You are here
நூல் அறிமுகம் 

பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள்

என். சிவகுரு

பழனி கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சோ.மோகனா, தற்போது எழுதியுள்ள புத்தகம். தலைப்பை மீண்டும் படியுங்கள்..பேசப்படவேண்டியவர்கள் என்றால் சமூகம் இதுவரை அவர்களைப் பற்றி தேவையான அளவு பேசவில்லை என்று தானே பொருள் படுகிறது.ஆம்.இப்புத்தகம் 128 பக்கங்களைக் கொண்டது. முழுவதுமாக படித்து முடித்தவுடன் மூளையில் யாரோ அடித்தது போல் இருந்தது. இளம் பருவத்தில் பள்ளியிலோ,கல்லூரியிலோ, தெரிந்து கொள்ளாமல் போன பல ஆளுமைகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் செய்த அறிவியல் பணிகள் இம்மனித சமூகத்தின் மேன்மைக்கு, வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பதை விவரித்திடும் அற்புத அறிவியல் படைப்பு.
அறிவியலின் தளத்தில் எந்த விஞ்ஞானிகள் என்ன இச்சமூகத்துக்காக செய்துள்ளார்கள், ஏன் அவர்களைப் பற்றி படித்திட வேண்டும் என்பதை தனக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளார் தோழர் மோகனா.
விஞ்ஞானத்தை , அறிவியலை வாழ்வியலாக கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் மற்றுமொரு புது வரவு இந்நூல் என்று சொல்லலாம். 42 விஞ்ஞானிகளின் பல்துறை பங்களிப்பை சுருக்கமாக அதே சமயத்தில் அடிப்படையாக எதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அது இப்புத்தகத்தில் இருக்கிறது.
நான் இப்புத்தகத்தை படிக்க துவங்கியவுடன் என்னுடைய அறியாமையை எடை போட்டு கொள்ள முடிந்தது. அதே அனுபவம் பலருக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.காரணம் பெரும் பிம்பங்களை பற்றியே வாசித்த பலருக்கு அறிவியல் ஆளுமைகளை படிக்கும் போது ஆச்சரியமும் ஆஹா ..இத்தனை நாட்களாக இப்படி இவர்களை பற்றி தெரியாமல் இருந்து விட்டோமே எனும் எண்ணமும் நிச்சயம் வரும் .
அறிவியல் ஆசான்களை தெரிந்து கொள்ள….
42 விஞ்ஞானிகளை பற்றி முழுமையாக மீண்டும் பதிவு செய்வது எனது நோக்கமல்ல. ஆனால் இவர்கள் எல்லாரும் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், இப்பூவுலகம் எவ்வளவு பின் தங்கி இருந்திருக்கும், இன்று சாதனை என பேசி கொள்வதை எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத காலத்தில் எப்படி சாதித்தார்கள் என்பதை யோசிக்க வைக்கிறது. பாடதிட்டத்தில் இல்லாதவற்றை படிப்பது out of syllabus எனும் பதத்தை பள்ளிகளில் பயன்படுத்துவார்கள். இந்த 42 ஆளுமைகளை பற்றி படிப்பது அதன் துவக்கம் என்றே சொல்வேன்.
நம் வாழ்வில் எல்லோரும் ஒரு முறையேனும் பயன்படுத்தியுள்ள ஒரு தனிமம்,துத்தநாகம்.அதை இவ்வுலகுக்கு கண்டுபிடித்து கொடுத்தவர் பற்றி இந்நூல் தகவல் சொல்லும்.
வானவியலில் வியாழன் கோளுக்கு 4 துணைக்கோள்கள் உண்டு என சொன்னவர், நாம் வாழும் இப்பூமிப் பந்து உட்பட அனைத்துமே சூரிய குடும்பத்தின் அங்கம், சூரியன் பெரும் நெருப்பு என்ற அடிப்படைகளை கண்டறிந்தவர் பற்றி இப்புத்தகம் நமக்கு சொல்கிறது.
அண்ட சராசரம், அடி பாதாளம் என இவ்வகைச் சொற்கள் அனைத்தும் கற்பனைக் கதைகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள். ஆனால் அது ஏதோ கற்பனை அல்ல, அங்கும் அறிவியல் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது என்பதை இந்த உலகுக்கு ஆதாரத்துடன் சொன்னவர்களை பற்றி இந்நூல் எளிய அறிமுகம் செய்கிறது. உதாரணத்திற்கு பூமிக்கு கீழ் நடக்கும் நில நடுக்கம், இடி, மின்னல் பற்றிய முக்கிய தகவல்களை சொன்னவர், விண்மீன்களின் மங்கும் ஒளி, ஏன் அவ்வாறு ஓளி குறைந்து காணப்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கியவர் பற்றிய தகவல் சொன்னவர் இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு ஆளுமை. எதை செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்பது இந்நூலின் அடிநாதம். புத்தக ஆசிரியர் ஏன் இப்படி சொல்லியிருக்கிறார் என யோசித்தேன். பொதுவாக