாக காற்றில் உயரும் இவற்றுக்கு ஏர் போன்ஸாய் என்று பெயர்.
காந்தம் பொருத்தப்பட்டுள்ள ஒரு பந்தில்தான் (லிட்டில் ஸ்டார்) ஏர் போன்ஸாய் வளரும். இந்தப் பந்தில்தான் மரங்களுக்கான தண்ணீரும் உரமும் உள்ளன. லிட்டில் ஸ்டாருக்குக் கீழே மின்சாரத்தால் செயல்படும் ‘எனர்ஜி பேஸ்’ எனும் பகுதி இருக்கிறது. இங்கே ஏற்படும் காந்த மண்டலத்தின் எதிர்ப்பின் விளைவாகத்தான் போன்ஸாய் காற்றில் உயர்ந்து நிற்கிறது.

நரைமுடி
நம் முடிக்கு முக்கியமாக இரண்டு பகுதிகள் இருக்கின்றன. தண்டுப் பகுதியும் (Shaft) வேர்ப் பகுதி (Root) யும்.
நாம் வெளியே பார்க்கும் பகுதிதான் முடியின் தண்டுப் பகுதி. இந்த முடித் தண்டை தலையின் தோலில் பிணைத்திருக்கும் குழல்போன்ற பாகம்தான் நுண்ணறை (Follicles). இந்த நுண்ணறைகளில்தான் முடிக்கு நிறம் கொடுக்கும் சூத்திரம் இருக்கிறது. இவற்றுக்கு நிறமி அணுக்கள் (Pigment cells) என்று பெயர். நிறமி அணுக்கள் உருவாக்கும் மெலானில் (Melanil) எனும் பொருள்தான் முடிக்கு நிறம் கொடுக்கிறது. நம் தோலுக்கு நிறம் கொடுப்பதும் மெலானில்தான். வயது ஆக ஆக இந்த நிறமி அணுக்கள் அழியத் தொடங்கும். அப்போது என்ன நடக்கும்? முடிக்கு மெலானில் கிடைக்காது போகும். அப்போது முடி நரைக்கத் தொடங்கும்.

மீன்களை ஏமாற்றும்
கடல் பாம்புகள்
சில வகை கடல் பாம்புகள் மீன்களை மிகவும் சாமர்த்தியமாக ஏமாற்றுகின்றன. சில சமயம் மீன்கள் இந்தப் பாம்புகளின் வால் முனையின் பின்னால் கூட்டமாக நிற்கும். ஏன் தெரியுமா? பாம்பின் கண்ணில் படாமலும் அதனிடம் கடிபடாமலும் தப்புவதற்காகத்தான்.

இதை அறிந்த பாம்புகள் பின்புறமாக ஊர்ந்து செல்லும். இது மீன்களுக்குக் குழப்பமாக இருக்கும். தலை உள்ள பகுதியை முன்னால் நகர்த்திதானே பாம்புகள் ஊர்ந்து செல்லும். அப்படியென்றால் தாங்கள் நிற்கும் பகுதிதான் பாம்பின் தலை என்று மீன்கள் நினைத்துக்கொள்ளும். உடனே அவை பாம்பின் தலைப் பகுதிக்குச் சென்று கூடி நிற்கும். அவ்வளவுதான்! தன் வாய்க்கருகில் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை பாம்பு ஒரே வாயில் விழுங்கும்!

Related posts

Leave a Comment