You are here
நூல் அறிமுகம் 

வங்காளக் கதைகள்:

டாக்டர் பாஸ்கரன்

வங்காளக் கதைகள்: (மொழி பெயர்ப்பு திரு சு.கிருஷ்ணமூர்த்தி) டிஸ்கவரி பேலஸ் புத்தகக் கடையில், மழையில் சிறிது ஈரமாகிப்போன புத்தகங்கள் 30% டிஸ்கவுண்டில் அடுக்கியிருந்தார்கள். வைரமுத்துவின் ‘கல்வெட்டுக்கள்’ கரையாமலிருந்ததால் வாங்கிக்கொண்டேன். மழையிலிருந்தும், வாசகர் பார்வையிலிருந்தும் தப்பிய சில நல்ல புத்தகங்களும் டிஸ்கவுண்டில் கிடந்தன.

சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருந்த ‘வங்காளக் கதைகள்’ (பல ஆசிரியர்கள்) தொகுப்பு ஒன்று – நல்ல நிலம் பதிப்பகம் – எடுத்துக் கொண்டேன். அருமையான கதைகள் – மொழிபெயர்ப்பென்றே தெரியாத சிறப்பான நடை! மேற்கு வங்க மக்களின் குடும்பங்கள், தனி மனித உறவுச் சிக்கல்கள், சமூகரீதியான அவலங்கள், பிரிவினையின் தாக்கங்கள் என பரந்துபட்ட வாசிப்பானுபவம்!
சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, வங்காளம் மொழிகளில் புலமை பெற்ற தமிழர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு (4 முறை) பெற்றவர். வங்காள மொழியில் திருக்குறள், குறுந்தொகை, சிலப்பதிகாரம் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்!
எல்லா கதைகளுமே சிறப்புதான் – இருந்தாலும் ஒரு கதை – சிவ்லிகுஹா வின் ‘அமுதம்’ சிறுகதை – பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது.

சுபாலா வீட்டு வேலை செய்பவள் – தன் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று வேலைக்குப் போகிறாள். தானிருக்கும் டயமண்ட் ஹார்பரிலிருந்து டாக்குரியா பகுதியிலிருக்கும் அனுபுகூரில் அருகருகேயுள்ள நான்கு வீடுகளில் வேலை செய்கிறாள்.

கல்கத்தா முழுவதும் குடிநீர்ப் பிரச்சனை – இவள் வேலை செய்யும் இடத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு. வீட்டிற்கு இரண்டு வாளிகள் குடிநீர் பிடித்துக் கொடுப்பாள்; மாடி வீட்டிற்குத் தண்ணீர் தூக்கிச் செல்வதற்குள் உயிர் போய்விடும் – அதுவும் அந்த மூன்று நாட்களில் – விடுப்பு எடுத்தாலும் முதல் நாளே மறுநாளுக்கும் சேர்த்து தண்ணீர் பிடித்து வைத்து விடுவாள். இருந்தாலும் ஈவிரக்கமின்றி இவளிடம் வேலை வாங்குவார்கள்.

இதற்குமேல், குழாயடியில் சண்டை, லோக்கல் நாட்டாமையின் அதிகாரம், தண்ணீர் பிடிக்கப் பல இடங்களிலிருந்து வரும் கூட்டம், கூச்சல் இதற்கெல்லாம் குறைவே இல்லை.

“எல்லாம் குழந்தைகளின் படிப்புக்காக; அவங்க பெரியவங்களாயிட்டா, என் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்” – வாய் சொன்னாலும் உள்ளூர நம்பிக்கை இல்லை!
தினமும் விடியற்காலை எழுந்து, தன் வீட்டு வேலை முடித்து, ஒரு மைல் நடந்து, ரயில் பிடித்து, ஒரு மணிக்கும் மேலாகப் பிரயாணம் செய்து, வேலைக்கு வருவாள். நாலு வீட்டு வேலை முடித்துவிட்டு, மறுபடியும் ரயிலேறி, வீடு திரும்பி, சமையல், தன் வீட்டு வேலை செய்து……….இப்படி எவ்வளவு நாள்தான் செய்ய முடியும்?
ஓட்டுக் கேட்க வரும் பிரபுக்கள் சொல்லிவிட்டுப் போகிறார்கள், சுபாலா போன்றவர்களின் அவலம் விரைவில் தீர்ந்துவிடுமென்று. அவளுக்கு நம்பிக்கை இல்லை. இதெல்லாம் போன பிறவிகளில் செய்த பாவங்களின் பலன் – அனுபவித்தே ஆக வேண்டும்.

