You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஊடகங்களும் மாறுவேட முதலாளித்துவமும்

என். குணசேகரன்.

கடந்த கால் நூற்றாண்டில், ஊடகத் துறையின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இரண்டும் பெரும் மாற்றங்களை கண்டுள்ளன. அவற்றோடு இணையான வளர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன.

இந்த மாற்றங்களும், வளர்ச்சியும் மார்க்சிய இயக்கங்களுக்கு பெரும் சவால்களைத் தோற்றுவித்துள்ளன. ஊடகங்களில் மார்க்சியங்களின் செயல்பாடு குறித்த பழைய அணுகுமுறைகள், கருத்தாக்கங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருந்தாத சில கண்ணோட்டங்களைக் கைவிடுவதும் அவசியமாகிறது.
இது குறித்து, மார்க்சியர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. பேராசிரியை ஜோடி டீன் (Jodi Dean) எழுதிய ‘‘ஜனநாயகம் உள்ளிட்ட நவீன தாராளமய புனைவுகள்” (Democrasy and other Neoliberal Fantasies) என்ற நூல் முக்கியமானது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கையாள்வதில் இடது சாரிகளின் செயல்பாடுகள் பற்றிய மிக கூர்மையான விமர்சனங்களை டீன் முன்வைக்கின்றார். இந்த விமர்சனங்களை உள்வாங்கி, ஏற்கெனவே லெனின் கட்சி ஊடகங்கள் பற்றி உருவாக்கியிருக்கும் கருத்தாக்கங்களை ஆராய்ந்தால், புதிய, சரியான பார்வை கிட்டும்.

மாறுவேடத்தில் முதலாளித்துவம்
தகவல்கள், செய்திகள், கருத்துகள் அனைத்தையும் தனிப்பட்ட ஒவ்வொருவரும் தனி நிறுவனம் போன்று சமூக ஊடகங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். இதனால் உயரிய பங்கேற்பு ஜனநாயகம் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த மாயையை உடைத்தெறிந்து ‘‘கருத்துப் பரிமாற்ற முதலாளித்துவம்” (Communicative Capitalism) என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் டீன்.

முக நூல், ட்விட்டர் ஊடகங்களில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக தகவல்கள், செய்திகள், கருத்துகள் பரிமாறிக் கொள்ளவும், விவாதம் நடத்தவும் வாய்ப்பு உள்ளதால் இது உயர்ந்த ஜனநாயகம் என்ற நம்பிக்கை வலுப்படுத்தப்படுகிறது. ‘கருத்துப் பரிமாற்ற முதலாளித்துவம்’ பொய்யான இந்த நம்பிக்கையைத் தூபம் போட்டு வளர்க்கிறது என்ற விமர்சனத்தை ஆணித்தரமாக வாதிடுகிறார் டீன். அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு போர் போன்ற நிகழ்வுகளில் இடதுசாரிகள் செயல்பட்ட விதத்தை ஆராய்ந்து மேற்கண்ட முடிவுக்கு வருகிறார் டீன்.

இணையப் பதிவு, படங்கள், வீடியோ, யூ டியூப் பதிவேற்றம் அனைத்தும் ஆட்சியாளர்களுக்கு எதிரான முற்போக்கு செயல்பாடாகக் கருதி திருப்தியடைகின்றனர் பலர். ஆனால் இந்த ஒவ்வொரு செயலும், ஆட்சி அதிகார மேலாதிக்கத்தில் மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஊழல்கள், ஆளுகிறவர்களால் மறைக்கப்பட்டவை அனைத்தையும் வெளியே கொண்டு வருகிறபோது, ஊடகக் கொண்டாட்டங்கள் விண்ணை முட்டுகின்றன. ஆனால் சுரண்டல் அஸ்திவாரத்தை சிறிதளவு அசைப்பதில்கூட அவை எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை.

அமெரிக்காவில் போர் எதிர்ப்பு இயக்கம் சமூக ஊடகங்கள் வழியாக வலுப்பெற்றது. ஆனால், அன்று ஈராக் மீது போர் தொடுக்கும் திட்டத்தினை தடுத்து நிறுத்துவதில் எந்தத் தாக்கத்தையும் அது செலுத்தவில்லை.

டீன் தகவல் தொடர்பு விரிவாக்கம் என்பது, கூடவே முதலாளித்துவ விரிவாக்கத்தோடு இணைந்து பயணிக்கிறது என்ற அர்த்தம் பொதிந்த வரிகளை எழுதியுள்ளார்.
சசிகலா வழக்கில் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வந்தபோது, உற்சாக வெள்ளத்தில் சோசலிசவாதி ஒருவர் டிவிட்டரின் 140 கேரக்டர்கள் வரம்புக்கு உட்பட்டு ‘‘அறநெறி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி” என்று பதிவிடுகிறார். அதற்கு கிடைக்கிற பல்லாயிரக்கணக்கான ஹிட் (Hit) லைக் (Like) ஷேர் (Share) அனைத்தும் அவரை அகமகிழச் செய்கின்றன. அவரது பதிவில் முதலாளித்துவத்தில் அறநெறி அரசியல் சாத்தியமானது என்ற மௌனப் பதிவு உள்ளது. அதனை அவர் கவனிக்கத் தவறுகிறார். அவரது இலட்சியத்திற்கு எதிராக … செயல்படும் வேடிக்கை நிகழ்கிறது.

