You are here
நேர்காணல் 

எதிர்ப்பின் பாடலை முணுமுணுத்தல்—

சுமங்களா தாமோதரனின் புத்தகம்,
இப்டாவின் இசைப் பாரம்பரியத்தை அடியொற்றிப் போகிறது….

நேர்காணல்:சுமங்களா தாமோதரன்

சந்திப்பு: குனால் ராய்

சுமங்களா தாமோதரன்,ஓர் ஆசிரியர், பாடகர், செயற்பாட்டாளர்,எழுத்தாளர், இந்திய மக்கள் நாடகமன்றத்தின் இசைப்பாரம்பரியத்தைப் பற்றி ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இடதுசாரி சிந்தனையுள்ள நாடகக் கலைஞர்களால் 1940களில் உருவாக்கப்பட்ட சங்கம் “இப்டா”.பிருத்விராஜ் கபூர், பால்ராஜ் சஹானி,குவாஜா அகமத் அப்பாஸ், சப்தர் மீராஸ் போன்ற பெரும்புகழ் பெற்ற கலைஞர்கள் அதன் உறுப்பினர்களாயிருந்தனர்.ஆவணமாக்கப்பட்டுள்ள அதன் படைப்பாக்கங்கள், நிகழ்த்துதல் விவரங்களை ஆழ்ந்தகன்று விரிந்த விதத்தில் ஆய்வு செய்து தானும் அவற்றை நிகழ்த்தியவர் சுமங்களா தாமோதரன். இசைக்கும் புலம் பெயர்தலுக்கும் இடையில் நிலவும் உறவைப்பற்றி ஆராய்ந்துவரும் ஒரு சர்வதேசக் கூட்டிணைவுத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தற்போது பணியாற்றி வருகிறார். ஆசியாவிலும்,ஆப்பிரிக்காவிலும் பல பல்கலைக்கழகங்கள்,ஆய்வறிஞர்கள், இசைக்கலைஞர்கள்—என பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள திட்டம் இது. தி ரேடிகல் இம்பல்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் தூளிகா பதிப்பகம் வாயிலாகப் பதிப்பித்துள்ளார்.இந்திய மக்கள் நாடக மன்றத்தின் இசை,பாடல்களின் பாரம்பரியத்தை விளக்கியிருக்கிறார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள்:
இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம் என்ன?
சுமங்களா தாமோதரன்:இந்திய மக்கள் நாடக மன்றத்தின் இசைப் பாரம்பரியத்தை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகள் தொடங்கி ஐம்பதுகள் வரை இது ஆராய்கிறது.இந்த அமைப்பு பிராந்தியவாரியான கூறுகளைக் கொண்டிருக்கிற ஒன்று.ஆந்திரப் பிரதேசத்தின் பிரஜா நாட்டிய மண்டலி, கேரள மக்கள் கலைகள் சங்கம் போன்ற சில கலாச்சார அமைப்புகள், இப்டாவுடன் தங்க ளையும் இணைத்துக் கொண்டிருந்தன.இந்திய மக்கள் நாடக மன்றத்தின் ஒரு முக்கிய அம்சமாக இசை இருந்தது. ஆனால் இடதுசாரி இயக்கத்தினாலோ அல்லது பொதுவான வரலாற்றாளர்களாலோ இந்த அம்சம் ஒரு போதும் ஆராயப்படவில்லை.
இவ்வகையான பாடல்களைப் பெறுவதில் சப்தர் ஹஷ்மி, ஹபீப் தன்வீர் மற்றும் பிறருடன் உங்கள் தொடர்புகள் எந்த வகையில் பயன்பட்டன.
நான் எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே “பர்ச்சாம்” என்ற எதிர்ப்புப் பாடல்குழுவின் ஓர் அங்கமாக இருந்துவந்தேன்.இப்டாவின் பல பாடல்களை எங்கள் குழு இசைத்து வந்தது.சப்தர் ஹஸ்மியின் ஜனநாட்டிய மஞ்சுடன் இணைந்து செயல்பட்டு வந்ததும் ஆகும்.நான் மலையாளி என்பதாலும், ஹைதராபாத்தில் வளர்ந்ததாலும் கேபிஏசி,பிரஜா நாட்டியமண்டலி ஆகிய அமைப்புகளால் பாடப்பட்டு வந்த பாடல்களையும் கேட்டுத்தான் வளர்ந்து வந்திருக்கிறேன்.ஹபீப் தன்வீரையும்,அவருடைய நயா தியேட்டர்ஸ் குழுவினரையும் பார்ச்சாம் அமைப்பின் ஒரு பகுதியாகவே பார்த்தேன்.பிரேம்சந்த்தின் கதையை அடிப்படையாகக் கொண்ட “மோதிராம் கா சத்தியாக்கிரகா” என்ற ஒரு மேடை நாடகத்தை உருவாக்குவதற்காக நாங்கள்—பார்ச்சாம்,ஜனநாட்டிய மன்ச்,நயா தியேட்டர்ஸ் குழுக்கள்—ஒருங்கிணைந்து பணியாற்றிய போது மேற்கண்ட சந்திப்பு நிகழ்ந்தது.சப்தர் ஹஸ்மி கொல்லப்படுவதற்கு சற்றுமுன் இது நடந்தது.அதைத்தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹபீப் சாஹப்புடன் மிகத் தீவிரமான விவாதங்களில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.இந்திய மக்கள் நாடகமன்றம்,அவருடைய நாடகங்களின் இசையமைப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் பற்றியெல்லாம் விவாதிப்போம்.இந்திய மக்கள் நாடக மன்றத்தில் தொடர்புடன் இருந்த அவருடைய ஆண்டுகளில் இந்த இசையமைத்தல் அம்சங்கள் ஆழமான தாக்கத்திற்கு உள்ளானவை.

