You are here
நிகழ்வு 

சாதியொழிப்புக் களத்தில் ஓர் இலக்கிய ஆயுதம் ம. மணிமாறன்

குளிர்காற்று ஊர்ந்து பரவி தோழர்களோடு தோழராக அமர்ந்தபோது விழாவிற்கேயான உற்சாக மனநிலை உருவானது. ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய ‘கரசேவை’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா அது. தமுஎகச மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமையேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். நிகழ்வுகளை லட்சுமி காந்தன் ஒருங்கிணைத்தார்.”என்னோடு தெருப்புழுதிக்குள் உழன்ற மனிதனைத் தேடியபோது நான் ப்ரதிபா ஜெயச்சந்திரன் எனும் கதைக்காரனைக் கண்டடைந்தேன்,” என்று தன்னுடைய ஆய்வுரையைத் துவக்கினார் பொ. வேல்ச்சாமி. எல்லாக் கதைகளுக்குள்ளும் புரளும் மொழி, பைபிளின் சாரத்திலிருந்து எழுத்தாளன் கண்டறிந்தது என மொழியழகின் வழியே நிறுவினார். அவரது உரை மொழியென்றால் என்ன, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கதை மொழி எவருடையது, தலித் இலக்கியம் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் பிரதிகளுக்குள் புரளும் மொழி நிஜத்தில் நம்முடையதுதானா என்ற கேள்விகளைத் தொட்டது. “கதை கிறிஸ்துவ குருத்துவம் குறித்துப் பேசுகிற போது அதன் கட்டமைப்பு ஏன் பைபிள் மொழி போல் அமையக் கூடாது என்கிற யோசனை முக்கியம்.

வெள்ளைக்காரர்களுடன் நெருங்கிப் பழகி துபாஷிகளாகவும், சமையற்காரர்களாகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள். என்னுடைய ஆவணத் தொகுப்புகள் அனைத்தையும் தருகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலித் வாழ்வினை நாவலாக்கித் தாருங்கள்,” என்ற வேண்டுகோளை முன் வைத்தார் வேல்ச்சாமி.” வாழ்க்கை அசமத்துவமாக இருக்கிறபோது எப்படி நீதிமட்டும் சமமாக இருக்க முடியும்? சட்டத்தின் முன் அனைவரும் சமமா,?” -கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அழுத்தமான கேள்விகளை முன் வைத்தார் தலித் உரிமைகள் களச்செயல்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர். சாதிப் பெயருக்குள் உறைந்திருக்கும் பெருமிதத்தையும் இழிவையும் கட்டுடைத்தார்.

“யாராவது நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிற போது தலித்துகளுக்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. என்னிடம் யாராவது சாதி கேட்கிறபோது பெருமிதமாக பறையன்என்று சொல்லிவிட்டு எதிராளியின் கண்களைப் பார்ப்பேன். அவர்கள் நிலைகுலைந்து போவதை நான் பலமுறை கண்டு ரசித்திருக்கிறேன்,” என்றார். “வாசகர்களாக மட்டும் சாதியஇழிவு பற்றிய துயருக்குள் மூழ்காதீர்கள், மாறாக நம்முடைய வாழ்க்கைப்பாடுகளின் நியாயங்களையும், கலகக் குரல்களையும் உரத்து முழக்குங்கள்,” என்ற அறைகூவல் விடுத்தார் கதிர். எனது முறை வந்தபோது நான் கதையையும், அதன் மொழியையும் பற்றியதாகப் பேச்சை அமைத்துக்கொண்டேன்.

மிகமிகக் குறைவாகவே சிறுகதைப்புலத்திற்குள் வந்திருக்கிறது தலித் கிறிஸ்தவ வாழ்வு. அந்தப் பகுதியை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ள தொகுப்பு இது. ‘சகோ.டி’ எனும் கதை தமிழின் மிகச் சிறந்த கதைகளுள் ஒன்றாக வடிவம் பெற்றிருக்கிறது. ஒரேகதைக்குள் பலவிதமான கதைகூறல் முறையில், கதாபாத்திரங்கள் தத்தம் மொழியில் பேசும் தன்மையில் அமைக்கப்பட்டுள்ள கதை இது. ‘பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே,’ ‘கன்னிகை கர்ப்பவதியாகி’ எனும் கதைகளுக்குள் உறைந்து கிடப்பது கிறிஸ்துவ வாழ்க்கைதான். “சமத்துவத்தை மறுத்த சமூகத்திடம் இயைந்திருக்க முடியாததால்தான் நாம் கிறிஸ்துவத்திற்குப் போனோம். இப்போது வாழ்க்கையின் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதபோது வேலைக்காக மறுபடியும் பெயர் மாற்றிக்கொள், தப்பில்லை,” என்கிற ஒரு தலித் தகப்பனின் குரல் முக்கியமானது.

