You are here
கட்டுரை 

முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி

சே. திருநாவுக்கரசு

முன்னுரை
வழக்காறுகள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இருவகைப்படும். இளம்பூரணர் “வழக்காறு இருவகைப்படும்; இலக்கண வழக்கும், இலக்கணத்தோடு பொருந்தியன மரூஉவழக்கும் (வாழ்வியல் சொற் களஞ்சியம், தொகுதி 14, ப.353) என்கிறார். கல்லாடர் “இலக்கணத்தோடு பொருந்தின மரூஉ வழக்குமென இருவகைப்படும் (கல்லாடர், தொல்.சொல்.17) என்கிறார். எனவே இலக்கணமில்லாததைப் பேச்சு வழக்கு என்றும், இலக்கணமுடையதை எழுத்து வழக்கு என்றும் பாகுபாடு செய்யலாம்.

மொழி காலத்திற்கேற்ப மாறுவதோடு நில்லாமல் இடத்திற்கேற்பவும் (REGIONAL DIALECT) சமுதாயத்திற்கேற்பவும் (COMMUNAL DIALECT) மனிதனின் வாழ்வியல் போக்குகளுக்கு ஏற்பவும் மாறுபடுகின்றது. இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் பல்வேறு வடிவங்களை வட்டார வழக்குகள் எனலாம். வட்டார வழக்காறுகளின் களமான “வட்டாரம் என்பது ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். ஒத்த, விரிந்த ஒரு பெரிய நாட்டில் எல்லா பகுதிகளுமே பரந்த தன்மையானதாய் இருப்பதில்லை அப்பகுதிகள் ஒவ்வொன்றும் அங்கே வசிக்கின்ற மக்களின் பண்புகள், பழக்க வழக்கங்கள், சமய நம்பிக்கைகள், அப்பகுதியின் தட்பவெப்ப நிலைகள் ஆகியவற்றால் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. இவற்றிலெல்லாம் ஒத்த தன்மைகளைக் கொண்ட கிராமம் அல்லது பகுதிதான் வட்டாரம்
(REGIONALISM HINDI NAVELS, P.1) என்கிறது. எனவே மக்களுடைய பொதுவான வாழ்க்கைப் பின்னணியாலும் தட்பவெப்பநிலைகளாலும் ஒத்த தன்மையுடைய ஒரு நிலப்பரப்பே வட்டாரம் எனப்படுகிறது.

தட்பவெப்பநிலை, மண்ணின் தன்மை, ஆகியவற்றுடன் ஒரு வட்டாரத்தைத் தனியே பிரித்து இனங்காட்டுவது அதில் வாழும் மக்களின் வட்டாரமொழியாகும். இன்றைக்கு கொங்கு நாட்டவரையும், தஞ்சாவூர்க்காரரையும், கரிசல் பகுதிக்காரரையும் தனியே பிரித்து இனங்காட்டுவது வட்டாரப் பேச்சு வழக்கும், மொழிநடையும், பழக்க வழக்கங்களுமே ஆகும். உண்மையில் வட்டார இலக்கியம் உருவாவதற்குக் காரணம் பேசுவது போலவே எழுத வேண்டும் என்ற போக்கு உருவானது.

பேசுவது மாதிரியே எழுதவேண்டும் என்ற போக்கு எழுத்தில் பலவிதமான பேச்சு வழக்குகளும் இடம் பெறுவதற்கு வழி வகுத்தது. கதைகளில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்பட்டது. கதைகள் எழுதுகிற படைப்பளிகள் அவரவர்க்கு நன்கு பரிச்சயமான சூழ்நிலைகள், அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கை முறைகள், குணாதிசயங்கள் முதலியவற்றைத் தங்கள் எழுத்துகளில் பிரதிபலித்துக் காட்டுவது இயல்பாயிற்று. எனவே வெவ்வேறு வட்டாரங்களின் பேச்சு மொழியும், பழக்கவழக்கங்களும், மனித சுபாவங்களும் எழுத்து மூலம் வடிவம் பெற்றன. காலப்போக்கில் வட்டார இலக்கியம் எனப் பகுத்துப் பார்க்கும் மனோபாவமும் எழுத்தாளர்களிடையேயும் ரசிகர் மத்தியிலும் தோன்றியது. என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகின்றார். இதனால் ஒரு வட்டாரத்தின் மொழிக்கு அவ்வட்டாரத்தைப் பிற வட்டாரங்களிலிருந்து பிரித்து இனங்காட்டுவதற்கு அடிப்படையாக அமைகிறது. தட்பவெப்பநிலை, மண்ணின்தன்மை, வட்டார மொழிவழக்கு ஆகியவற்றுடன் ஒரு வட்டாரத்தைத் தனியே பிரித்து இனங்காட்டுவதில் அதில் வாழும் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி நிலையும், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தனி இயல்புகளைக் களங்களாகக் கொண்டு படைக்கப்பெறும் இலக்கியங்கள் வட்டார இலக்கியங்களாக அமைகின்றன.

எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களுக்கு விவகார (நடைமுறை) அறிவு அதிகம் எனும் அறிமுகப் பாராட்டுரையோடு கிராமிய மணங்கமழும் வட்டார வழக்குச் சொல்லகராதியை இலக்கிய நயத்துடன் கி.ராஜநாராயணன் “அன்னத்தின் வெளியீடாக” வழங்கியிருக்கின்றார். வட்டார வழக்கு என்றால் என்ன என்பதையும் அவரே நமக்கு வரையறுத்துக் கூறுகின்றார். “ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் புழக்கத்தில் இருக்குமானால் அதுதான் வட்டாரச் சொல் என்று (பக்.VXVI) தனது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். நாய் என்னும் பொதுச் சொல் “ஞமலி” என்று ஒரு வட்டாரத்தில் வழங்கப்படும் என்பது பழைய சான்று. இருமல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் “தொற்றல்” எனப்படுமானால் அது வட்டார வழக்குச் சொல்லாகும் என்று கி.ரா. சான்று காட்டுகின்றார்.

வழக்குச் சொல்லகராதி உருவாக்க காரணம்
கி.ரா வட்டார வழக்குச் சொல்லகராதியை உருவாக்குவதற்கான காரணங்களை தம் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்,“மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகளிடையே பேசும்பொழுது அவருடைய நாவலில் வரும் வட்டாரச் சொற்கள் புரியவில்லை என்றும் அதற்குப் பொருள் காண்பது எவ்வாறு என்றும் வினா எழுப்பியதன் வழி வட்டார வழக்குச் சொற்களுக்குத் தனியாக வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கும் எண்ணம் தோன்றிச் சொற்களைத் தொகுத்து 1982 இல் முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி வெளியிட காரணமாக அமைந்தது என்கிறார்.

பாமரர்கள் பேசுகின்ற மொழியழகை ஏட்டுத் தமிழில் பார்க்க முடியாது. ஏட்டில் இருப்பது மணமும் இயற்கை அழகுமில்லாத வெறும் காகிதப் பூ (முன்னுரை XVII) என்று கூறி வட்டார வழக்குச் சொற்களின் அருமை பெருமைகளையும் அவற்றின் இன்றியமையாத் தேவைகளையும் கி.ரா. வலியுறுத்துகிறார். இந்த வட்டார வழக்குச் சொல்லகராதி கரிசல் காட்டுப்பகுதியில் புழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டுள்ளது. இவ்வகராதி 332 பக்கங்களில் 3500 க்கு மேற்பட்ட சொற்கள், சொற்றொடர்கள் கொண்டுள்ளது. இதுதவிர பிற்சேர்க்கை என்ற பகுதியில் 19 தலைப்புகளில் பல சொற்கள் உள்ளன. அவை,1. விளையாட்டுகள், 2. ஆடுகள், 3. மாடுகள், 4. மாட்டின் லட்சணங்கள், 5. சுழிகள், 6. மாட்டின் வயது பற்றி, 7. சந்தையில் மாட்டை விலைபேசும்போது, 8. கோழி இனங்களில் சில, 9. காலநேரம் பற்றிய சொற்கள், 10. நபர்களைப் பற்றிய சொற்றொடர்கள், 11. சொல்லடைகள், 12. ஆபரண வகைகள் சில, 13. முடிச்சுகள், 14. களை வகைகள்,15. காட்டில் விளையும் பருப்பு வகைகளும் மற்றதும், 16. வண்டி சம்பந்தப்பட்ட சொற்கள், 17. நிலம்,ஏர் சம்மந்தமான சொற்கள், 18. காற்றுவகை, 19. நம்பிக்கைகள் பற்றிய விபரங்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

முடிவுரை
வட்டார வழக்குச் சொற்களின் அருமை பெருமைகளையும் அவற்றின் இன்றியமையாத் தேவைகளையும் கி.ரா. வலியுறுத்துகிறார். “தமிழிலுள்ள அனைத்து வட்டாரச் சொற்களையும் சேகரித்து ஒரு சிறந்த வட்டார வழக்குச் சொல்லகராதி ஒரு காலத்தில் வெளிவரத்தான் போகிறது” என்னும் தீர்க்க தரிசனமும் “அந்த நல்ல காரியத்தை அண்டை வீட்டுக்காரரான மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எப்பவோ செய்து முடித்து விட்டார்களே, நாம் இன்னும் செய்யவில்லையே” என்னும் ஆதங்கமும், அவரின் தமிழ் உணர்வினை, நியாயமான அக்கறையினை நமக்கு புலப்படுத்துகின்றன.
சே. திருநாவுக்கரசு
முனைவர் பட்ட ஆய்வாளர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-113

Related posts

Leave a Comment