உங்கள் அரசியல் சிந்தனைகளில் உங்கள் தாத்தா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் தாக்கம் இருக்கிறதா?இந்தப்புத்தகம் உங்கள் அரசியலின் விரிவும் நீட்சியும் தானா?
சமூக மாற்றத்திற்கானது என்று பற்றுறுதியுடன் செயல்படுகிற ஓர் அரசியலின் உள்ளுறையும் பகுதிதான் கலாச்சாரமும், அழகியலும் என்ற என் நம்பிக்கையின் அடிப்படையிலிருந்து மேலெழுந்து வந்ததுதான் இத்திட்டம்.இது நிச்சயமாக என் அரசியலின் பிரதிபலிப்புத்தான்.என்னுடைய வாழ்க்கையில் என் தாத்தா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாய் இருந்தார். எனது குழந்தைப்பருவம் முதலே மிகவும் கவர்ந்து ஈர்த்து வந்திருந்தார் அவர். அவரோடு டெல்லியில் நான் வசித்து வந்த ஆண்டுகளில்தான் இடதுசாரி கலாச்சார இயக்கம் பற்றிய அறிமுகம்,பரிச்சயம் எல்லாவற்றையும் பெற எனக்கு முடிந்தது.அவருக்கு இசையுடன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. ஒரு பாடலின் இசைக்குறிப்பையும் அவரால் பாட முடியாது.அவர் அடிக்கடி நகைச்சுவையாகக் கூறுவது இது:”இசையோடு எனக்கிருக்கிற ஒரே தொடர்பு நீ மட்டும்தான்”. என் புத்தகத்தை அவருக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன்.
பயிற்சி பெற்ற இசைக்கலைஞர் என்ற முறையில், இந்தப்பாடல்களின் இசை நுணுக்கக் கூர்மை,சிரமமான இசையமைப்பு வரம்புகளின்போது அவற்றின் வலிமை,உத்வேகம் பற்றி நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்? இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம் என்னவாக இருக்கிறது?

அந்தப்பாடல்களின் செழுமையும் வகைமைப்பாடுகளும் பெரும் மலைப்பைத் தருபவை.மிகத்திறமை வாய்ந்த பல இசைக்கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் “மக்களின் இசை”யை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.அவை வெவ்வேறு மரபுகளிலிருந்து வந்தவை.பரந்த வீச்செல்லையையுடைய வகைமைகளின் பாணிகளில் இருந்து இசையமைக்கப்பட்டவை.ஞாபகங்களில் இசைச்சொல்லாடல்களால் நிலைத்து நிற்பவை. அரசியல் ரீதியாக மிகவும் செயற்திறன் வாய்ந்தவை என்பதற்கு அப்பாற்பட்டு மேற்கண்ட பண்புகளைக்கொண்டவை. இவ்வகைப் பாடல்களினூடாக அரசியலுக்கும்,கலைக்கும் இடையே நிகழ்ந்து வந்த மிக அதிகபட்ச சிக்கலான விவாதங்கள் எதிர்கொள்ளப்பட்டன.அவற்றின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள். அவற்றுள் சாத்தியமான ஒரு காரணம்,அரசியலின் அளவுக்குக் கலாச்சாரத்தின் மீது ஒருபோதும் அழுத்தம் கொடுக்கப்படாதது என்பது இருக்கலாம்.

