You are here
நூல் அறிமுகம் 

எலக்ட்ரா இரா. தெ. முத்து

மொழிபெயர்ப்பு,கவிதை,புனைவு என்று இயங்கி வரும் ரேவதி முகிலின் முதல் கவிதைத் தொகுப்பு எலக்ட்ரா. கிரேக்கத் தொன்மத்தில் இடம் பெற்ற தந்தைமை மீதான ஈர்ப்பு , எலக்ட்ரா எனும் பெண் பெயரால் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்று அறியப்படுகிறது.தொகுப்பு முழுவதும் மீசை முளைத்த தாய்மை வேண்டியும், ஆண் மைய உறவின் துரோகம் குறித்தும் காட்சிப்படுத்தப்படுகிறது.அந்தியில் பூக்கும் காமத்தையும் , அடங்காப் பெரும்பசியில் ஆழ்துயில் முறித்த , விரிகூந்தலோடான யட்சியின் வாழ்வில் வந்து ஒலிக்கும் , யட்சனின் பாடல்களைப் பாடும் பொழுதும் , கவிதையின் மொழி அடர்ந்த தேக்கங்காடுகளின் ஊடாகப் பயணிக்கும் கிறக்கத்தைத் தருகிறது. சங்ககாலத்தின் நீட்சியாக இவ்வகைக் கவிதைகளில் மொழி வந்தமர்ந்து தேரோட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. துரோகத்தையும் கயமையையும் பாடும் இடங்களில் , ஏகத்துக்கும் முறுக்கிக் கொண்ட மான்கொம்பு போலவும் , நடுரோட்டில் குடல் சிதறிப் பல்லிளித்துப் பரப்பிக் கிடக்கும் நாய் எனவும் உன்மத்தம் கொண்டு விடுகிறது ரேவதி முகிலின் மொழி. என்றாலும் ஆண்களின் அருகமைந்த வாழ்வு குறித்தே நம்பிக்கையுடன் கூடுடைக்கத் தொடங்கி இருக்கிறது ரேவதி முகிலின் நேசம்.

“பற்றியெரிகிறது தாழங்காடு கனிந்து கொண்டிருக்கும் ஏதேன் தோட்டத்துச் செங்காயில் நச்சேற்றத் துவங்குகிறாள் இச்சாதாரி”

Related posts

Leave a Comment