You are here

மூட்டைப்பூச்சி பேசுகிறேன்…

கதிரவன்

வணக்கம் நண்பர்களே…
என் பெயர்தான் மூட்டைப்பூச்சி. என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் எங்கள் மூட்டைப்பூச்சி இனத்தைப் பற்றி உங்களிடம் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நாங்கள் பல வகைப்பட்டவர்கள். சிறகுகள் உள்ள மூட்டைப்பூச்சிகளும் இருக்கின்றன. அவற்றின் முன்புறத்திலுள்ள இரண்டு சிறகுகளும் உறுதியுடன் இருக்கும். செடிகளின் தண்டையோ பிராணிகளின் தோலையோ துளைக்குமளவு தலையின் முன் பகுதி கொடுக்கு போன்றிருக்கும். வாய்ப் பகுதி, செடித் தண்டுகளில் உள்ள நீரையோ பிராணிகளின் ரத்தத்தையோ குடிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும். நாங்கள் பெரும்பாலும் தரையில் வாழ்பவர்கள்தான். தண்ணீரில் வாழும் என்னைப்போன்ற மூட்டைப்பூச்சிகளை ஆங்கிலத்தில் Bed bugs என்று சொல்வார்கள். அதாவது, வீட்டில் படுக்கைகளில் காணப்படும் மூட்டைப்பூச்சிகள். எங்களின் அறிவியல் பெயர் ‘Cimex’ என்பதாகும். படுக்கைகளில் வாழ்கின்ற எங்களைப்போன்ற மூட்டைப்பூச்சிகளெல்லாம், மற்ற பிராணிகளுடன் ஒப்பிடும்போது உருவத்தில் மிகவும் சிறியவை. எங்கள் உடல் தட்டையாக சிவப்பு கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும். எங்களுக்கு ஆறு கால்கள். வாயின் முன் பகுதி, துளைப்பதற்கு ஏற்ற விதத்தில் உறுதியான கொடுக்குபோன்றிருக்கும். எங்களுக்குச் சிறகுகள் கிடையாது.

சில்வண்டுகளைப்போல எங்களுக்கும் முழுமையற்ற உருமாற்றம்தான் (Incomplete Metamorphosis). அதாவது முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பெரிய பூச்சிகளைப்போன்றே இருக்கும். பெரிய பூச்சிகளுக்கும் இவற்றுக்கும் மிகக் குறைவான வித்தியாசங்கள்தான் இருக்கும். ‘லார்வா’, ‘பியூப்பா’ போன்ற வளர்ச்சிக் கட்டங்கள் எங்களுக்கு இல்லை. முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ரத்தம் குடிக்கும் திறன் பெற்றிருக்கும். நாங்கள் சுவர், தரை, கட்டில், நாற்காலி போன்றவற்றின் இடுக்குகளில் முட்டையிடுவோம்.

பொதுவாக எங்களுக்கு வெளிச்சம் பிடிக்காது. அதனால் பகல் முழுதும் நாங்கள் படுக்கையின் அடியிலோ, இடுக்குகளுக்குள்ளோ நலமாகப் பதுங்கியிருப்போம். இரவில்தான் உணவு தேடிப் புறப்படுவோம். உணவு என்றால் என்ன? ரத்தம் குடிப்பதுதான் எங்களுக்கான உணவு. ஆனால், மூட்டைப்பூச்சி இனத்தைச் சேர்ந்த எல்லா பூச்சிகளுமே ரத்தம் குடிப்பதில்லை. பெரும்பாலான மூட்டைப்பூச்சிகள் செடித் தண்டுகளில் உள்ள நீரைத்தான் குடிக்கின்றன. அவையெல்லாம் வீட்டுக்கு வெளியே வாழ்பவை. பகல் நேரத்தில் உணவு கொள்பவை. படுக்கை மூட்டைப்பூச்சிகளான நாங்கள்தான் ரத்தம் குடிப்போம். மனிதர்களின் ரத்தத்தை மட்டுமல்ல, பறவைகளின் – வௌவால்களின் ரத்தத்தைக் குடிக்கும் மூட்டைப்பூச்சிகளும் உண்டு.

நாங்கள் முட்டையிட்ட ஒரு வாரத்துக்குள் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும். உடனடியாக ரத்தம் குடிக்கத் தொடங்கும். மனிதர்களின் ரத்தத்தை நேரடியாகக் குடிக்க முடியவில்லை என்றால் இந்த மூட்டைக் குஞ்சுகள் என்ன செய்யும் தெரியுமா? சில சமயம் இவை, ரத்தம் குடித்துப் பெருத்துக் கிடக்கும் பெரிய மூட்டைப்பூச்சிகளிலிருந்து ரத்தம் குடிக்கும். குஞ்சுகள் எட்டு வாரங்களில் முழுமையான வளர்ச்சியடைந்துவிடும். இதற்கிடையில் இவை நான்கைந்து முறை சட்டை உரித்துவிடும் (Moulting). அதாவது, பாம்பு சட்டை உரிப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுபோன்று சட்டை உரிப்பதுதான் இது. முழுமையற்ற உருமாற்றம் உள்ள எல்லா பூச்சி இனங்களும் இப்படி சட்டை உரிக்கும்.

மனித உடலின் வெப்பமும் வியர்வை மணமும் எங்களைக் கவர்ந்திழுக்கும். ரத்தம் குடிக்கும்போது அந்த இடத்தில் எங்கள் உமிழ்நீர் சேரும். அதனால்தான், நாங்கள் கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. இந்த உமிழ்நீரைச் செலுத்துவது எங்களுக்கு நன்மை செய்யும். இது, மனிதர்களின் ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. அதனால் நாங்கள் சுலபமாக உறிஞ்சிக் குடித்து எங்கள் வயிற்றை நிறைத்துக்கொள்ள முடிகிறது. வயிறு நிறைந்தால், பிறகு நாங்கள் மனிதர்களைத் துன்புறுத்த மாட்டோம்.
ரத்தம் கிடைக்கவில்லை என்றால் பட்டனி கிடக்கவும் எங்களுக்குத் தெரியும். எதுவும் சாப்பிடாமல் எங்களால் ஆறு மாதங்கள்வரை இருக்க முடியும். அதன் பிறகும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் உணவு தேடிப் பயணம் போவோம்.

கட்டிலில் மூட்டைப்பூச்சி ஏறக் கூடாது என்று நீங்கள் கட்டில் கால்களில் தண்ணீரோ மண்ணெண்ணெயோ வைப்பீர்கள் என்றால், அப்போது நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா? சுவரில் ஏறி மேல் தளத்துக்குச் சென்று, அங்கிருந்து நேராக, கட்டிலில் படுத்திருக்கும் ஆள் மீது விழுவோம். அப்படியாவது நாங்கள் ரத்தம் குடித்துவிடுவோம். அதுவும் இல்லையென்றால் உடைகளிலோ பொருட்களிலோ பதுங்கிச் சென்று, வாகனங்களிலும் நுழைந்துவிடுவோம். இப்படித்தான் நாங்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் நெடுந்தூரம் பயணம் செய்கிறோம். பயணம் செய்யும்போது எங்களுக்கு உணவுப் பஞ்சமே ஏற்படாது. ஏனென்றால், பயணத்தின்போது நாங்கள் நிறைய மனிதர்களைச் சந்திப்போம் அல்லவா!
உயிர்களைக் குடித்து ரத்தம் குடிப்பதால் நீங்கள் எங்களை வெறுப்பீர்கள். என்ன செய்வது…
நாங்களும் வாழ வேண்டாமா?

Related posts

Leave a Comment