மதமாற்றம் குறித்த வேறு ஒரு தன்மையிலான உரையாடலுக்கு இந்தத் தொகுப்பு வழிவகை செய்கிறது. வடிவமைப்பிலும், கதை கூறும் முறையிலும் தேர்ந்த சிறுகதைத் தொகுப்பாகியிருக்கிறது என்ற என் மதிப்பீட்டை முன்வைத்தேன்.புத்தகத்தை பெற்றுக் கொண்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், “தொகுப்பில் உலவுகிற மனிதர்கள் கொண்டிருப்பது எங்கள் ஊரின் ஞாபகங்களையும், வாழ்க்கைப் பாடுகளையும் என்பதால் இந்த நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மிகுந்த உவப்பினை அளிக்கிறது,’’ என்று துவங்கினார் கவிஞர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மனித குலத்தை மீட்டெடுக்கும் கருவியை கதைகளுக்குள்ளிருந்து கண்டெடுத்துக் காட்டினார். இன்று வரையிலும் அம்பேத்கரும், பெரியாரும் போர்க்கருவிகளாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், “உலக அளவில் நிறவெறிக்கு எதிரான மனநிலை எப்படியெல்லாமோ மாற்றமடைந்திருக்கிறது. ஆனால் நம் நிலத்தில் நாம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன,” என்றார் தமிழச்சி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான வன்னி அரசு,”சாதி ஒழிப்புக் களத்தில் பணியாற்றுகிற நமக்கு களத்தின் நிஜத்தன்மை புரிய வேண்டும்.

பாருங்கள் எப்படி எளிய வாழ்க்கையை அச்சுப் பிசகாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர்,” என்று கூறி, தொகுப்பிலிருந்து ‘எழவு சொல்லி’ கதையின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். கதைகள் யாவும் மனதிற்கும், மாமிசத்திற்கும் (உடல்) நிகழும் முரண்களையும், மோதல்களையுமே பேசுகிறது என்றார். உடல் என்றால் பொதுவாக மனித உடல் என்று புரிந்துகொள்ளக்கூடாது. சமூகக்கட்டமைப்பு உள்பட உடலாக இருப்பதே. தோற்றத்தில் வெளிப்பாட்டில், பழக்க வழக்கங்களில் கூட சாதியம் எப்படியெல்லாம் பொதிந்திருக்கிறது என்பதனை கதைக்குள்ளிருந்தும் எடுத்துச் சொன்னார் அவர். “அவநம்பிக்கையும், விரக்தியும் துளிர்விடும் கணங்களில் களத்தில் பணியாற்றுகிற நமக்கு பெரும் நம்பிக்கை தருவது புத்தகங்களே,” எனக்கூறிய வன்னி அரசு, வாழ்வின் கடைசித் தருணங்களில் எப்படி பல ஆளுமைகள் புத்தகங்களைக் கைக்கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துரைத்தார். குறிப்பாக சதாம் உசேன் தன்னுடைய கடைசி விருப்பமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் கோரியது ஹெமிங்வே படைத்த ‘கடலும் கிழவனும்’ புத்தகத்தைத்தான் எனக்கூறியவர் அதை ஒரு குறும்பட நேர்த்தியுடன் சித்தரித்தார். இத்தொகுப்பின் ‘கன்னிகை கர்ப்பவதியாகி’ கதையைத் திரைப்படமாக எடுக்கலாம் என்றார் வன்னி அரசு.

“அப்படியெல்லாம் சாதி ஒழிப்பினைக் கருவாகக் கொண்டிருக்கிற கதையைப் படமாக்க வழக்கமான தமிழ் சினிமாக்காரர்கள் எளிதில் வந்துவிட மாட்டார்கள். இப்படியொரு சாதியப் பகை மனம் தமிழ் சினிமாவைச் சூழ்ந்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்,” எனத் தொடங்கினார், நூலை வெளியிட்ட தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்செல்வன். எப்படி கதைகளை வாசிக்க வேண்டும் என்றுவிளக்கிய அவர் ‘எழவு சொல்லி’ கதையினை அதற்குப் பயன்படுத்தினார். எப்படி அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிற மனோபாவத்தை ஆதிக்க கருத்தியல் தொடர்ச்சியாக கட்டமைத்து வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்றார். “இந்த நிகழ்வில் இலக்கியக்காரர்கள் மட்டுமல்லாது சாதியொழிப்புக் களப்போராளிகளும் பங்கேற்றிருப்பது முக்கியம். இப்படித்தான் இலக்கிய விழாக்களை வடிவமைக்க வேண்டும்,” என்ற பெருவிருப்பத்தை முன்வைத்தார் தமிழ்ச்செல்வன்.சமூக அக்கறையும் இலக்கிய ரசனையும் கலந்திருந்த விழாவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொதுச்செயலாளர் அமல்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். கருத்துரைத்தவர்களின் கைகளைச் சிறப்பித்தன ஓவியர்சந்ரு கைவண்ணச் சிலைகள். சாதி ஒழிப்புப் போராட்டக் களத்திற்கான இலக்கிய ஆயுதங்களை ஏந்தியபடி விடைபெற்றார்கள் பார்வையாளர்கள்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Related posts

Leave a Comment