இப்டாவின் நாடகங்கள்,கவிதைகள் பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்டா அமைப்பின் பாடல்கள் பற்றி அப்படி இல்லை.இவ்விசயத்தில் கல்விப்புலம் சார்ந்தோரின் ஆர்வக்குறைவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நீங்கள் சொன்னதுபோல,இப்டாவைப்பற்றி நமக்குக் கிடைக்கக்கூடிய ஆவணங்களில் இசையைப்பற்றிய புலமைசார்ந்த ஆய்வு என்பது முற்றாக இல்லை.எவையெல்லாம் ஆவணமாக்கப்பட்டு,பகுப்பாய்வு செய்யப்பட்டிருக் கின்றனவோ அவை ஒரு வரையறைக்குட்பட்ட அளவுக்கே நடந்துள்ள போதிலும் கூட,நாடக ஆக்கங்களைப் பற்றியவையாகவே அவை உள்ளன.நாடகத்திலிருந்து பாடல்கள் தனித்துப் பிரித்துப் பார்க்கப்படக் கூடியவையாகப் பார்க்கப்படவில்லை.இத்தனைக்கும் அவை தம்முடைய சொந்த பலத்தின் அடிப்படையில் பிரபலமானவையாக இருந்தும்கூட இப்படி. மற்றொரு காரணம்,இந்தியாவில் ‘இசை’ தொடர்பாகவே கூட அதிகமாக எழுதப் படாதது,மிகக்குறைந்த அளவுக்கே எழுதப்பட்டிருப்பதாக இருக்கலாம்.குறிப்பாக இசைக்கும்,சமூகத்துக்குமான உறவைப்பற்றி அல்லது இசைக்கும் அரசியலுக்குமான உறவைப்பற்றி… சமகாலத்திய அரசியல் தட்பவெப்ப நிலையில்,இத்தகைய பாடல்கள் இன்னமும்கூடப் பொருத்தப்பாடு உடையவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக.இப்டா இசைக்கலைஞர்கள் போர், பஞ்சம், நிலம், வேலை, சுரண்டல் இவற்றைப் பாடுபொருளாக வைத்து ஏராளமான பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார்கள்.அவற்றுள் பல பாடல்கள் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைக் குறித்தே எழுதப்பட்டிருப்பதாக வைத்துக்கொண்டு பார்த்தாலும் அவை சித்தரித்துக் காட்டும் நிலைமைகள் இன்றைக்கும் நிலைத்து இருப்பவையாகவே நீடித்திருக்கின்றன.இன்றும்கூட அவை உயிர்ப்புமிக்க ரீங்காரத்தை மீள எழுப்பக்கூடியவையாகவே இருக்கின்றன.மேலும்,அவற்றில் மிகப்பல பாடல்களின் இசை நுணுக்கங்கள், வெறும் கதைப்பாடல்களின் எல்லையைத் தாண்டியும் வசீகரிக்கக் கூடியவை.சமகாலச் சம்பவங்களின் பின்னணியில் அவற்றை விளக்குவதும் சாத்தியம்தான்.

மக்களின் எதிர்ப்பிசைக்கான புத்துயிர்ப்புப் போல இதை நீங்கள் சொல்ல முடியுமா?
சமீப ஆண்டுகளில்,இசை என்பது மேன்மேலும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சாம்பாஜி பகத், ஷீத்தல் சாத்தே, ஜின்னி மாஹி, தம்மா விங்க்ஸ் மற்றும் ஒட்டுமொத்த இசைக்கலைஞர்கள் கொண்ட அணியினர் இசைப்பாடல்களின் எல்லைகளை விரிவடையுமாறு உந்தித்தள்ளி வருகின்றனர்.அவற்றை மக்கள் ஆணியடித்தாற் போன்று உட்கார்ந்து கேட்குமாறு செய்கிறார்கள்.அவை மிகப் பெருமளவிற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினர் நடுவே பிரபலமாகி வருகின்றன. உண்மையில்,சில பாடல்களின் விசயத்தில் வணிக ரீதியான வெற்றியையும் அடைந்திருக்கின்றன. ‘தி ராடிகல் இம்பல்ஸ்’—கலகத்தன்மை மிக்க உந்துவிசையாற்றல்—இந்திய மக்கள் நாடக மன்றத்தின் பாரம்பரியத்தில் இசை—இந்தப்புத்தகம் மேற்கண்ட இடைவெளியை, இப்டாவின் விரிந்து பரந்த இசையியல் களஞ்சியத்தைப்பற்றிய புரிதலின் போதாமையை நிரப்புவதாக உள்ளது.இப்டாவின் மரபு சார்ந்த இசையைத் தேசிய,மற்றும் பிராந்தியப் பின்னணிகளில்-குறிப்பாக வங்காளி, மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாமி, ஹிந்தி,உருது—அமைந்திருப்ப வற்றை, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் மேலெழுந்து வந்துள்ள கலகத்தன்மை மிக்க உந்துவிசையாற்றலின் பின்புலத்தில் அமைந்திருப்பவற்றை,இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல்,கலாச்சார மாற்றமடைந்த காலச்சூழ்நிலையில் அமைந்திருப்பவற்றைக் கொண்டு ஆராய்வதாக இப்புத்தகம் அமைந்துள்ளது.

(குணால் ராய் புனேவில் உள்ள ப்ளேம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார்.கலை, கலாச்சாரம் சார்ந்து அவ்வப்பொழுது எழுதி வருகிறார்.)
Tamil translation of “Humming the protest song”—Sumangala Dhamotharan’s book traces the musical tradition of Indiyan People’s Theatre Assosiation-IPTA—chronically a movement.
நன்றி: The Hindu-metroplus-BookWorm—p.11 –interview by Kunal Ray

Related posts

Leave a Comment