தனது இணையப் பக்கத்திலும், முகநூல், டிவிட்டர் ஊடகங்களிலும் பதிவிடுவதும், இவர்களுடைய பதிவுகள் குறித்த பின்னோட்டங்களைப் பதிவிடுகிறபோதும் அரசியல் பணியை செய்து முடித்ததாக ஒருவர் உணர்கின்றார். களத்தில் அரசியல் அணி திரட்டல், தொழிலாளர் விவசாயிகளைத் திரட்டும் வர்க்கத் திரட்டல் போன்ற கடும் சிரமங்களை ஏற்படுத்தும் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுகிறார். இதனைச் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு கூட அவரிடமிருந்து அகன்று விடுகிறது.

டீன் இதனை விளக்குகிறார். ‘‘கூட்டுச் செயல்பாடு குறித்த பார்வையை இது மறுக்கிறது. தனிநபரின் எண்ண வினோதங்கள், விருப்பங்களை தவிர்த்து, மக்கள் ஒற்றுமையை கட்ட வேண்டுமென்ற பார்வையையும் இது மறுக்கிறது. கடும் உழைப்பு தேவைப்படுகிற, அமைப்பு ரீதியான போராட்டத்தையும் இது மறுக்கிறது. மொத்தத்தில், நவீன தாராளமய அரசினை வீழ்த்தும் வர்க்கப் போராட்டத்தின் மீது ஓர் அலட்சியப் போக்கு உருவாகிவிடுகிறது.

ஊடகப் பயன்பாட்டை சரியான தடத்தில் கொண்டு செல்வது அவசியமாகிறது. லெனினது, கீழ்க்கண்ட வரிகள் இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டவை.
‘‘ஒரு செய்திப் பத்திரிக்கை என்பது கூட்டுப் பிரச்சாரகர் மட்டுமல்ல, கூட்டுக் கிளர்ச்சியாளர் மட்டுமல்ல, கூட்டான அமைப்பாளரும் கூட…’’ ‘‘என்ன செய்ய வேண்டும்” நூல். இதில் ‘செய்திப் பத்திரிக்கை’ என்ற இடத்தில் இன்றைய அச்சு, சமூக ஊடகங்கள் அனைத்தையும் சேர்க்கலாம்.

உழைக்கும் மக்களிடையே முன்னேறிய, அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டும் பணியை, கூட்டு அமைப்பாளர் எனப்படும் கட்சி ஊடகம் மேற்கொள்கிறது.

புரட்சிகர கட்சி கட்டுவதற்கு, ஏற்ற வகையில் கட்சி ஊடக கட்டுமானம் அமைய வேண்டுமென்பது லெனினியப் பார்வை. பொதுவான, திசையற்ற ஊடகச் செயல்பாடு பயனில்லை; வர்க்க ஊடகம்தான் இன்றைய தேவை. அது தான் உழைக்கும் வர்க்கங்களுக்கு ‘வர்க்க உணர்வு’ எனப்படும் அரசியல் உணர்வை வளர்த்திடும்.
இந்த கட்சி ஊடகம், செய்திகளையும், நிகழ்வு அறிக்கைகளையும் கொண்டதாக இருக்கக்கூடாது. நிகழ்வுகள், நடப்புகளைப் பகுத்தறிந்து ஆராயும் எழுத்துகளையும் எதிரான கண்ணோட்டங்களோடு, வாதப் போர் புரியும் படைப்புக்களை கொண்டதாகவும் அமைய வேண்டும்.

இதன் பொருள், கட்சி ஊடகம் கடினமான, சாதாரண உழைப்பாளிக்கு புரியாத விஷயங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதல்ல, உள்ளடக்கம், வெகுமக்கள் தன்மை கொண்டதாக இருக்க வேண்டுமென்று லெனின் வலியுறுத்துகிறார். வெகுமக்களுக்காக எழுதும் எழுத்தாளர், வாசகருக்கு ‘ஒன்றுமே தெரியாது’ என்ற எண்ணத்துடன் எழுதக்கூடாது. ‘‘ஒரு சாதாரண வாசகர் சுயமாகச் சிந்தித்து உள்வாங்கும் முயற்சிக்கு அவரது எழுத்து உதவிட வேண்டும்.’’ என்பது லெனினது வழிகாட்டுதல்.

லெனினுடைய வழிகாட்டுதல்கள் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மார்க்சிய இயக்கத்தை விரிவுபடுத்த வேண்டிய சூழல் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்டவை. எனினும், இன்றும் புரட்சிகர இயக்கம் விரிவாக வேண்டிய தேவை இருப்பதால், லெனினியப் பார்வையே இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளது.

Related posts

Leave a Comment