You are here
அஞ்சலி 

கார்ல் மார்க்ஸ் நூலகர் ச.சீ.கண்ணன்

லதா ராமகிருஷ்ணன்

சிறந்த சிந்தனையாளர், சீரிய சமூகப்பணியாளர், மாசறு மனிதநேயவாதி என முழுமையான மனிதராக வாழ்ந்தவர் திரு. எஸ்.எஸ்.கண்ணன். அங்கீகாரம் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டேயில்லை.
ஆரவாரமில்லாமல் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பார்வையற்றோருக்கு, குறிப்பாக பார்வையற்ற மாணவர்களுக்குச் செய்த உதவிகள் ஏராளம். பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான CSGAB (COLLEGE STUDENTS AND GRADUATES ASSOCIATION FOR THE BLIND) என்ற அமைப்பின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர். பார்வையற்றவர்கள் தங்கள் நலவாழ்வுக்கான அத்தியாவசியத் தேவைகளை அரசிடமிருந்து சலுகையாகப் பெறவேண்டியதில்லை; தங்கள் அடிப்படை உரிமையாகப் பெறலாம் என்ற விழிப்புணர்வைத் தமிழகத்திலுள்ள பார்வையற்ற மாணாக்கர்களிடையே ஏற்படுத்தி தங்கள் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடும் துணிவை அவர்களிடம் உருவாக்கியவர்.
அவருடைய வீட்டில் அவர், அவருடைய மனைவி சகோதரி என எல்லோருமே பார்வையற்ற மாணாக்கர்களுக்கு பாடப்புத்தகங்களையும் தேவைப்படும் மற்ற புத்தகங்களையும் வாசித்துக்காட்டும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தனர். பார்வையற்ற மாணாக்கர்களுக்கு அவர்கள் வீட்டில் எப்போதுமே சாப்பாடும், அரவணைப்பும் உண்டு, தேவையான ஆலோசனைகளை அன்போடு திரு. கண்ணன் தந்து வழிகாட்டுவார். அவருடைய காரல் மார்க்ஸ் நூலகத்தின் உதவியோடு தங்கள் ஆய்வுப்படிப்பைச் சிறந்த முறையில் மேற்கொண்ட பார்வையற்ற மாணவர்கள் எத்தனையோ பேர்.
நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் என்ற பார்வையற்றோர் நன்னல அமைப்பு பார்வையற்றவர்களின் நலவாழ்வுக்காகப் பணியாற்றிவரும் பார்வையுள்ளவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த விருதை திரு.கண்ணனுக்குக் கொடுத்த ஆண்டு அவர் நேரில் வந்து சீரிய உரையாற்றினார்.
எங்கள் அமைப்பின் நிறுவனத்தலைவர் அமரர் திரு.ஜி.ஜெயராமன், தற்போதைய தலைவர் திரு. எஸ்.சுகுமார் ஆகியோர் கண்ணன் அவர்களின் பணி, அறிவாற்றல், இலட்சியப் போக்கு, சமூகப்பணி என நிறைய விஷயங்களை நினைவுகூர்வது வழக்கம்.
திரு. கண்ணனைப் போன்ற அரிய மனிதர்கள் தங்கள் சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் நமக்கு என்றும் உந்துசக்தியாகத் திகழ்பவர்கள். அவருக்கு என் ஆத்மார்த்தமான வணக்கம் உரித்தாகிறது.

Related posts

Leave a Comment