தேவை தான் அவர்களை உந்தியது, இயக்குவித்தது என எளிதாக சொல்லிவிடலாம். அது மட்டுமே காரணமில்லை. மனித சமூகத்தின் தேவை, தான் செய்ய போகும் விடயம் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே புது வெளிச்சத்தை தரும் எனும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால் தான் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளின் ஆற்றலை, திறனை, மேன்மையை பற்றி மறைக்காமல், உலகம் முழுதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து தகவல்களையும் மறைக்காமல் அடுத்து வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் குறிப்புகளாகவும் பதிவு செய்தனர்.
இந்த உலகில் மனிதர்கள் பிறப்பதற்கு முன்னர் தாயின் கருவில் எவ்வாறு உருமாற்றம் நடைபெறுகிறது என்பதை கண்பிடித்தவர் பிரெடெரிக் உல்ப்….அதை கண்டுபிடிக்க வேண்டும் எனும் உந்துதல் எவ்வாறு உருவாகியது என்பதை மோகனா பதிவு செய்துள்ளார்.
தனிமங்கள் தான் இன்று உலகின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. தனிமங்கள் வளம் உள்ள நாடு செல்வந்தர் நாடுகளாக கருதப்படுகிறது. இயற்கையின் கொடையான அத்தனிமங்களை இன்று பல கார்ப்பரேட்டுகள் அரசுகளின் துணையோடு சுரண்டி தமதாக்கி கொண்டு வருகின்றன. அத்தனிமங்களில் வெனடியம்( VANADIUM ) கண்டுபிடித்த செப்ஸ்ட் ரோம், 6 தனிமங்களை கண்டுபிடித்த மார்ட்டின் பற்றி இந்நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது.
அறிவியல் மக்களுக்காக…
இப்புத்தகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சில முக்கிய ஆளுமைகளை பற்றி சற்று கூடுதலாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நூலாசிரியரே நிறைய தரவுகளை கொடுத்துள்ளது மகிழ்ச்சி. இன்று உலகில் மிகுந்த லாபகரமான தொழிலாக மருந்து விற்பனை மாறி வந்துள்ளது. மறைமுகமாக, மக்களுக்கே தெரியாமல், சுரண்டும் ஒரு தொழில் உண்டென்றால் அது மருந்து விற்பனை தான். ஆனால் எட்வர்ட் ராபின்சன் ஸ்குயிப் கண்டுபிடித்த மருந்துகளை காப்புரிமை செய்யாமல் (அதாவது ராயல்டி இல்லாமல்) அனைத்து மக்களும் பயன் படுத்தி வருகின்றனர். மருந்து நிறுவனங்கள் அவர் பெயரை பயன்படுத்தி இன்னும் கொள்ளை அடித்து வருகின்றனர். உதாரணமாக, அறுவை சிகிச்சை நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரும் சவாலாக இருந்தது. காரணம் அறுவை சிகிச்சை மிகவும் வலி மிகுந்தது.நோயாளி மயக்க நிலையில் இருந்தால் தான் சிகிச்சையை செய்ய முடியும். அதற்கு தீர்வாகத்தான் ஈதெர் எனும் வேதியல் பொருளை கண்டுபிடித்து நோயாளிகளின் துயர் தீர்த்து மருத்துவ உலகின் திருப்புமுனை சாதனையை செய்தவர் ஸ்குயிப். பின்னர் தொடர் ஆராய்ச்சி மூலம் குளோரோபார்மை தயாரித்தார். அவர் செய்துள்ள வரலாற்று சாதனை வாசிக்கும் அனைவரையும் யோசிக்க வைக்கும்.
அறிவியல் எனும் பெருங்கடலில் உள்ள பல துறைகளின் வித்தகர்களை பற்றி இப்புத்தகம் ஒரு அருமையான பொக்கிஷம்.
அறிவியல் உலகின் அதிசயங்களை புனைவுகளாக உலகுக்கு அளித்தவர் ஜூல்ஸ் வெர்ன். இந்தியாவில் புனைவுகளுக்கு பஞ்சமே இல்லை.. காப்பியங்களாக, இதிகாசங்களாக, புராணங்களாக தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றது. ஜூல்ஸ் வெர்ன் அறிவியல் அதிசயங்களை, ஆற்றலை, பல்வேறு காலகட்டங்களில் புனைவுகளாக எழுதியுள்ளார். அறிவியலை புனைவாகவும் சொல்லலாம் என்பதற்கு அவரின் படைப்புகள் ஒரு உதாரணம். இன்று அறிவியலை தளிர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஏராளமான படைப்புகளை தமிழில் தருபவர் திரு. ஆயிஷா நடராசன். இந்த நூலில் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய மிக பிரபலமான புதினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டால் எதிர்கால தலைமுறை அவர்களுக்கு என்றும் நன்றி கடன் செலுத்தும்.