ஒரு நாள், வேலை முடித்து சற்று முன்னதாகவே கிளம்பியிருந்தாள் – வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. இது அவளது வழக்கமான ரயில் இல்லை. தெரிந்த முகம் எதுவும் காணவில்லை. கடுமையான தொண்டை வரட்சி, தாகம் – உடம்பு அனலாய்க் கொதிக்கிறது. அவள் வேலை செய்யும் வீட்டுப் பெண்கள் சிலர் அந்தப் பக்கம் இருந்தனர் – எங்கேயோ கல்யாணத்திற்குச் செல்கின்றனர் போலும். இன்னும் ஒரு மணி நேரம் பிரயாணம் இருக்கிறது. எஜமானியம்மாள் வீட்டுப் பெண்ணும் அவள் சிநேகிதிகளும் தண்ணீர் கொடுக்கவில்லை – முழு சுயநலம்.

‘படார்’ நம்ம ஊர் சோடா மாதிரி – விலை ஒரு ரூபாய்! அதை வாங்கி விட்டால், ரயில் இறங்கி வீட்டுக்கு நடந்துதான் செல்ல வேண்டும், மோட்டாரில் போக முடியாது.
எதிரில் ஒருத்தி தண்ணீர் பாட்டிலை மறைத்து வைத்துக் கொள்ளுகிறாள் !
மற்றொருத்தி, காலி பாட்டிலைக் காண்பிக்கிறாள் !
அப்போது திடீரென்று வானம் கறுத்து, புயல் காற்றுடன் கோடை மழை – காற்று இருக்கும் அளவுக்கு மழை இல்லை – சிறு தூறல்களுடன் நின்று விடுகிறது. வெளியே கை நீட்டி ஓரிரண்டு சொட்டுகளில் உதடு மட்டும் நனைத்துக் கொள்ள முடிகிறது.
புயலின் சீற்றத்தில் மரங்கள் முறிந்து விழுகின்றன. பேரிரைச்சலோடு காற்று வீசுகிறது. மின்கம்பி அறுந்து ரயில் நின்று விடுகிறது. எப்போது கிளம்பும் தெரியவில்லை. சுபாலாவின் தாகம் அதிகமாகிவிட்டது.

‘படார்’ தண்ணீர் விற்பவன், ‘தண்ணி எல்லாம் தீந்து போச்சுக்கா’ என்கிறான்.
சுபாலா தவித்தாள். முழுங்குவதற்கு எச்சில் கூட சுரக்கவில்லை அவளுக்கு. பக்கத்திலிருந்த பாட்டியிடமும் தண்ணீர் பாட்டில் காலி. (’போத்தல்’ என்று மொழிபெயர்ப்பு – பாட்டில்தான் என்று நினைக்கிறேன்).

சோர்வுடன் சுபாலா எதிரே காலி இருக்கையில் படுத்துக் கொள்கிறாள். பக்கத்து மூதாட்டி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருக்கிறாள்.
‘சீ, என்ன மனுசங்க இவங்க?’ – காரித் துப்பினாள் கிழவி. ‘நீ கவலைப் படாதேம்மா, ஸ்டேஷன் வந்ததும் தண்ணி கொண்டுவந்து கொடுக்கிறேன்’ என்கிறாள்.
புயல் நின்று விட்டது. ஜன்னல்களைத் திறந்து விட்டாள். ரயில் இன்னும் நகரவில்லை.
யாரோ தட்டி எழுப்பினார்கள் – கண் விழித்தாள்.

கிழவி முகத்துக்கருகே குனிந்து சிரித்துக்கொண்டிருந்தது – அருகே ஓர் இளம் வயதுப் பெண்.
‘தண்ணீ…… .கொஞ்சம் தண்ணி’ முனகினாள் சுபாலா.
‘இந்தாம்மா, தண்ணி குடி’
இளம் வயதுப் பெண், சுபாலாவை எழுப்பி உட்கார வைத்து, தன் திரண்ட முலை மேல் முகத்தை அழுத்தி, ’குடி அக்கா, கூச்சப் படாதே’ என்றாள்!
ஒரு கணம் புத்தகத்தை மூடி வைத்து விட்டேன்.

அந்த இளம்பெண் போன்றவர்களால் மட்டுமே – நிறைந்தும் நம்மிடையே மறைந்தும் காணப்படும் மனித நேயப் பண்பாளர்கள் –இன்னமும் வானம் பொழிந்து கொண்டிருக்கிறது!
அசோகமித்திரன் அவர்களின் ‘தண்ணீர்’, மத்தியதர குடும்பப் பிரச்சனையாக வருகிறது. கோமலின் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு கிராமத்தின் குடிநீர்ப் பிரச்சனையை எதற்கும் உதவாத அரசியல் பின்னணியில் அலசுகிறது. பெருமாள் முருகனின் ‘வேக்காடு’ வரட்டுப் பிரதேசத்தின் முந்திரிப் பாட்டியின் நீர்ப் பிரச்சனையை ஏழ்மையின் தணலில் சொல்கிறது.

இங்கு ஓர் ஏழைப் பெண்ணின் தாகம் – நீர்ப் பிரச்சனையைவிடக் கேவலமான சுயநலங்களின் பிரச்சனையாக உருக்குலைகிறது!

Related posts

Leave a Comment