இந்த 42 விஞ்ஞானிகளில் ஒருவர் தான் இந்தியர். அவர் தான் ஹரீஷ் சந்திரா. எண் கணிதத்தில் மிக சிறந்த ஆளுமை அவர். சீனிவாச ராமானுஜத்திற்கு பிறகு கணிதத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை செய்து பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவர்.
பெண்களின் தனித்துவம் மிக்க சாதனை அறிவியல் உலகில் ஏராளம். தற்போது இந்தியா 104 செயற்கை கோள்களுடன் அனுப்பிய விண்கலம் பற்றி உலகமே வியக்கிறது. அந்த மகத்தான சாதனை நிகழ்வுகளின் பின்புலமாக இருந்த பல பெண்கள் பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன. இன்று பல சமூக ஊடகங்கள் இருப்பதால் குறைந்த பட்சம் தகவலாக பரவுகிறது. யோசித்து பாருங்கள்..இயற்கை வேதியலில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தவர் இசபெல்லா கார்லே. கதிர் பிரித்தல் முறை மூலம் பல புதிய வழிமுறைகளை உலகுக்கு தந்தவர், அது மட்டுமல்ல பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து தொடர்ந்து அறிவியலின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
இந்த புத்தகத்தில் எக்ஸ் ரே கதிர்களை கண்டறிந்த ராண்ட்ஜென்னுக்கு தான் கூடுதல் பக்கங்களை ஒதுக்கியுள்ளார் நூலாசிரியர். உண்மை தான்; அவருக்கு எத்தனை பக்கம் ஒதுக்கினாலும் தகும். காரணம் தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தை விட்டு பல காலம் வெளியே வராமல் தனிமைச் சிறை போல் இடைவிடாமல் தொடர்ந்து தன் புலன்களுக்கு முழுதும் வேலை கொடுத்து நித்திரையை மறந்து, எக்ஸ் ரே கதிர்களை கண்டுபிடித்தார். தன் சோதனை குழாயில் இருந்த ஒளியின் மூலம் இந்த உலகுக்கு புதிய ஒளியை கண்டுபிடித்து விஞ்ஞான புரட்சியை ஏற்படுத்தியவர். இன்று பல்வேறு வசதிகளுடன் இருக்கும் ஆராய்ச்சி கூடங்கள், அதிநவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கின்றன. ஆனால் ராண்ட்ஜென் காலத்தில் இருந்த குறைந்த வசதி வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தி அந்த அற்புத சாதனையை உலகுக்கு தந்தார். அவருக்கு ஏன் நூலாசிரியர் அதிக பக்கம் ஒதுக்கினார் என்று நான் நினைக்கிறேன் என்றால் அவருக்கு கிடைத்த நோபல் பரிசு தொகையை அடுத்த ஆராய்ச்சிக்காக நன்கொடையாக கொடுத்தார். இன்று பல பேர் எதுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் தங்கள் தலைவர்களுக்கு அந்த பரிசு வேண்டும் என கேட்கிறார்கள். காலக் கொடுமை.
மேரி ஆன்னிங் எனும் பெண்ணின் பெயரை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது இனிமேல் இவர் பெயரை என்றைக்கும் மறக்கவே மாட்டோம். ஆம். அந்த அளவுக்கு அவர் அறிவியலின் மேன்மைக்கு செய்திருக்கும் பணி மகத்தானது என புரியும்.
ஜேம்ஸ் பார்க்கின்சன் …. இன்று உலகில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் அவதிப்படும் பார்க்கின்சன்ஸ் நோயை கண்டுபிடித்தவர். நரம்புகளின் மைய மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பால் உடலின் ஒரு பகுதியோ அல்லது பல உறுப்புகள் பாதிப்படைந்து விடாமல் ஆடிக்கொண்டே இருக்கும் இந்த நோய் பற்றிய முழுமையான தகவல்களை கண்டறிந்து உலகுக்கு சொன்னவர்.
நான் இந்த நூலை படித்து முடித்தவுடன் அட்டையின் பின்பக்கத்தை திரும்பி பார்த்தேன்….புக்ஸ் ஃபார் சில்ரன் என அச்சிடப்பட்டிருந்தது. தன்னடக்கத்தோடு பதிவிடுகிறேன்… அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம், ஏன் அறிவியலின் சாதனைகளை நம் தலைமுறைக்கு ஆழமாக எடுத்து செல்ல வேண்டிய ஆகப் பெரும் கடமை நமக்கு உள்ளது. குழந்தைகள் பெரும்பாலும் பள்ளியின் அன்றாட சுழலில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள். அவர்களை மீட்டெடுக்க வேண்டிய ஆகப்பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு இப்புத்தகம் கண்டிப்பாக உதவும். அறிவியலின் ஆளுமைகளை, மறுபக்கத்தை பல்வேறு புத்தகங்களாக தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேராசிரியர் மோகனா படைத்து வருவது தொடர வேண்டும். எதிர்கால சமூகம் மேன்மை பெற இந்நூல் உதவிடும்.

Related posts

Leave a Comment